தமிழகத்தில் ஒரு டஜனுக்கு மேற்பட்ட இடங்களில் – காஞ்சிபுரம் பரந்தூர், ஏகனாபுரம் புதுக்கோட்டை வேங்கை வயல், ஈரோடு மூலக்கரை .. போன்றவற்றில் தேர்தல் புறக்கணிப்பை மக்கள் அறிவித்துள்ளனர். திருவண்ணாமலை மேல்மா விவசாயிகளோ திமுக புறக்கணிப்பை மட்டும் அறிவித்துள்ளனர். இதன் பின்னணி என்ன..?
இந்த பாசாங்கு ஜனநாயகத்தில் தாங்கள் தொடர்ந்து புறக்கணிக்கப்பட்டதற்கு பதிலாக தாங்களும் தேர்தலை புறக்கணிப்பதாக அறிவித்துள்ளனர்;
தேர்தல் பிரச்சாரங்கள் ஓயந்து விட்டன! ஆற, அமர யாருக்கு ஓட்டுப் போடுவது என யோசித்துப் பார்த்தால் விரக்தியே விடையாகிறது.
சென்ற நாடாளுமன்ற தேர்தலும் சரி, சட்டமன்ற தேர்தலிலும் சரி பாஜகவையும், அதை தமிழகத்தில் தூக்கி சுமந்த அதிமுகவையும் கடுமையாக எதிர்த்து எழுதினேன். அதிமுகவை அடிமை கட்சி என்றே தொடர்ந்து எழுதி வந்தேன். ஆகவே பாஜகவும், அதிமுகவும் மாற்றப்பட வேண்டிய கட்சி என்ற உள்ளார்ந்த ஈடுபாட்டுடன் எழுதினேன். அன்றைய தினம் இதற்கு மாற்றாகத் தன்னை வெளிப்படுத்தியது திமுக! ஆகவே, திமுகவை ஆதரித்து எழுதினேன். என் கட்டுரைகளை, முகநூல் பதிவுகளை திமுகவினர் பெரிதும் எடுத்து பயன்படுத்தியதையும் அறிந்தேன்.
இன்றும், என்றும் பாஜக ஒரு ஆபத்தான கட்சி! புறக்கணிக்கப்பட வேண்டிய கட்சி என்பதில் நம்முடைய உறுதிப்பாடு குறையாது. அறத்தில் வெளியாகும் கட்டுரைகளே அதற்கு சாட்சியாகும். நம்முடைய கவலையெல்லாம் பாஜக எதிர்ப்பை வெறும் பாசாங்காக அரங்கேற்றிக் கொண்டிருப்பவர்களைக் குறித்து தான்!
நாம் பெரிதும் நம்பிய திமுக ஆட்சி ஏமாற்றத்தையே பரிசளித்துள்ளது என்பதை எளிதில் புறக்கணித்துவிட்டு, இந்த தேர்தலை பார்க்க முடியவில்லை.
காஞ்சிபுரம் மாவட்டம் பரந்தூர் பகுதியில் உணவு தரும் பல்லாயிரம் ஏக்கர் பசுமை பூமியை தங்கள் குடியிருப்புகளை ஏரி குளங்களை வலுக்கட்டாயமாக பறித்து புதிய விமான நிலையம் அமைக்கும் தமிழக அரசுக்கு எதிர்ப்பு தெரிவித்து 681 நாட்களாக மக்கள் போராடி வருகின்றனர். ஏகனாபுரம், நாகப்பட்டு போன்ற இடங்களில் மக்கள் தேர்தல் புறக்கணிப்பை அறித்துள்ளனர்.
திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி அருகில் உள்ள மேல்மா பகுதியில் மூவாயிரத்திற்கு மேற்பட்ட ஏக்கர் நிலங்களை கார்ப்பரேட்களுக்காக அபகரிக்கும் திமுக அரசை எதிர்த்து 182 நாட்களாக மக்கள் போராடி வருகின்றனர். மாவட்ட அமைச்சர் எ.வ.வேலுவின் அராஜக அணுகுமுறைகள் அவர்களை கடுமையாக பாதித்து உள்ளது.
