வங்கிகளில் பல நூறு கோடி அல்லது பல ஆயிரம் கோடிகள் கடன் பெற்றுவிட்டு தர மறுப்பவர்களின் பெயரை வெளியிட அரசு தயக்கம் காட்டுவது ஏன்? மேலும் அவர்களின் வாரா கடன்களை தள்ளுபடி செய்வது ஏன்? சிறிய கடன் பெற்றவனை திரும்ப தராவிட்டால் சேதாரப்படுத்தும் அரசு பெரிய கடன் பெற்றவர்களை தப்பிக்க செய்வது ஏன்?
வங்கிகள் தேசியமயமாக்கப்பட்டு ஐம்பது ஆண்டுகள் கடந்துவிட்டன. வாராக்கடன் என்பது வங்கிகளை மட்டுமல்லாது, பொருளாதாரத்தையும் பாதித்து வருகிறது.இந்தியா முழுவதும் 12 பொதுத்துறை வங்கிகள் உள்ளன. அதாவது மக்களுக்குச் சொந்தமானவை. வங்கிகளிடமிருந்து அரசுக்கு ஆண்டுதோறும் ஈவுத்தொகை (இலாபம்) கிடைக்கிறது. வீடு கட்ட , சிறு, குறு தொழில்களுக்கு, மாணவர்களுக்கு, விவசாயிகளுக்கு, நலிந்த பிரிவினருக்கு என பல வழிகளிலும் சாதாரண மக்கள் பலன் பெறுகிறார்கள். தனியார் நகைக் கடனுக்கு வருடத்திற்கு 36 சதம் வட்டி வசூலிக்கும் போது,11 சதத்திற்கும் குறைவாக வழங்கப்படும் நகைக் கடனை பெறுவதற்காக, வங்கியில் குவியும் மக்களை நீங்கள் தினமும் காணமுடியும்.
வங்கிகளிடம் இருந்து கடன் வாங்கி, நட்டம் அடைந்து உண்மையிலேயே திரும்பச் செலுத்த முடியாதவர்கள் உண்டு. வியாபாரத்தில் இப்படி நடப்பது இயல்பானதுதான். இது குறித்து நாம் ஏதும் பேசவில்லை. ஆனால் விஜய் மல்லையா போன்ற பெரிய மனிதர்கள், பெருமளவில் கடன் வாங்கி, அதனை வேறு தொழில்களில் முதலீடு செய்து, வேறு சொத்துகளாக மாற்றி , கோடிக்கணக்கான ரூபாய்களை ஏப்பம் விடுகின்றனர். இதனால் வங்கிகள் நட்டம் அடைகின்றன; பண சுழற்சி இல்லாததால், நாட்டின் பொருளாதாரமும் பாதிக்கிறது.
வாங்கிய கடனுக்கான தவணையை மூன்று மாதத்திற்கு மேல் திருப்பிச் செலுத்தவில்லை என்றால் அதனை வாராக்கடன் என்று அழைக்கிறார்கள். ஆங்கிலத்தில் இது Non Performing assets என்று சொல்லப்படுகிறது. bad debt என்று முன்பு சொல்லப்பட்டு வந்தது.
“கிங் பிஷர் விமான நிறுவனத்தை நடத்திய விஜய் மல்லையா 3500 கோடி ரூபாய் கடனை வாங்கிவிட்டு இப்போது இலண்டனில் இருக்கிறார்.அதே போல பஞ்சாப் நேஷனல் வங்கியில் 13,500 கோடி ரூபாய் கடன் வாங்கிய நீரவ் மோடி, மெகுல் சோக்சி என்ற வைர வியாபாரிகள் இப்போது வெளிநாடுகளில் இருக்கிறார்கள். கடன் வாங்கி தப்பிச் சென்றவர்களை பிடிப்பதற்காக அருண் ஜேட்லி நிதி அமைச்சராக இருந்த போது Fugitive Economic Offenders Act என்ற சட்டத்தை கொண்டு வந்தார்.இந்தச் சட்டப்படி ஒருவரைக் கூட நமது அரசால் இந்தியாவிற்கு இழுத்து வரமுடியவில்லை.
