நியாயமான தேர்தலுக்கு சாத்தியம் உள்ளதா?

-ச.அருணாசலம்

இருபது அரசியல் கட்சிகள் EVM வாக்களிப்பை எதிர்க்கின்றன. EVM முறையில் நேர்மையான வாக்கு பதிவு சாத்தியமா..? கடந்த தேர்தலின் கசப்பான அனுபவங்கள், தேர்தல் ஆணைய தலைமை அதிகாரிகளின் நியமனங்கள், அவர்கள் செயல்படும் விதம் யாவும் மக்களின் சந்தேகத்தை வலுப்படுத்துகிறது…என்ன செய்யலாம்..?

2019 தேர்தலில் சில சாம்பிள் சர்வே செய்ததிலேயே இ.வி.எம்.மில் பதிவான வாக்குகளுக்கும், எண்ணப்பட்ட வாக்குகளுக்கும் வித்தியாசம் கண்டுபிடிக்கப்பட்டது-  350க்கும் மேலான தொகுதிகளில்! இதை சாதாரணத் தவறாக கடந்து போக இயலுமா? குறுக்கு வழியில் கோல்மால்களை செய்து அதிகார நாற்காலியை அடையத் துடிக்கும் பாஜகவுக்கு செக் வைத்தே ஆக வேண்டும்.

நாம் போடும் ஓட்டு போட்டவருக்குத் தான் விழுந்ததா? எனச் சரி பார்த்துக் கொள்ளும் ஒப்புகை சீட்டு ‘விவிபேட்’  என்ற இயந்திரத்தை நிறுவினால் தான் சாத்தியம்! ‘Voter Verifiable Paper Audit Trail என்ற இந்த இயந்திரத்தை அனைத்து தொகுதிகளிலும் வைத்து ஒப்புகை சீட்டை எண்ணி சரி பார்த்து முடிவை அறிவிக்க தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிட வேண்டும்’ என பல்வேறு மனுக்கள் உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டன. இவற்றைக் காலம் கடந்து விசாரணைக்கு எடுத்துக் கொள்ள ஒருவழியாக உச்ச நீதிமன்றம் ஒப்புக் கொண்டுள்ளது.

இப்பொழுது உள்ள நடைமுறை என்னவென்றால் , ஒரு சட்டமன்ற தொகுதியில் வெறும் ஐந்து வாக்கு சாவடிகளில் மட்டும், மின்னணு இயந்திரத்தில் பதிவான வாக்குகளுடன், விவிபேட் சீட்டுக்களை யும் எண்ணி ஒப்பிட்டு சரி பார்ப்பது தான்.

ஜனநாயக சீர்திருத்தங்களுக்கான கூட்டமைப்பு (ADR) , தேர்தலுக்கான குடிமக்கள் ஆணையம் (Citizens Commission for Elections) போன்ற பல அமைப்புகள் இந்த மனுவை உச்சநீதிமன்றத்தில் 2023-ம் ஆண்டே தாக்கல் செய்திருந்தனர்.

உச்ச நீதிமன்றமும் தேர்தல் ஆணையத்திற்கு இது குறித்து கடந்த ஜூலை மாதத்தில் நோட்டீசு அனுப்பி, தேர்தல் ஆணையம் தனது பதில் மனுவையும் தாக்கல் செய்துள்ளது.

இப்பொழுது நடைமுறையில் , ஒரு வாக்காளர் வாக்குச் சாவடிக்கு சென்று , தான் வாக்களிக்க விரும்பும் நபரின் பெயருக்கு நேராக உள்ள நீல நிற பொத்தானை அழுத்தி வாக்களிக்கிறார். அவ்வாறு பொத்தானை அழுத்தும் பொழுது , விளக்கெறிந்து , ஒரு “பீப் “ ஒலி கேட்டால் அவர் வாக்களித்து விட்டார் என கருதப்படுகிறது. இதில் எப்படி நாம் திருப்தி அடைவது?

உண்மையில் வாக்காளர் தான் எண்ணியிருந்தவருக்கு வாக்களித்தாரா?, அந்த வாக்காளருக்குதான் உண்மையிலே அந்த வாக்கு சேர்ந்ததா? என்பதற்கு எந்தவிதமான, வெளிப்படையான கண் கூடான ஆதாரம் இல்லை !

இதையே தான் உச்ச நீதி மன்றம், 2013- ல் சுப்பிரமணிய சுவாமி இ.வி.எம். நடைமுறைக்கெதிராக தேர்தல் ஆணையத்தின் மீது தொடர்ந்த வழக்கில் கூறியது.

