ஆர்.எம்.வீரப்பனின் எழுச்சியும், வீழ்ச்சியும்!

-சாவித்திரி கண்ணன்

ஆர்.எம்.வீயின் வாழ்க்கை வெற்றிகளும், வீழ்ச்சிகளும் நிறைந்தது! எம்.ஜி.ஆரின் அனைத்து வெற்றிகளுக்கு பின்பும், ஆர்.எம்.வியின் அர்ப்பணிப்பு இருந்ததை போலவே, எம்.ஜி.ஆரின் வீழ்ச்சிக்கும் தன்னை அறியாமலே துணை போனவர்! தமிழகத்தின் முக்கியமான சில அரசியல் திருப்பு முனைகளுக்கு காரணமானவர்!

பொதிகை தொலைகாட்சியில் 20 வருடத்திற்கு முன்பு நண்பர் லேனா. தமிழ்வாணனைக் கொண்டு நேர்காணல் நிகழ்ச்சி ஒன்றை நான் செய்து கொண்டிருந்த காலத்தில் ஆர்.எம்.வீரப்பன் அவர்களை அழைத்து ஒரு நேர்காணல் செய்தோம். ஏதோ ஒரு சந்திப்பு என்றில்லாமல் என்னைக் குறித்து அவர் முழுமையாக கேட்டறிந்த விதம், நிகழ்ச்சி குறித்த விபரங்களை தெரிந்து கொள்வதில் காட்டிய சிரத்தை என்னை ஆச்சரியப்படுத்தியது. எம்.ஜி.ஆர் ஏன் இவரை அருகே நெருக்கமாக வைத்துக் கொண்டார் என என்னால் நன்றாக உணர முடிந்தது.

ஆர்.எம்.வீரப்பன் அவர்களைப் பற்றிச் சொல்வதென்றால், சிறந்த நிர்வாகி. சிறிய விஷயங்களிலும் கூட சின்சியராக அக்கறை காட்டுவார்!

நிகழ்ச்சியின் முடிவில் எம்.ஜி.ஆர் குறித்து அன்அவிஷயலாக ஒரு அரிய தகவலைச் சொன்னார். எனக்கு ஆர்.எம்.வீ மீது மிகவும் ஆர்வம் வந்துவிட்டது. இவர் உண்மையில் மனம் விட்டு பேசி, அது புத்தக வடிவம் பெற்றால், அந்த புத்தகம் தமிழக வரலாற்றையே கட்டுடைப்பு செய்யுமே! இந்த மனிதருக்குள் எம்.ஜி.ஆர் குறித்த எத்தனையோ அரிய ரகசியங்கள் உள்ளன. அதை எப்படியாவது பேச வைத்து விட வேண்டும் என அவரிடம் ஒரு நாள் தொலைபேசியில் தொடர்பு கொண்டு, ”இந்த சமூகத்தில் மறைக்கப்பட்ட உண்மைகளை சொல்லிவிட்டால் தான் என்ன..?” எனக் கேட்டேன். அவர் உடன்படவில்லை.

அவர் உடன்படாதது அதிசயமல்ல. எம்.ஜி.ஆரைச் சுற்றிலும் ஒரு மாயபிம்பத்தை கட்டமைத்ததிலும், அதில் பலன் பெற்றதிலும் தலையானவர் அவர் தானே!

ஆர்.எம்.வீரப்பன் இல்லாவிட்டால் நாடோடி மன்னன், அடிமைப் பெண், உலகம் சுற்றும் வாலிபன் ஆகிய படங்களை எம்.ஜி.ஆர் தயாரித்தே இருக்கமாட்டார் என்று தான் தோன்றுகிறது. அந்த அளவுக்கு ஆர்.எம்.வியை நம்பி முழு பொறுப்பையும் ஒப்படைத்துவிட்டு, தன்னை சற்று சுதந்திரமாக வைத்துக் கொள்வாராம் எம்.ஜி.ஆர்.

உலகம் சுற்றும் வாலிபன் படத்தை எம்.ஜி.ஆர் எடுத்த போது, ”நான் இந்த படத்திற்கு நிர்வாக பொறுப்பு ஏற்க வேண்டும் என்றால், ஜெயலலிதாவை நீங்க இந்த படத்திற்கு கமிட் செய்யக் கூடாது” என்பது தான் ஆர்.எம்.வீரப்பன் வைத்த நிபந்தனை. எம்.ஜி.ஆர் ஆடிப் போனார்.

