திரைமறைவு அரசியலே அனைத்தையும் தீர்மானிக்கிறது!

- அஜிதகேச கம்பளன்

பாஜகவில் மேலே வருவதற்கு என அங்கே கடைபிடிக்கும் வழிமுறைகளில் எனக்கு உடன்பாடில்லை. திரைமறைவிலே தான் அங்கு அரசியலே தீர்மானிக்கப்படுகிறது! திருமாவளவனுக்கும் – பாஜகவிற்கும் திரை மறைவு தொடர்புகள் நீண்டகாலமாகவே இருக்கிறது என்பதற்கு ஏராளமான சம்பவங்கள் உள்ளன..!

பஞ்சமி நில மீட்பு, மண்ணுரிமை மீட்பு, தாழ்த்தப்பட்ட மாணவர்களின் கல்வி வளர்ச்சி போன்ற தளங்களில் தீவிரமாக செயல்பட்ட பாஜகவின் பட்டியலின மாநிலத் தலைவர் தடா.பெரியசாமி சமீபத்தில் பாஜகவில் இருந்து விலகி அதிமுகவில் சேர்ந்தார்.

உங்களைப் பற்றி சுருக்கமாக சொல்லுங்கள்?

வறுமையில் உழலும் மக்களைக் கண்டு அதற்கு காரணமான இந்த சமூகத்தின் மீது ஆத்திரம் கொண்டவனாக – நக்சலைட்டாக – என் பொது வாழ்வை தொடங்கியவன் நான். பிறகு தெளிந்து அடித்தளமக்களை அரசியல்படுத்த விழைந்த போது, உருவானது தான் விடுதலை சிறுத்தைகள்! நான் விடுதலை சிறுத்தைகளின் நிறுவனத் தலைவர்களில் ஒருவன். நானும், திருமாவும் தான் ஊரூஊராகத் திரிந்து விசிகவை கட்டி எழுப்பினோம். ஆரம்பகால விசிகவின் தலைவராக திருமாவளவனும், பொதுச் செயலாளராக நானும் இணைந்து செயல்பட்ட போது, தன்னை ஒரு ஒற்றைத் தலைவனாக முன்னிறுத்தி, கட்சிக்குள் ஜனநாயகத்தை வேரறுத்து, அவர் செயல்பட்டதால் அதில் இருந்து விலகினேன்.

ஒரு இடதுசாரியாக இயங்கிவிட்டு ஒரு வலதுசாரி இயக்கமான பாஜகவில் எப்படி சேர்ந்தீர்கள்..?

இங்கே இடதுசாரி இயக்கங்கள் நமது மண்ணையும், மரபையும் உணராதவர்களாக உள்ளனர் என்பதே என் புரிதல். நான் சிறையில் இருந்த காலத்தில் பல சித்தர் நூல்களை வாசித்தேன். தாழ்த்தப்பட்டோரில் பலர் சித்தர்களாக வாழ்ந்துள்ளனர். அந்த ஆன்மீக மரபு அழியக் கூடாது அதை மீட்டெடுக்க வேண்டும் என எனக்குத் தோன்றியது. ஆகவே, நந்தனார் சேவாசிரம அறக்கட்டளை தொடங்கினேன். தாழ்த்தப்பட்டோரின் கல்விக்கு பாடுபட்ட சகஜானந்த சாமிகளின் குருபூஜையை நடத்தினேன். மத்திய அரசு தாழ்த்தப்பட்ட எளிய மக்களுக்காக தீட்டுகிற திட்டங்கள் அந்த மக்களை சரியாக சென்றடைய வேண்டும் என்ற நோக்கம் இருந்தது. ஆகவே பாஜகவில் சேர்ந்தேன். தாழ்த்தப்பட்ட மாணவர்களுக்காக 75 இடங்களில் மாலை நேர பள்ளிகளை நடத்தினேன். ஏராளமான ஏழை மாணவர்கள் உயர்கல்வி தளத்திற்கு செல்வதற்கு இயங்கினேன். பாஜகவின் தொடர்புகளையும், செல்வாக்கையும் இந்த மக்கள் பலடைய உழைத்தேன்.

சமூக சேவகராக மாறிவிட்டீர்களா.?