புதுக்கோட்டை மாவட்டம் வேங்கை வயல் கிராமத்தில் தலித் மக்கள் வசிக்கும் பகுதியின் குடி நீர் தொட்டியில் மலம் கலந்த உள்ளுர் பிரமுகரை அவர் ஆர்.எஸ்.எஸ் ஆதரவாளர் என்பதால் காப்பாற்றி வருவதோடு, பாதிக்கப்பட்ட அப்பாவி தலித் இளைஞர்களையே குற்றவாளிகளாக்க சதி செய்த திமுக அரசை எதிர்த்து, அந்த மக்கள் தேர்தல் புறக்கணிப்பை அறிவித்துள்ளனர்.
ஆத்தூர் அருகே மண்மலை ஊராட்சி மொடக்குபட்டி கிராமம் பில்லங்குளம் பகுதியில் அதி கொடூர விளை ஏற்படுத்தும் கர்சேன் பூச்சிக் கோலி ஆலைக்கு அனுமதி அளித்து மக்கள் வாழ்க்கையை சீரழித்த திமுக ஆட்சியை எதிர்த்து மக்கள் தேர்தல் புறக்கணிப்பை அறிவித்துள்ளனர். இதே போல ஈரோடு மாவட்டத்திலும் சுற்றுச் சூழலலுக்கு கேடான ஒரு எண்ணெய் உற்பத்தி ஆலைக்கு அனுமதி அளித்த வகையில் மக்கள் தேர்தலை புறக்கணித்துள்ளனர். .. இது போல சுமார் ஒரு டஜனுக்கு மேற்பட்ட இடங்களில் தேர்தல் புறக்கணிப்பு நடக்கின்றன! பல பகுதிகளில் தங்கள் அடிப்படை தேவைகளே கூட புறக்கணிக்கப்படுகின்றன. எவ்வளவு மனுக்கள் கொடுத்தும் பயனில்லை என மக்கள் தேர்தலை புறக்கணிக்கின்றனர். இவையெல்லாம் மிகுந்த வலியிலும், வேதனையிலும் வேறு வழியின்றி மக்கள் எடுத்துள்ள முடிவுகளே!
இந்தத் தேர்தலில் வாக்கு பதிவு கூட சற்று குறைவாக இருக்கும் என்றே தோன்றுகிறது.
இது குறித்து திமுக அரசு கடுகளவாவது சிந்திக்குமா..? எனத் தெரியவில்லை..!
திமுக ஆட்சிப் பொறுப்பேற்றதும் அதிமுகவில் இருந்து சாரி,சாரியாக அந்தந்த பகுதி அதிமுகவினர் இணைந்தனர்! அதற்கு முன்பே ஊழலுக்கு பேர் போன செந்தில் பாலாஜி திமுகவில் இணைந்து முக்கியத்துவம் பெற்றார். செந்தில் பாலாஜியை கடுமையாக சாடிப் பேசிய ஸ்டாலின் திமுகவில் அவருக்கு அதிமுக்கியத்துவம் தந்ததும், டாஸ்மாக்கிலேயே போலிச் சரக்கு விற்று சிலர் காரணமாக இருந்த போதும் கூட தொடர்ந்து முக்கியத்துவம் தந்ததும் இந்த ஆட்சி ஊழல் பாதையில் ஓங்கி நடைபோடத் தொடங்கிவிட்டது என்பதை உணர்த்தியது.
குவாரிகள் இன்னும் அதிகமாக திறக்கப்பட்டன. ஆற்றோரங்கள் இன்னும் ஆழமாக தோண்டி மணல் சுரண்டப்பட்டன. மலைகளையே உடைத்து விழுங்கியபடி இருக்கிறார் துரைமுருகன். ஊடகங்கள் கூட பொருட்படுத்தவில்லை. சகல துறைகளிலும் கடுகளவும் மனிதாபிமானமின்றி சொந்தக் கட்சி தொண்டரிடம் கூட கையூட்டு வாங்குவதில் கறார் காட்டியது திமுக. தேசிய கல்விக் கொள்கையை ஆரம்ப கல்வி முதல் உயர்கல்வி வரை அழுத்தமாக அமல்படுத்தி வருவது, சென்னை, மதுரை பல்கலைக் கழகங்களை மரண விளிம்பில் நிறுத்தி வைத்திருப்பது, மாநகராட்சிகளில் அடிநிலை துப்புரவு தொழிலாளர்களை காண்டிராக்டர்களிடம் ஒப்பந்த கூலிகளாக்கி, கொள்ளை கமிஷன் அடைவது, அரசு போக்குவரத்து துறையை படிப்படியாக தனியார் மயப்படுத்தி வருவது, எட்டு மணி நேர வேலையை 12 மணி நேர வேலையாக்கும் சட்டத்தை அதிரடியாக விவாதமின்றி நிறைவேற்றி, கடும் எதிர்ப்பால் பின்வாங்கியது எல்லாம் மறக்கக் கூடியதல்ல.