எவ்வளவோ சமாதானம் செய்தும் பார்த்தாராம். கடைசி வரை ஆர்.எம்.வி உடன்படவில்லை. ”மூன்று கதாநாயகிகளில் ஒருவர் தானே ஜெயலலிதா! இருந்துவிட்டு போகட்டுமே..” என சமாதானப்படுத்தி உள்ளார். ”இது தான் உங்க முடிவென்றால், நான் எம்.ஜி.ஆர் பிக்சர்ஸில் இருந்தே விலகி கொள்கிறேன். எனக்கு அடுத்த மாதத்தில் இருந்து ரூ500 சம்பளம் வேண்டாம்” என்றாராம்.

எம்.ஜி.ஆர் பல நாட்கள் காத்திருந்து பார்த்துவிட்டு, பிறகு ஆர்.எம்.வீரப்பன் நிபந்தனையை ஏற்று அழைத்தாராம். ஆர்.எம்.வீ இல்லாமல் சொந்த படத் தயாரிப்பை நினைத்தே பார்க்க முடியாது எம்.ஜி.ஆரால்!

ஆர்.எம்.வியும், எம்.ஜி.ஆருக்கு நிறைய விட்டுக் கொடுத்து, நிறையவே பலன் பெற்றும் உள்ளார். ஆர்.எம்.விக்காக தெய்வத்தாய் தொடங்கி நான் ஆணையிட்டால், காவல்காரன், கண்ணன் என் காதலன், ரிக்‌ஷாகாரன்..என பல படங்கள் நடித்துக் கொடுத்தார் எம்.ஜி.ஆர்! தன்னிடம் வேலை செய்பவரே முதலாளியாகி, தன்னை வைத்தே படமெடுக்க உடன்படும் பெருந்தன்மையும் எம்.ஜி.ஆருக்கு இருந்ததென்றால், அது ஆர்.எம்.வியின் நேர்மைக்கும், திறமைக்கும் எம்.ஜி.ஆர் கொடுத்த வெகுமதி என்றும் பொருள் கொள்ளலாம்.

ரிக்‌ஷாகாரன் படத்திலேயே ஜெயலலிதாவை தவிர்த்து, மஞ்சுளாவை அறிமுகம் செய்தார் ஆர்.எம்.வி!  எம்.ஜி.ஆரை வெற்றிகரமாக ஜெயலலிதாவிடம் இருந்து விடுவித்ததில் மட்டுமல்ல, மீண்டும் சுமார் பத்தாண்டுகளுக்கு உள்ளாக எம்.ஜி.ஆருடன் இணைத்து வைத்தவரும் அவர் தான்!

திருச்செந்தூர் முருகன் கோவில் உண்டியல் பணம் எண்ணுகின்ற விவகாரத்தில் அதன் நேர்மையான நிர்வாக அதிகாரி சுப்பிரமணிய பிள்ளையை அதிமுகவினர் கொலை செய்து விட்டனர்! அதை தற்கொலையாக காட்டும் முயற்சிகள் தோல்வியில் முடிந்தன. வழக்கம் போல கமிஷன் ஒன்றை விசாரிக்க செய்து, விவகாரத்தை ஆறப் போடலாம் என எம்.ஜி.ஆர் சி.ஜே.ஆர். பால் என்ற நீதிபதியை கொண்டு விசாரணை கமிஷன் போட்டார்.

அவரோ மிக நேர்மையாக, ‘இது கொலை தான்’ என அறிக்கை தந்தவுடன், எம்.ஜி.ஆர் அந்த அறிக்கையை அமுக்கிவிடப் பார்த்தார். ஆனால், கருணாநிதியோ அதை பொதுவெளியில் வெளிப்படுத்தி விட ஏக களேபரம்! போதாக் குறைக்கு நீதி கேட்டு மதுரை முதல் திருச்செந்தூர் வரை பாத யாத்திரை வேறு கருணாநிதி நடத்தவும் எம்.ஜி.ஆருக்கு ஆர்.எம்.வீ மீது கடும் கோபம் ஏற்பட்டது. அறநிலையத் துறை அமைச்சரான ஆர்.எம்.வீயின் ஆட்கள் தான் இந்த கொலைக்கு காரணம்! இதை மூடி மறைக்க செய்த முயற்சிகள் யாவும் அம்பலப்பட்டு எம்.ஜி.ஆருக்கு பெருத்த அவமானம் ஆகிவிட்டது. ஆர்.எம்.வியை அழைத்து கடுமையாக சாடிய எம்.ஜி.ஆர், தொடர்ந்து ஆர்.எம்.வியை புறக்கணித்தும் வந்தார்.

இந்தச் சூழலில் எம்.ஜி.ஆரை எப்படி சமாதானப்படுத்துவது என்ற ஒற்றை சிந்தனையில் வலம் வந்து கொண்டிருந்த ஆர்.எம்.வி ஒரு நாட்டிய நிகழ்ச்சிக்காக ராணி சீதை மன்றம் சென்ற போது யதேச்சையாக ஜெயலலிதாவை சந்திக்கிறார்.

