ஜெகனின் வீழ்ச்சியில் பலனடையப் போவது யார்?

-சாவித்திரி கண்ணன்

ஆந்திராவில் நாடாளுமன்றத் தேர்தலோடு சட்டமன்றத் தேர்தலும் நடக்கிறது. ஜெகன்மோகனின் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் ஆட்சி மீதான கோபத் தீ ஜெகத் ஜோதியாக கொழுந்துவிட்டு எரிகிறது. மீண்டும், சந்திரபாபு நாயுடுவுக்கு வாய்ப்பு இருக்கிறதா? காங்கிரஸ் தலை தூக்க வாய்ப்புள்ளதா..? ஒரு அலசல்;

தனது 32 வது வயதில் தான் காங்கிரஸ் கட்சியிலேயே சேர்ந்தார் ஜெகன் மோகன் ரெட்டி. அவர் கட்சியில் சேர்ந்த ஐந்தாண்டுகளிலேயே அவரது தந்தை ராஜசேகர ரெட்டி ஹெலிகாப்டர் விபத்தில் இறந்து விட, தன்னை முதல்வராக்க காங்கிரஸ் தலைமைக்கு நெருக்கடி தந்தார். ஆனால், காங்கிரஸின் டெல்லித் தலைமையோ, காணாமல் போயிருந்த ரோசய்யாவை கண்டெடுத்து முதல்வர் பதவி தந்தது!

ஜெகன் காங்கிரஸில் இருந்து விலகி, தனிக் கட்சி கண்டார். உடனே, காங்கிரஸ் தலைமை ஜெகன் மீதான சொத்து குவிப்பு வழக்கை தூசி தட்டி எடுத்து, அவரை 16 மாதங்கள் சிறையில் தள்ளியது. ஆந்திர மக்களின் அனுதாப அலை அவர் மீது வீசத் தொடங்கியது.

ஜெகனது 3,600 கீ.மீ நீள 14 மாத யாத்திரை அவரை மக்களுக்கு மிக நெருக்கமானவராக உணர வைத்தது. 2014 சட்டமன்றத் தேர்தலில் 67 தொகுதிகள் வென்று எதிர்கட்சித் தலைவரானார்.

அரசியலுக்கு புதியவரும், இளையவருமான ஜெகன் கட்சியில் எம்.எல்.ஏக்கள் 23 பேரையும், எம்.பிக்கள் 3 பேரையும் சந்திரபாபு நாயுடு விலை பேசி தூக்கினார்.

ஜெகன் அசரவில்லை. 2019 தேர்தலில் மக்களிடம் நீதி கேட்டார். மக்கள் அமோக ஆதரவளித்து வரலாறு காணாத வெற்றியை தந்தனர். மொத்தமுள்ள 175 சட்டமன்ற தொகுதிகளில் 151 இடங்களை தந்தனர். நாடாளுமன்றத்தில் மொத்தமுள்ள 25 இடங்களில் 22 இடங்களை வாரி வழங்கினர்!

படுதோல்வியை சந்தித்தாலும். தெலுகு தேசத்திற்கும், ஒய்.எஸ்.ஆர். காங்கிரசுக்குமான வாக்கு வித்தியாசம் நான்கு சதவிகிதம் தான்! ஜெகன், ”ஊழலற்ற நல்லாட்சியைத் தருவேன்” என்றார். அப்படி சொல்லிய அவர் பின்னால் அணிவகுத்து நின்றவர்கள் எல்லாமே காங்கிரஸில் பல ஆண்டுகளாக ஊழலில் ஊறித் திளைத்து காற்றடிக்கும் திசை பார்த்து கட்சி மாறி, ஜெகனின் அமைச்சரவையில் இடம் பெற்றவர்கள். ஆட்சி அதிகாரத்திற்கு வருவதற்கு முன்பே அப்பா ஆட்சியில் செய்த அத்துமீறல்களில் ஜெகன் மீது, 31 வழக்குகள் இருந்தன.