சமூக சேவகராக மாறினாலும், என் அரசியல் தளத்தை விடாமல் கட்சியின் அனைத்து போராட்டங்களிலும் பங்கெடுத்தேன். ஆரம்பத்திலேயே நான் 2004 சிதம்பரம் தொகுதியில் நின்று சுமார் ஒரு லட்சத்து பதினான்காயிரம் வாக்குகள் வாங்கினேன். தமிழக பாஜகவின் பட்டியலின மாநிலத் தலைவர் என்ற வகையில் 66 மாவட்டங்களில் நிர்வாகிகள், தொண்டர்களை உருவாக்கி கட்சியை அடித்தள மக்களுக்கு எடுத்துச் சென்று உள்ளேன். இந்த நாடாளுமன்ற தேர்தலில் நிற்பதற்காக கடந்த ஐந்தாண்டுகளாகவே திட்டமிட்டு செயல்பட்டு வருகிறேன். தொகுதி கூட்டம் நடத்துவது, பூத் கமிட்டி அமைப்பது… என பம்பரமாக செயல்பட்டேன். அண்ணாமலை வந்து பார்த்து ”நீங்க நிற்கிறீர்களா?” என்றார். ”ஆம். விரும்புகிறேன்” என்றேன். ”சரி, இங்கேயே களத்தை நன்றாக பலப்படுத்துங்கள்” என உத்திரவாதமும் தந்து சென்றார்.

இதற்கிடையில் என்ன நடந்தது..?

எனக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டதற்கு இரண்டு காரணங்கள்;

ஒன்று உள்குத்து, மற்றொன்று வெளிக் குத்து.

உள்குத்து எல்.முருகனிடம் இருந்து! நான் எப்படியும் வெல்லும் அளவுக்கு தொகுதியை தயார்படுத்தி இருந்தது அவருக்கு தெரியும். தாழ்த்தப்பட்டவர்களிலேயே விவரமான மற்றொருவர் மேலேழுந்து வந்தால், தன்னுடைய முக்கியத்துவம் அடிபடும் என அவர் நினைத்தார். ஆகவே, எனக்கு வாய்ப்பு மறுக்கப்பட ஆர்.எஸ்.எஸுக்கும், அண்ணாமலைக்கும் அழுத்தம் தந்தார். அவர் ஆரம்ப கால ஆர்.எஸ்.எஸ்காரர். சொந்த புத்தியோ, சுய புத்தியோ சிறிதுமின்றி ஆர்.எஸ்.எஸ் கட்டளைக்கு செயல்படுவர் என்பதால் அவரது வேண்டுகோள் பரிசீலிக்கப்பட்டது. கேசவ விநாயகம், எல்.முருகன் ஆகியோர் அழுத்தம் தரவும் அண்ணாமலை அடி பணிந்தார்.

மற்றொன்று, நான் நிற்பதால் தாழ்த்தப்பட்டவர்களின் வாக்கு வங்கியை கணிசமாக கவர்ந்து விடுவேன் என்பதால், திருமாவளவன் தோல்வி உறுதியாகிறது! 2004 தேர்தலில் அவர் தோற்றதற்கு நான் நின்றதே காரணம்! இந்த முறை அது போல நடக்கக் கூடாது என்பதற்கு அவர் பொன்.ராதாகிருஷ்ணன் மூலமாக பாஜகவிற்கு தூதுவிட்டார். அத்துடன் ஆர்.எஸ்.எஸுலும் அவருக்கு தொடர்பு உண்டு. அங்கும் அழுத்தம் தந்தார். ஆக, திருமாவளவனை காப்பாற்ற ஆர்.எஸ்.எஸ் என்னை பலி கொடுக்க கட்டளையிட்டதால் வாய்ப்பு மறுக்கப்பட்டது.

உங்க பேச்சு சுத்த பேத்தலாக உள்ளது. சிறிதும் நம்ப முடியவில்லை. திருமாவளவன் தொடர்ந்து ஆர்.எஸ்.எஸ்சை கடுமையாக எதிர்த்து பேசி வருகிறார். அவருக்கு ஏன் ஆர்.எஸ்.எஸ் உதவ வேண்டும்…?