”எப்படிம்மா இருக்குறீங்க” என விசாரிக்க..

”இருக்கேன். உங்களுக்கே தெரியுமே..எந்த வாய்ப்பும் இல்லாமல் ஏதோ இருக்கேன்” என சொல்லவும்,

”உங்களுக்கு ஒரு முக்கிய நாட்டிய வாய்ப்பு ஒன்றை உருவாக்கி தருகிறேன் செய்கிறீர்களா?” எனக் கேட்க, ஜெயலலிதாவும் மகிழ்ச்சியாக ”நிச்சயமாக செய்கிறேன்” எனச் சொல்லி உள்ளார்.

அப்போது மதுரையில் உலகத் தமிழ் மாநாட்டு ஏற்பாடுகள் போய்க் கொண்டிருந்தன. அதில் காவேரி தந்த கலைச் செல்வி என்ற ஒரு நாட்டிய நிகழ்வை அரங்கேற்றம் செய்யும் வாய்ப்பை ஜெயலலிதாவிற்கு வழங்கினார் ஆர்.எம்.வி. அந்த நிகழ்ச்சியில் ஜெயலலிதாவின் ஆட்டத்தைப் பார்த்த எம்.ஜி.ஆர் பரவசமானார். கடந்த சில நாட்களாக தன் மனதை அரித்துக் கொண்டிருந்த கவலைகள் யாவும் விலகி பிரகாசமானார் எம்.ஜி.ஆர்.

அந்த நிகழ்ச்சியிலேயே, ”நான் என்ன நினைக்கிறேனோ, அதை சொல்லாமலே என் மனதறிந்து நிறைவேற்றுபவர் தான் நமது ஆர்.எம்.வீரப்பன் அவர்கள்…” என பலவாறாக ஆர்.எம்.வீயை புகழ்ந்தார். எம்.ஜி.ஆரிடம் எப்படியோ தன் முக்கியத்துவம் மீண்டும் உயிர் பெற்று விட்டது என ஆர்.எம்.வியும் அகமகிழ்ந்தார்.

‘இந்த நிகழ்ச்சியை துவக்கமாக வைத்து ஜெயலலிதா அரசியலில் பிரவேசிப்பார். அதிமுகவில் எம்.ஜிரையே ஆட்டுவிப்பார்…’ என அப்போதைக்கு அவர் யோசிக்கவில்லை.

காலம் அதை நிகழ்த்திவிட்டது. அதிமுகவில் கொள்கை பரப்பு செயலாளர், பாராளுமன்ற மேலவை உறுப்பினர் என மேலெழுந்து வந்து, கட்சியின் அதிகாரத்தையே மெல்ல, மெல்ல எம்.ஜி.ஆரிடம் இருந்து தன்னிடம் நகர்த்திக் கொண்டார் ஜெயலலிதா. டெல்லியில் இந்திராகாந்தி, பிரணாப் முகர்ஜி என உயர்அதிகார மையத்துடன் நெருங்கிப் பழகி எம்.ஜி.ஆரையே மிரள வைத்தார். எம்.ஜி.ஆரால் ஜெயலலிதா விஷயத்தில் பெரிதாக ஒன்றும் செய்ய முடியவில்லை. ”என்னை முதல்வராக்க எம்.ஜி.ஆருக்கு அழுத்தம் தாங்க..” என ராஜிவ் காந்திக்கு கடிதம் எழுதினார் ஜெயலலிதா.

ஆர்.எம்.வீரப்பன் எவ்வளவு முயன்றும் ஜெயலலிதாவுக்கு அகில இந்திய அளவில் வலுவாக இருந்த பிராமண லாபிக்கு ஈடு கொடுக்க முடியவில்லை. ”கருணாநிதி மீண்டும் மேலெழுந்து வருவதை தடுக்கும் ஆற்றல் ஆர்.எம்.வீரப்பனுக்கு இல்லை. அது ஜெயலலிதாவிற்கே உண்டு” என திமுகவை விரும்பாத தமிழக மக்களும் நம்பத் தொடங்கினர். ராஜிவ்காந்தி கொலை ஜெயலலிதாவுக்கு ஜாக்பாட் வெற்றியை பெற்றுத் தந்தது.