பாஜகவின் டெல்லித் தலைமை, ”அந்த வழக்குகளை எல்லாம் தூசி தட்டி எடுக்கட்டுமா..?” என்றது.

”என்ன  எதிர்பார்க்கிறீர்கள்..?” என்றார் ஜெகன்.

”மகனே, விஷயத்திற்கு வேகமாக வந்துவிட்டாயே. சரி, 22 எம்.பிக்கள் வைத்துள்ளாய்! நாங்கள் கொண்டு வரக் கூடிய சர்ச்சைக்குரிய அனைத்து மசோதாக்களையும் ஆதரிக்க வேண்டும். எங்கள் நோக்கங்களை எல்லாம் இந்த மாநில ஆட்சியில் நிறைவேற்றித் தர வேண்டும். மற்றபடி, இந்த ஆட்சியில் நீ என்ன செய்தாலும் நாங்க பொருட்படுத்த மாட்டோம்” என உத்திரவாதம் தந்தனர்.

”என்னை தொந்தரவு செய்யாவிட்டால் உங்க உத்திரவுகள் அனைத்துக்கும் ஒத்தாசை செய்வேன்” என்றார்.

இது தான் ஐந்தாண்டு ஆட்சியிலும் அரங்கேறியது. விவசாயிகளுக்கு எதிரான மசோதா, தொழிலாளர் விரோத மசோதா, மாநில உரிமைகளை பறிக்கும் ஜி.எஸ்.டி அமலாக்கம்.. எல்லாவற்றுக்கும் ‘ஆமாம் சாமி’ போட்டார். அதற்கு கைமாறாக, ‘நீ ஆந்திராவையே சூறையாடினால் கூட எங்களுக்கு கவலை இல்லை’ என பாஜாகவும் ‘கிரீன் சிக்னல்’ காட்டியது. கேட்கவா வேண்டும்…? ஆந்திர தேசமே அதிர்ந்து போகும் ஊழல்கள் அரங்கேறின! அனைத்து திட்டங்களிலும் முறைகேடுகள் அணிவகுத்தன! அதே சமயம் ஓட்டு வங்கிக்கான திட்டங்கள் பலவற்றையும் அறிவித்து மக்களை குஷிபடுத்தினார்.

இதனால், ஆந்திராவின் விவசாயம் மற்றும் தொழில் வளர்ச்சிக்கான திட்டங்களை அவரால் நிறைவேற்ற முடியவில்லை. ஆந்திர மாநிலம் பிரிக்கப்பட்டு 10 ஆண்டுகள் கடந்துள்ளது. இருந்தும் ஆந்திராவுக்குச் சரியான தலை நகரம் இன்று வரை இல்லை. சந்திரபாபு நாயுடு அமராவதியை தலைநகரமாக  உருவாக்க முயன்றார்; ஆனால் அது முடிக்கப்படவில்லை. இதற்கிடையில் ஆட்சிக்கு வந்த ஜெகன் மோகன், மூன்று தலைநகரங்களை அறிவித்தார். ஆனால், ஒன்றைக் கூட கட்டமைக்கவில்லை.

ஆனால், நாயுடு கட்டிய அரசு கட்டிடங்களை எல்லாம் புல்டோசர் கொண்டு நொறுக்கி தள்ளினார். நாயுடுவையும் சிறைக்கு அனுப்பினார். அவர் தீட்டிய திட்டங்களை கிடப்பில் போட்டார். பட்டீ சீமா பிராஜெக்ட், புலாவரம் பிராஜெக்ட் எல்லாம் மிகுந்த எதிர்பார்ப்புக்கு உரியன. எதுவும் நடக்கவில்லை. மாறாக ஆட்சியை விமர்சிப்பவர்கள் மீது கொடிய சட்டங்கள் பாய்ந்தன. சொந்த கட்சி எம்.பி ஒருவரே ஜெகனை விமர்சிக்க, தேச துரோக குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டார்.