எதிர்ப்பது என்பதெல்லாம் ஒரு அரசியல் ஸ்டண்டு தான். அரசியலில் எதிரியாக வெளியில் காட்டிக் கொள்பவர்கள் எல்லாம் உள்ளுக்குள் நல்ல அண்டர்ஸ்டாண்டிங்குடன் இயங்கிக் கொண்டுள்ளனர். வி.ஹெச்.பி நடத்தும்  கூட்டம் ஒன்றுக்கு விசிக சார்பில் ஒரு பிரபல பெண் வழக்கறிஞர் வந்து சென்றதை நானே பாத்துள்ளேன். பாஜக, ஆர்.எஸ்.எஸுக்கு காரியம் ஆக வேண்டும் என்றால், திருமாவிடம் சொல்லி சாதித்துக் கொள்வார்கள். கடலூர் மாவட்டம் குப்பநத்தம் கண்ணகி-முருகேசன் ஆணவ கொலை வழக்கில் பாதிக்கப்பட்ட முருகேசன் குடும்பத்தை தொடர்பு கொண்டு பணத்தை வாங்கிக் கொண்டு சமாதானமாக போகும்படி திருமாவை சொல்ல வைத்தனர். இதனால், வழக்கறிஞர் ரத்தினம், சுகுமாறன் உள்ளிட்டோர் கொதித்து எழுந்து திருமாவிற்கு எதிராக கூட்டம் போட்டனர்.

ஆணவ கொலை செய்யப்பட்ட கண்ணகி- முருகேசன்

இப்படி பாதிக்கப்பட்ட தலித் மக்களுக்கு எதிராக ஆதிக்க சக்திகளுக்கு ஆதரவாக கட்ட பஞ்சாயத்து நடத்தி துணை போவது திருமாவளவனுக்கு கை வந்த கலை. இதனால் தான் தலித் காலனிகளில் கூட அவருக்கு செல்வாக்கு இல்லை. அப்போது நான் பாஜகவில் இருந்தாலும், பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆதரவாகத் தான் வழக்கறிஞர் ரத்தினம் போன்றோரோடு இருந்தேன். இதை நீங்கள் ரத்தினத்திடமே கேட்டுக் கொள்ளலாம். ( வழக்கறிஞர் ரத்தினமும் தடா பெரியசாமி சொல்வதை உறுதிபடுத்தினார்)

வழக்கறிஞர். ரத்தினம்

ஆகவே, உண்மையிலேயே தாழ்த்தப்பட்டவர்களுக்காக உழைப்பவன் என்பதால் என்னை மேலேறிவிடாமல் தடுத்து விட்டனர். அவர்களுக்கு எல்.முருகனும், திருமாவளவனும் தான் தேவை! இதைக் காலம் கடந்து உணர்ந்து கொண்டேன். பட்ட பிறகு தான் எனக்கு புத்தி வந்தது. அண்ணாமலையும் அங்கு ஒரு அடிமை தான். அவரால் சுயமாக முடிவு எடுக்க முடியாது.

திருமா ஆர்.எஸ்.எஸ்சை தீவிரமாக எதிர்த்து வலுவுடன் பேசி வருவதை அவர்கள் சீரியஸாக கருதவில்லையா..?

ஒரு வகையில் திருமாவின் பேச்சுக்கள் இந்துக்களை ‘கன்சாலிடேட்’ ( ஒன்றுபடுத்த) செய்ய ஆர்.எஸ்.எஸ் மற்றும் பாஜகவிற்கு உதவுகிறது! இது அவர்களின் வளர்ச்சிக்கு உத்வேகம் தருகிறது. அவர்களுக்கு தெரியும் எல்லாம் பேச்சளவில் தான் என்று! ஆனால், பாவம், அடித்தள தொண்டர்கள் உண்மையிலேயே ஆர்.எஸ்.எஸ் எதிர்ப்பாளர்களாக உள்ளனர்.

திருமாவளவன் பாஜகவுடன் ரகசியத் தொடர்பில் இருப்பது திமுக தலைமைக்கு தெரியாதா..?

திமுக அமைச்சர்கள் பலருமே பாஜகவுடன் ரகசிய தொடர்பில் தான் உள்ளனர். சில அமைச்சர்கள் அண்ணாமலைக்கு கப்பம் கட்டுகின்றனர். இந்த லட்சணத்தில் தான் இன்றைய அரசியல் நடந்து கொண்டு இருக்கிறது..!

பேட்டி; அஜிதகேச கம்பளன்

Support Aram

நேர்மையான, வெளிப்படையான,

சுதந்திரமான இதழியலுக்கு தோள்

கொடுங்கள்.

UPI QR CODE

Razorpay Payment Gateway

Personal Info

Donation Total: ₹1,000.00 One Time