லட்சக்கணக்கான சிறு, குறுந்தொழில்களை நசுக்கி, பெரிய கார்ப்பரேட்டுகளை வாழ வைக்க போட்ட சதி திட்டமே ஜி.எஸ்.டி என தரமான ஆய்வுகள் தரவுகளோடு சொல்கின்றன! எளியோர்களை கசக்கி பிழியவும், பணக்காரர்களை பாதுகாக்கவும் உருவாக்கப்பட்ட வரி முறையே ஜி.எஸ்.டி என்பதற்கு இதோ ஆதாரங்கள்;
கார்ப்பரேட்களுக்கு வரிகளை குறைப்பது, பெரு நிறுவனங்களுக்கு வரிச் சலுகைகளை வாரி இறைப்பது…. என்பதோடு, சிறு தொழில்களை சீரழிப்பது, குறுந் தொழில்களை கொன்றொழிப்பது என்பதில் சாதனை படைத்துள்ளது பாஜக அரசு!
இதற்கு அவர்கள் வைத்த பெயர் தான், ‘ஒரே நாடு ஒரே வரி’. ஒரே தரப்பை வாழ வைக்கவும், ஏழை, எளியோர் நடுத்தர பிரிவினரை ஒரே போடாகப் போட்டு அழிக்கவும் திட்டமிட்டு உருவாக்கப்பட்டதே ஜி.எஸ்.டி வரி விதிப்பாகும். நியாயமாக இதற்கு ‘ஓரவஞ்சனை’ எனப் பெயர் வைத்திருக்கலாம்.
அவ்வளவு பெரிய முதலாளித்துவ நாடான அமெரிக்காவில் கூட ஜி.எஸ்.டி வரி விதிப்பு முறை இல்லை. அப்படியே ஜி.எஸ்.டி வரிகளை விதித்துள்ள மற்ற பல நாடுகளிலுமே அதிகபட்சம் 10% தான் வரி விதிப்பாக உள்ளது. ஆனால், நமது நாட்டிலோ 5%, 12%, 18%, 28% என நான்கு அடுக்குகளாக ஜி.எஸ்.டி வரி வசூலித்து ஏகப்பட்ட குளறுபடிகளை செய்கின்றனர்.
‘ஆக்ஸ்பாம்’ அமைப்பு என்ற மதிப்பு மிக்க தொண்டு நிறுவனம் மத்திய அரசு மற்றும் பன்னாட்டு அமைப்புகள் வெளியிட்ட ஆவணங்களை ஆய்வு செய்து, இந்திய அரசின் வரிவிதிப்பு முறைகள் நாட்டில் பொருளாதார ஏற்றத் தாழ்வுகளை அதிகரித்து வருவதை முறையான தரவுகளுடன் அம்பலப்படுத்தியுள்ளது.
உதாரணத்திற்கு 2020-21ம் ஆண்டில் ஜி.எஸ்.டி எனப்படும் சரக்கு மற்றும் சேவை வரியாக
வசூலிக்கப்பட்ட மொத்த தொகை; ரூ.14.83 லட்சம் கோடிகளாகும்! இதில்,
ஏழை மக்களிடமிருந்து வசூலிக்கப்பட்டது 64% ( ரூ.9.50 லட்சம் கோடி,)
நடுத்தர மக்களிடமிருந்து பெறப்பட்டது 33% (ரூ.4.90 லட்சம் கோடி)
பெரும் பணக்காரர்களிடமிருந்து பெறப்பட்டது 3%, ( ரூ.44,000 கோடி)
மேற்படி தரவுகளே போதும், இந்த ஜி.எஸ்.டி வரி விதிப்பின் நோக்கத்தை வெளிப்படுத்தி விடுவதற்கு! இந்த வரிவிதிப்பின் விளைவால், நாட்டில் ஏழைகள் அடைந்த பாதிப்புகளையும், பணக்காரர்கள் அடைந்த பலன்களையும் அந்த ஆய்வு வெளிப்படுத்தியுள்ளது.
2021 ம் ஆண்டு கணக்குப்படி இந்தியாவின் வெறும் 5 சதவிகிதம் பேர் நாட்டின் மொத்த சொத்துக்களில் 62% க்கும் அதிகமானதை கொண்டிருக்கிறார்கள்! அதே நேரத்தில் மக்கள் தொகையில் 50% க்கும் அதிகமான ஏழைகளிடம் உள்ள மொத்த செல்வம் வெறும் 3% மட்டுமே!
