அடுத்த கட்டத் தேர்தல் ஏப்ரல் 26 –ல், 89 தொகுதிகளுக்கு நடக்கிறது. கேரளத்தில்- 20 , கர்நாடகாவில் 14, இராஜஸ்தானில் 13 தொகுதிகளுக்கும் நடக்கவுள்ளது. இதில் யாருக்கு வெற்றி வாய்ப்புள்ளது? பாஜகவின் வாக்கு வங்கி சரிவது, காங்கிரசுக்கு கை கொடுக்குமா..? அரவிந்த் கெஜ்ரிவால் கைதின் தாக்கம் என்ன..? ஒரு அலசல்;
இத்துடன் உ.பி, மகாராஷ்டிரம் ஆகிய மாநிலங்களில் தலா 8 தொகுதிகளுக்கும், பீகார், அஸ்ஸாம் தலா 5 தொகுதிகளுக்கும், மே.வங்கம், சட்டீஸ்கர் தலா 3 தொகுதிகளுக்கும், மணிப்பூர், ஜம்மு காஷ்மீர், திரிபுரா தலா 1 தொகுதிக்கும் அன்று(ஏப்.26) தேர்தல் நடைபெறும்!
ஏன், இப்படி கொசுறு கொசுறாக தேர்தல் நடத்த வேண்டும் என்ற கேள்விக்கு தேர்தல் ஆணையத்திடம் பதில் இல்லை! பாமர இந்தியனும் ‘இது யாருடைய கைவேலை’ என்று புரிந்து வைத்திருக்கிறான். ஆனால், ஏழை சொல் அம்பலமேறியதாக சரித்திரம் இல்லை!
ஒரே கட்டமாக தேர்தலை சந்திக்கப் போகும் கேரளத்தின் அரசியல் களம் எவ்வாறுள்ளது? கடந்த 2019ம் ஆண்டு தேர்தலில் தமிழகத்தை போலவே மோடிக்கு எதிரான அலை கேரளத்திலும் வீசியது. அகில இந்திய அளவில் பிரதான எதிர்கட்சியான காங்கிரஸ் தலைமையிலான UDF 19 இடங்களில் அமோக வெற்றி பெற்றது. அகில இந்திய அளவில் 300 இடங்களுக்கு மேல் வெற்றி பெற்ற பாஜக, கேரளத்தில் ஒரு இடத்தில் கூட வெற்றி பெற இயலவில்லை. ஆனால், தனது வாக்கு சதவிகிதத்தை சிறிது உயர்த்தி 13% தொட்டது.
கேரளத்தில் போட்டி என்பதே மார்க்சிஸ்ட் கட்சி தலைமையிலான இடது முன்னணிக்கும்(LDF) காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய ஜனநாயக் கூட்டணிக்குமானது(UDF) தான் . இந்த தேர்தலிலும் பாஜக ஒரு சில பிரபலங்களை களத்தில் நிறுத்தியிருந்தாலும் ( ஒன்றிய அமைச்சர் ராஜீவ் சந்திரசேகர் , காங்கிரசின் சசி தரூருக்கு எதிராக திருவனந்தபுரத்தில் களம் காண்கிறார்) சில கட்சிகள் (கேரள காங்கிரஸ்) உடைக்கப்பட்டு தேசீய ஜனநாயக கூட்டணியில் (NDA) இணைந்தாலும், பா ஜ க வின் நிலைமை சொல்லிக் கொள்ளும்படியாக இல்லை. ஊடகங்களில் பேசு பொருளாக – ராஜீவ் சந்திரசேகர், வயநாட்டில் பாஜக மாநிலத்தலைவர் சுரேந்திரன் ராகுலை எதிர்த்தும், முன்னணி நடிகர் சுரேஷ் கோபி திரிசூரிலும் நிற்பது- இருந்தாலும், வாக்காளர்கள் இவர்களை “ சீரியசாக” எடுத்துக் கொண்ட மாதிரி தெரியவில்லை!
அட்டிங்கல் தொகுதியில் ஒன்றிய அமைச்சர் வி. முரளீதரனும், பத்தனம் தீட்டா தொகுதியில் காங்கிரசிலிருந்து பா ஜ க விற்கு தாவியவரும், முதுபெரும் காங்கிரஸ் தலைவர் ஏ.கே. அந்தோனியின் மகனுமான அனில் கே. அந்தோனி நிறுத்தப்பட்டிருப்பது சல சலப்பை ஏற்படுத்தினாலும் முடிவுகளில் மாற்றமிராது.
