சனாதன சக்திகளிடம் சான்றிதழ் பெற்ற இளையராஜா!

-சாவித்திரி கண்ணன்

ஏற்கனவே தலையில் பல கீரிடங்களை சுமக்கும் இளையராஜாவை இன்னும் சிலர் திட்டமிட்டு  ஏத்தி விடுகிறார்கள்! இளையராஜா ஒரு இசை மேதை தான்! இளையராஜாவுக்கு இணையான இசை மேதைகளே கிடையாதா..? ”அவர் அனைவருக்கும் மேலானவர்” என ஒருதரப்பு அடித்து பேசுவது எதனால்..? அதன் பின்னணி என்ன?

திரை இசைத்தட்டு விற்பனை நிறுவனங்களுக்கும், இளையராஜாவிற்கும் அந்தக் காலம் தொடங்கி மோதல் நிகழ்ந்து கொண்டிருக்கிறது.

தன் திரை இசை பாடல்களுக்காக தயாரிப்பாளரிடம் ஊதியமும், அதைத் தொடர்ந்து ராயல்டியையும் பெற்று வரும் இளையராஜா, படத் தயாரிப்பாளருக்கு எந்த உரிமையும் இல்லை எல்லா உரிமையும் தனக்கே எனச் சொல்லி வருகிறார். தயாரிப்பாளர்களிடம் பணம் கொடுத்து உரிமம் பெற்ற பிறகு, நாங்கள் இளைய ராஜாவிற்கும் பணம் தர முடியாது என்கின்றன இசைதட்டு விற்பனை நிறுவனங்கள்!

இது தொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் இருக்கிறது. ஆகவே, நாம் அதற்குள் போக வேண்டாம்.

ஆனால், இந்த வழக்கின் விசாரணையின் போது, இளையராஜா தரப்பு வழக்கறிஞர் சதீஷ் பராசரன், ‛‛ஆமா இளையராஜா அனைவருக்கும் மேலானவர் தான்” எனக் கூறினார். வீம்புக்காக இதனை சொல்வதாக நினைக்க வேண்டாம்” என தெரிவித்தார்!

இந்த சதீஸ் பராசரன் இந்தியாவின் அட்டர்னி ஜெனரலாக இருந்த பிரபல வழக்கறிஞர் கே.பராசரனின் மகன். தான் பெற்ற சட்ட அறிவை, தன் வாழ் நாள் முழுமையும் சனாதனத்திற்கு தொண்டாற்றவே அர்ப்பணித்தவர் கே. பராசரன். இந்த கே.பராசரன் தான் பாஜகவினருக்கு நீதிமன்றத்தில் ராமர் கோவில் கட்டும் உரிமைக்கான சட்டப் போராட்டம் நடத்தி வென்று கொடுத்ததோடு, ராம ஜென்மபூமி தீர்த்த ஷேத்ரா அறக்கட்டளையின் முதல் அறங்காவலராகவும் செயல்பட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.

சதீஸ் பராசரன், கே.பராசரன்

இளையராஜா போற்றப்படுவது குறித்து நமக்கு ஆட்சேபணை இல்லை. கோடிக்கணக்கில் அவரை நேசிக்கும் தீவிர இசை ரசிகர்கள் உள்ளனர்.  ஆனால், ‘இளையராஜா அனைவருக்கும் மேலானவர்’ என நிறுவ முனைவது அகோரமானதாகும். இளையராஜாவின் இசை ஆற்றலுக்காக அவரை அதி தீவிரமாக கொண்டாடும் ரசிகர்களிடம் இருந்து வேறுபட்டது, சதீஸ் பராசரன் போன்ற சனாதன சக்திகளின் போற்றிப் புகழும் வார்த்தைகள்! இது குறித்து கட்டுரையின் இறுதியில் பார்ப்போம். இங்கு இளையராஜாவை விடவும் மிகப் பெரிய சாதனை நிகழ்த்திய அவரது முன்னோடிகள் இருவரை குறித்து பார்ப்போம்.

