பரந்தூர் விமான திட்டத்தில் பங்குதாரரா டி ஆர் பாலு? 

-பவா சமத்துவன்‌

எனது ஊர் ஏகனாபுரம்..! – 04

”எதிர்ப்புகள் இருக்கத் தான் செய்யும்! ஆனாலும் விமான நிலைய திட்டம் விரைந்து செயல் படுத்தப்படும்” மக்களுக்கு எதிராகப் பேசிய டி.ஆர்.பாலுவுக்கு சேர்த்த செல்வங்கள் போதாதா..? பரந்தூர் திட்டத்திலும் பணம் பார்க்க துடிக்கலாமா? எந்த முகத்தோடு இந்த ‘எம்டன்’ பாலு ஓட்டு கேட்க வருகிறார்!

கடந்த 600 நாட்களுக்கும் மேலாக மக்கள் போராடி வருகிறார்கள். இத் தொகுதியின் எம்.பியான பாலு இத்தனை நாள் எட்டிக் கூட பார்க்காமல் இப்போது ஏன் வர வேண்டும்..? பரந்தூர் விமான நிலையம் அமைக்க திட்டமிடப்பட்டுள்ள ஏகனாபுரம் உள்ளிட்ட பகுதியில் 13 ஊராட்சிகளில் 16 ஆயிரம் மக்கள் வசிக்கின்றனர். 50 ஆயிரத்துக்கும் ஆடு,மாடுகள் வளர்க்கப்படுகின்றன. 13 பெரிய நீர்நிலைகளும், 20-க்கும் மேற்பட்ட குளங்களும், நீர்வழித் தடங்களும் இடம் பெற்றுள்ளன..எங்கள் பாரம்பரிய பூமியை பறி கொடுத்துவிட்டு நாங்கள் எங்கே போவோம்..?

“நாட்டில் முட்டாள்கள் இருக்கும் வரை அயோக்கியர்கள் தான் ஆட்சி செய்வார்கள் .இது தான் ஜனநாயகம்..” – தந்தை பெரியார்

சாமானிய மக்களும் அதிகாரத்தில் பங்கு பெற வேண்டும் என்ற நோக்கத்தோடு பேரறிஞர் அண்ணாவால் ஆரம்பிக்கப்பட்டது தான் திராவிட முன்னேற்றக் கழகம் .இலட்சக்கணக்கான கொள்கை மறவர்கள் திமுகவில் இருந்த காலகட்டம் ஒன்று உண்டு .

இன்று சிலர் பல்லாண்டுகளாக அதிகாரத்தில் நிலை பெற்று கோடீஸ்வரர்களாகி, தன்னை குறுநில மன்னர்களாக வலம் வரும் போக்கு வளர்ந்திருக்கிறது.

திமுக என்ற கட்சிக்கு இரண்டு பக்கங்கள் இருக்கிறது.

ஒன்று அதிகாரத்தால் கோடீஸ்வரர்களாகி ” குறுநில மன்னர்கள் “போல்  இருப்போர் ஒரு பக்கம்.

இன்னொரு பக்கம் – கட்சி- கொள்கை- கரைவேட்டி- தலைவர் என்று கூறிக் கொண்டே வாழ்க்கை முழுவதும், தான் இருந்த இடத்திலிருந்து சற்றும் உயர்வை நோக்கி நகராமல், டீயோடும், பண்ணோடும் இருப்போர்.

முதல் பக்கத்திற்கானவர் தான் தளிக்கோட்டை இராசு தேவர் பாலசுப்பிரமணியம் எனும் டி ஆர் பாலு.