அத்தகைய கண் கூடான ஆதாரம் ஒரு வெளிப்படையான, நேர்மையான தேர்தலுக்கு மிக அவசியம் என்றும், தேர்தல் நடைமுறை (Electoral Process) வாக்காளர்களுக்கு நம்பிக்கையை ஏற்படுத்தும் விதமாக அமைய வேண்டும் என்று தீர்ப்பு கொடுத்தனர். இப்படித்தான் விவிபேட் இயந்திரம், இ.வி.எம் முடன் இணைக்கப்பட்டது.

“ஜனநாயகத்தின் அடிநாதமான தேர்தலில் வாக்களிப்பவரின் எண்ணம் ஈடேறுவது தான் முக்கியமே ஒழிய , தேர்தல் ஆணையமோ, தொழில்நுட்ப வல்லுனர்களோ, அரசியல் கட்சிகளோ அல்லது வேட்பாளர்களோ திருப்தி அடைவது முதன்மையானது அல்ல..” என்பதே வாதமாகும்.

“எனவே, தொகுதியில் பதிவான அனைத்து வாக்குகளையும் , விவிபேட் அடையாள சீட்டுகளுடன் ஒப்பிட்டு முடிவை அறிவிக்க வேண்டும்” என்ற கோரிக்கை வலுவாக எழுந்துள்ளது.

இத்துடன் ஏப்ரல்-4 அன்று, முகமது பிரச்சா என்ற வழக்கறிஞர் , மீண்டும் பழைய வாக்குச் சீட்டு முறையை நடைமுறைப்படுத்த வேண்டும் என்ற கோரிக்கை மனுவை உச்ச நீதி மன்றத்தில் சமர்ப்பித்து உள்ளார்.

மின்னணு வாக்கு இயந்திரத்தில் ஏகப்பட்ட குளறுபடிகள் இருப்பதால், நம்பகத் தன்மை இல்லாததால் பழைய வாக்குச்சீட்டு முறையையே (Paper ballot system) மீண்டும் கொண்டு வர வேண்டும் என்றும், அது சாத்தியமில்லாவிட்டால் வாக்காளர்கள் வாக்களித்தன் அடையாளமான விவிபேட் சீட்டை வாக்குப் பெட்டியில் போட அனுமதிக்க வேண்டும் என்றும் மனுவில் கூறியுள்ளார். இந்த மனுவும் மற்ற மனுக்களுடன் சேர்ந்து விசாரிக்கப்படவுள்ளது.

வாக்கு சீட்டு முறை அல்லது ‘விவிபேட்’ மூலம் ஒப்புகை சீட்டு!

E.C. பொது வெளியில் தனது நிலையை தெளிவு படுத்தியுள்ளதா? அல்லது அரசியல் கட்சிகளை கலந்து ஆலோசனை நடத்தியதா?, அரசியல் கட்சிகள் மட்டுமின்றி, ஜனநாயக ஆர்வலர்கள், அதிகாரம் சாரா சமூகப் பிரதிநிதிகள், அறிஞர் பெருமக்கள், மூத்த அதிகாரிகள், ஆகியோரிடம் கலந்து உரையாடியதா? என்று பார்த்தால், இல்லை என்பதே உண்மையாகும்.

தேர்தல் ஆணையம் என்பது இந்திய அரசமைப்பில் நீதி மன்றங்களுக்கு இணையான அதிகாரங்களும் ஆளுமையும் கொண்ட ஒரு சுதந்திரமான அமைப்பாகும்.

அத்தகைய சுதந்திர அமைப்பின் இன்றைய பரிதாப நிலைமையை கீழ்கண்ட விவரங்களில் இருந்து நாம் அறிய முடியும்.

# 2018 டிசம்பருக்குப் பிறகு, தேர்தல் ஆணையம் அரசியல் கட்சிகளையோ, அறிஞர் பெருமக்களையோ, நடுநிலையான தொழில்நுட்ப வல்லுனர்களையோ சந்திக்கவோ, கலந்துரையாடவோ இல்லை என்பதை ஓய்வு பெற்ற மூத்த ஐ ஏ எஸ் அதிகாரியும், தேர்தலுக்கான குடிமக்கள் ஆணையத்தின் ஒருங்கிணைப்பாளருமான திரு. எம். ஜி. தேவசகாயம் கூறுகிறார்.