மதுரையில் கல்விக் கடன் வாங்கி திருப்பிச் செலுத்தாத ஒரு மாணவர் பெயரை படத்தோடு சுவரொட்டியில் எழுதி வைத்தார்கள். அதைப் பார்த்து அவமானம் தாங்க முடியாமல் அந்த மாணவர் தற்கொலை செய்து கொண்டார். அதேபோல நகைக்கடன்களை செலுத்தாதவர்களின் படங்களை செய்தித்தாள்களில் வங்கிகள் வெளியிடுகின்றன. ஆனால் கோடிக்கணக்கான ரூபாய்களை கடனாக பெற்று வேண்டுமென்றே திருப்பிச் செலுத்தாதவர்களின் பெயர்களை அரசு வெளியிடுவதில்லை. ஏனென்றால் இந்தப் பெருநிறுவனங்கள், அரசியல் கட்சிகளுக்கு காங்கிரசாக இருந்தாலும், பாஜகவாக இருந்தாலும், நன்கொடை வழங்குகின்றன ” என்கிறார் தமிழ்நாடு வங்கி ஊழியர் சம்மேளன பொதுச் செயலாளரான இ.அருணாச்சலம்.
பாஜக ஆட்சி பொறுப்பேற்ற பிறகு பலமுறை வாரா கடன்களை தள்ளுபடி செய்து தொழிலதிபர்களை பாதுகாத்துள்ளது.
சி.என்.என் – நியூஸ் 18 தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் ரிசர்வ் வங்கியிடம் கேட்டதன் அடிப்படையில் மார்ச் 31, 2019-ம் ஆண்டு வரை ரூ. 100 கோடி மற்றும் ரூ. 500-க்கும் அதிகமாக தள்ளுபடி செய்யப்பட்ட கடன்கள் குறித்த தகவல்கள் வங்கி வாரியாக பெறப்பட்டுள்ளன.
ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா, ரூ. 100 கோடிக்கு மேல் கடன் வாங்கி திரும்பச் செலுத்தாத 22 பேரின் ரூ. 76, 600 கோடி வாராக் கடனை தள்ளுபடி செய்துள்ளது.
இந்தத் தகவலில் ரூ. 100 கோடிக்கும் மேல் பெற்ற ரூ. 2.75 இலட்சம் கோடி மதிப்பிலான வாராக்கடன்களை வணிக வங்கிகள் தள்ளுபடி செய்திருப்பது தெரிய வந்துள்ளது.
கடந்த மார்ச் 31, 2019 அன்று ரூ. 500 கோடிக்கும் மேல் கடன் வாங்கி திரும்பச் செலுத்தாத 33 பேரின் ரூ. 37, 700 கோடி திரும்ப வராத கடன் இருப்பதாக அறிவித்திருந்தது எஸ்.பி.ஐ.
ரூ. 500 கோடிக்கு மேல் பெற்ற ரூ. 67,600 கோடி வாராக்கடன்களையும் சமீபத்தில் தள்ளுபடி செய்திருப்பதாகவும் அந்தத் தகவல் கூறுகிறது.
ரூ. 100 கோடிக்கு மேல் கடன் வாங்கி திரும்பச் செலுத்தாத 980 பேரின் பட்டியலையும் ரிசர்வ் வங்கி வழங்கியிருக்கிறது. இவற்றில் கடனை திரும்பச் செலுத்தாத 220 கணக்குகள் எஸ்பிஐ வங்கியைச் சேர்ந்தவை.
அதுபோல, அதிகக் கடன் கொடுத்த மற்றொரு வங்கியாக பஞ்சாப் நேஷனல் பாங்க் உள்ளது. ரூ. 100 கோடிக்கும் மேல் கடன் வாங்கிய 94 பேர், மொத்தம் ரூ. 27, 024 கோடியை திரும்பச் செலுத்தவில்லை. இந்தக் கடனையும் அந்த வங்கி தள்ளுபடி செய்துள்ளது.
மேலும், பி.என்.பி. ரூ. 500 கோடிக்கு மேல் கடன் வாங்கி பெரிய கடனாளர்கள் 12 பேரின் மொத்த கடனான ரூ. 9,037 கோடியையும் தள்ளுபடி செய்துள்ளது.
அடுத்து இந்தப் பட்டியலில் உள்ளது கனரா வங்கி. ரூ. 100 கோடிக்கும் மேல் கடன் வாங்கி திரும்பச் செலுத்தாத 63 பேரின் கடனையும் ரூ. 500-க்கும் மேல் கடன் வாங்கி 7 கணக்குகளின் மொத்த தொகையான ரூ. 27, 382 கோடியையும் அந்த வங்கி தள்ளுபடி செய்துள்ளது.