பாஜகவின் தெற்கு நோக்கிய முன்னெடுப்பு தமிழகத்தைப் போன்றே கேரளாவிலும் பல முட்டுக் கட்டைகளினால் முன்னேற இயலவில்லை. மோடியின் நடை உடை பாவனைகள் மற்றும் பேச்சுக்களும் பா ஜ க விற்கு கை கொடுக்கவில்லை என்றே அரசியல் நோக்கர்கள் கூறுகின்றனர்.
இந்தியா கூட்டணியில் அகில இந்திய அளவில் காங்கிரசும், மார்க்சிஸ்ட் கட்சியும் ஓரணியில் இருந்தாலும் கேரளாவில் இருவரும் எதிரும் புதிருமாக உள்ளனர். 2019ல் இடது முன்னணி நாடாளுமன்ற தேர்தலில் படுதோல்வி அடைந்தாலும் 2021 ல் நடந்த சட்டமன்ற தேர்தலில் இடது முன்னணி 99 இடங்களில் வென்று ஆட்சியை தக்க வைத்துக் கொண்டது.
இவர்களுக்கிடையிலான மோதல்கள் இன்று ராகுல் காந்தி மற்றும் பினாரயி விஜயன் போன்ற தலைவர்களின் பேச்சுக்களிலும் வெளிப்பட்டு சங்கடத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்தச் சூழலில் இவ்விரு முன்னணிகளும் ஒருவரை ஒருவர் தாக்கி பேசி வருவது சங்கிகளுக்கு உற்சாகத்தை கொடுத்துள்ளது. பொது எதிரியான பாஜக வை எதிர்க்க வேண்டியவர்களாக இருந்தாலும் இரு அணிகளுக்கும் அதிக நாடாளுமன்ற தொகுதிகளை வெல்வோதடன்றி, கேரள மாநிலத்தில் ஆட்சியையும் பிடிக்க வேண்டிய கட்டாயம் உள்ளது. எனவே, அதை மனதில் வைத்தே காய்கள் நகர்த்தப்படுகின்றன. ஆனால், இதில் குளிர்காயும் சக்தி பா ஜ க விற்கு இல்லை.
அடுத்து கர்நாடகாவில் உள்ள 14 தொகுதிகளுக்கு ஏப்ரல் 26 ல் தேர்தல் நடைபெற உள்ளது. இங்கு, பாஜக தேவ கௌடாவுடன் கூட்டணி அமைத்து களம் இறங்கி உள்ளது. மாண்டியா மற்றும் மைசூரு பகுதிகளில் வாழும் வொக்கலிக சமுதாயத்தின் நம்பிக்கையை பெற்ற மத சார்பற்ற ஜனதா தளம் தன்னுடைய செல்வாக்கை நிலை நிறுத்துமா?, வாக்குகளை பாஜ க விற்கு சிக்கலின்றி மாற்றுமா? என்பது மிகப் பெரிய கேள்விக்குறியாகும்.
மதச் சார்பற்ற ஜனதா தளம் என்ற பெயரிலான கட்சி, பகிரங்கமாக பாஜகவோடு கைகோர்த்ததால் சிறுபான்மையினரான இஸ்லாமியர்கள் தேவகவுடா, குமாரசாமி மீது நம்பிக்கை இழந்து வெளியேறுவது தேசீய ஜனநாயக கூட்டணிக்கு (NDA) பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது.
மோடியின் பத்தாண்டு கால ஆட்சியின் அலங்கோலங்கள் மற்றும் கர்நாடக மாநிலத்திற்கு உரிய நிதியை ஒதுக்காமல் வஞ்சிப்பது, வறட்சி நிவாரணத்திற்கு ஒன்றிய அரசு நிதி ஒதுக்காமல் ஏமாற்றுவது ஆகியவை NDA கூட்டணிக்கு வேட்டு வைக்கும் விஷயங்களாகும் .40% கமிஷன் அரசை தோற்கடித்து 2023ல் ஆட்சியை பிடித்த காங்கிரஸ் கட்சி கிருக லட்சுமி, கிருக ஜோதி , சக்தி, அன்ன பாக்யா மற்றும் யுவநிதி என்ற ஐந்து காரண்டிகளை அமுல்படுத்தி, காங்கிரஸ் தனது அரசியல் செல்வாக்கை உயர்த்தியுள்ளது.
