ஸ்டாலின் குடும்பம் சனாதன சதிக்கு துணை போவதா?

-சாவித்திரி கண்ணன்

திராவிட இயக்கம் தோன்றுவதற்கு மூலகாரணமாக இருந்தவர் வள்ளலார். அவருடைய பாடல்களை அச்சிட்டு பரப்பி பெரியாரும், அவர் தம் தொண்டர்களும் பார்ப்பனியத்தின் சூழ்ச்சியை அம்பலப்படுத்தினார்கள்! அந்த வள்ளலாரின் பெருமைகளை சிதைக்க, சனாதனிகள் திமுக ஆட்சியையே பயன்படுத்துவதை என்னென்பது..?

அரவணைத்து அழிப்பதே பிராமணியத்தின் தந்திரமாகும். அந்த வகையில் மகாத்மா காந்தி வாழ்ந்த சபர்மதி ஆஸ்ரமத்தை, ”புதுப்பிக்கிறோம், நவீனப்படுத்துகிறோம்” என்ற பெயரில் அழிக்கின்றனர்.  ”மகாத்மாவின் ஆசிரமத்திற்காக 1,200 கோடி ஒதுக்கி உள்ளோம்” எனச் சொல்லி, பளிங்கு மாளிகையாக – பளபளக்கும் கண்ணாடி கட்டிடமாக – காந்தி ஆசிரமத்தை மாற்றும் ஆடம்பரத் திட்டத்தின் மூலமாக, அவரது எளிமையான தவ வாழ்க்கைகான அடையாளங்களை அழிக்கின்றனர். அவரது சீடர்களையும் ஆசிரமத்தில் இருந்து வெளியேற்றினர்!

அதே பாணியில் இன்றைய திமுக அரசின் முதலமைச்சர் ஸ்டாலினைப் பயன்படுத்தியே வள்ளலாருக்கு பெருமை சேர்க்கும் விதத்தில் வள்ளலார் சர்வதேச மையத்தை கட்டுவதாகச் சொல்லி, வருடந்தோறும் வள்ளலார் பக்தர்கள் பெருந்திரளாக கூடும் 70 ஏக்கர் பெருவெளியை ஏப்பம் விடத் துடிக்கின்றன இந்த சனாதன சக்திகள்!

மொத்தம் 106 ஏக்கர் கொண்ட இந்த நிலப்பரப்பில் வள்ளலார் தன் திட்டப்படி, தென்கோடியில் சத்திய ஞானசபை, தருமசாலை, ஒளித் திருக்கோயில் ஆகியவற்றை அமைத்து, மற்ற பகுதிகளில் எந்தக் கட்டுமானங்களுமோ, தோட்டம், விவசாயச் செயல்பாடுகள் போன்றவற்றையோ கூட செய்யாமல் 70 ஏக்கர் பரப்பை வெறும் பெருவெளியாக விட்டுவிட்டார். காரணம், ‘தைப்பூசம் போன்ற நாட்களில் அங்குள்ள ஒளிக் கோயிலில் ஏற்றப்படும் தீபத்தின் ஒளி ஏழு திரைகளை விலக்கி காட்டப்படும் போது, அதை பக்தர்கள் எந்தத் தடையுமின்றி பார்க்க வேண்டும்’ என்ற நோக்கம் தான்!

இதனால் தான் தற்போது இந்த பெருவெளியில் சுமார் 10 முதல்15 லட்சம் மக்கள் கூடுகிறார்கள்! சனாதன சக்திகளுக்கு சிம்ம சொப்பனமாகத் திகழ்ந்த வள்ளல் பெருமானுக்கு இந்த அளவிற்கான கூட்டம் கூடுவதை பொறுக்காத சனாதன சக்திகளின் சதிச் செயலே இந்த சர்வதேச பன்னாட்டு மையமாகும்.