# பொது மக்களின் சந்தேகங்களையும், வல்லுனர்களின் முனைப்பான கேள்விகளையும் வெளிப்படையாக தீர்த்து வைக்க தே.ஆ. (E.C) முயன்றதில்லை. இ. வி. எம் குறித்த கேள்விகளுக்கு உரிய பதில்களை கூறி , ஐயப்பாடுகளை நீக்கி, தேர்தல் நடைமுறையில் நம்பிக்கை ஏற்படுத்த முயன்றது கூட இல்லை என்பதே உண்மை.

# 19 லட்சம் இ.வி.எம் கருவிகள் கணக்கிற்கு வராமல் காணாமல் போனதற்கும், அவற்றில் சில ஆளும் பாஜக வை சேர்ந்த தலைவர்களின் கிடங்குகளிலும், வாகனங்களிலும் கண்டுபிடிக்கப் பட்டதற்கும் எந்த விளக்கமும் ஆணையத்தால் தரவியலவில்லை.

# தொழில்நுட்ப அறிஞர்களின் கேள்விகளுக்கோ, அரசியல் கட்சிகள் சுட்டிக்காட்டும் குறைகளுக்கோ அல்லது பொது மக்களின் சந்தேகங்களுக்கோ பதில்தர தேர்தல் ஆணையம் மறுப்பதால் தான் இன்று மனுதாரர்கள் உச்ச நீதி மன்றத்தை நாடும் சூழல் ஏற்பட்டுள்ளது.

அரசமைப்பு சட்டம் பிரிவு 324 ன்படி தேர்தல் ஆணையத்திற்கு தேர்தல்களை சுதந்திரமாக, நியாயமாக யாருடைய தலையீடும் இன்றி நடத்தும் முழு அதிகாரத்தை வழங்கியுள்ளது.

ஒருமித்த கருத்து இல்லாத நிலையில் விவிபேட் அடையாளச் சீட்டுகளையே இறுதி ஆதாரமாக தேர்தல் ஆணையம் கருத வேண்டும் என்று தேர்தல் விதி 56 கூறுகிறது.

இருபதுக்கும் மேற்பட்ட அரசியல் கட்சிகள் 2017- ல் இ. வி. எம் முறையை எதிர்த்து குரல் எழுப்பிய போது அன்றைய தலைமை தேர்தல் ஆணையர், (குஜராத்தை சார்ந்த ) அச்சல் குமார் ஜோதி உச்ச நீதி மன்ற 2013 -ம் ஆண்டு ஆணைக்குப் பின்னும் , ”விவிபேட் இயந்திரங்கள் வழங்கும் அடையாளச் சீட்டுகளை ஒரே ஒரு சதவிகிதம் (1%) மட்டும் சரி பார்த்தால் போதும்” என்று உத்தரவிட்டார். இந்த அதிகாரி தான் 2017 -ல் இமாச்சல பிரதேசம் மற்றும் குஜராத் தேர்தல்களில் மோடி ஆதரவு செயல்பாட்டால் கடும் சர்ச்சைக்குள்ளானவர்.

இவரின் 1% உத்தரவை எதிர்த்தே வழக்கு உச்ச நீதி மன்றம் சென்றன அனைத்து கட்சிகளும்! குறைந்தபட்சம் 30% வாக்குகள் விவிபேட் அடையாள சீட்டுகளை எண்ணுவது மூலம் சரி பார்க்க வேண்டும் என்று கோரின. ஆனால் அன்றிருந்த தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய், ”இதை பரிசீலிக்க நேரமில்லை” என்று கூறி ‘கட்ட பஞ்சாயத்து’ பாணியில் இருவருக்கும் பொதுவாக 3% சீட்டுகளை சரிபார்க்க உத்தரவிட்டார்.

இதை தொடரந்து 2018 ல் ஆகஸ்டு மாதத்தில் அன்றைய தலைமை தேர்தல் ஆணையர் திரு. ஓ.பி. ராவத் அனைத்து கட்சி கூட்டத்தை இ.வி.எம். வாக்குமுறை பற்றி விவாதிக்க கூட்டினார்!

இருபதுக்கு மேற்பட்ட கட்சிகள், பாஜகவைத் தவிர அனைத்து கட்சிகளும் ஐம்பது சதவிகித (50%) விவிபேட் அடையாள சீட்டு சரி பார்த்தலைக் கோரினர்.