இவர் தான் இப்போது திருப்பெரும்புதூர் நாடாளுமன்ற தொகுதி வேட்பாளர். பரந்தூர் விமான நிலையத்திற்கு எதிரான போராட்டங்கள் நடக்கும் இந்த தொகுதிக்கு வந்து மக்களை சந்தித்து இராத டி.ஆர்.பாலு மூன்றாவது முறையாக வேட்பு மனு தாக்கல் செய்திருக்கிறார்‌. இவரது அரசியல் வாழ்க்கை திரைப்படங்களில் நீங்கள் பார்க்கும் மிகப் பெரும் டான்  (Dan) கதாபாத்திரங்களை விட மிகப்பெரும் ஆச்சரியங்களும், திருப்பங்களும்  நிறைந்தது.

அன்றைய தஞ்சை மாவட்டத்தின் மன்னார்குடி அருகில் தளிக்கோட்டை  கிராமத்தில் ஏழை விவசாய குடும்பத்தில் இராசு தேவர் வடிவாம்மாள் பெற்றோருக்கு மகனாக பிறந்தவர் பாலசுப்பிரமணியன் எனும் பாலு.  மூன்று சகோதரிகள் மற்றும் இரண்டு சகோதரர்கள் .

16 கிலோ மீட்டர் நடந்தும் சைக்கிளில் சென்றும் ஆரம்பக் கல்வி முடித்த டி. ஆர். பாலு மேற்படிப்பிற்காக சென்னை வருகிறார். சென்ட்ரல்  பாலிடெக்னிக்கில் தொழிற் படிப்பில் சேருகிறார்.  பின்  நியூ காலேஜில் பிஎஸ்சி படிக்கிறார். 1957இல் திராவிடக் கொள்கைகள் தமிழகமெங்கும் வலுப்பெற்று வந்த காலத்தில்  திமுகவின் உறுப்பினராகிறார் .

1968 இல் ஆயிரம் விளக்கு  தேர்தலில்  திமுகவின் தேர்தல் பொறுப்பாளர்களில் ஒருவராக நியமிக்கப்பட்டது முதல், கோபாலபுரம் குடும்பத்தின் செல்லப் பிள்ளைகளில் ஒருவாரானார், டி.ஆர்.பாலு! கட்சித் தலைமையிடம் நெருக்கம் ஏற்படுத்திக் கொண்டு, கலைஞருக்கும், ஸ்டாலினுக்கும் கார் ஓட்டும் சாரதியாக மட்டுமல்லாமல், அவர்களது நம்பத் தகுந்த பாதுகாவலராகவும் மாறினார்‌!

இதனால் – டி ஆர் பாலு லட்சக்கணக்கான திமுக தொண்டர்களை அண்ணாந்து பார்க்கும்  அளவிற்கு அரசியலில் உச்சம் தொட்டார்! தன்னைப் பற்றிய எந்த விமர்சனத்திற்கும் பயப்படாமல், எதற்கும் அஞ்சாத “எம்டன்” போல் முகம் காட்டுவார்!

1992 வாஜ்பாய் அமைச்சரவையில் பெட்ரோலியத் துறை அமைச்சர் .

2004 மன்மோகன் சிங் பிரதமராக இருந்தபோது-

”எந்த காரணத்திற்காகவும்  டி ஆர் பாலுவை மட்டும் அமைச்சராக்க என்னிடம் கேட்காதீர்கள்” என்று மன்மோகன் சிங்  கேட்டுக் கொண்ட பின்பும், கலைஞருக்கே அழுத்தம் தந்து கப்பல் மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் ஆனார்.

2009- இல் இந்திய நாடாளுமன்றத்தில் ரயில்வே நிலை குழு தலைவராக இருந்தார்!

2019 – முதல் நாடாளுமன்றத்தில் திமுக  எம்பிக்களின் குழு தலைவராக விளங்கி வருகிறார்‌!

2020 – முதல் திராவிட முன்னேற்றக் கழகத்தின் பொருளாளராகவும் ஆனார்.

பொதுக் குழு கூட்ட மேடையில் டி.ஆர்.பாலுவின் காலுக்கான பாதணிகளை அணிவிக்கும் இளைஞர் ஒருவர்!

