திமுக ஆட்சி மீதான அதிருப்திகளை பாஜக எதிர்ப்பு வெற்றி கொள்கிறது! எனினும், தென் சென்னை, வட சென்னை இரண்டிலும் திமுக – அதிமுக போட்டி பலமாக உள்ளது. வட சென்னை, தென் சென்னை, மத்திய சென்னை மூன்று தொகுதிகளிலும் பாஜக வேட்பாளர்கள் எதிர் கொள்ளும் சோக அனுபவங்கள் சொல்லி மாளாது..!
வட சென்னை தொகுதியில் பாஜக சார்பில் பால் கனகராஜ் நிற்கிறார். இவர் பிரபல வழக்கறிஞர். முதலில் திமுக, பிறகு அதிமுக என்று பயணித்து, பிறகு தமிழ் மாநில கட்சி என்ற ஒரு லெட்டர் பேட் கட்சியை ஆறாண்டாக நடத்தியவர். அதன் பிறகு பாஜகவில் சேர்ந்து, இந்தி அதரவு, பிராமண ஆதரவு எனப் பேசி வருகிறார்.
பால் கனகராஜ் அடிப்படையில் ஒரு கிறிஸ்துவர். கிறிஸ்துவ நாடார்! சிறுபான்மை மக்கள் பாஜகவிடம் இருந்து விலகி நிற்கிறார்கள் எனத் தெரிந்தும் தன்னுடைய சுய வளர்ச்சிக்காக பாஜகவில் சேர்ந்து, மத்திய அதிகார மையத்தின் அனுகூலங்களை அனுபவித்து வருகிறார். பிரபல ரவுடிகளுக்கும், கிரிமினல்களுக்கும் ஆஜராவதில் புகழ் பெற்றவர். 2017 ஆம் ஆண்டு போதை பொருள் கடத்தல் ஜாபர் சாதிக்கிற்காக வாதாடி அவரை காப்பாற்றியவர் இவரே!
இவர் கிறிஸ்துவராக இருப்பதால் இவருக்கு பாஜகவில் சில சமயங்களில் அவமானங்கள் கூட நடப்பதாகச் சொல்லப்படுகிறது. சமீபத்தில் கூட இந்து முன்னணி இவரை கண்டித்து ஒரு அறிக்கை தந்தது. மிகப் போராடி கச்சிதமாக காய் நகர்த்தி தான், வட சென்னை தொகுதியை வாங்கினார். அதே சமயம் கட்சிக்காரர்கள் ஒத்துழைப்பு பெரிதாக இவருக்கு கிடைக்கவில்லை. தொகுதியில் பெருவாரியாக உள்ள இந்து நாடார்கள் இவரை ஏற்க மறுத்துள்ளது இவருக்கு களத்தில் பேரதிர்ச்சியை தந்துள்ளது. இந்த விவகாரத்தில் பாஜகவும் இவருக்கு உதவ முடியவில்லை.
சரி, கிறிஸ்துவர் என்ற ஹோதாவில் சர்ச் பக்கம் சென்றால், அவர்களோ பணிந்து கையெடுத்து, கும்பிட்டு, ”ஐயா பாஜக பேனரில் இங்கே வராதீர்கள்…” என திருப்பி அனுப்புகிறார்களாம்.
அத்துடன் கூட்டணி கட்சியான பாமக, தமாக, அமமுக.. ஆகியோருடனும் உரிய தொடர்பில் ஒன்றிணைந்து செயல்பட முடியாதவராக இருப்பதால், அவர்களும் அதிருப்தியில் உள்ளார்களாம். மறுபுறம் திமுகவும், அதிமுகவும் களத்தை அதகளப்படுத்தி வருகிறார்கள்! வட சென்னையின் ஆறு தொகுதிகளில் கொளத்தூர், திரு.வி.க நகர், பெரம்பூர் ஆகிய சட்டமன்ற தொகுதிகள் திமுகவிற்கு சாதகமாக இருக்கிறது. அதே சமயம் ஆர்.கே.நகர், ராயபுரம், திருவொற்றியூர் ஆகியவை அதிமுகவிற்கு சற்று சாதகமாக உள்ளதாகச் சொல்கிறார்கள்.
