பாஜகவின் வேல் யாத்திரை! பாதுகாப்பு தருகுது அதிமுக! பதுங்கிப் போகுது திமுக!

சாவித்திரி கண்ணன்

எது பக்தி? எது பகட்டு? என்பதை மக்கள் நன்றாகவே புரிந்து வைத்துள்ளனர்.

பக்தி என்பது பரிசுத்தமானது. அது ஒவ்வொரு பக்தனின் ஆழ்மனத்தோடு தொடர்புடையது! ஆனால், முருக கடவுளின் பெயரால் பாஜக செய்வது பக்தியல்ல,பகட்டு அரசியல்! அது ஆண்டவன் பெயரிலான ஆதாய அரசியல்!

இந்த ஆதாய அரசியலுக்கு இங்கு கள்ளதனமாக களம் அமைத்துக் கொடுக்கிறது அதிமுக அரசு! அதை கைகட்டி வேடிக்கை பார்க்கிறது திமுக! இந்த வேல் யாத்திரையின் பின்னணியில் புதைந்து கிடக்கும் அரசியலை தோல் உரித்துக் காட்டுகிறது இந்த கட்டுரை!

’’பாஜகவின் வேல் யாத்திரைக்கு அனுமதி இல்லை’’ என பகிரங்கமாக அறிவித்தது அதிமுக அரசு! ஆனால், பாஜக தமிழக தலைவர் எல்.முருகன் அனுமதியை மீறி திருத்தணிக்கு வேல் யாத்திரை நடத்தியதற்கு நேற்று தமிழக போலீஸ் ஒத்துழைப்பு கொடுத்துள்ளது!

பாஜகவின் வேல் யாத்திரை தடை செய்யப்பட்டதாக சொல்லப்பட்ட நிலையில், நேற்றும் அதற்கு முந்தின நாளும் திருத்தணியில் சாதரண மக்கள்,பக்தர்கள் நடமாட முடியாதபடிக்கு சிரமத்திற்கு ஆளாயினர்! அதாவது பாஜகவினர் தடையை மீறி நடத்துகிறார்கள் என்ற வகையில் அவர்களுக்கு பாதுகாப்பு கொடுக்கும் விதமாக பக்தர்களை பெரும் சிரமத்திற்கு உள்ளாக்கியது அதிமுக அரசின் காவல்துறை! திருத்தணி எல்லை வரை பாஜகவினர் ஜோராக வந்துவிட்ட பிறகு அவர்களை தடுத்து நிறுத்தி, ’’முக்கிய தலைவர்கள் வரையிலும் ஐந்து கார்களில் வாருங்கள்..மற்றவர்கள் பின் தொடர வேண்டாம்’’ என வேண்டுகோள் விடுத்தனர் போலீசார்! அதன்படி எல்.முருகன், ஹெச்.ராஜா உள்ளிட்ட ஐந்து தலைவர்களின் கார்களுக்கு பாதுகாப்பு தந்து, மற்ற வாகன போக்குவரத்தையெல்லாம் நிறுத்தி, அரசு மரியாதையுடன் அவர்கள் திருத்தணி கோயிலுக்கு அழைத்து செல்லப்பட்டுள்ளனர்!