குஜராத்தில் முஸ்லீம்கள் படுகொலை செய்யப்பட்டது தொடர்பாக பி.பி.சி நிறுவனம் வெளியிட்ட ஆவணப் படத்தை தமிழகத்தில் எங்கும் திரையிடவிடாமல் இரும்பு கரம் கொண்டு ஒடுக்கியது, அதை தன் செல்போனில் பார்த்த சி.பி.எம் கவுன்சிலரை கைது செய்து கர்ம சிரத்தையாக பாஜகவின் பாதுகாவலர் பணியை செய்தது.. என ஸ்டாலின் அரசு முற்ற முழுக்க அம்பலப்பட்டு போன நிலையில், திமுகவிற்கு போடும் ஓட்டுகள் பாஜகவிற்கு போடும் ஓட்டுகளே.. என்பதில் எந்த சந்தேகமும் இருக்க முடியாது! பாரம்பரிய திமுகவினரே இன்றைய திமுக ஆட்சியிடம் இருந்து விலகி நிற்பதை பரவலாக பார்க்க முடிகிறது.
பல அதிருப்திகள் இருந்தாலும், திமுகவிடம் நமக்கிருந்த ஒரே ஈர்ப்பு அதன் திராவிடப் பின்புலமும், பாஜக எதிர்ப்புமே! அதுவே பொய்யாகிவிட்ட பிறகு, திமுகவை ஏன் ஆதரிக்க வேண்டும்? என்ற கேள்வியே எழுகிறது.
பத்ம சேஷாத்திரி பள்ளி ஆசிரியர் ஒருவர் மாணவிகளிடம் பாலியல் வன்முறைகள் செய்தது தொடர்பாக வழக்கு வலுவாக இருந்தும் செல்வாக்கான பார்ப்பனப் பள்ளி என்பதால் எல்லாம் மூடிமறைக்கப்பட்டு, பதிவான பாதிக்கப்பட்ட மாணவிகளின் வாக்குமூலங்கள் குப்பைக் கூடைக்கு போனது முதல் அதிர்ச்சி.
அடுத்து, மேற்கு மாம்பலம் அயோத்தியா மண்டப விவகாரத்தை பொறுத்த அளவில், அவர்கள் ஊழல், முறைகேடுகள் உச்சகட்டத்திற்கு சென்றதன் காரணமாக அதனை முறைப்படி அற நிலையத் துறையில் இணைத்தார் ஜெயலலிதா. அதற்கான வழக்கில் அதிமுக ஆட்சியில் முறையாக நடத்தப்ப்பட்டு நீதிமன்றத் தீர்ப்பும் அரசுக்கு சாதகமாக வந்தது. ஆனால், மேல்முறையீட்டில் திமுக அரசு உரிய ஆவணங்கள் இருந்தும் ஆதாரங்கள், வாதங்கள் எதையும் கோர்டில் முறையாக வைக்காமல் விட்டுக் கொடுத்து மீண்டும் அவர்களிடமே தூக்கிக் கொடுத்ததில், இவர்களின் கபட வேடம் முற்றிலும் கலைந்தது.
சிதம்பரம் தீட்சிதர்கள் விவகாரத்திலும் அறத்தை நிலை நாட்டாமல் பணிந்து போனார் ஸ்டாலின். சிதம்பரம் தீட்சிதர்கள், ”துர்கா ஸ்டாலின் அம்மாவே எங்க பக்கம் தான், போங்கடா..” என மக்களை தூக்கி எறிந்து பேசுவதை என்னென்பது..? பகுத்தறிவுக்கு பெயர் பெற்ற ஒரு தலைமை குடும்பத்தின் தலைவி கோவில்களுக்கு போவது கூட அவரின் தனிப்பட்ட உரிமை எனலாம். ஆனால், சதா சர்வ காலமும் கோவில்களுக்கு போவது, யாகம், வேள்விகள் நடத்துவது தகுமா? இந்தச் சூழலை திமுகவிற்கும் உள்ளேயும், வெளியேயும் உள்ள முற்போக்கு சக்திகள் ஆழ்ந்த வேதனையுடன் தான் பார்த்துக் கொண்டுள்ளனர்.