கே.வி.மகாதேவன்;

தென்னிந்திய திரை இசையில் 1942 தொடங்கி 1990 வரை கோலோச்சிய கே.வி.மகாதேவன் சுமார் 1,500 திரைப்படங்களுக்கு இசை அமைத்து சாதித்ததை சற்று நினைவு கூர்ந்தால் பிரமிப்பு ஏற்படுகிறது. இவர் கர்நாடக சங்கீதத்தையும், நாட்டுப்புறத் தெம்மாங்கையும் ஒருங்கே திரை இசையில் கொண்டு வந்து பல வெற்றிப் பாடல்கள் தந்துள்ளார்.

‘மணப்பாறை மாடுகட்டி.. ‘ என்ற அவர் போட்ட பாடலை மிஞ்ச இது வரை வேறு யாரும் உழவர் பாட்டு ஒன்றைத் தரவில்லை! நவராத்திரியில் வரும் சத்தியவான் சாவித்திரி தெருக் கூத்து மறக்க முடியாதது.

‘ஒரு நாள் போதுமா?’ என பாலமுரளிகிருஷ்ணாவை பாட வைத்தவர். சரித்திரம் படைத்த சங்கராபரணம் படப்பாடல்கள் மறக்கக் கூடியதா?

காலத்திற்கும் நிலைத்து நிற்கும் தேவதாஸ் படப்பாடல்கள் சாதாரணமானதா?

சிதம்பரம் ஜெயராமன் பாடிய, ”காவியமா? நெஞ்சின் ஓவியமா?”

பி.சுசீலா பாடிய, ‘மன்னவன் வந்தானடி…’ ‘உன்னைக் காணாத கண்ணும் கண்ணல்ல…’ ‘உன்னை நான் சந்தித்தேன்’,’ நலம் தானா? நலம் தானா?’ என தேன் சிந்தும் கீதங்களைச் சொல்வதா?

அருட்செல்வர் ஏ.பி.நாகராஜனின் அனைத்து பக்தி படங்களுக்கும் ஆஸ்தான இசை அமைப்பாளராக திருவிளையாடல், கந்தன் கருணை, சரஸ்வதி சபதம்..திருவருட் செல்வர் .. என அருள் மழை பொழியும் பாடல்கள்..!

சின்னப்பா தேவர் தயாரித்த அனைத்து எம்.ஜி.ஆர் படங்களுக்கும் கே.வி.மகாதேவன் தான் இசை அமைப்பாளர். அனைத்துமே சூப்பர்ஹிட் பாடல்கள்! எம்.ஜி.ஆருக்கு 30 படங்கள் சிவாஜிக்கு 40க்கு மேற்பட்ட படங்கள் என்பதோடு, தெலுங்கில் என்.டி.ஆர், நாகேஷ்வரராவுக்கும் பல சூப்பர் ஹிட் சாங்க்ஸ் தந்துள்ளார். நமது தமிழகத்தின் நாகர்கோவிலில் பிறந்து பாய்ஸ் கம்பெனி நடிகர், ஹோட்டல் சர்வர் என உழன்று மேலெழுந்து வந்தவரான கே.வி.எம் அவர்கள் ஒருபோதும் எங்கும், எப்போதும் தன்னை விதந்தோதிக் கொண்டவரல்ல.

எம்.எஸ்.விஸ்வநாதன்;

கே.வி.மகாதேவனுக்கு இணையாக ஆயிரம் படங்களுக்கும் அதிகமாக இசை அமைத்தவர் தான் எம்.எஸ்.விஸ்வநாதன்! 1952 தொடங்கி 2000 ஆண்டு வரை இசை மழை பொழிந்தவர்!

கண்ணதாசனும், இவரும் இணைந்து தந்த பாடல்கள் சகா வரம் பெற்றவையாகும்.

இயக்குனர் பீம்சிங், ஸ்ரீதர், பாலச்சந்தர் எனப் பெரிய இயக்குனர்கள் படங்களில் இவர் கொடுத்த பாடல்கள் இசைத் தேன் மழையே!

ஆரம்ப காலங்களில் வயலின் மேதை ராமமூர்த்தியோடு இணைந்து விஸ்வ நாதன் ராமமூர்த்தியாக இயங்கிய காலங்கள் (1952 -1965) திரை இசையின் பொற்காலங்களாகும்.