இந்தியாவில் பல்லாயிரம் கோடிகளை குவித்து வைத்திருக்கும் செல்வந்தர்களின் எண்ணிக்கை 2020-ல் 102 ஆக இருந்தது!
இத்தகு கோடீஸ்வரர்களின் எண்ணிக்கை 2021ல் 142 ஆக உயர்ந்துள்ளது!
2022-ல் இது போன்ற கோடீஸ்வரர்களின் எண்ணிக்கை 166 ஆக எகிறியுள்ளது!
இந்தியாவின் 100 பணக்காரர்களின் மொத்த சொத்து மதிப்பு 2022ல் ரூ. 54.12 லட்சம் கோடியை எட்டியுள்ளது. இந்த தொகையை கொண்டு நாடு முழுவதும் 18 மாதங்களுக்கு பட்ஜெட் போடலாம். அதே போல இந்த பெரும் பணக்காரர்களுக்கு வெறும் 2 சதவிகிதம் சொத்துவரி விதித்தால் கூட, ரூ.40,423 கோடி நிதியை உருவாக்க முடியும். இந்த நிதியை கொண்டு நாடு முழுவதும் உள்ள ஊட்டச்சத்து குறைபாடுள்ள குழந்தைகளுக்கு சரியான, சத்தான உணவை மூன்று வருடங்களுக்கு கொடுத்து விட முடியும்” எனக் தெரிவித்துள்ளது.
ஆனால், நம் இந்தியாவின் மோடி தலைமையிலான பாஜக அரசோ, பணம் படைத்தவர்களை உயர வைத்து, ஏழைகளை மேலும் ஏழைகளாக்கிக் கொண்டே செல்கிறது.
இந்தியாவில் ஏழைகள் என்பதாக 22.89 கோடி பேர் வறுமையில் வாழ்கின்றனர்! இவ்வளவு எண்ணிக்கையிலான ஏழைகள் உலகில் வெறெங்குமே கிடையாது… என தரவுகளை சொல்லும் ஆக்ஸ்பாம், ”வரி கட்டமைப்புகள் – இயல்பற்ற முறையில் – பிற்போக்குத்தனமான வரிவிதிப்புகளாக இருக்கும் போது – இது போன்று ஏற்றத் தாழ்வுகள் அதிகரிக்கும்” என்றும் தெரிவிக்கிறது.
இந்தியாவில் பணக்காரர்களைவிட ஏழை மக்கள் தாம், தங்கள் வருமானத்தில் பெரும் பங்கை வரியாக செலுத்துகிறார்கள்,” என்றும் ஆக்ஸ்பாம் தெரிவித்துள்ளது.
இது ஒரு புறமிருக்க சிறு, குறுந்தொழில்கள் ஜி.எஸ்.டி வரி விதிப்பால் எவ்வளவு பாதிப்படைந்துள்ளன என பி.பி.சி நடத்திய ஒரு கள ஆய்வு துல்லியமாக சொல்கிறது.
கோவையில் இன்ஜினியரிங் பொருட்கள் தயாரிப்பில் ஜாப் ஆர்டர்கள் பெற்று செயல்படும் 50 ஆயிரம் தொழிற்சாலைகள் உள்ளன. இதில், சுமார் 6 லட்சம் பேர் நேரடியாக வேலை வாய்ப்பு பெறுகின்றனர். குண்டூசி முதல் ராக்கெட்டின் போல்ட் நட் வரையில் இங்கே தயாரிக்கப்படுகின்றன. ஜி.எஸ்.டி அமலாக்கம் கோவையின் சிறு, குறுந் தொழில்களை மிக கடுமையாக பாதித்துள்ளது. தற்போது, போதிய வேலை ஆர்டர்கள் கிடைக்காததால் தொழில்கள் நலிவடைந்து வருகின்றன.
24 மணி நேரமும் இயங்கிக் கொண்டிருந்த இந்த தொழிற்சாலைகள் தற்போது, 12 மணி நேரம் மட்டுமே இயக்கப்படுகின்றன. 50 சதவீதம் தொழிற்சாலைகள் நடத்த முடியாமல் பூட்டப்பட்டுள்ளன. ஜிஎஸ்டி அமலாக்கத்திற்கு பின்பு `ஜாப் ஆர்டர்` தொழில் மட்டுமல்ல, கோவையின் அடையாளமான மோட்டார், பம்பு செட் தொழில் என ஒட்டு மொத்த சிறு, குறு தொழில்களும் அழிக்கப்பட்டு வருகின்றன!. MSME எனப்படும் சிறு, குறு தொழில் துறையில் பாஜக அரசு பதவி ஏற்றது தொடங்கி கடந்த பத்து ஆண்டுகளாக தொடர் சரிவு ஏற்பட்டுள்ளது என பி.பி.சி கள ஆய்வில் அங்குள்ள தொழில் முனைவோர்கள் தெரிவித்துள்ளனர்.