வள்ளலாரின் போதனைகள் இந்து மதத்தை பிரதிபலிக்கவில்லை. மதங்களைக் கடந்த உருவ வழிபாட்டையே தவிர்த்த ஆன்மீகத்தையே அவர் நமக்கு கற்பித்தார். சுத்த சன்மார்க்கத்தின் மையமாகத் திகழும் இந்த இடத்தை அவர் வாழ்ந்த காலத்திலேயே சபாபதி என்ற பார்ப்பனர் அபகரித்ததும், உருவ வழிபாடு, சடங்குகள் போன்றவற்றை ஏற்படுத்தி, திசைமாற்றப் பார்த்ததும், அதைத் தொடர்ந்து மேட்டுக் குப்பத்தில் தியானத்தில் ஆழ்ந்திருந்த வள்ளலார் இந்த செய்தி கேட்டு வெகுண்டெழுந்து திரும்ப இங்கே வந்து அந்த சனாதன சக்திகளை வெளியேற்றி, அனைத்து செயல்பாடுகளையும் நிறுத்தியதையும், அதைத் தொடர்ந்து அவரது மரணம் சம்பவித்ததும் வரலாறு.

வள்ளலார் மர்ம மரணத்தைத் தொடர்ந்து சுமார் நான்கைந்து ஆண்டுகள் அப்படியே எல்லா செயல்பாடுகளும் ஸ்தம்பித்து போய்விட்டன. இந்தக் கொலை பிரதேசத்தில் மக்கள் நடமாடவும் அஞ்சினர். வள்ளலாரைக் கொன்று அவர் ஜோதிமயமானதாக கற்பிதங்களை உருவாக்கி, சனாதனிகள் தங்கள் கொலைச் செயலை சமத்காரமாக மறைத்ததோடு, மீண்டும் ஐந்தாண்டுகள் கழித்து, இந்த இடத்தை அபகரிக்கவும், இங்கே உருவ வழிபாடு போன்றவற்றை நிகழ்த்தவும் தலைப்பட்டனர். அதுவும் காலப் போக்கில் வள்ளலார் அன்பர்களால் முறியடிக்கப்பட்டு, இந்த வள்ளாலார் சபை இன்று வரை பெரிய அளவில் வள்ளலார் கற்பித்த ஆன்மீகத்திற்கு எதிராகச் செல்லாமல் ஒருவாறு பாதுகாக்கப்படுகிறது.

 

இடையில் வள்ளலார் புகழ்பாடுவதாகச் சொல்லி கொங்கு நாட்டு தொழில் அதிபர் ஒருவர் இந்த நிலப் பரப்பை அபகரிக்க முயன்றார். அதுவும் எளிய வள்ளலார் அன்பர்களால் முறியடிக்கப்பட்டது. ஆனால், இந்த முறை சனாதன சக்திகள் முதலமைச்சர் ஸ்டாலின் குடும்ப அதிகார மையத்தின் வழியாக தங்கள் சதித் திட்டத்தை அரங்கேற்ற சத்திய ஞான சபையின் வள்ளலார் பெருவெளியில் 3.42 ஏக்கர் பரப்பளவை அபகரித்து வள்ளலார் சர்வதேச மையத்தை அமைக்கிறார்களாம்! அங்கே தியான மண்டபம், மின் நூலகம், தகவல் மையம், கருத்தரங்கக் கூடம், முதியோர் இல்லம், வெளிநாட்டு மாணவர்களுக்கான விடுதி ஆகியவை அமைக்கப்படுமாம்!

இன்றைய வள்ளலாரின் சத்ய ஞான சபையில் உள்ள ஒரு சில சனாதனிகளும், அவர்களின் சகாக்களும் சேர்ந்து செய்த சதிச் செயலே இந்த திட்டம்.

இதை ஏன் வள்ளலார் அன்பர்கள் சுட்டிக் காட்டக் கூடிய சுமார் ஐந்து மாற்று இடங்களை தவிர்த்து விட்டு, பெருவெளியில் தான் அமைப்பேன் எனப் பிடிவாதம் பிடிக்கிறார்கள் என்றால், அதற்கு இரண்டு நோக்கங்கள் உள்ளன!