‘ஒளிமயமான எதிர்காலம்’ காட்டின. ‘விண்ணோடும், முகிலோடும்’ விளையாடின! ‘கல்லெல்லாம் மாணிக்க கல்லாகுமா?’ என்றன. ‘பேசுவது கிளியா? பெண்ணரசி மொழியா?’ என கேட்போரை கிறங்கடித்தன! ‘நெஞ்சம் மறப்பதில்லை, அது நினைவை இழப்பதில்லை..’ என இப்போதும் இதயத்தில் நிலைத்து நிற்கின்றன.

1965 தொடங்கி எம்.எஸ்வி. தனி ஆவர்த்தனம் தொடங்கி

‘ஏழு ஸ்வரங்களுக்குள் எத்தனை பாடல்..’ ,’வான் நில நிலா அல்ல’, ‘வசந்தகால நதிகளிலே வைரமணி நீரலைகள்’, ‘பொட்டு வைத்த முகமோ’,  ‘எங்கேயும் எப்போதும் சங்கீதம் சந்தோஷம்..’ என சுமார் 50 ஆண்டுகள் தமிழகத்தை இசை மழையில் நனைத்தார்!

எம்.எஸ்.வி அவர்களே ஒரு சிறந்த பாடகர் தான்!

தாழையாம் பூ முடித்து தடம் பார்த்து என்ற பாடலில்.. தன்னான தானனன்னே, தன்னான தானனன்னே, தானானா..என மிக அற்புதமாக ஹம்மிங் தந்திருப்பார்! அதைக் கேட்கையில் மனதில் கிராமத்து வயல்வெளிகள் வந்து போகும்.

அவரே பாடிய பல பாடல்கள் சூப்பர்ஹிட்டாகியுள்ளன!

”சொல்லத்தான் நினைக்கிறேன்..”

”கண்டதை சொல்லுகிறேன்”

”ஜகமே மந்திரம் மனிதன் எந்திரம் சிவ சம்போ..”

கடைசியில் ஏ.ஆர்.ரகுமான் இசையில் சங்கமம் படத்தில் ஆலாகண்டா.. பாடினார். முன்பே வி.குமார் இசையிலும் பாடி உள்ளார்.

கடுகளவும் சக இசை அமைப்பாளர்களிடம் ஈகோ பார்க்காதவர். குழந்தை போல எளிமையாக எல்லோரிடமும் பழகுவார்.

இவ்வளவு பெரிய இந்த சாதனையாளர்களை அந்த காலகட்டத்தில் யாரும் புகழ்ந்து கொண்டாடவில்லை. அவர்கள் கொடுத்த பாடல்களை மக்கள் எம்.ஜீ.ஆர் பாடல், சிவாஜி பாடல், ஜெமினி பாடல்..என்று தான் கொண்டாடினர். இது குறித்து இவர்கள் கேள்வி எழுப்பியது கூட இல்லை!

ஆனால், இளையராஜா கொண்டாடப்பட்டதன் பின்னணியை கவனித்தால் அவரது காலம் இசை மூலமான வியாபார வளர்ச்சி பல பரிமாணங்களை தொட்ட காலமாகும். சின்னஞ்சிறு கையடக்க கேசட்டுகள் பரவிய காலம். வெளிநாட்டு உரிமைகள், இசைதட்டு விற்பனை போன்றவற்றில் பல கோடிகள் புழங்கிய காலம்.

அது மட்டுமின்றி படத் தயாரிப்பில் பெரிய நிறுவனங்களை தவிர்த்து சாதாரணமானவர்கள் பலர் நுழைந்த காலகட்டம். அதாவது நடிகர், நடிகைகளை, இயக்குனர், இசை அமைப்பாளர்களை கட்டி ஆண்ட சாம்ராஜ்ய அதிபதிகளான மாடர்ன் தியேட்டர் டி.ஆர்.சுந்தரம், ஜெமினி எஸ்.எஸ்.வாசன், வாஹினி, விஜயா கார்டன் அதிபர் நாகிரெட்டி, ஏ.வி.எம் மெய்யப்ப செட்டியார் போன்ற மிகப் பெரிய ஆளுமைகள் சற்றே வீழ்ச்சி கண்டு புதுப்புது தயாரிப்பாளர்கள் நுழைந்து திரைத் துறையை வாழ வைத்த காலகட்டம்.