இந்த கூட்டம் தான் தேர்தல் ஆணையம் கூட்டிய கடைசி கூட்டம். கடந்த ஆறு ஆண்டுகளில் தே.ஆ. அனைத்து கட்சி கூட்டத்தை கூட்டவுமில்லை, கலந்தாலோசித்து, ஒருமித்த கருத்தை எட்ட முயலவுமில்லை.

ஓய்வு பெற்ற உச்ச நீதிமன்ற நீதிபதி மதன்.பி. லோக்கூர் தலைமையில் பிரபல சமூக ஆர்வலர்கள், ஓய்வு பெற்ற ஐ ஏ எஸ் அதிகாரிகள், வழக்கறிஞர்கள் ஆகியோர் இணைந்து மின்னணு வாக்கு முறை பற்றிய ஓர் தெளிவான அறிக்கையை 2021ம் ஆண்டே தயாரித்து, தேர்தல் ஆணையத்திற்கு அனுப்பினர் . இன்று வரை இதைப் பற்றி கலந்துரையாடவோ, மறுமொழி கூறவோ தேர்தல் ஆணையம் முயலவில்லை.

தேர்தல் ஆணையம் ஒரு வழிப்பாதையில் சென்று பிரதமரின் அலுவலகத்தோடு (PMO) மட்டுமே தொடர்பில் உள்ளது என்பது சரியான அணுகுமுறையல்ல.

தேர்தல் ஆணையம் தன் சுயத்தை இழந்து பிரதமர் அலுவலக சமிக்ஞைகளை உள்வாங்கி செயல்பட தலைப்பட்ட அவலத்தை 2019 தேர்தலின் போது பார்த்தோம். நன்னடைத்தை விதிகள் எந்த லட்சணத்தில் கடைப்பிடிக்கப்பட்டன? யார் மீது நடவடிக்கை பாய்ந்தது? யாருடைய குற்றம் கண்டு கொள்ளாமல் விடப்பட்டது..? என்பதெல்லாம் ஊரறிந்த ரகசியம் .

தேர்தல் ஆணையர்கள் பிரதமர் அலுவலகம் சென்று ஆலோசிப்பது மக்களின் கவனத்திற்கு கண்டனத்திற்கு ஆளான  பின்னரும், தேர்தல் ஆணையர்களை பந்தாடி வளைப்பதில் ஆட்சியாளர்கள் சளைக்கவில்லை. இதை தேர்தல் ஆணையர்கள் நியமனத்தில் எழுந்த பல சர்ச்சைகளும், வழக்குகளுமே உணர்த்துகின்றன.

கிட்டத்தட்ட 450 பக்கங்களைக் கொண்ட தேர்தல் ஆணையத்தின் பதில் மனுவில் வாக்காளர்கள் தங்களது வாக்கை தாங்கள் எண்ணப்படி அளிக்கப்பட்டதை  உறுதி செய்து கொள்வது வாக்காளரின் அடிப்படை உரிமை என்று கருத முடியாதாம் !

100% விவிபேட் அடையாள சீட்டுக்களை எண்ணி அறிவிப்பது அதிக நேரம் பிடிக்கும் தேவையற்ற கால விரயச் செயலாம்!

 

சுய அதிகாரம் படைத்த தேர்தல் ஆணையம் நேர்மையான முறையில் சுதந்திரமான தேர்தலை நடத்த வேண்டும். அனைத்து அரசியல் கட்சிகளுக்கும் பொதுவான சமநிலையை தேர்தல் களத்திலும் ,தேர்தல் நடைமுறையிலும் அரங்கேற்ற வேண்டும். அனைவருக்கும் பொதுவான, வெளிப்படையான தேர்தல் நடைமுறையை உறுதிப்படுத்த வேண்டும். இவை தான் ஆணையத்தின் நோக்கமாகவும் நடைமுறையாகவும் இருக்க வேண்டும்.

தேர்தல் என்பது ஒரு சண்டையோ, யார் எத்தனாவது முறை பிரதமராக வரவேண்டும் என்பதோ அல்ல. அது மக்களின் இறையாண்மையை ஒரு வேட்பாளருக்கு மாற்றும் நடைமுறை.

இந்த நடைமுறையில் குடிமகனின் இறையாண்மை வெளிப்படையாக அவர் விரும்பும் நபருக்கு மாற்றப்பட்டது என்பதை உறுதி செய்ய வேண்டும். அவ்வாறு உறுதி செய்வது சிரமமானது, கால தாமதமாகும் என்றெல்லாம் தேர்தல் ஆணையம் கூறுவது கேலிக் கூத்தாகும் அதை ஒரு போதும் ஏற்க முடியாது.