மற்றபடி மிகத் தீவிரமாக இந்த தேர்தலை முன்னிட்டு ஐந்து வருடமாகவே இந்த தொகுதியில் திட்டமிட்டு வேலை பார்த்துள்ளார் மனோ. மக்கள் தொடர்பு என்ற விஷயத்தில் திமுக வேட்பாளரை விட அதிமுக வேட்பாளர் அதிக மார்க் வாங்குகிறார். எனினும், திமுகவின் கலாநிதி வீராசாமி கரன்ஸிகளை அள்ளி வழங்குகிறார். அந்த விவகாரத்தில் ராயபுரம் மனோ ஈடுகொடுக்க முடியாமல் உள்ளார். நாம் தமிழர் கட்சிக்கும் இங்கு கணிசமாக வாக்கு வங்கி உள்ளது. பால் கனகராஜ் டெபாசிட் வாங்குவதே கடினம்.
மத்திய சென்னை;
பிரபல ரோகிணி தியேட்டர் அதிபரின் மகன் வினோஜ் பி.செல்வம் தான் பாஜக வேட்பாளர். இந்த தியேட்டரில் தான் நரிக்குறவ பெண்மணி ஒருவருக்கு கவுண்டரில் டிக்கெட் மறுக்கப்பட்டது நினைவிருக்கலாம். இளைஞரான வினோஜ் பி.செல்வம் 2007 ஆம் ஆண்டில் இருந்து பாஜகவில் பயணிக்கிறார். சில சமூக சேவைகளை செய்து ஓரளவு மக்களிடம் பிரபலமாகியுள்ளார். தாறுமாறாக பொய்களை பரப்புவதில் ‘ஒரு முறை 130 இந்து கோவில்கள் இடிக்கப்பட்டன’ என பதிவிட்டு’ வழக்கில் சிக்கியுள்ளார். இது போல சில கிரிமினல் வழக்குகள் இவர் மீது உள்ளன.
டெல்லி பாஜக தலைவர்களுடன் நேரடி தொடர்பில் உள்ளவர். மோடி, அமித்ஷா, ஸ்மிருதி ராணி ஆகியோருடன் ஒரளவு தொடர்பில் இருக்கிறார். இதில் ஸ்மிருதி ராணி இவர் 2021 சட்டமன்ற தேர்தலில் நின்ற போது பரப்புரைக்கே வந்துள்ளார். தற்போது கூட, ஆந்திராவின் பவன் கல்யாண் இவருக்காக பிரச்சாரம் செய்ய உள்ளதாக தகவல். இவரும் கூட்டணி கட்சிகளுடன் இணக்கமற்ற போக்கை கடை பிடிக்கிறார்…என பரவலாக புகார்கள் எழுந்துள்ளன.
சவுக்கார் பேட்டையில் உள்ள வட இந்தியர்கள் மற்றும் திருவல்லிக்கேணி உள்ளிட்ட இடங்களில் உள்ள பார்ப்பனர் ஓட்டுகளை மிகவும் நம்புகிறார். எனினும் இஸ்லாமியர்கள் கணிசமாக உள்ள மத்திய சென்னையில் பாஜகவின் பிரச்சாரத்திற்கு அவ்வளவாக வரவேற்பு இல்லாதது கண் கூடாகவே தெரிகிறது. தேமுதிகவின் பார்த்தசாரதி தயாநிதிமாறனின் பணபலத்தை கண்டு திணறுகிறார். அதிமுக நேரடியாக களத்தில் இல்லாதது பாஜகவிற்கு ஓரளவு சாதகமான அம்சமே! எனினும் வினோஜ்.பி.செல்வம் தோற்பது உறுதி.
தென் சென்னை தமிழிசை செளந்திரராஜன்;
வட சென்னையில் வெறும் 23,350 ஓட்டுகள் பெற்று மிக அவமானகரமான ஓட்டை பெற்ற முன் அனுபவம் உள்ள தமிழிசை இந்த முறை தென் சென்னையை கேட்டு வாங்கி நிற்கிறார். கடந்த மூன்றாண்டுகளாக தமிழக பாஜகவில் அண்ணாமலை மற்றும் எல்.முருகன் கைகள் ஓங்கியுள்ள நிலையில் அதிரடியாக தமிழிசை அரசியல் களத்திற்கு திரும்பியதை கட்சிக்குள்ளேயே பலர் விரும்பவில்லை. தெலுங்கானா கவர்னராக இருந்த தமிழிசை ஹைதராபத்தில் மிகப் பெரிய தொழில் அதிபரக்ளிடம் மத்திய அரசில் காரியம் சாதித்து தருவதாகக் கூறி பல கோடிகள் சம்பாதித்துவிட்டார். போதாக்குறைக்கு புதுச்சேரியிலும் நன்றாக பணம் பார்த்துவிட்டார். ஆக, பணத்திற்கு பஞ்சமில்லாத வேட்பாளர் என்பது மட்டுமின்றி ஊடக செல்வாக்கையும் நன்கு பெற்றவர்.