சேது சமுத்திரத் திட்டம்  பெயரளவில் செயல்படுத்தப்பட்ட போது, தனது பினாமி கம்பெனிகளின் மூலம் காண்ட்ராக்ட் எடுத்து கடலில் மண்ணை தூர் வாரி போடுவதாக கூறி, அப்போதே 1,500 கோடி சம்பாதித்தவர் என விவரம் அறிந்தவர்கள் இன்று வரை கூறி வருகிறார்கள்.

2006 இல் தூத்துக்குடிக்கும், கொழும்புக்கும் இடையே பயணப்பட்ட ஸ்காட்டியா கப்பலின் மூலம் மது வகைகள் மற்றும் போதை பொருட்கள் கடத்தியதாக இந்திய கஸ்டம்ஸில் இன்று வரை ஒரு வழக்குள்ளது .

ஒரு கோடியே 92 லட்சம் மதிப்புள்ள இந்த போதை பொருள் கடத்தலுக்கு பயன்பட்ட ஸ்காட்டியா பிரின்ஸ் கப்பல், பிளமிங்கோ டூட்டி ஃப்ரீ பிரைவேட் லிமிடெட் என்ற நிறுவனத்திடம் இருந்து பினாமி பெயரில் பெற்று டி ஆர் பாலு அவர்களே  நடத்தி வந்ததாக கூறப்பட்டது.

2011 லிபியாவில் நடந்த உள்நாட்டுப் போரில் அங்குள்ள  இந்தியர்கள் பாதிக்கப்பட்ட போது அவர்களை தாயகம் அழைத்து வரும் பணியில் டி ஆர் பாலுவின் பினாமி கப்பல் நிறுவனமான  ஸ்கார்ட்டியா  பிரிண்ஸ் பயணிகள் கப்பல் சம்பாதித்த பணம் இரண்டு லட்சம் அமெரிக்க டாலர்கள்.

ஸ்கார்ட்டியா பிரின்ஸ் கப்பல் மட்டும் இல்லாமல், Best Gate logistic  என்ற  இன்னொரு பினாமி நிறுவனத்தின் மூலம், கடல்சார் வணிகங்களையும் செய்கிறார் டி ஆர் பாலு. இதன் இயக்குனர் குழுவில் பொறுப்பில் உள்ளவர்கள்  யார் யார் தெரியுமா..?  ராசாத்தி அம்மாள், அவரது மகள் கனிமொழி.

இவ்வாறெல்லாம் கட்சியில் தன்னை தனிப்பெரும் சக்தியாக நிலை நிறுத்திக் கொண்ட டி ஆர் பாலு, கட்சித் தலைமையின் குடும்பத்திலும் அவர்களே தவிர்க்க நினைத்தாலும் தவிர்க்க முடியாத சக்தியாக இன்றளவும் விளங்கி வருகிறார்!

“டி ஆர் பாலு எத்தனை கப்பல்களுக்கு அதிபர், எத்தனை கம்பெனிகளுக்கு முதலாளி, தனது பினாமிகளின்  பெயரில் இன்னும் எத்தனை எத்தனை தொழில்களை அவர் செய்து வருகிறார் என்பதை நான் சொன்னால் திமுக கட்சி மட்டுமல்ல, தமிழகமும் தாங்காது என ஒரு முறை கூறினார் திமுக தலைவரின் மகன் திரு மு க அழகிரி. (செய்தியாளர்கள் சந்திப்பு -மதுரை- 2014)

சாதி பேதமற்ற சமத்துவ சமுதாயத்தை படைப்பதே கட்சியின் குறிக்கோள் என்று தோற்றுவிக்கப்பட்ட திமுகவில் ,

தஞ்சையில் திரு டி ஆர் பாலு தனது பினாமிகளின் மூலம் நடத்தி வரும் கிங் கெமிக்கல்ஸ் ஆலைகளின் மூலம், நிலம் -நீர்- காற்று அனைத்தும் மாசடைவதாக கூறி மன்னார்குடி அருகில் உள்ள மக்கள் போராட்டம் நடத்திய போது, தனது அதிகார பலத்தால் அப்பாவி மக்களை ஈவிரக்கமின்றி அடக்கி ஒடுக்கியவர் டி ஆர் பாலு!