தேர்தல் ஆணையம் ஆளுங் கட்சியின் அங்கம் போல மாறிய இன்றைய நிலை தான் மக்கள் உச்ச நீதிமன்றத்தை எதிர் நோக்கும் நிலைக்கு ஆளாகியுள்ளனர்.

ஏப்ரல் 19 தொடங்கி ஜூன் 3 வரை நடக்கும் ஏழு கட்டத் தேர்தலை மக்கள் சகித்துக் கொள்ளும் பொழுது, மேலும் இரண்டு நாட்கள் தேர்தல் முடிவிற்காக காத்திருக்க மாட்டார்களா?

வாக்காளரின் திருப்தியும் நம்பிக்கையும் தேர்தல் நடைமுறையில் வெளிப்படைத்தன்மையும் நேர்மையும்தான் முக்கியமே ஒழிய பணச்செலவோ, கால விரயமோ, கட்சிகளின் அனுமதியோ வல்லுனர்களின் அங்கீகாரமோ முக்கியமில்லை.

 

தொழில் நுட்பம் வளர்ந்துள்ள இந்த காலத்தில் விஞ்ஞான பூர்வமான இ.வி.எம் கருவியை விடுத்து பழைய காகித வாக்குச்சீட்டு முறைக்கு மாற வேண்டுமா? என சில “ மேதாவிகள்”வினவுகின்றனர். மேலும்சிலர், (சில பத்திரிக்கையாளர்கள் கூட) தில்லு முல்லுகள் இ.வி. எம். மூலம் நடந்தது என நிரூபிக்க முடியுமா ?

அப்படியானால் 2004, 2009 பொதுத் தேர்தல்களில் காங்கிரஸ் வெற்றி பெற்றது எதைக்காட்டுகிறது என்று பாமரத்தனமாக வினவுகின்றனர்.

எலெக்ட்ரானிக் கருவிகள் புளூ டூத் அல்லது வை பை (Blue tooth or Wi fi) மூலம் இணையத்தில் தொடர்பு படுத்தினால் தான் ஹாக் செய்ய முடியும் என்பதை நாம் மறுக்கவில்லை. அப்படி இல்லாமல் தனியாக இயங்கும் (stand alone) கருவிகள் கொடுக்கப்பட்டுள்ள திட்டத்தின் அடிப்படையிலேயே தான் இயங்கும் என்பதை யாரும் மறுக்க முடியாது.

அவ்வாறு கொடுக்கப்படும் திட்ட கட்டளைகள் (program) இயந்திரம் தயாரிப்பு நிலையில் அல்லது பழுது பட்டு சரி செய்யப்படும் நிலையில் தான் இக் கருவிகளில் உள்ளூட்ட முடியும்.

இந்த புரோகிராமிங்கை அரங்கேற்றுவது யார் யார் ?, கண்காணிப்பது யார், முறையாக இருக்கின்றன என்பதை உறுதி செய்வது யார் என்ற கேள்விகளுக்கு தேர்தல் ஆணையம்கூறும் ஒரே பதில் எங்களது தொழில்நுட்ப குழு (Technical Evaluation Committee) இதை கண்காணிக்கும் என்பதை தாண்டி வேறு எந்த தகவலையும் தேர்தல் ஆணையம் கூற மறுக்கிறது.

 

மின்னணு வாக்கு இயந்திரம் தயாரிக்கும் பி இ எல் நிறுவனத்தின் டைரக்டர்களாக பா ஜ க பிரமுகர்களை நியமிப்பதும் மோடி அரசு தான், தேர்தல் ஆணையர்களை நியமிப்பதும் மோடி அரசு தான், தொழில்நுட்பக்குழு உறுப்பினர்களை நியமிப்பதும் மோடி அரசு தான் என்பதைஎப்படி புரிந்து கொள்வது?

திசை மாற்ற அல்லது சுவடு இன்றி தவறிழைக்கத் தூண்டும் புரோகிராமை இ.வி.எம் கருவியில் புகுத்த முடியும் என்ற நிலையில் , முந்தைய தேர்தல்களில் (2004, 2009) இத்தகைய புரொக்ராமிங் செய்யப்படவில்லை என்பதே , இனிமேல் செய்யப்படாது என்பதற்கு “நற்சாட்சி” யாக இருக்க முடியுமா?

24 லட்சம் விவிபேட் இயந்திரங்கள் வாங்கி விட்டு, வெறும் 20,000 கருவிகளை மட்டும் பயன்படுத்துவதற்கு ஏதாவது, காரணம் காட்டுகிறதா தேர்தல் ஆணையம்?

