பொய்யிலே பிறந்து, பொய்யிலே வாழும் பாஜகவினர் !

-நல்லோர்கினியன்

ஒரு முழு பக்க விளம்பரத்தை  அனைத்து நாளிதழ்களிலும் கொடுத்துள்ளது பாஜக. மூன்று ஆண்டு திமுகவின் ஆட்சியில் தமிழ்நாடு மூச்சு முட்டி திணறுகிறதாம்! பாஜகவின் பத்து ஆண்டுகள் ஆட்சியில் நாடு அபார வளர்ச்சி   அடைந்துவிட்டதாம்!  தேனாறும்,பாலாறும் ஓடுகிறதா என்ன..? எப்பேர்ப்பட்ட பொய் விளம்பரம்! அதைப் பற்றி விவாதிக்கிறது இந்த கட்டுரை;

2-ஜி வழக்கில் 1.76 லட்சம் கோடி இழப்பை ஏற்படுத்தி ஊழல் செய்தது திமுக என்ற குற்றச்சாட்டை கூறும் அந்த விளம்பரம், மோடியின் அரசு 7.5 லட்சம் கோடி இழப்பை உண்டாக்கியதாக கண்ட்ரோலர் மற்றும் ஆடிட்டர் ஜெனரல் அவர்களின் அறிக்கை கூறுவதைப் பற்றி ஏதும் சொல்லவில்லை.


2-
ஜி வழக்கில்  குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்படவில்லை என்று நீதிமன்றம்  தீர்ப்பு கூறியுள்ளது. ஆனால்  7.5  லட்சம் கோடி இழப்பை உண்டாக்கியது சம்பந்தமான விவகாரத்தில் எந்த வழக்கையும் பதிவு செய்யவில்லை மோடி அரசு.

மேற்சொன்ன கண்ட்ரோலர் மற்றும் ஆடிட்டர் ஜெனரல் அவர்களின் அறிக்கையில் கூறப்பட்டுள்ளவற்றில் மிகவும் அதிர்ச்சி அளிக்கக்கூடிய ஊழல் ,துவாரகா விரைவு சாலை ஊழல் ஆகும்.

இந்த இந்த விரைவுச் சாலை போடுவதற்கான உத்தேச செலவு ஒரு கிலோ மீட்டருக்கு ரூபாய் 15 கோடி என்று வரையறுக்கப்பட்டது. ஆனால், செலவு செய்யப்பட்டதோ ஒரு கிலோமீட்டர் சாலை போட 250 கோடி ரூபாய் என்பதை கண்டறிந்து உலகம் அறிய செய்தது கண்ட்ரோலர் மற்றும் ஆடிட்டர் அவர்களின் அறிக்கை. இது போல பல செலவினங்களில் இழப்பை உண்டாக்கி,  7.5 லட்சம் கோடி ரூபாய்க்கு ஊழல் செய்துள்ளது மோடி அரசு. இதைப் பற்றி ஒன்றும் சொல்லவில்லை இந்த பிஜேபியின் முழு பக்க விளம்பரம்.

பாஜக பல ஆண்டுகளாக ஆட்சி செய்யும் குஜராத் மாநிலத்தில் தான்போதை பொருள் கடத்தல் மிக அதிக அளவில் நடப்பதாக  ஊடகங்கள் தெரிவிக்கின்றன. ஆனால் போதை பொருட்கள் கடத்தப்படுவது திமுகவின் ஆட்சியில் உள்ள தமிழ்நாட்டில் தான் என்று பொய்யான பிரச்சாரத்தை செய்கிறது பாஜகவின் ஒரு பக்க பத்திரிக்கை விளம்பரம்.

தங்கள் உரிமைக்காக போராடிய விவசாயிகளை குண்டர் சட்டத்தில் கைது செய்ததாக திமுகவின் அரசை குற்றம் சாட்டுகிறது பாஜகவின் விளம்பரம். போராடிய விவசாயிகளை  குண்டர் சட்டத்தில் கைது செய்த போது எழுந்த கண்டனங்களையடுத்து தன் தவறை உணர்ந்து விவசாயிகளை விடுதலை செய்ததுதமிழக அரசு. ஆனால், மத்தியில் ஆளும் பாஜக அரசு டெல்லியை சுற்றி விவசாயிகள் நடத்திய போராட்டத்தை எவ்வாறு அடக்கியது என்பதை உலகமே அறியும்.

 ஏதோ அந்நிய நாடு படையெடுத்து வந்தது போன்ற ஒரு நிலைமையை உருவாக்கி விவசாயிகள் டெல்லியை நோக்கி அமைதியாக ஊர்வலம்  வருவதை தடுப்பதற்கான அனைத்து வேலைகளையும்சாலையில் பள்ளம் தோண்டுவது, சாலையில் ஆணிகளை அடிப்பது,சாலையில் சுவர்களை எழுப்புவது என்று விவசாயிகளின் போராட்டத்தை அடக்கியது மோடி அரசு.

