ஊழலில் உச்சம் தொட்ட ‘பிஎம் கேர்ஸ்’ மோசடி!

-சாவித்திரி கண்ணன்

தேர்தல் பத்திர ஊழலையே விஞ்சியது ‘பி.எம்.கேர்ஸ்’. தேர்தல் பத்திரங்கள் வழியே மூலம் பாஜக பெற்றது 8252 கோடிகள்! ஆனால், பி.எம்.கேர்ஸ் மூலம் சுமார் ரூ12,700 கோடிகளை மோடி பெற்றுள்ளார்! இந்திய வரலாற்றில் பித்தலாட்ட வழிமுறைகளில் ஒரு பிரதமரே பணம் சுருட்டிய பெரு மோசடியின் வரலாற்றை பார்ப்போம்;

பி.எம்.கேர்ஸ் எனப் பெயரிட்டு நிதி பல்லாயிரம் கோடிகள் திரட்டப்பட்ட பிறகு, அதில் அரசாங்கத்திற்கு சம்பந்தமில்லை. இது தனியார் பணம் என்றால், அதற்கு பிரதமர் நிதி எனப் பெயரிடாமல் மோடி நிதி என பெயரிட்டு இருக்க வேண்டும் என்பதே மக்கள் கருத்தாகும்.

காங்கிரஸ் பொதுச் செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் குற்றம் தனது X பதிவில், “இப்போது தேர்தல் பத்திர ஊழல் மூலம் மோடி சர்க்காரின் அதிர்ச்சியூட்டும் விவரங்கள் வெளிப்பட்டு வருவதில் நிறுவனங்களுக்கு ஆதரவாக அரசாங்கம் திறந்த மற்றொரு வழியை நாம் மறந்துவிட்டோம். சுயமரியாதையாகப் பெயரிடப்பட்டு கமுக்கமாக கையூட்டு பெற்றதே PM CARES.ஏன விவரித்துள்ளார்.

ஜெய்ராம் ரமேஷ்

 

மேலும் “PM CARES பெறப்பட்ட மொத்த நிதி மற்றும் நன்கொடையாளர்களின் பெயர்கள் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவில்லை எனினும் ஊடக அறிக்கைகள் குறைந்தபட்சம் ரூ. 12,700 கோடி நன்கொடைகளைப் பெற்றதாகக் கூறுகின்றன, ஒரு சில நிறுவனங்களின் பெரிய நன்கொடைகளும் கிடைத்துள்ளன” என்று ஜெய்ராம் ரமேஷ் கூறியுள்ளார்.

இவ்வளவு பெரிய நிதியை பாஜக எப்படி பெற்றது என்பதற்கு பின்னணியில் உள்ள சில அதிர்ச்சியூட்டும் யதார்த்தஙக்ளை காண்பதே இந்தக் கட்டுரையின் நோக்கமாகும்.

நமது நாடு கொரோனாவில் சிக்கிய நெருக்கடியான கால கட்டத்தில், ‘குடிமக்களுக்கான பிரதமரின் அவசரகால உதவி மற்றும் நிவாரண நிதி’ என்று பொருள்படும் ‘பிஎம் கேர்ஸ்’  அதிரடியாக உருவாக்கப்பட்டது. உண்மையில் இது தேவையற்றது. காரணம்;

சுதந்திரத்திற்கு பிறகு நமது நாட்டின் நாடாளுமன்றம்,

தேசிய நிவாரண நிதி

தேசிய பாதுகாப்பு நிதி’

பிரதமர் நிவாரண நிதி

என்ற பெயர்களில்  மூன்று கட்டமைப்புகளை ஏற்படுத்தி, அவசர காலத்திற்கான நிவாரண நிதியாக  இது நாள் வரை செயல்பட்டு உள்ளது; இதன் நோக்கம், புயல், மழை ,வெள்ளம், வறட்சி, விபத்துகள், இயற்கைப் பேரிடர்கள், போன்றவற்றின் போது, பாதிக்கப்பட்ட மக்களுக்கு பாதிப்பில்லாத மக்களிடம் இருந்து நிதியை பெற்று செலவிடுவதாகும்.

முந்தைய மூன்று நிதியங்களின் வரசு,செலவு கணக்குகள் யாவும் அரசு கணக்கு தணிக்கை அதிகாரி மூலம் தணிக்கை செய்யப்பட்டு மக்கள் மன்றத்தில் வைக்கப்பட்டு வருகின்றன! ஆகவே அவற்றை புறக்கணித்து தாங்களே கிடைக்கும் பணம் முழுவதையும் ‘ஸ்வாகா’ செய்வதற்கு தோதாக உருவாக்கப்பட்டதே பி.எம்.கேர்ஸ் ஆகும்.