கடந்த தேர்தலில் புல்வாமா தாக்குதல் மற்றும் சர்ஜிக்கல் ஸ்ட்ரைக்கை வைத்து பெருமளவு தொகுதிகளில் (11) வென்ற பாஜக, இன்று ஒன்பது எம்பிக்களுக்கு தேர்தல் டிக்கட் வழங்கவில்லை. உட்கட்சி பூசலும், பத்தாண்டு கால ஆட்சின் அலங்கோலங்களும் பெங்களூர் (4 தொகுதிகள்); சாம்ராஜ் நகர், சிக்பல்லபூர், சித்ரதுர்கா, தக்ஷின கன்னடா, ஹாசன்,கோலார் , மாண்டியா மைசூரு, தும்கூர் மற்றும் உடுப்பி சிக்மகளூரு ஆகிய 14 தொகுதிகளில் 2019 வெற்றியைத் தராது என்று கூறப்படுகிறது. காங்கிரஸ் கட்சி இந்த 14 தொகுதிகளில் கணிசமான வெற்றியைப் பெறும் என்றே தகவல்கள் கூறுகின்றன.
பாஜக வின் தெற்கு நோக்கிய முன்னெடுப்பு கர்நாடகத்திலும் எதிர்பார்த்த வெற்றிகளைத் தராது என்பதே கள நிலவரமாக உள்ளது.
அடுத்து ராஜஸ்தான் மாநிலத்தில் 13 தொகுதிகளுக்கு ஏப்ரல் 26ல் தேர்தல் நடைபெறவுள்ளது . 2023 டிசம்பரில் ஆட்சியை பறி கொடுத்த காங்கிரஸ் இந்த முறை நாடாளுமன்ற தேர்தலில் தனது பலத்தை காட்டுமா?
உட்கட்சி பூசல்களால் வெற்றி வாய்ப்பை காங்கிரஸ் 2023 டிசம்பரில் இழந்தாலும், அதனுடைய வாக்கு சதவிகிதம் அதிகரித்தே உள்ளது ஒரு ஆறுதலான செய்தி. இந்த முறை காங்கிரஸ் பா ஜ க விற்கு பலத்த போட்டியை கொடுக்கும் என்கின்றனர். அசோக் கெலாட் மற்றும் சச்சின் பைலட் போன்ற தலைவர்கள் தங்களது ஈகோவை விட்டுவிட்டு கட்சியின் வெற்றிக்கு ஒற்றுமையுடன் முயற்சிப்பது புது தெம்பை காங்கிசிற்கு கொடுத்துள்ளது. கூட்டணி கட்சிகளை அரவணைத்து இன்று காங்கிரஸ் களத்தில் இறங்கியுள்ளது.
கடந்த தேர்தலில் வாஷ் அவுட் ஆன காங்கிரஸ், இந்த முறை குறிப்பிடத்தக்க வெற்றிகளைப் பெரும் என்பது அனைவரது எதிர்பார்பாகும் .
கெலாட் அரசு கொண்டுவந்த குறைந்தபட்ச ஊதிய திட்டம், நகர்ப்புற வேலை வாய்ப்பு திட்டம், புரட்சிகரமான சுகாதார திட்டம் மற்றும் கிக் தொழிலாளர்களுக்கான மையம் போன்ற திட்டங்களை புதிதாக பதவியேற்ற பாஜக அரசு ரத்து செய்துள்ளது எளிய மக்களின் கோபத்தை கிளறியுள்ளது.
மோடியின் வெற்று காரண்டிகளும், வாய்ச்சவடால்களும் எதிர்பார்த்த பலனை பா ஜ க விற்கு தராது என்றே அரசியல் நோக்கர்கள் கருதுகின்றனர். னடைபெறவுள்ள 13 தொகுதிகளில் காங்கிரஸ் எட்டு முதல் பத்து தொகுதிகளில் வெற்றி வாய்ப்பை உறுதி செய்யும் எனத் தெரிகிறது.
அரவிந்த் கெஜ்ரிவாலின் கைது தில்லி, ஹரியானாவைத் தாண்டி ராஜஸ்தானிலும் எதிரொலிக்கிறது எனலாம். மே.வங்கம், சட்டீஸ்கர் , திரிபுரா, உ.பி ஆகியவற்றிலும் இந்த கைதின் தாக்கம் எதிரொலிக்கிறது.
எந்தவிதமான ஆதாரமும் இல்லாமல் மக்களால் தெரிவு செய்யப்பட்டு பதவியில் இருக்கும் ஒரு முதலமைச்சரை கைது செய்திருப்பது ஒரு அசாதாரண நிகழ்வாகும். கேள்வி கேட்பார் யாருமில்லாத ஒரு சர்வாதிகாரியின் பழி வாங்கும் செயல் என்பதை மக்கள் உணரத் தொடங்கியுள்ளனர்.