இதெல்லாம் ஒரு சில உதாரணங்களே! இதைப் போல நிறைய உதாரணங்களை அடுக்கலாம். குறிப்பாக கள்ளக் குறிச்சி மாணவி ஸ்ரீமதி கொலை செய்யப்பட்ட வழக்கில் இன்று வரை ஆர்.எஸ்.எஸ் ஆதரவாளரான பள்ளி முதலாளிக்கு பாதுகாவலராக இருப்பது, இந்தப் பிரச்சினையில் அப்பாவி தலித் இளைஞர்கள் நூற்றுக்கணக்காணவர்கள் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது ஆகியவை மிகக் கொடிய அனுபவங்களாகும்.
வேங்கை வயலில் குடிநீர் தொட்டியில் மலம் கலக்கப்பட்ட வழக்கில் உண்மையான குற்றவாளி யார்? எனத் தெரிந்தும், தெரியாதது போல நாடகமாடி, ஆர்.எஸ்.எஸ் கட்டளைக்கு அடி பணிந்து நடப்பது.. என்பதை பார்க்கும் போது.., இவர்களின் ஆட்சி யாரைப் பாதுகாக்க, யாருக்காக நடத்தப்படுகிறது..? என்பது தெளிவாகத் தெரிகிறது!
தூத்துகுடி துப்பாக்கி சூட்டில் 14 பேர் பலியானார்கள். இதில் சம்பந்தப்பட்ட காவல்துறை அதிகாரிகளை தண்டிக்க மறுத்து பதவி உயர்வு வழங்கிய திமுக ஆட்சியை காங்கிரஸ் கூட கண்டிக்கவில்லை. கம்யூனிஸ்டுகள் கூட எச்சரிக்கவில்லை. வேண்டுகோள் வைத்ததோடு விட்டுவிட்டனர்.
அதானிக்கு தமிழகத்தின் பழவேற்காடு உள்ளிட்ட பல இடங்கள் தாரை வார்க்கப்பட்டுள்ளது. மாநகராட்சி, நகராட்சிகள் விரிவாக்கம் என தமிழகம் முழுக்க விவசாய நிலங்கள் கார்ப்பரேட்டுகளை கருத்தில் கொண்டு விழுங்கப்பட்டு வருவது திராவிட மாடல் என்ற பெயரிலான பாஜக ஆட்சியே ஆகும். திராவிட இயக்கத்தின் ஆதார அடித்தளமான வள்ளலார் பெருவெளியையே சனாதன சக்திகளுக்காக அழித்தொழிக்க துணிந்த பிறகும், இந்த ஆட்சியை திராவிட ஆட்சி என அழைப்பது நியாயமல்ல. திமுக அரசானது பாஜகவின் பாதந்தாங்கி ஆட்சியாக செயல்பட்டுக் கொண்டே.., பாஜக எதிர்ப்பை பகட்டாக வெளிப்படுத்தும் பாசாங்குத்தனம் அருவெறுக்கதக்கது. மேற்படி விவகாரங்களில் இங்கிருக்கும் காங்கிரசாரும், கம்யூனிஸ்டுகளும் வெறும் பார்வையாளர்களாகவே உள்ளனர்.
சரி, பாஜகவை எதிர்ப்பவர்களின் ஓட்டை யாருக்கு போடுவது என சிந்தித்தால்.., அதிமுகவுக்கு ஓட்டு போடுவதா? என்றால்,. அதிமுக பாஜகவிடம் இருந்து விலகியது வரவேற்கத்தக்கது. அவர்களின் அழுத்ததிற்கு பணியாமல் தனியாக நிற்பது நல்ல முடிவு. ஆனால், பாஜக எதிர்ப்பில் அதிமுக தொடர்ந்து உறுதிப்பாட்டை காட்டுமா..? என்பதற்கு உத்திரவாதம் இல்லாதது போலத் தான் உணர முடிகிறது.