# பாஜகவுக்கு பாதம் தாங்கி அரசியல் செய்வது,

# அனைத்திலும் ஊழல் தலைவிரித்தாடுவது,

# கேட்பாரற்ற விதத்தில், தனி ஒரு அதிகார மையமாக தன்னை கட்டமைத்துக் கொண்டது.

# ஒரு கிறிஸ்த்துவராக இருந்தும் மணிப்பூரில் பழங்குடியின கிறிஸ்த்துவர்கள் கடும் தாக்குதலுக்கு உள்ளான போது அமைதி காத்தார் ஜெகன்.

# தலித்துகளும், சிறுபான்மை கிறிஸ்த்துவர்களும், இஸ்லாமியர்களும் ஜெகன் ஆட்சியில் பாதுகாப்பின்மையை நன்கு உணர்ந்தாக சொல்கிறார்கள்!

ஆகியவற்றால் ஒய்.எஸ்.ஆர் ஆட்சி மீது மக்களின் கடும் அதிருப்தி வெளிப்படையாக தெரிகிறது. இதனால் அவரது கட்சியில் உள்ள முக்கியஸ்தர்களே வெளியேறிய வண்ணம் இருந்தனர். பாஜகவுடன் கூட்டு வைக்க முயற்சித்த ஜெகனின்  முயற்சியும் கைகூடவில்லை. ஜெகன் தற்போது நம்பி இருப்பது பணபலத்தை மட்டுமே!

ஆந்திராவில் வாக்கு பதிவு மே-13 தான் நடக்கிறது! இன்னும் சரியாக ஒரு மாதம் உள்ளது. சந்திரபாபு நாயுடு பாஜக மற்றும் பவன் கல்யாணின் ஜனசேனாவுடன் கூட்டணி வைத்துள்ளார். சென்ற தேர்தலில் ஓரிடம் கூட நாடாளுமன்றத்தில் வெற்றி பெறாத பாஜகவிற்கு ஆறு தொகுதிகளையும், சட்டமன்றத்திற்கு 10 இடங்களையும் தந்து ஜெகனை எதிர் கொள்வதற்காக பாஜக ஆந்திராவில் காலூன்ற அடித்தளம் போட்டுத் தருகிறார் சந்திரபாபு நாயுடு.

தன் கட்சியில் தங்கையையே ஓரம் கட்டினார் ஜெகன். சர்மிளாவிற்கு ஆதரவாக பேசிய சித்தப்பாவையே ஜெகனின் மனைவி குடும்பத்தார் கொன்றதாக குற்றச்சாட்டு உள்ளது. இன்று வரை உண்மையான குற்றவாளியை கண்டுபிடிக்காமல் ஜெகன் காலம் தள்ளுகிறார். வெறுத்து போன சர்மிளா அண்ணனின் கட்சியில் இருந்து வெளியேறினார்.

ஜெகனின் சகோதரி சர்மிளாவிற்கு காங்கிரஸ் தலைமை பொறுப்பை தந்துள்ளது. காங்கிரசானது சி.பி.எம், சி.பி.ஐ ஆகிய இடதுசாரி கட்சிகளோடு களம் காண்கிறது. தெலுங்கானாவைப் போன்ற ஒரு தீவிரம் ஆந்திராவில் காங்கிரசிடம் பார்க்க முடியவில்லை. ஜெகனுக்கு போடும் ஓட்டுகளும், நாயுடுவுக்கு போடும் ஓட்டுகளும் பாஜகவிற்கு போடும் ஓட்டுகளே என்பது தான் உண்மை. ஆகவே, ஜெகன் மற்றும் மோடி மீதான அதிருப்தி ஓட்டுகளை காங்கிரஸ் அறுவடை செய்யுமா..? அதற்கு தன்னை தகுதிபடுத்திக் கொண்டுள்ளதா..? என்பது தேர்தல் முடிவுகளுக்கு பிறகே தெரிய வரும்.

சாவித்திரி கண்ணன்

Support Aram

நேர்மையான, வெளிப்படையான,

சுதந்திரமான இதழியலுக்கு தோள்

கொடுங்கள்.

UPI QR CODE

Razorpay Payment Gateway

Personal Info

Donation Total: ₹1,000.00 One Time