இந்தப் புதியவர்கள் இசை கேசட்டுகள் வழியாகவும் பல லட்சங்களை சம்பாதிக்கும் சாத்தியத்தை ஏற்படுத்தி தந்த இளையராஜாவிடம் தங்கள் ராஜ விசுவாசத்தை காட்டினர்.

இசை இளையராஜா என்றால், பூஜை போட்டதும் படம் விற்பனையாகி கைக்கு பணம் கிடைத்து விடும் ஒரு காலட்டம் தொடங்கிய போது தான் இளையராஜா படத் தயார்ப்பாளர்களுக்கு வாழ வைக்கும் தெய்வமானார். அதாவது, திரைத்துறையில் எம்.ஜி.ஆர் இடத்தை பிடித்தார்! சந்தை தான் ஒரு மனிதனை வெற்றிகரமான ஹீரோவாக்குகிறது. சந்தைக்கு இளையராஜா தேவைப்பட்டார்! பட போஸ்டர்களில் இளையராஜாவை போடத் தொடங்கினர்.

ராஜாவை சந்தோஷப்படுத்த ராஜா பெயர்களில் கவிஞர்கள் பாடல்களை தந்தனர்.

”ராஜா கைய வச்சா அது ராங்கா போனதில்லை..”

”ராஜா, ராஜாதி ராஜன் இந்த ராஜா..”

”ராசாவே உன்ன நம்பி இந்த ரோசாப்பூ இருக்குதுங்க..”

எம்.ஜி.ஆரைப் போற்றி பாடல்கள் தந்த கவிஞர் வாலி, இளைய ராஜாவை ஜாடைமாடையாக புகழ்ந்து பாடல்கள் தந்தார்.

இப்படி பலன் அடைபவர்கள் பரவசத்தில் காட்டிய நன்றி வெளிப்பாடுகள் மூலமே எவரும் புகழ் ஏணியில் உயர்ந்து செல்வர்.

எம்.ஜி.ஆர் படப் பாடல்கள் வெற்றிக்கு அந்தப் படங்களின் இசை அமைப்பாளர்களின் பங்களிப்பு மிகவும் பெரிது. ஆனால், எம்.ஜி.ஆர் என்ற பெரிய பிம்பம் அவர்களை மறைத்துவிட்டது. அதே போல ஸ்டியோவை சொந்தமாக வைத்திருந்த படத் தயாரிப்பாளர்கள் முன் அன்றைய இசை மேதைகள் கொண்டாடப்படவில்லை.

அன்றைய காலத்தில் பெரிதும் கொண்டாடப்பட்ட கவிஞர் கண்ணதாசனோடு இணைந்து பணியாற்றுவதில் எந்த இசை அமைப்பாளரும் தயக்கம் காட்டியதில்லை. ஆனால், இளையராஜா கவிஞர் கண்ணதாசனை பெருமளவு தவிர்த்தார்! மிக குறைவான வாய்ப்புகளே கவியரசருக்கு தந்தார். கண்ணதாசனின் பேராளுமை அவருக்கு எரிச்சலையே ஏற்படுத்தி உள்ளது. இதைப் போலவே டி.எம்.செளந்திரராஜனையும், பி.சுசீலாவையும் ஓரம் கட்டினார்.

அதே போல கவிஞர் வைரமுத்து கொண்டாடக் கூடிய அளவிலான கவிஞராக உயர்ந்தவுடன் அவரை முற்றிலும் தவிர்த்துவிட்டார். உண்மையில் வைரமுத்துவை விலக்கியது இளையராஜாவிற்கும் ஒரு இழப்பே! ஆனால், தன்னை உச்சத்தில் வைத்துக் கொண்ட அவர், கவிஞர் வைரமுத்துவின் கண்ணீர் விண்ணப்பங்களை ஏறெடுத்தும் பார்க்கவில்லை. வைரமுத்துவும்- இளையராஜாவும் இணைந்த போது கிடைத்த சுகமான பாடல்கள் அதற்கு பிறகு வெகு அரிதாகவே மலர்ந்தன. தன் முன்னாள் கைகட்டி நிற்கும் கவிஞர்களையே அவர் விரும்பினார்.