கோவை என்பது ஒரு சின்ன உதாரணம் தான். ஜி.எஸ்.டி அமலாக்கத்திற்கு பிறகு, தமிழகத்தில் 12 லட்சமாக இருந்த சிறு, குறுந்தொழில் நிறுவனங்கள் தற்போது சரிபாதிக்கும் குறைவாகிவிட்டன எனத் தெரிய வருகிறது. இந்தியா முழுமையும் சிறு, குறுந்தொழில்களில் ஈடுபட்டிருந்த கோடிக்கணக்கானவர்களை இந்த ஜி.எஸ்.டி வரிவிதிப்பு நடுத் தெருவிற்கு கொண்டு வந்துவிட்டது. ‘பெரு நிறுவன வளர்ச்சி’ என்ற ஒன்றையே இலக்காகக் கொண்டு, சிறு,குறுந் தொழில்களை நசிவுக்கு தள்ளிவிட்டது பாஜக அரசு.
Also read
இதற்கெல்லாம் உச்சமாக மாநில அரசுகளின் வரி விதிக்கும் உரிமையை கேள்விக்கு உள்ளாக்கி கூட்டாட்சி தத்துவத்திற்கே வேட்டு வைத்துவிட்டது பாஜக அரசு. உதாரணத்திற்கு ஜி.எஸ்.டிக்கு முன்பாக தமிழ் நாடு அரசு வசூலித்த வரியை முடக்கி விட்டு, தமிழக மக்களிடம் இருந்து பெரும் நிதியை வசூலித்துவிடுகிறது மத்திய அரசு. அப்படி வசூலிக்கப்பட்ட ஒரு ரூபாயில் வெறும் 29 பைசாவைத் தான் திரும்பத் தருகிறது மத்திய அரசு. எனவே நாம் பிரிட்டிஷ் கால அடிமைத் தளையில் இருந்த காலத்தை விட, தற்போது அதிகம் பாதிக்கப்படுவதாக தமிழக மக்கள் உணரும் நிலை தோன்றியுள்ளது.
சாவித்திரி கண்ணன்
இம் என்றால் சிறைவாசம் ஏனென்றால் வனவாசம்.இது ஆங்கிலேயர் நம்மை ஆண்டபோது நாம் சுதந்திரம் வேண்டி வைத்த பல கோஷங்களில் ஒன்று. அடுத்து அவர்களை விரட்டுவதற்கு விரட்டியாக வேண்டும் என்ற கட்டாயத்திற்கு தள்ளப்பட்ட பல விஷயங்களில் ஒன்று நம் மீது திணிக்கப்பட்ட வரி. வணிகம் செய்யும் வணிகர்களுக்கு எந்த ஒரு சலுகையும் இல்லாத நிலையில் எதற்கு இந்த ஜிஎஸ்டி முறை. இதனைத் தான் உங்கள் கட்டுரை விரிவாக சொல்லி இருக்கிறது.
அரசியல் பிழைத்தோர்க்கு அறம் கூற்றாம் என்பது சிலப்பதிகாரம் காட்டும் நீதி. அல்லற்பட்டு ஆற்றாது அழுத கண்ணீரன்றே செல்வத்தைத் தேய்க்கும் படை என்கிறது திருக்குறள். அதனால் ஏழைகளின் கண்ணீருக்குக் காரணமான கொடுங்கோலர்கள் தண்டிக்கப்படுவது உறுதி…
ஜி.எஸ்.டி என்பது ஒரு கொடூரமான வரிமுறை
என்பதை கோவை சிறு,குறு,நடுத்தர தொழில்களின் பாதிப்பிலிருந்து விளக்கியுள்ளீர்கள்.
GST – எப்படி தொழில்களை முடக்குகிறது என்பதற்கு ஒரு real life உதாரணம் யாராவது கொடுக்க முடியுமா? கற்று கொள்ள மட்டுமே இந்த கோரிக்கை.