 

தான் பிறந்த சொந்த மண்ணிலேயே வெற்றி பெற முடியாத (2014( டி ஆர் பாலு, தற்போது திருப்பெரும்புதூரில் மூன்றாவது முறையாக மக்களவைத் தேர்தலில் களம் காணுகிறார்.

தனது வேட்புமனவில் தனது சொத்து மதிப்பு 40 கோடியே 21 லட்சம் என கணக்கு காட்டியிருக்கும் டி ஆர் பாலுவின் உண்மையான சொத்து மதிப்பு, 10 ஆயிரம் கோடிகளுக்கும் மேலாக இருக்கும் என கூறுகின்றனர் உடன்பிறப்புகளே!

திருப்பெரும்புதூர் தொகுதியில் உள்ள, மதுரவாயில், அம்பத்தூர், ஆலந்தூர்,  திருபெரும்புதூர், பல்லாவரம்,  தாம்பரம் என ஆறு சட்டமன்றத் தொகுதிகளில் கடந்த ஐந்து ஆண்டுகளில் ஒரு முறை கூட எட்டிப் பார்க்காத டி ஆர் பாலு இத் தொகுதிகளில் இன்று வரை தனக்கென்று ஒரு அலுவலகம் கூட திறக்கவில்லை. ஆனாலும் மூன்றாவது முறை எம்.பியாக நிற்க வேட்பு மனு தாக்கல் செய்கிறார்.

இந்த மாவட்டத்தில் செயல்படுத்தப்பட இருக்கும் “பரந்தூர் பசுமை விமான நிலைய” திட்டத்தை, மக்கள் எதிர்ப்பை மீறி அத் திட்டத்தை துரிதப்படுத்தும் நபராக இவர் இருக்கிறார் என  தொகுதி முழுக்க பரவலாக குற்றச்சாட்டு எழுந்திருக்கிறது ‌

பல ஆண்டுகளுக்கு முன்பு 2,00800 கோடி திட்ட செலவு இருக்கும் சேது சமுத்திர திட்டத்தில் துவக்க நிலையிலையே 1500 கோடி அளவில் ஆட்டையை போட்ட டி ஆர் பாலு , 35 ஆயிரம் கோடியில் இருந்து ஒரு லட்சம் கோடி வரை செலவாகும்  விமான நிலைய திட்டத்திற்கு  ஏன் ஆர்வம் காட்டுகிறார் என்பது இப்போது தெரிகிறதா.?

இந்த செல்வ பெருக்கத்திற்கு ஏதுவாக இவரது செல்ல மகன் டி.ஆர்.பி.ராஜா தான் இப்போது தமிழக தொழில் துறை அமைச்சராகவும் இருக்கிறார்.

பரந்தூர் விமான நிலைய திட்டத்தால் வாழ்வாதாரத்தை  இழக்கும்  அப்பாவி மக்களின் கோரிக்கையை பற்றி, டி ஆர் பாலுவிடம் கேட்டால் ” ஒன்றை இழந்து தான் இன்னொன்றை பெற வேண்டும்..!” என்கிறார்  ‌.

உண்மை தான்! மதுக்குடியால்  ஊருக்கு பத்து பெண்கள் வீதம் தாலிகளை இழந்து தான்  தனது மது உற்பத்தி ஆலையை மூலம் பல நூறு கோடிகள் சம்பாதிக்கிறார் பாலு! ”திமுகவின் நோக்கம் மது விலக்கு தான்” என கூச்சம் இல்லாமல் கூறிக் கொண்டு வாக்கு சேகரிக்க வரும் டி ஆர் பாலுவுடன் வேறு எதைத் தான் எதிர்பார்ப்பது.‌?