அப்படியானால் பாஜகவை சீமான் கடுமையாக சாடுகிறாரே..? அவருக்கு போடலாமா? என்றால், முதலில் நாம் தமிழர் என்பது ஒரு சரியான – ஜனநாயகபூர்வமான – நிர்வாகக் கட்டமைப்பைக் கொண்ட கட்சியல்ல என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும். முற்றிலும் ஒரு ‘ஒன்மேன் ஷோ’வாக வெளிப்படைத் தன்மையின்றி நடத்தப்படும் கட்சியாகும். அவர் பேசுகிற எது ஒன்றுக்குமே பொறுப்பேற்கத் துணியாதவர் என்பது மட்டுமல்ல, தன் பாஜக பாசத்தையும் அவர் வெளிப்படையாகவே பல நேரங்களில் வெளிப்படுத்தி உள்ளார் என்பதால், அவரை ஆதரிப்பது நம் தலைக்கு நாமே வைக்கும் கொள்ளியாகவே முடியும்.
தமிழகத்தை பொறுத்த அளவில் காங்கிரஸ் மக்களோடும், அவர்களின் பிரச்சினைகளோடும் சம்பந்தப்படாத கட்சியாகவே உள்ளனர். பாஜகவை எதிர்ப்பதில் சாதாரண மக்களிடம் இருக்கும் உறுதிப்பாட்டைக் கூட காங்கிரசாரிடம் பார்க்க முடியவில்லை. இடதுசாரிகளோ திமுக ஆட்சியின் மக்கள் விரோத செயல்பாடுகள் சிலவற்றை கண்டித்து அறிக்கை விட்டும், பலவற்றை கூட்டணி தர்மம் என்ற பெயரில் மெளனமாக கடந்தும் செல்கின்றனர்.
ஆக, யாரையுமே நம்ப முடியவில்லை. எல்லோருமே பதவி, பணம், அதிகாரம்,செல்வாக்கு..என்ற போக்கிலேயே உள்ளனர். மக்கள் பிரச்சினைகளை புரிந்து கொண்டு நேர்மையாக செயல்படும் கட்சியோ, தலைவர்களோ கண்ணுக்கு எட்டிய தூரம் வரை தெரியவில்லை. ஆக, இருப்பதற்குள் குறைந்த தீமை உடையவர்களை தேர்ந்தெடுக்க வேண்டிய கட்டாயத்தில் தான் நாம் உள்ளோம்.
Also read
”நடைபெறும் தேர்தல் நாடாளுமன்றத் தேர்தல் என்பதால், தற்போதைக்கு பாஜக எதிர்ப்பை மையப்படுத்தி ஓட்டுப் போட வேண்டும். திமுகவை நம்புவதைத் தவிர வேறு வழியில்லை” என்பவர்களை நான் தடுக்கவில்லை. ‘ஆனால், ஓட்டுப் போட்டதோடு கடமை முடிந்ததாக விட்டு விடாமல், திமுகவை தொடர்ந்து கண்காணியுங்கள். அவர்களின் தவறுகளை தட்டிக் கேட்டு, திருத்த முயற்சிக்கும் துணிச்சல் கொண்டவராக இருங்கள்’ என்பதை மட்டும் சொல்லி வைக்கிறோம்.
வேங்கை வயல் மக்களின் வேதனையையும், மேல்மா விவசாயிகளின் துயர் குரலையும், பரந்தூர், ஏகனாபுரம் .. உள்ளிட்ட இன்ன பிற பகுதிகளின் விவசாயப் பெருங்குடி மக்களின் அழுகுரலையும் கேட்கும் போது, அந்த மக்கள் எடுத்த முடிவையே எனக்கும் எடுக்கத் தோன்றுகிறது. அவரவர்களுக்கு அவரவர் அனுபவம் மற்றும் புரிதல் சார்ந்து முடிவெடுக்கும் உரிமை ஜனநாயகத்தில் உண்டு தானே!