ரூ. 100 கோடி மற்றும் அதற்கு மேல் கடனாகப் பெற்று திரும்பச் செலுத்தாத 56 பேரின் கடனைத் தள்ளுபடி செய்துள்ளது பாங்க் ஆஃப் இந்தியா. அதுபோல, கார்ப்பொரேஷன் வங்கி 50 கணக்குகளின் கடனையும் பாங்க் ஆஃப் பரோடா 46 கணக்குகளையும் செண்ட்ரல் பாங்க் ஆஃப் இந்தியா 45 கணக்குகளின் கடனையும் தள்ளுபடி செய்துள்ளது.
அதுபோல், சென்ட்ரல் பாங்க் ஆஃப் இந்தியா, ரூ. 500 கோடிக்கும் மேல் கடன் பெற்ற 4 வாராக் கடனாளிகளின் கடனையும் தள்ளுபடி செய்துள்ளது.
” வருமான வரி கட்டாதவர்களின் பட்டியலை அரசு பாராளுமன்றத்திற்கு ஆண்டுதோறும் சமர்ப்பிக்கிறது. அதே போல வங்கிக்கடனை கட்டாதவர்களின் பட்டியலை பாராளுமன்றத்திற்கு கொடுக்கலாமே ! கடனை வசூலிக்க உரிமையியல் (சிவில்) சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படுகிறது; குற்றவியல் நடவடிக்கை எடுக்க சட்டம் கொண்டு வர வேண்டும்” என்கிறார் மெர்கண்டைல் வங்கியில் பணிபுரிந்த பொள்ளாச்சியைச் சார்ந்த இரகுபதி.
நாடு முழுவதும் உள்ள வெகுமக்கள் வட்டியாக, வைப்புத் தொகையாக தரும் தொகைகள்தான் பெரிய மூலதனமாக வங்கிகளில் உருவாகிறது. அரசின் நன்மதிப்பின் மீது நம்பிக்கை கொண்டு மக்கள் பொதுத்துறை வங்கிகளில் சேமிக்கிறார்கள்.
“வங்கிகளில் கடன் வாங்கி திருப்பிச் செலுத்தாதவர்கள் உள்ளாட்சி மன்ற உறுப்பினர், சட்ட மன்ற உறுப்பினர், பாராளுமன்ற உறுப்பினர் என மக்களால் தேர்ந்தெடுக்கப்படும் எந்தப் பதவிகளிலும் போட்டியிட தடை விதிக்க வேண்டும்” என்று அகில இந்திய வங்கி ஊழியர் சங்கம் தேர்தல் ஆணையருக்கு கடிதம் எழுதியிருந்தது.இப்படி ஒரு சட்டம் இயற்றப்பட்டு இருந்தால் மாநிலங்களவை உறுப்பினராக விஜய் மல்லையா இருந்திருக்க முடியாது.
“கடன் பெற்றவர்களின் விவரங்களை வங்கிகள் வெளியில் சொல்லுவது இல்லை.எனவே வங்கி ஊழியர் சங்கம் ஒரு கோடி ரூபாய்க்கு மேல் கடன் வாங்கியவர்களின் பட்டியலை வெளியிட்டு வருகிறது.இதனை கறுப்பு புத்தகம் என்று நாங்கள் சொல்லுகிறோம். தற்போது கிட்டத்தட்ட 12 இலட்சம் கோடி ரூபாய் வாராக் கடன் உள்ளது.இவை மக்களின் பணமாகும்” என்கிறார் இ.அருணாசலம்.
“மக்களின் சேமிப்புகளிலிருந்துதான் கடன் வழங்கப்படுகிறது , எனவே கடன் வாங்கியவர்கள் யாரென்று தெரிந்துகொள்ளும் உரிமை மக்களுக்கு உள்ளது.எனவே தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் கடன் வாங்கியவர்களின் விவரங்களை வங்கிகள் வெளியிட வேண்டும்” என்று தலைமை தகவல் ஆணையர் உத்தரவிட்டார். அரசு இதற்கு எதிராக உச்ச நீதிமன்றம் சென்று தடையாணை பெற்றுள்ளது.
இந்த நிலையில், சாகேத் கோகலே என்பவர், வங்கி கடன் மோசடி பட்டியலில் முதல் 50 இடங்களில் இருப்பவர்களின் விவரங்களை, தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் கேட்டு ரிசர்வ் வங்கியிடம் மனு அளித்தார். இதற்கு கடந்த 24 ஆம் தேதி ரிசர்வ் வங்கி அளித்துள்ள பதிலில், முதல் 50 இடங்களில் இருப்பவர்களின் பட்டியலையும், அவர்களுக்கு கடந்த ஆண்டு செப்டம்பர் வரை அளிக்கப்பட்ட கடன் தள்ளுபடி விவரங்களையும் தெரிவித்துள்ளது.