 உத்தரப் பிரதேசம் லக்கிம்பூர் கெரியில் அமைதியாக நடந்து சென்று கொண்டிருந்த 4 விவசாயிகள் உள்பட 9 பேர் மீது கார் ஏற்றி கொன்ற மத்திய அமைச்சர் மிஸ்ராவின் மகன் நேபாளத்துக்குத் பாதுகாப்பாக தப்பிச் செல்ல மத்திய, மாநில அரசுகளே உதவியதையும், இன்று வரை வழக்கை நீர்த்து போக வைத்து காப்பாற்ற முயற்சிப்பதையும் என்னென்பது..?

 விவசாயிகளின் விளை பொருட்களுக்கு குறைந்தபட்ச விலையை உறுதி செய்யும் சட்டத்தை இயற்ற வேண்டும் என்ற கோரிக்கையை இன்றளவும் நிறைவேற்ற மறுக்கிறது மோடி அரசு . மேலே கூறிய எதைப் பற்றியும் பேசாத விளம்பரம், சில ஆயிரம் கோடி ரூபாய்களை விவசாயிகளுக்கு வழங்கியிருப்பதாகஎந்த விவரங்களையும் கூறாமல்தம்பட்டம் அடித்துக் கொள்கிறது.

2016 ஆம் ஆண்டில் மோடி அரசு பண மதிப்பிழப்பு நடவடிக்கை மூலம் தொழில்துறைக்கு மிகுந்த பாதிப்பை உண்டாக்கியது. கள்ளப் பணத்தை ஒழிப்பதற்காகவே ரூபாய் 500 மற்றும் ரூபாய் 1,000 நோட்டுகள் செல்லாதது என அறிவித்த பணமதிப்பிழப்பு நடவடிக்கை என்று கூறியது மோடி அரசு. ஆனால், கள்ளப்பணம்  ஒழியவில்லை என்று கூறுகிறார் உச்ச நீதிமன்ற நீதி அரசர் நாகரத்னா. பண மதிப்பிழப்பு நடவடிக்கை மட்டும் இன்றி ஜிஎஸ்டி வரி விதிப்பின் மூலம் தொழில்துறை மிகப்பெரும் பாதிப்புக்கு உள்ளானது. இந்த பாதிப்புகள் எதையும் பேசாத பாஜகவின் முழு பக்க விளம்பரம் தமிழ்நாடு அரசு மின்சார கட்டணத்தை உயர்த்தியதை குற்றம் சாட்டுகிறது. அதற்கு பின்னணியிலும் ‘அரசு மின் உற்பத்தி செய்யக் கூடாது, அதானியிடம் அதிக பணம் கொடுத்து மின்சாரம் வாங்க வேண்டும்’ என நிர்பந்தித்த பாஜக அரசு இருக்கிறது தானே!

ஆண்டுக்கு 2 கோடி பேருக்கு வேலை அளிப்பேன் என்று மோடி கேரண்டி கொடுத்தார். ஆனால், அந்த கேரன்டிவாக்குறுதிகாப்பாற்றப்படவில்லைகடந்த 18 மாதத்தில்  10 லட்சம் வேலை வாய்ப்புகளை மத்திய அரசின் வழங்கி இருப்பதாக கூறுகிறது இந்த விளம்பரம். ஆனால், இதற்கான எந்த விவரங்களும் இல்லை .உண்மையில் இருக்கும் வேலையும் பறிபோனது மோடியின் ஆட்சி காலத்தில் தான் .குறிப்பாக பொதுத்துறை நிறுவனங்கள் எல்லாம் தனியார் துறைக்கு தூக்கித் தரப்பட்டது. இன்ஜினியரிங் படித்தவர்களும், பட்ட மேற்படிப்பு படித்தவர்களும் கூட எந்த வேலையும் இன்றி கோடிக்கணக்கில் இருக்கின்றனர் .இவர்களுக்கு உரிய வேலை கிடைக்காத நிலையில் துப்புரவு பணி போன்ற வேலையிலாவது சேர்ந்து வாழ்க்கையை நடத்தும் நிர்பந்தத்துக்கு உள்ளாக்கி உள்ளது பாஜக அரசு.