இதோ- நான் முதலில் குறிப்பிட்ட கட்சியின் இன்னொரு பக்கத்தை பார்க்கலாம்.

டி ஆர் பாலுவின் சம வயதுக்காரர் தான், ஏகனாபுரம் காளியப்பன் தர்மலிங்கம் வயது 82. திமுகவின் ஆரம்ப கால உறுப்பினர். அண்ணாவின் பிரச்சாரங்கள் கூட்டங்களுக்காக இலாந்தர் விளக்கு பிடித்து  இரவு இரவாய் அவருடன் கிராமங்களுக்கு பயணித்தவர்.

திமுகவின் அடிப்படை நோக்கங்களான  சுயமரியாதை – பகுத்தறிவு – திராவிடம் -தமிழ் என்பதையெல்லாம் அடிப்படை கருவாக வைத்து  20 -க்கும் மேற்பட்ட மேடை நாடகங்களை எழுதி இயக்கி நடித்தவர்!

விவசாய பெருங்குடி மக்கள் வாழும் ஏகனாபுரத்தில் ஒரு தெரு!

ஏகனாபுரம் கிராமத்தில் 22 ஆண்டு காலம் திமுகவின் ஊராட்சி மன்றச் செயலாளராக இருந்தவர்! இந்த வயதில் வறுத்தெடுக்கும் கோடை வெயிலில் ஏகனாபுரம் ஏரிக்கரையில் ஆடு மேய்த்துக் கொண்டிருக்கிறார்.

‘’திமுக காரன்னு சொல்றதுக்கு வெக்கமா இருக்குதுப்பா.. மக்களுக்கான திட்டம் – நாட்டுக்கான திட்டம்ன்னா அதை மக்கள் கிட்ட சொல்ல வேணாமா.‌! மக்கள் அதை ஏத்துக்கிறார்களா இல்லையா என்றால் தெரிஞ்சுக்க வேணாமா..? அத எல்லாத்தையும் விட்டுட்டு சொந்தமாய் இருக்கிற கொஞ்சம் நிலம்- வீடு -கால்நடையும் பிடுங்கிட்டு, வேற எங்கேயாவது ஓடுன்னா.. இவங்க எங்க தான்  போவாங்க..?

எங்களுக்கும் ஏர்போர்ட்டுக்கும் என்னய்யா சம்பந்தம்..?

தன்னை முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் சொல்லிக்கிறதில பெருமைப்படற  தம்பி ஸ்டாலினை ஒன்னு கேட்டுக்குறேன்…

அதானியும், அம்பானியுமா உங்களுக்கு ஓட்டு போட்டாங்க..

இந்த ஏழை பாழைங்க தான் உங்களுக்கு ஓட்டு போட்டாங்க. அது தான் இவங்க செய்த பாவம்‌..!

எங்கள விட்டுடுங்க ஐயா …

… ஏன்னா.‌ இந்த நிலத்தை தவிர – இந்த விவசாயத்தைத் தவிர –  எங்களுக்கு வேற எதுவும் தெரியாது..!”

84- வயதிலும் பதவியையும், அதிகாரத்தையும் இழக்கத் தயாரில்லாத டி .ஆர்‌ பாலு,  தாங்கள் பூர்வீகமாக வாழும் இந்த மண்ணை மக்கள் இழக்க சம்மதிப்பார்கள்.. என எந்த தைரியத்தில் ஓட்டு கேட்டு வருகிறார்..?

தொடரும்…

கட்டுரையாளர்; பவா சமத்துவன்‌

மூத்த பத்திரிகையாளர், எழுத்தாளர்.

 

Support Aram

நேர்மையான, வெளிப்படையான,

சுதந்திரமான இதழியலுக்கு தோள்

கொடுங்கள்.

UPI QR CODE

Razorpay Payment Gateway

Personal Info

Donation Total: ₹1,000.00 One Time