அவர்களை அங்கு பெருந்திரளாக குழிமி இருந்த பாஜகவினர் கோஷம் எழுப்பி வரவேற்றுள்ளனர். பிறகு அவர்கள் சிறப்பு தரிசனம் முடிந்து திரும்பிய பிறகு திருத்தணியில் மையமான ஓரிடத்தில் பாஜகவின் முக்கிய தலைவர்கள் குழுமியிருந்த தொண்டர்கள் மத்தியில் தலைவர்கள் உரையாற்ற போலீசார் பாதுகாப்பு தந்தனர். அனுமதியின்றி கூட்டம் கூடவும் மீட்டிங் போடவும் பாஜகவினரை அனுமதித்தது தொடர்பாக யாருமே இது வரை தமிழகத்தில் கேள்வி எழுப்பவில்லை! பாஜக தலைவர்கள் பொதுவெளியில் பேசிமுடித்த பிறகு   அவர்களிடம் சென்று போலீசார் பணிவாக, ’’சார் நீங்க செய்ததற்கு எல்லாம் நாங்க ஒத்துழைப்பு தந்தோம்.அது போல நீங்களும் இத்துடன் உங்க யாத்திரையை நிறுத்திக் கொண்டு, நாங்க சொல்றதை கேளூங்க, உங்களுக்கு தங்க நல்ல மண்டபம் ஏற்பாடு செய்துள்ளோம். தயவுசெய்து வாங்க’’ என்று கைது செய்வதாக கணக்கு காட்டி அழைத்துச் சென்று நல்ல உணவும் தங்குமிடமும் கொடுத்து அவர்களை ஓரிடத்தில் இணைத்து கலந்துரையாட வைத்து மாலையில் தேனீர் தந்து உபசரித்து விடுதலை செய்துவிட்டனர்! ஆனால்,இந்த காலகட்டத்தில் திருத்தணியில் சட்டம் ஒழுங்கை பாதுகாப்பதாகச் சொல்லி பொதுமக்கள் நடமாட்டத்திற்கு காவல்துறையினர் பெரும் இடைஞ்சல் செய்துவிட்டனர்.

நீதிமன்றத்திலும்,மக்கள் மன்றத்திலும் அரசு வேல் யாத்திரைக்கு அனுமதி மறுப்பதாக சொல்லிவிட்டு, அதற்கு நேர்மாறாக யாத்திரைக்கு முழுபாதுகாப்பு தந்து பாஜவினர் மனம் கோணாமல் அதிமுக அரசு நடந்து கொண்டது என்பதே நடைமுறை உண்மை!

ஆனால்,உண்மையில் பாஜக நடத்தியது வேல் யாத்திரையே அல்ல! அவர்களுக்கு வேல் ஒரு அடையாளம்! அந்த வேல் தமிழகத்தின் மிக செல்வாக்கான முருக கடவுளின் குறியீடு! அந்த வேலை அடையாளமாக்கி, தங்கள் அரசியல் வேலையை செய்வதற்கே பாஜக இந்த வேல் பெயரிலான யாத்திரையை கையாண்டது என்பது அப்பட்டமாகவே தெரிந்தது. இதில் கலந்து கொண்டவர்களிடம் கடுகளவு கூட முருகபக்தி இருந்ததாகத் தெரியவில்லை என்பது மட்டுமல்ல, அவர்களின் நோக்கம் எல்லாமே தாமரையை மக்களிடம் எடுத்துச் செல்வதாகவே இருந்தது. உண்மையான முருக பக்தர்கள் பழனியாத்திரை செல்லும் போது எப்படிப்பட்ட விரதங்களை கடைபிடிப்பார்கள் என்றால், அவர்கள் பீடி,சிகரெட்,மது, மாமிசம் ஆகியவற்றை முற்றாக தவிர்த்து, முருகன் பெயரை இடைவிடாது சொல்லி விரதமிருப்பர்.மறந்துமவர்கள் வாயிலிருந்து கெட்ட வார்த்தை வராது! யாத்திரை செல்லும் போது கால் நடையாகவே செருப்பு போடாத பாதத்தோடு தான் நடந்து செல்வார்கள்! இரவில் ஏதாவது ஒரு வெட்ட வெளியில் கிடைக்குமிடத்தில் துண்டுவிரித்து கைகளையே தலையணையாக்கி படுத்து உறங்கி அதிகாலையில் மீண்டும் பாதயாத்திரை தொடங்குவார்கள். இது குறித்து,பழனியாத்திரையும் பாஜக யாத்திரையும் ஒன்றாகுமா..? என ஏற்கனவே நாம் எழுதிருந்தோம்.