மொத்தமாக 68 ஆயிரத்து 607 கோடி ரூபாய் வாராக் கடன் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளதாக ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது. மெகுல் சோக்சியின் கீதாஞ்சலி ஜெம்ஸ் நிறுவனத்தின் ஐந்தாயிரத்து 492 கோடி ரூபாயும், ஆர்.இ.ஐ. அக்ரோ நிறுவனத்தின் நான்காயிரத்து 314 கோடி ரூபாயும் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.
யோகா குரு ராம்தேவின் பதஞ்சலி நிறுவனத்துக்கு சொந்தமான ருச்சி சோயா நிறுவனத்தின் இரண்டாயிரத்து 212 கோடி ரூபாயும், விஜய் மல்லையாவின் கிங் பிஷர் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் ஆயிரத்து 943 கோடி ரூபாயும் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.
Also read
“கிராமத்தைச் சேர்ந்த, ஏழையான,படிக்காத தலித் பெண் வங்கியின் வரிசையில் நிற்கும்போது பெருமைப்படுகிறார்.அந்த பெண்மணிக்கு பின்னால்தான் அதே ஊரைச் சேர்ந்த நிலக்கிழாரும் வரிசையில் நிற்கிறார். வங்கிகள் தேசியமயம் ஆனதால்தான் இத்தகைய அதிகாரம் (empowerment) அந்த தலீத்துகளுக்கு கிடைத்தது ” என்று ஒரு கருத்தரங்கில் குறிப்பிட்டார் கௌகாத்தி பல்கலைக்கழகப் பேராசிரியரான அகில் ரஞ்சன் தத்தா.”கடனை வசூலிக்காமல் , பழியை ஊழியர் மேல் போட்டு, நட்டக் கணக்கு காட்டி வங்கிகளை தனியாரிடம் கொடுக்க அரசு விரும்புகிறது” என்றும் அவர் குறிப்பிட்டார்.
“1969 ல் 14 வங்கிகள் தேசியமயமாக்கப்பட்டன.1980 ல் ஆறு வங்கிகள் தேசியமயமாக்கப்பட்டன. இது ஒரு முற்போக்கான நடவடிக்கை. ஆனால் இப்போது வங்கிகள் இணைக்கப்படுகின்றன. ஸ்டேட் வங்கிகள் ஒன்றாக இணைக்கப்பட்டதனால் 2500 கிளைகள் மூடப்பட்டுவிட்டன.இதனால் விவசாயிகள் பாதிப்பு அடைவார்கள். ஏனெனில் இலாபம் குறைவாக வரும் கிராமப்புற வங்கிகளைத்தான் முதலில் மூடுவார்கள்.வேலையிழப்பு ஏற்படும்.ஏற்கனவே விவசாயிகளுக்கு குறைந்த வட்டியில் வழங்கப்பட்டு வந்த விவசாயக் கடனை அரசு ரத்து செய்துவிட்டது. இது வங்கிகள் தேசியமயமாக்கப்பட்டதன் நோக்கத்திற்கு எதிரானது. சாதாரண சேமிப்புக் கணக்கிற்கு வட்டி அதிகம் கொடுக்க வேண்டும். மூத்த குடிமக்களுக்கு வட்டி அதிகம் கொடுக்க வேண்டும்” என்கிறார் வங்கி ஊழியர் போராட்டங்களில் பல்லாண்டுகளாக பங்குபெற்று வரும் திருநெல்வேலியைச் சார்ந்த ரங்கன்.
” வாராக் கடனை வசூலிக்க கடுமையான சட்டங்களை நிறைவேற்ற வேண்டும் AIBEA கோரி வருகிறது. ஆனால் அரசு இதைச் செய்யவில்லை. கொரோனா பேரிடர் சமயத்தில் வங்கிகளை இணைத்துள்ளது; தொழிலாளர்களுககு விரோதமானச் சட்டங்களை நிறைவேற்றியுள்ளது. பெருமுதலாளிகளுக்கு ஆதரவாக இருக்கும் அரசின் கொள்கைகளை எதிர்த்து நாடு முழுவதும் உள்ள வங்கி ஊழியர்கள் நவம்பர் 26 ம் நாள் நடைபெற உள்ள பொது வேலை நிறுத்தத்தில் கலந்து கொள்வார்கள்.” என்று சொன்னார் தமிழ்நாடு வங்கி ஊழியர் சங்க பொதுச் செயலாளரான இ.அருணாசலம்.
Leave a Reply