# ஆன்மீக முக்கியத்துவம் கொண்ட சத்யஞான சபையின் பெருவெளியில், வருடாந்த தைப்பூசத் திருவிழாவிற்கு சுமார் 15 லட்சம் பக்தர்கள் கூடும் பிரதான வளாகத்தை சிதைத்து விட்டால், அவ்வளவு பெரிய கூட்டம் கூட முடியாதல்லவா? ஆக, சடுதியில் அமைக்கப்படும் சர்வதேச மையத்தால் கடுமையான இடநெருக்கடியை உண்டாக்குவதே இவர்களின் நோக்கமாகும்.

# இந்த இடத்தில் 100 கோடி செலவில் அமைக்கப்படும் சர்வதேச மையத்தால் நிலத்தின் சந்தை மதிப்பு எகிறும். இதைத் தொடர்ந்து மிகப் பெரிய ஹோட்டல்கள், ரிசார்ட்டுகள், கேளிக்கை விடுதிகள்..என சுற்றுலா தளமாக்கி வர்த்தக பலாபலன்களை பெறுவது!

முதல் நோக்கம் சனாதனிகளுடையது. இரண்டாவது திட்டம் தங்கள் நோக்கத்திற்காக சனாதனிகள் முதலமைச்சரின் குடும்ப உறவுகளிடம் பணத்தாசையை ஏற்படுத்த செய்துள்ள சதிதிட்டமாகும். இந்த சத்திய ஞான சபையின் தலைமை சங்கத்தில் முதல்வர் மனைவி துர்கா ஸ்டாலினின் சகோதரர் ஜெய. ராஜமூர்த்தி இருக்கிறார் என்பதும், அவர் தான் சனாதனிகளின் சகாவாக இந்த சதி திட்டத்தை முன்னெடுத்து வருகிறார் என்பதும் கவனத்திற்கு உரியது.

துர்கா ஸ்டாலின் சகோதரர் ஜெய.ராஜமூர்த்தி

முதல்வர் ஸ்டாலினின் மனைவி துர்கா ஏற்கனவே சனாதன சக்திகளின் கைப்பாவையாகி வேள்விகள், யாகங்கள், பூஜை, புனஸ்காரங்கள் என கோடிக் கணக்கில் அள்ளி இறைத்து, சனாதனிகளை பண மழையில் நனையவிட்டுள்ளார் என்பதெல்லாம் தமிழக மக்கள் அனைவரும் அறிந்ததே! இங்கேயுள்ள ஜானகிராமன் என்பவர் கவர்னர் ஆர்.என்.ரவியை வைத்து வள்ளலார் விழாவை நடத்தியதில், ”வள்ளாலாரே சனாதானத்தை வளர்த்தவர் தான்” என கவர்னர் ஆர்.என்.ரவி அடாவடியாக பேசியது அனைவருக்கும் நினைவிருக்கும்.

சர்வதேச மையத்தை கட்ட நடக்கும் முயற்சியை களத்தில் இறங்கித் தடுத்த பார்வதிபுரம் மக்கள்!

இதை உள்ளூர் மக்கள் எதிர்க்கிறார்கள். உலகம் முழுமையும் உள்ள அனைத்து வள்ளலார் அன்பர்களும் இதை எதிர்க்கிறார்கள். இந்த திட்டத்தை சனாதனிகள், ரியல் எஸ்டேட் வணிகர்கள் ஆகியோரைத் தவிர்த்து மக்கள் அனைவரும் கடுமையாக எதிர்க்கின்றனர். இந்த கெடு நோக்கத்தை அதிமுக, பாமக, நாம் தமிழர், அமமுக உள்ளிட்ட பல கட்சிகள் கண்டித்துள்ளன. இதில் சந்தடி சாக்கில் பாஜகவும் இதைக் கண்டிப்பது போல பாசாங்கு செய்து கொண்டுள்ளது.

பெ.மணியரசன் தலைமையிலான தமிழ் தேசிய பேரியக்கம் இதை எதிர்த்து தொடர்ந்து களமாடி பல போராட்டங்களை நடத்தி வருகிறது.