சாவித்திரி கண்ணன்
அறம் இணைய இதழ்
தமிழக மக்களின் அமோக ஆதரவுடன் ஆட்சிப் பொறுப்பை ஏற்ற ஸ்டாலின் தலைமையிலான திமுகவிடம் மக்கள் அதிகம் எதிர்பார்த்தார்கள். அதனை பூர்த்தி செய்யும் வகையில் ஆவின் பால் விலை குறைக்கப்பட்டது. நமக்கு ஒரு நல்லாட்சி கிடைத்துவிட்டது என்று மக்களின் மகிழ்ச்சி ஆனால் அது தொடரவில்லை. ஆவின் பால் விலையை குறைத்து அந்த மகிழ்ச்சியில் திக்கு முக்காடி போயிருந்த மக்கள் முதுகில் ஏறி நின்ற ஸ்டாலின் அடுத்து மக்களுக்கு கொடுத்த பரிசு தொடர்ந்து விலைவாசி ஏற்றம் தான். விளம்பரத்தின் மூலம் அந்த விலைவாசி ஏற்றத்தை மக்கள் மகிழ்ச்சியோடு ஏற்றுக்கொண்டு நலமாக உள்ளனர் என்று இவர் மட்டும் மகிழ்ந்து தன்னை மட்டுமே விளம்பரப்படுத்திக் கொண்டார். பணத்தைக் கொடுத்தால் வெற்றி பெற்று விடலாம் என்று அவர் நினைத்துக் கொண்டிருக்கிறார். ஆனால் எல்லோரையும் எல்லா நாட்களும் ஏமாற்ற முடியாது. அதனை இந்த கட்டுரை சுட்டிக்காட்டுகிறது. இந்த தேர்தலில் திமுக வெற்றி பெற்றாலும் அதன் வாக்கு எண்ணிக்கை வைத்து மக்கள் எந்த இடத்தில் திராவிட மாடலை அமர வைத்திருக்கிறார்கள் என்பது தெளிவாக தெரியும்.
அருமையான கட்டுரை. இங்கே நம்பிக்கையளிக்கும் விதத்தில் யாரும் இல்லை. எதையும் விரும்பாதவர்கள் ‘,Nota’ வில் வாக்களித்து விட வேண்டியதுதான். இடதுசாரிகளின் நிலை வேதனையளிக்கிறது.
.
கூரைமீது கொள்ளிக்கட்டையுடன் இருக்கும் பிள்ளை தான் யோக்கியன் என்று தந்தை சொல்வது போல மதவாதம் ஊழல் ஜாதீயம் லஞ்சம் கொள்ளை இவர்களில் ஒரு நல்ல பிள்ளையை தான் ஜனநாயகம் அளிக்கும்
Nota வுக்கு ஓட்டளிப்பது என்பது சரியான முட்டாள்தனம். வாக்குரிமையை வீணாக்குவதாகும். அதனால் தீயவன் ஜெயிப்பதை தடுக்க முடியுமா. எவன் மிகுந்த தீயவனோ அவனைவிட குறைவாக தீயவனை தேர்ந்தெடுப்பதே பெரும் தீயவனை வர விடாமல் தடுக்கும் வழியாகும்
அது போலவே தேர்தலை புறக்கணிப்பதும் அடி முட்டாள் தனம்….ஒரு கிராமமே தேர்தலை புறக்கணித்தால் எல்லாக் கட்சியினரின் வெறுப்புக்கும் கோபத்துக்கும் ஆளாகி ஓரந்தள்ளப்பட்டு வாழ வேண்டும். தேர்தலை புறக்கணித்தால் தீயவனுக்கான எதிர்ப்பு குறையும்… எனவே தேர்தலை புறக்கணிப்பது கடைந்தெடுத்த முண்டாள் தனம்.
ஓட்டுக் கேட்க வரும் வேட்பாளர்களை அழைத்து உட்காரவைத்து ஊர் பெரியவர்கள் மூலமாக பேசி….வேட்பாளர்களிடம் உத்தரவாதம் பெற்று…. அவர்களில் நம்பிக்கைக்கு உரியவராக தெரிபவருக்கு ஓட்டளிக்கலாமே .
இலாலையெனில்….. விரும்பாதவனுக்கு எதிராக வோட்டளிக்கலாமே…..
Nota வும்
தேர்தல் புறக்கணிப்பும் அடிப்படை அறிவு கூட இல்லாத முட்டாள்கள் செய்யும் வேலை