விருகம்பாக்கம், சைதாப்பேட்டை, தி.நகர், மயிலாப்பூர், வேளச்சேரி, சோழிங்கநல்லூர் ஆகிய 6 சட்டமன்ற தொகுதிகளை கொண்டது தென் சென்னை. தென் சென்னையில் உள்ள சுமார் ஒன்றேமுக்கால் லட்சம் பிராமண வாக்குகளை பெரிதும் நம்பி களம் இறங்கியுள்ளார் தமிழிசை. கூடவே, பாமக கூட்டால் கணிசமான வன்னியர்கள் வாக்குகளும் வரும் என நம்புகிறார். அவரிடம் உள்ள பணபலமும் அவருக்கு அதீத நம்பிக்கையை தந்துள்ளது. ஆனால், சொந்த கட்சியினரின் உள்ளடி வேலைகள் அவரை சோர்வுக்கு ஆளாக்கி உள்ளது. மயிலாப்பூர் நிதி நிறுவனத்தில் ரூ500 கோடி மக்கள் பணத்தை தராமல் ஏமாற்றி வரும் தேவநாதன் குறித்த புகார்களை பொருட்படுத்தாமல் பாஜக தலைமை அவருக்கு சிவகங்கை தொகுதியில் நிற்க வாய்ப்பு அளித்தது பிராமணர்களை கடும் மன வருத்ததில் ஆழ்த்தியுள்ளது. இது தமிழிசையின் ஓட்டு வங்கியை கடுமையாக பாதிக்கும்.
இதைவிட சுவாரஷ்யமான விஷயம் கடந்த மூன்றாண்டு திமுக ஆட்சியில் பிராமணர்களுக்கு கொடுக்கும் அதீத முக்கியத்துவமும், இந்து அறநிலையத் துறை சார்பில் பிராமண அர்ச்சகர்களுக்கு அள்ளித் தரப்படும் அளப்பறிய சலுகைகளும் கணிசமான பிராமண வாக்குகளை திமுக பக்கம் ஈர்த்துள்ளது. எனினும் அடித்தட்டு மக்கள் மத்தியிலும், மீனவர்கள் மத்தியிலும், அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள், சுகாதாரப் பணியாளர்கள் போன்றோர்களிடையே ஏற்பட்டுள்ள கடும் அதிருப்திகள் அதிமுக ஓட்டு வங்கிக்கு உதவியாக அமையலாம். ஜெயக்குமாரின் மகன் ஜெயவர்த்தன் தொகுதியில் மிக கடுமையாக சுற்றிச் சுழன்று வாக்கு சேகரிக்கிறார். மற்ற இரு வேட்பாளர்களைக் காட்டிலும் தொகுதி மக்களோடு நெருங்கிய தொடர்பில் உள்ள வேட்பாளராகவும் ஜெயவர்த்தன் உள்ளார்.
தமிழச்சி தங்கபாண்டியன் தொகுதி பிரச்சினைகளில் கடந்த ஐந்தாண்டுகளாக சரியாக அக்கறை காட்டாதது ஒரு மைனஸ் பாயிண்டாக இருந்தாலும் மக்களிடையே இருக்கும் கடுமையான பாஜக எதிர்ப்பு திமுகவுக்கு கை கொடுக்கும் என நம்புகிறார்கள்!
2009 மற்றும் 2014 தேர்தல்களில் அதிமுக வசம் இருந்த தென் சென்னையை மீண்டும் அதிமுக வென்றெடுக்குமா..? அல்லது திமுகவே தக்க வைத்துக் கொள்ளுமா? என தேர்தல் முடிவுகளே சொல்ல முடியும். எப்படியாயினும் தமிழிசை தோல்வி உறுதி. அவர் டெபாசீட்டை தக்க வைத்தாலே பெரிய வெற்றி தான்!
சாவித்திரி கண்ணன்
அறம் இணைய இதழ்
திராவிடத்தின் ஊதுகுழல் என்பதை மீண்டும் மீண்டும் நிரூபித்து வருகிறீர்கள் ….
பிஜேபி வந்தாலும் பரவாயில்லை….நாம் தமிழர் வரவே கூடாது என்பது தெளிவாக தெரிகிறது.
தமிழர் விரோத கும்பலில் நீயும் ஒருவன் என்பதை காட்டிக்கொடுத்து விட்டீர்கள்.