பாஜகவினர் சொகுசு வேனில், ஏசி காரி ல் அரசியல் நோக்கங்களுடன் நடத்தும் வேல் யாத்திரைக்கும்,முருக பக்திக்கும் ஏதும் சம்பந்தமே இல்லை! நிற்க, நாம் பேச வந்தது இது மட்டுமல்ல,

அதிமுக அரசும், பாஜகவும் சேர்ந்து மக்களை முட்டாள்களாக்குகின்றனர். கொரானாவைக் காரணம் காட்டி இஸ்லாமியர்களுக்கு மீலாதுநபி ஊர்வலம் தடை செய்யப்பட்டது.சட்டத்தை மதித்து அவர்களும் நடத்தவில்லை! ஒரு வேளை சட்டத்தை மீறி இஸ்லாமியர்கள் நடத்தி இருந்தால்,அதிமுக அரசு அதை எப்படி எதிர்கொண்டிருக்கும்? பாஜக அதை வேடிக்கை பார்க்குமா? என்னென்ன கேள்வியெல்லாம் கேட்டிருப்பார்கள்!

ஆனால், பாஜக – அதிமுகவின் இந்த களவாணித்தனமான கூட்டணியை ஏன் தமிழ் நாட்டில் எதிர்கட்சிகள் கேள்வி கேட்கவில்லை! ஆளுக்கொரு சட்டம்,கட்சிக்கொரு நீதியா? பக்தியின் பேரால் பாஜக நடத்தும் பகட்டு அரசியலை திமுகவாவது தட்டி கேட்க வேண்டாமா? முன்னதாக பாஜகவின் வேல் யாத்திரைக்கு ஏன் திமுக எதிர்ப்பு தெரிவிக்கவில்லை? என்பது புரியாத புதிராக உள்ளது. நியாயப்படி கொரானா பரவலை தடுக்கவும், சட்டம் ஒழுங்கு சீர்குலையாமல் பாதுகாக்கப்படவும் என்ற காரணத்திற்காகவாவது திமுக எதிர்ப்பு தெரிவித்திருக்க வேண்டாமா..? அப்படி ஏதாவது கேட்டால், இந்துவுக்கு எதிரானவர்கள் என தங்களை பாஜக முத்திரை குத்திவிடும் என திமுக தயங்குகிறதா? அப்படி தயங்கும்பட்சத்தில் பாஜக தன் மதவாத அரசியலை தமிழகத்தில் தங்கு தடையின்றி நடத்த அனுமதித்ததாகவே பொருளாகும்.

ஏற்கனவே கருப்பர் கூட்டம் கந்தசஷ்டி கவசம் விவகாரத்தில் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்யப்பட்ட போது திமுக அமைதி காத்தது. நான் அப்போதே எழுதினேன். கருப்பர் கூட்டம் கந்த சஷ்டி கவசத்தை கேலிசெய்ததில் திமுகவிற்கு உடன்பாடு இல்லை என்பதை நாம் புரிந்து கொள்ளமுடிகிறது! ஆனால், இந்த மாதிரியான விஷயத்திற்கெல்லாம் குண்டர் சட்டத்தில் அடைப்பதை நாம் வேடிக்கை பார்த்தால் அந்த குண்டர் சட்டம் எல்லாவற்றின் மீதும் பாயலாம்! அரசியலில் மாற்றுக் கருத்துள்ளோரை மெளனிக்க செய்யவும் கையாளப்படலாம்! ஆகவே, இதை ஜனநாயகத்தில் ஆர்வம் உள்ளவர்கள் அனைவரும் எதிர்க்க வேண்டும் என்றேன்.

இன்று திமுகவையே பாஜக மெளனிக்க வைத்துள்ளதே! நாளை (நவம்பர்-8) மீண்டும் பாஜக யாத்திரை செல்ல உள்ளது. இந்தப்படியே அதிமுக அரசின் காவல்துறையின் பாதுகாப்புடன் அடுத்த மாதம் ஆறாம் தேதி திருச்செந்தூரில் யாத்திரை முடியும் வரை திமுக மெளனித்திருக்குமா? என்று பார்ப்போம்!

 

Support Aram

நேர்மையான, வெளிப்படையான,

சுதந்திரமான இதழியலுக்கு தோள்

கொடுங்கள்.

UPI QR CODE

Razorpay Payment Gateway

Personal Info

Donation Total: ₹1,000.00 One Time