இன்றைய தலைமுறையில் 30 வயதிற்குள் இருப்பவர்களுக்கு இளையராஜா நெருக்கமானவரல்ல! ஏ.ஆர்.ரகுமான்.. இளையராஜாவிற்கும் மேலாகச் சென்றுவிட்டார். காலம் எல்லோரையுமே கரைத்து விடும். காலமே மனிதனின் புகழை தீர்மானிக்கிறது. அதுவே முற்றுப் புள்ளியும் வைக்கிறது. தற்போது ஹிந்துத்துவா அரசியலுக்கு இளையராஜா தேவைப்படுகிறார். உயர் அதிகார மையங்களோடு ஒட்டி உறவாட அவர்களை அவருமே பயன்படுத்திக் கொள்கிறார். அவர்களும் அவரை அனைவருக்கும் மேலானவர்களாக சித்தரிக்கின்றனர்!

இளையராஜா உச்ச நிலையை தொட்டது தொடங்கி, உயர்சாதி மேலாதிக்க சக்திகளுக்கு நெருக்கமாகிவிட்டார். அது அவருடைய வளர்ச்சிக்கு பெரிதும் துணை புரிந்தது. அந்த மேலாதிக்க சக்திகளுக்கு தன்னுடைய ராஜ விசுவாசத்தை வெளிப்படுத்தவே, ‘பெரியார்’ திரைப்படத்திற்கு இசை அமைக்க மறுத்து விட்டார், இளையராஜா. உண்மையில், இது அவருடைய பலவீனமே!

பல கீழ்த்தரமான குப்பை படங்களுக்கு எல்லாம் கூட இசை அமைத்து தந்த இளையராஜா,  சென்ற நூற்றாண்டின் மாபெரும் சமூக புரட்சியாளரான பெரியார் படத்திற்கு ஏன் இசை அமைப்பதை தவிர்த்தார்? தன்னுடைய சந்தை மதிப்போடு, சமூக அந்தஸ்த்தையும் உச்சத்தில் வைத்துப் போற்ற அந்த சாதி மேலாதிக்க சக்திகளின் துணை அவருக்கு தேவைப்படுகிறது. ஆகவே, பெரியார் படத்திற்கு இசை அமைப்பதன் மூலம் அவர்களின் மனதை வருத்தப்படுத்த இளையராஜா விரும்பவில்லை.

‛‛ஆமா இளையராஜா அனைவருக்கும் மேலானவர் தான்” எனக் கூறியதோடு  ”வீம்புக்காக இதனை சொல்வதாக நினைக்க வேண்டாம்” என சதீஷ் பராசரன் அடித்துப் பேசியது குறித்து இளையராஜா இது வரை வாய் திறக்கவில்லை. இளையராஜாவுமே தன்னை அப்படி நினைக்கிறார் போலும்!

‘மேலானவன் – கீழானவன்’ என்ற சனாதனச் சிந்தனைக்கு மாற்றாக’ சமத்துவ கொள்கை பேசிய பொதுவுடமை இயக்கத்தின் பாடகராக, இசை அமைப்பாளாராக தன் வாழ்வை தொடங்கிய இளைய ராஜா, தன்னுடைய திறமைகளால் பணம், புகழ் அடைவதோடு திருப்தி அடையாமல், ”அனைவருக்கும் மேலாலானவன்” என அந்த சனாதன சக்திகளின் வாயாலேயே பேச வைக்கும் சூழலை உருவாக்கி கொண்டது, நிச்சயமாக ஒரு மிகப் பெரிய வீழ்ச்சி தான்! அனைவருக்கும் மேலாக இருப்பதல்ல, அனைவரும் மேல் நிலைக்கு வர பாடுபடுபவரே உண்மையில்  உன்னதமானவர். இளையராஜா மீது பரிதாபமே ஏற்படுகிறது.

சாவித்திரி கண்ணன்

 

Support Aram

நேர்மையான, வெளிப்படையான,

சுதந்திரமான இதழியலுக்கு தோள்

கொடுங்கள்.

UPI QR CODE

Razorpay Payment Gateway

Personal Info

Donation Total: ₹1,000.00 One Time