இந்த பாஜகவின் விளம்பரத்திலேயே மிகப்பெரிய புளுகு, தமிழகத்திற்கு 15 அரசு மருத்துவக் கல்லூரிகளை பாஜக அரசு வழங்கியதாக கூறுவது தான். மாவட்டத்திற்கு ஒரு அரசு மருத்துவ கல்லூரி என்று இருப்பது தமிழ்நாட்டில் மட்டும் தான். சென்னையில் மட்டும் நான்கு அரசு மருத்துவக் கல்லூரிகள் உள்ளன. இதற்கு காமராசரும் திமுக மற்றும் அதிமுக ஆட்சியும் காரணமாகும். ஆனால், மோடி முதல்வராக இருந்த குஜராத்தில் இரட்டை இலக்கத்திலேயே அரசு மருத்துவக் கல்லூரிகள் இல்லை என்பதே உண்மை. தமிழ்நாட்டில் மத்திய அரசுக்கு சொந்தமான ஒரு மருத்துவக் கல்லூரியும் இது வரை இல்லை. மதுரை மாநகரில் எய்ம்ஸ் மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனை வருகிறது வருகிறது என்று கடந்த 10 ஆண்டுகளாக சொல்லி வருகிறது மோடி அரசு. ஆனால் அங்கே செங்கற்கள் கூட இல்லை கட்டடம் கட்டுவதற்கு. மேலும் ,19 தனியார் மருத்துவக் கல்லூரிகள் தொடங்க தமிழக அரசு அனுமதி அளித்திருப்பதை கூறி, அதனை சாதனை என்கிறது விளம்பரம். ஏதோ இவர்களே வந்து கட்டிக் கொடுத்தது போல! ஏதோ சம்பிரதாயத்திற்கு சிறிதளவு நிதி தருவதோடு சரி. ஒரு மருத்துவக் கல்லூரியை தொடங்க வேண்டுமென்றால் அதற்கான அனுமதி தருவதற்கான உரிமை ஒன்றிய அரசுக்கு மட்டுமே உள்ளது.

தமிழ்நாட்டு மீனவர்களுக்கு பாதுகாப்பு வழங்கி எந்த பாதிப்பும் ஏற்படாதவாறு பாஜக அரசு பார்த்துக் கொள்வதாக மற்றும் ஒரு பொய்யை கூறுகிறது இந்த விளம்பரம். யார் முதல்வராக இருந்த போதும், தமிழ்நாட்டு மீனவர்களை இலங்கையின் கப்பற்படை சிறைபிடித்து செல்வதையும் தமிழ்நாட்டு மீனவர்களின் படகுகள் அடித்து நொறுக்கப்படுவதையும் கொல்லப்படுவதையும் சுட்டிக் காட்டி பிரதமருக்கு கடிதம் எழுதிக் கொண்டே இருக்கின்றனர். இந்து மகா சமுத்திரத்தில்  இந்திய கப்பற்படையின் மூலம் மீனவர்களுக்கு பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டிய  மத்திய அரசாங்கமே சில முறை தமிழக மீனவர்கள் மீது துப்பாக்கி சூடு நடத்தியதை என்னென்பது? தமிழ்நாட்டு காவல்துறையை இந்து மகா சமுத்திரத்தில் ரோந்து பணிக்கு அனுப்பும் அதிகாரம் தமிழ்நாட்டு அரசுக்கு கிடையாது என்பதை பாஜகவினர் அறிய மாட்டார்களா என்ன…?

அவர்கள் அறிந்தே  வாக்குகளை பெற வேண்டும் என்ற ஒரே நோக்கத்திற்காக பொய்களை விளம்பரமாக அனைத்து  நாளிதழ்களிலும் தருகின்றனர் பாஜகவினர்.  16-4-24 மற்றும் 1-4-24 ஆகிய இரு தினங்களில் செய்தித் தாள்களில் முதல் பக்கத்தில் விளம்பரத்தை கொடுத்துள்ளது பாஜக. இதற்கான பண பலம் அவர்களிடம் உள்ளது. தேர்தல் பத்திரமும் பி எம் கேர்ஸும்  தான் நமக்கு நியாபகம் வருகிறது.

ஒரு சர்வாதிகார ஆட்சியை நடத்துகிறது பாஜக அரசு கடந்த 10 ஆண்டுகளாக அறிவிக்கப்படாத அவசர காலம் நிலவுகிறது. வெறுப்பு அரசியல் விதைக்கப்படுகிறது.ஜனநாயக உரிமைகள் முற்றிலுமாக மறுக்கப்படுகிறது .அனைத்து அமைப்புகளையும்கவர்னர்,தேர்தல் ஆணையம், சிபிஐ ,என் ,அமலாக்கத்துறை வருமான வரித்துறை –  தங்கள் கட்டுப்பாட்டிற்குள் வைத்துக் கொண்டு எதிர்கட்சிகளை அடக்கி ஒடுக்குகிறது பாஜக அரசு. பொய்யான விளம்பரங்கள் மூலம் வாக்குகளை பெற்று விட முடியும் என்று பகல் கனவு காண்கிறது பாஜக. அவர்களின் கனவு தகர்க்கப்படும். உண்மையே வெல்லும்.

கட்டுரையாளர்; நல்லோர்கினியன்

Support Aram

நேர்மையான, வெளிப்படையான,

சுதந்திரமான இதழியலுக்கு தோள்

கொடுங்கள்.

UPI QR CODE

Razorpay Payment Gateway

Personal Info

Donation Total: ₹1,000.00 One Time