இந்த அடையாளச் சீட்டுகளை தெர்மல் பிரிண்ட் மூலம் பதிவாக்காமல் எளிதில் அழியக் கூடிய பிரிண்டை உபயோகிப்பதும், அந்தச் சீட்டுகளக் கூட, அவசர அவசரமாக எறித்து தடயங்களை அழிக்கும் தேர்தல் ஆணையத்தின் செயல் நியாயமானதா?

இதற்கெல்லாம் முத்தாய்ப்பு வைத்ததைப் போல் எந்தக் கேள்விகளுக்கும் உரிய பதிலைக் கூறாமல் , மௌனம் சாதிப்பது ஏன்?

எண்ணற்ற மக்கள் தில்லியிலும், மாநிலங்களின் மற்ற தலைநகரங்களிலும் இ.வி.எம். முறைக்கெதிராக NO TO EVM என கடந்த ஓராண்டுக்கு மேல் போராடி வருகின்றனரே,

அரசியல் கட்சிகள் அனைத்தும் தங்களது ஆட்சேபனையைத் தெரிவிக்கின்றனரே , இப்பொழுதும் தேர்தல் ஆணையம் வாய்மூடி மௌனியாக இருப்பது அதன் சார்பு நிலையைத் தான் காட்டுகிறது.

என்ன காரணத்தின் பொருட்டோ இந்த வழக்கை இழுத்தடித்துவிட்டு, கடைசி நேரத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொண்ட உச்ச நீதி மன்றம் சிறிது தெம்பைக் கொடுக்கிறது!

தேர்தல்கள் ஜனநாயகத்தின் ஓர் அடையாளம். சுதந்திரமான, நேர்மையான , வெளிப்படையான தேர்வின் மூலமே மக்கள் தீர்ப்பு கிடைத்தது என்று பெருமை கொள்ள முடியும். அதை யாரும் திருட விடாமல் காக்கும் பொறுப்பிலிருந்து நழுவும் நிலையை மாற்ற வேண்டும். அந்த வகையில் உச்ச நீதி மன்றத்தின் பார்வை மக்கள் தீர்ப்பின் முக்கியத்துவம் அதன் நேர்மையிலும், வெளிப்படைத்தன்மையிலும், நம்பிக்கையிலும் தொக்கி நிற்கிறது!

அந்த நம்பிக்கையை உறுதிபடுத்தி, அதன் மூலம் தடுமாறும் தேர்தல் ஆணையம் தனது சக்தியை மீண்டும் பெறவும் வாய்ப்பை ஏற்படுத்த வேண்டும்.

முதன்முதலில் இ.வி.எம். மை தேர்தலில் புகுத்துவதை எதிர்த்து சுப்பிரமணிய சுவாமி நீதி மன்றம் சென்றார்!

பிறகு அத்வானியும், தேஷ்முக்கும் நீதி மன்றத்தை நாடினர்!

அடுத்து. தெலுகு தேசக் கட்சி தலைவர் சந்திரபாபு நாயுடு நீதி மன்றம் சென்றார்.

இன்று பொது மக்கள், தன்னார்வ அமைப்புகள் நீதி மன்றத்தை நாடியுள்ளனர்!

அனைத்து கட்சிகளுமே ( மோடி, அமித்ஷாவைத் தவிர்த்த) இம் முறையில் அதிருப்தியை வெளிப்படுத்திய நிலையில் , தேர்தல் முறை நியாயமாக, வெளிப்படையாக, சுதந்திரமாக நடைபெற வேண்டும், திருடர்கள் மக்கள் தீர்ப்பை திருட இடங்கொடுக்க அனுமதிக்க கூடாது.

அதற்கான முறை அது காகித வாக்குச்சீட்டு முறையோ, அல்லது விவிபேட் அடையாளச்சீட்டு முறையோ எதுவாயினும் கவலையில்லை.

வெளிப்படைத்தன்மையற்ற மனிதர் மட்டுமல்ல, கருவிகளும் நமது தலைவிதியை தீர்மானிக்க நாம் அனுமதிக்க கூடாது!.

கட்டுரையாளர்; ச.அருணாசலம்

 

 

Support Aram

நேர்மையான, வெளிப்படையான,

சுதந்திரமான இதழியலுக்கு தோள்

கொடுங்கள்.

UPI QR CODE

Razorpay Payment Gateway

Personal Info

Donation Total: ₹1,000.00 One Time