வள்ளலார் பணியக கடலூர் மாவட்ட பொறுப்பாளர், முனைவர் சுப்ரமணிய சிவாவிடம் பேசுகையில், ”இந்தப் பெருவெளியில் கட்டுமானச் செயல்களை வள்ளலாரே விரும்பவில்லை. தவிர்த்தார். காரணம், பூத வெளி, உயிர் வெளி, யோக வெளி என 40 வெளிகளை கொண்டது பெருவெளி. ஒளி, வெளி இரண்டுமே சன்மார்க்கத்தின் பிரிக்க முடியாத அமைப்பு. எனவே, வெளி என்பதை வெறும் திடலாக பார்க்க முடியாது. பெருவெளி என்பது மக்களை ஒன்றிணைக்கும் தத்துவம். அதை ஒருபோதும் சிதைக்கக் கூடாது” என்றார்.

பற்பல கடும் எதிர்ப்புகள் வெளிப்பட்டும் கள்ள மெளனம் சாதித்து, சர்வதேச மையத்திற்கான அடிக்கல் நாட்டி, கட்டுமான வேலைகளை ஆரம்பித்து மக்கள் களம் கண்டவுடன் – தேர்தல் காலம் என்பதால் தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளார் ஸ்டாலின்.

எடுப்பார் கைப்பிள்ளையாக செயல்படும் ஸ்டாலின் அரசை மறைந்திருந்து ஆட்டுவிக்கின்றனர் சனாதனிகள்! தமிழ் நாட்டு அரசின் காவல்துறை முழுக்கவே  மோடி, அமித்ஷா கட்டளை கேட்டு செயல்படுபவர்கள் போல, போராடும்  மக்களை துன்புறுத்தி, பொய் வழக்கு போட்டு வருகின்றனர்.

பெரியாருக்கும் பெரியாரான வள்ளலாரை நீர்த்து போக வைத்துவிட்டால், தமிழகத்தில் போலிச் சாமியார்களும், மூட நம்பிக்கை பக்தி கலாச்சாரமும் பல்கி பெருகி பரவுவது எளிதாகிவிடும். அதைத் தான் வள்ளலாருக்கு சிறப்பு செய்வதாகக் கூறி, சிதைத்து, சின்னாப்பின்னப்படுத்தி சாத்தியப்படுத்த முனைகிறார்கள்! திராவிட மாடல் என்ற பெயரால், ஆரிய சனாதனச் சதி திட்டங்களை ஒன்றையடுத்து ஒன்றென – மக்கள் எதிர்ப்புகளை பொருட்படுத்தாமல் – அமல்படுத்தி வரும் ஸ்டாலின் அரசு, தற்போது வள்ளலார் சர்வதேச மைய விவகாரத்தில் அம்பலப்பட்டு நிற்கிறது.

”சாதியும், மதமும் சமயமும் பொய்யென

ஆதியில் உணர்த்திய அருட் பெருஞ்ஜோதி”

”மருளான பற்பல மார்க்கங்களெல்லாம்

வழிதுறை தெரியாமல் மண் மூடிப் போக…”

என்றெல்லாம் பாடியவர் வள்ளலார்!

”இருட்சாதி தத்துவச் சாத்திரக் குப்பை

இருவாய் புன்செயில் எருவாக்கிப் போட்டு

மருட்சாதி சமயங்கள் மதங்களாசிரம

வழக்கெல்லாம் குழிகொட்டி மண் மூடிப் போட்டு

தெருட்சாருஞ் சுத்த சன்மார்க்க நீதி சிறந்து விளங்கவோர் சிற்சபை!”

என வள்ளலார் வகுத்தளித்துச் சென்ற சிற்சபையை சிதைக்கலாகாது. சிதைக்க துணை போகிறவர்களை வாழும் சமூகமும், வரலாறும் மன்னிக்காது. திமுகவிற்கு உள்ளேயும், வெளியிலும் உள்ள முற்போக்கு சக்திகள்.. இந்த ஆபத்தை தடுத்து நிறுத்த வேண்டும்.

சாவித்திரி கண்ணன்

 

Support Aram

நேர்மையான, வெளிப்படையான,

சுதந்திரமான இதழியலுக்கு தோள்

கொடுங்கள்.

UPI QR CODE

Razorpay Payment Gateway

Personal Info

Donation Total: ₹1,000.00 One Time