PM CARES என்பது

இந்திய அரசாங்கத்தின்  டொமைன் பெயரிலும்,( pmindia.gov.in)

பிரதமர்,  அசோகத் தூண் ஆகிய அடையாளங்களை கொண்டிருப்பதாலும்

PM CARES தன்னை இந்திய அரசாங்கமாக முன்னிறுத்துகிறது.

அரசு அதிகாரிகளால் விளம்பரம் செய்யப்படுகிறது.

அரசு நிர்வாகமும் இதற்கு பயன்படுத்திக் கொள்ளப்படுகிறது!

ஆனால், கணக்கு, வழக்குகளை கேட்டால் மட்டும், ”இது தனியார் அறக்கட்டளை. தகவல் அறியும் உரிமை சட்டத்தில் வராது” என்கிறார்கள்! ‘யார்? யார் எவ்வளவு தந்துள்ளார்கள்?’ என மக்கள் மன்றத்தில் வைக்க மாட்டார்களாம்!

பிரதமரின் பெயரை சொல்லி இந்த நிதி பெறப்பட்டு இருக்கிறது. இதற்கு நிதியளித்த லட்சக்கணக்கான மக்களுக்கு இது தனியார் அறக்கட்டளை என தெரியாமல், பிரதமர் என்ற பெயரில் இருப்பதால் அரசாங்கத்திற்கு நிதி தருவதாக நினைத்து அள்ளி வழங்கியுள்ளனர்.

ஏனென்றால், பிஎம் கேர்ஸ் நிதியத்துக்கு வழங்கப்படும் நன்கொடைகள் வருமான வரிச்சட்டம் 1961-ன் கீழ் 100 சதவீதம் விலக்குப் பெற 80ஜி-க்கு உட்பட்டது. பிஎம் கேர்ஸ் நிதியத்துக்கு வழங்கப்படும் நன்கொடைகள் நிறுவனங்கள் சட்டம் 2013-ன் கீழ் பெருநிறுவனங்களின் சமூகப் பொறுப்பு (சிஎஸ்ஆர்) செலவாகவும் கணக்கிடப்படுகிறது

பிஎம் கேர்ஸ் நிதியம் எஃப்சிஆர்ஏ-படி விலக்கு பெறும். இதனால் பிஎம் கேர்ஸ் நிதியத்திற்கு வெளிநாடுகளைச் சேர்ந்த தனிநபர்கள் மற்றும் அமைப்புகளிடமிருந்து பங்களிப்புகளை ஏற்க முடியும். பிரதமரின் தேசிய நிவாரண நிதியத்திற்கு நிகரானதாக இது இருக்கும் என விளம்பரப்படுத்தினர்.

எம்.எல்.ஏக்கள், எம்.பிக்கள் என அரசு பிரதிநிதிகள் நிதியளித்து இருக்கிறார்கள். தங்கள் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து 10 மில்லியன் ரூபாய் நிதியளிக்க பா.ஜ.க நாடாளுமன்ற உறுப்பினர்கள் கோரப்பட்டனர். அரசு ஊழியர்கள், நீதிபதிகள் மற்றும் ராணுவ வீரர்கள் தங்கள் ஒரு நாள் ஊதியத்தை தர கட்டாயப்படுத்தப்பட்டனர்.

இதுமட்டுமின்றி அரசின் பொதுத் துறை நிறுவனங்கள் நிர்பந்திக்கப்பட்டனர். ஓஎன்ஜிசி (370 கோடி) , என்பிடிசி (330 கோடி), பிஜிசிஐ (275 கோடி), ஐஓசிஎல் (265 கோடி) மற்றும் பவர் பைனான்ஸ் கமிஷன் (222 கோடி) என 5 முக்கிய அரசு நிறுவனங்கள் தந்துள்ள தகவல்களானது.., இது போல இன்னும் எத்தனை பொதுத் துறை நிறுவனங்களிடம் இருந்து வசூலித்திருப்பார்களோ..? என்ற கேள்வியை எழுப்புகிறது. ஆனால், பிரதமர் மோடி கனத்த மெளனம் சாதிக்கிறார்.