இத்தகைய அத்துமீறலை, தேர்தல் நன்னடத்தை விதிகள் அமலுக்கு வந்த பின்னர் ஒன்றிய அரசின் புலானாய்வு அமைப்பு அரங்கேற்றுவதை தேர்தல் ஆணையம் கண்டிக்காமல் வேடிக்கை பார்த்துக்கொண்டிருப்பது ஏற்றுக் கொள்ள முடியாத செயலாகும்.
தேர்தல் நடைமுறை பாரபட்சமின்றி, வெளிப்படையாக செயல்படுவதை உறுதி செய்ய வேண்டிய தேர்தல் ஆணையம், கட்சிகளுக்கிடையே சமநிலையான ஆடுகளத்தை உறுதி செய்ய வேண்டிய தேர்தல் ஆணையம் இன்று பல் பிடுங்கப்பட்ட பாம்பாக ஊர்ந்து கொண்டிருக்கிறது.
ஆளுங்கட்சியின் அத்துமீறலை கேள்வி கேட்கும் நிலையை முற்றிலும் மறந்து போன ஊடகங்கள் முதுகெலும்பற்ற பிராணிகளாக உலா வருகின்றன.
அரசியல் சட்ட மாண்பையும், தனி மனித சுதந்திரத்தையும் தூக்கிப் பிடிக்க வேண்டிய நீதி மன்றங்கள் தங்கள் கடமையினின்று நழுவியதோடன்றி, ஆட்சியாளர்களை பாதுகாப்பதில் அக்கறை செலுத்துவதை என்னவென்பது?
எதிர்கட்சிகளை புலனாய்வு அமைப்புகள் ( இ.டி., ஐ.டி., சி.பி.ஐ.) மூலம் கைது செய்து முடக்குவதும் , எதிர்கட்சிகளின் வங்கி கணக்குகளை முடக்கி செயலிழக்கச் செய்வதும், எதிர்கட்சி தலைவர்களை பிரச்சாரம் செய்யவிடாமல் தடுப்பதும் மோடி அரசின் பிரதான வேலையாக இருக்கிறது. இதை தட்டிக் கேட்காத – தடுத்து நிறுத்தாத – தேர்தல் ஆணையமும், நீதி மன்றங்களும் யாருக்காக வேலை செய்கின்றன?
ஜனநாயத்தை சிதைக்கும் இத்தகைய செயல்களை தோலுரித்துக் காட்ட தேசீய மற்றும் முன்னணி ஊடகங்கள் தயங்குவது இந்திய ஜனநாயகத்தை கேலிக் கூத்தாக்குகிறது. இந்த தேர்தல் ஒரு சுதந்திரமான, நேர்மையான தேர்தலா? என்ற கேள்வி எழுகிறது.
Also read
தேர்தல் நடைமுறைகளோ, வாக்குப்பதிவு முறைகளோ வெளிப்படைத் தன்மையை இழந்ததினால் நம்பகத் தன்மையையும் இழந்து நிற்கிறது எனலாம்.
எனவே, ஆட்சியாளர்களுக்கெதிராக மக்கள் கிளர்ந்தெழுந்தாலும், எதிர்கட்சிகள் ஓரணியில் திரண்டாலும் மக்கள் எதிர்பார்க்கும் மாற்றம் சாத்தியப்படுமா என்பது மிகப்பெரிய கேள்விக்குறியாகும்.
புலனாய்வு அமைப்புகளுடன் கூட்டணி வைத்துக்கொண்டு, தேர்தல் ஆணையம் மற்றும் நீதி மன்றங்களின் உதவியுடன் , தேர்தல் கள நிலவரங்கள் சாதகமாக இல்லாவிட்டாலும் வெற்றிக்கனியை கைப்பற்ற மோடி அரசு மின்னணு வாக்கு முறையை (EVM) நம்பியுள்ளது.
இந்த நிலையில் களநிலவரம் எப்படி இருப்பினும் தேர்தல் முடிவுகளைஆள்பவர்களால் திருட முடியும் என்பது கட்டுக்கதை அல்ல.
கட்டுரையாளர்; ச.அருணாசலம்
இரண்டாம் கட்ட தேர்தல் குறித்த ஒரு அறிவு சார் அலசல் நம்பிக்கையளிக்கிறது பாஜக வீழும் என்பது