ஜெயலலிதா முதல்வரானதும் சில காலம் அரசியலில் அஞ்ஞானவாசம் செய்த ஆர்.எம்.வீ, பிறகு ஜெயலலிதாவிடமே வந்து சேர்ந்ததோடு, மூச்சுக்கு முன்னூறு முறை ‘’புரட்சித் தலைவி’’ என அழைத்து புகழ்ந்தது அவர் மீதான மரியாதையை சிதைத்தது. ஜெயலலிதா திட்டமிட்டு ஆர்.எம்.வீயை ‘டம்மி பீசா’க்கினார். நிருபர்கள் முன்னிலையிலேயே ஆர்.எம்.வீயை அவர் அலட்சியமாக கையாண்டுள்ளதை நானே சில முறை பார்த்துள்ளேன்.

ரஜினியை வைத்து ‘பாட்ஷா’ என்ற வெற்றிப் படத்தை எடுத்தார் ஆர்.எம்.வீ. அந்தப் படம் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருந்த காலகட்டத்தில், இயக்குனர் மணிரத்தினம் வீட்டில் குண்டு வெடித்தது. அந்த படத்தின் வெற்றி விழாவின் போது ரஜினிகாந்த், ”தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர் குலைந்து வருகிறது. வெடிகுண்டு கலாச்சாரம் தலைதூக்கி உள்ளது” எனப் பேசினார்!

இந்த பேச்சுக்கு பின்னணியில் ஜெயலலிதா முதல்வாரான பிறகு போயஸ் கார்டனில் உள்ள தன் இல்லத்தில் இருந்து வெளியே வருவதும், போவதுமே ரஜினிக்கு பெரும் சவால் ஆயிற்று. பாதுகாப்பு கெடுபிடிகள் ரஜினியை காயப்படுத்தி இருந்தன. ஜெயலலிதா குறித்து பொதுத் தளத்தில் ஊழல், ஆடம்பரம், திமிர்த்தனம் ஆகிய பிம்பங்கள் உருவாகி இருந்த காலத்தில் ரஜினியின் இந்த பேச்சு பெரும் வரவேற்பு பெற்றது. கூடவே, அந்த மேடையில் ரஜினிக்கு பதில் சொல்லாமல் அமைதி காத்த ஆர்.எம்.வீயின் அமைச்சர் பதவியும் போனது.

ஆர்.எம்.வீயை பொறுத்த அளவில் அவர் ஒரு வெற்றிகரமான சினிமா வணிகர். எம்.ஜி.ஆர், ரஜினி, கமல் சந்தையில் முன்னணியில் இருக்கும் கதாநாயகர்களைக் கொண்டு வணிகத்தில் தொடர் வெற்றியை ஈட்டியவர். எம்.ஜி.ஆர் கட்சி தொடங்கியவுடன் உடனே அதிமுகவில் ஆர்.எம்.வீரப்பன் சேரவில்லை. சேர்ந்தால் ஆட்சியில் உள்ள கருணாநிதி தன் சினிமா வணிகத்திற்கு இடையூறு செய்வார் என பயந்தார்! பிறகு எம்.ஜி.ஆருக்கு அமோக ஆதரவு பெருகியதை அடுத்து தான் இணைந்தார்! எம்.ஜி.ஆர் மறைவுக்கு பிறகு கருணாநிதியுடன் கை கோர்த்தார். வணிக குலத்திற்கே உள்ள லாப, நஷ்ட கணக்கை கொண்டு தான் அவர் இயங்கினாரே அன்றி, அரசியலுக்கே  தேவைப்படும் போராட்ட மனோபாவம் அவரிடம் எப்போதும் வெளிப்பட்டதாகத் தெரியவில்லை.

1996-ல் ஆர்.எம்.வீ அவர்கள் எம்.ஜி.ஆர் கழகம் என்ற கட்சியைத் தொடங்கி, திமுகவுடன் கூட்டு சேர்ந்து கருணாநிதியை வானாளவப் புகழ்ந்தது இன்னும் பெரிய வீழ்ச்சியானது. அது முதல் அதிமுக தொண்டர்களிடம் இருந்தும் அவர் அன்னியப்பட்டு போனார். பெரியார், அண்ணாவால் ஈர்க்கப்பட்டு, பொது வாழ்க்கைக்கு வந்தவரான ஆர்.எம்.வீ காற்றடிக்கும் திசையில் எல்லாம் வெற்றிகரமாக ஓடம் விட்டு களைத்துப் போனார்! ஆனால், கடைசி வரை திராவிட இயக்க சித்தாந்தத்திற்கு எதிராக இந்துத்துவ அரசியல் பக்கம் அவர் செல்லவில்லை என்பது ஒரு ஆறுதல் தான்!

சாவித்திரி கண்ணன்

Support Aram

நேர்மையான, வெளிப்படையான,

சுதந்திரமான இதழியலுக்கு தோள்

கொடுங்கள்.

UPI QR CODE

Razorpay Payment Gateway

Personal Info

Donation Total: ₹1,000.00 One Time