கள்ள மெளனம், கமுக்கம் ஆகியவற்றில் கைதேர்ந்த மோடி

இந்த வகையில் முதல் ஓராண்டு மட்டுமே அதாவது 2020-21 காலத்தில் பிஎம் கேர்ஸ் நிதியத்தின் கீழ் ரூ.7013.99 கோடி திரட்டப்பட்டுள்ளது எனத் தெரிய வருகிறது எனும் போது.., இதற்கடுத்த ஆண்டுகளில் எவ்வளவு ஆதாயங்கள் அடைந்திருக்க கூடும் என நாம் யூகிக்கலாம்.

மக்களிடம் இருந்து பெற்ற நிதி குறித்த தகவல்கள் எதையுமே மக்கள் மன்றத்தில் வைக்கத் தேவையில்லை என அரசாங்கத்தின் உயர் பொறுப்பில் இருப்பவர்களே கூறுவதை எப்படி புரிந்து கொள்வது?

காங்கிரஸ் கட்சியின் செய்தி தொடர்பாளர் அபிஷேக் சிங்வி கூறி இருப்பது கவனத்திற்கு உரியது;

‘பி.எம்.கேர்ஸ்’ என அழைக் கப்படுகிற பிரதமர் நிதியைச் சுற்றிலும் சர்ச்சைகள் சுழன்றடிக்கின்றன! இது  அக்கறையற்ற அரசால், அக்கறையற்ற பிரதமரால் உருவாக்கப்பட்டது என்பதை அவை நிரூபிக்கின்றன. எந்தவிதமான சட்ட அனுமதியும் இன்றி ஒரு நாட்டின் அரசு இப்படி மிகப்பெரிய அளவில் நிதி திரட்ட முடியுமா? ஆனால் நாட்டின் உயர்ந்த அதிகார மைய்யத்தின் அலுவலகம் எந்தவிதமான சட்ட அனுமதியும் இன்றி  பலஆயிரம் கோடி நிதி பெறுகிறது. பொறுப்பு எங்கே? கண்காணிப்பு எங்கே? இந்த நிதியில் வெளிப் படைத்தன்மையும் இல்லை. தணிக்கையும் இல்லை.இது சந்தேகத்துக்கு இடமின்றி, அரசியல் சாசன கோட்பாடுகளுக்கு முரணானது. இந்த முழு நிதியும் ரகசியமாக மறைக்கப்படு கிறது…” என்கிறார்!

அபிஷேக் சிங்வி

”இவ்வளவு பெரிய நிதியை என்னென்ன விதங்களில் செலவழித்தீர்கள்?” என்றால், இதில் 50,000 வெண்டிலேட்டர்கள்  ரூபாய் 2000 கோடிக்கு வாங்கப்பட்டது 1000 கோடி ரூபாய் புலம் பெயர்ந்த தொழிலாளர் நலத் திட்டங்களுக்காக செலவிடப்பட்டுள்ளது. 100 கோடி மருந்து, மாத்திரைக்கு செலவிடப்பட்டது என்றார்கள்! இதிலும் வெண்டிலேட்டடை இரண்டு மடங்கு ரேட் காண்பிக்கின்றனர். ஆக, மொத்தத்தில் வாங்கிய பணத்தில் மிக குறைவாகவே இவர்கள் செலவழித்துள்ளனர்.

”ஊழல்வாதிகள் யாராக இருந்தாலும் நடவடிக்கை பாயும்” என வீராப்பு பேசிக் கொண்டே, யாரையும் விட கற்பனைக்கே எட்டாத ஊழல்களை செய்வதற்கு ஒரு கெத்து வேண்டும். அது பிரதமர் மோடியிடம் தான் இருக்கிறது.

பி.எம்.கேர்ஸ் தொடர்பாக சிலர் பொது நல வழக்குகள் போட்டும் பயனற்றுப் போய்விட்டது! நீதிமன்றமும், நீதிபதிகளும் பிழைத்திருக்க வேண்டாமா? அவர்களும் எத்தனை விவகாரங்களில் தான் மத்திய அரசின் தலையில் குட்டு வைக்க முடியும்..? ஆக, வரும் தேர்தலில் மக்கள் மன்றம் தான் இதற்கு தீர்ப்பு வழங்க வேண்டும்.

-சாவித்திரி கண்ணன்

 

Support Aram

நேர்மையான, வெளிப்படையான,

சுதந்திரமான இதழியலுக்கு தோள்

கொடுங்கள்.

UPI QR CODE

Razorpay Payment Gateway

Personal Info

Donation Total: ₹1,000.00 One Time