பிரதமர் பேச்சின் பின்னணி இதோ, இவை தாம்..!

இந்த மனிதர் அடிப்படையிலேயே ஒரு மன நோயாளியா? அல்லது தேர்தல் தோல்வி பயம் உளற வைக்கிறதா.? ராஜஸ்தானில் பேசிய அதகளப் பேச்சு அடங்கும் முன்பே, சத்தீஸ்கரில் சலம்பல் செய்கிறார். அதிகாரத்தின் உச்சத்தில் இருப்பவருக்கு இஸ்லாமோஃபோபியா , நக்சல் ஜுரம், காங்கிரஸ் அலர்ஜி..  ஆகிய அனைத்தும் ஏற்பட்டுள்ளதா..?

ஒரு மிகப் பெரிய ஜனநாயக நாட்டின் பிரதமர் நாட்டின் வளர்ச்சி, முன்னேற்றம், நாடு எதிர் கொள்ளும் சவால்கள் ஆகியவை குறித்து பொறுப்பாக பேசுவார் என எதிர்பார்த்தால்.., அவரோ மனநிலை பிறழ்ந்தவர் போல பேசிக் கொண்டே இருக்கிறார்.

‘தான் என்ன பேசினாலும் அது குறித்து கண்டு கொள்ளக் கூடாது’ என்பதற்காகவே, ஜனநாயக முறையில் தேர்தல் ஆணையர்களை நியமிக்காமல், மெளனச்சாமிகளாக தேர்வு செய்து மும்மூர்த்திகளை தேர்தல் ஆணையர்களாகப் போட்டுள்ளார்.

”காங்கிரஸ் ஆளும் மாநிலங்களில் அனுமன் பாடல்களை கேட்பது கூட குற்றமாக உள்ளது. அனுமன் பாடல்களை கேட்பது குற்றமா…?” எனக் கேட்டுள்ளார் பிரதமர் மோடி!

இந்த சம்பவத்தின் பின்னணி இது தான்; பெங்களூர் நகரத்பேட்டை பகுதியில் செல்போன் கடை நடத்தும் முகேஷ் குமார் கடந்த மாதம் மார்ச்-17 ஆம் தேதி மாலை, தனது கடையில் ஹனுமன் பஜனை பாடல்களை அதிக சத்தத்துடன் ஒலிக்க விட்டுள்ளார். இதன் அருகே மசூதி ஒன்று இயங்கி வருகிறது.  மசூதியில் தொழுகை நேரமாகப் பார்த்து முகேஷ்குமார் இவ்வாறு செய்ததைத் தொடர்ந்து, இஸ்லாமிய சமூக இளைஞர்கள் தொழுகை நடத்தி முடியும் வரை சத்தத்தை குறைவாக வைத்து கேட்கும்படி வேண்டுகோள் வைத்துள்ளனர். அதை மறுத்து அடாவடியாக முகேஷ்குமார் பேசவும், அங்கே வார்த்தை முற்றி, கைகலப்பு ஏற்பட்டுள்ளது.

இது பொதுவாக அங்குமிங்கும் நடக்கக் கூடிய ஒரு தெருச் சண்டை! இது பற்றி இந்தியாவின் பிரதமராக இருப்பவர் பொறுப்பின்றி பேசி, இதை இந்து-முஸ்லீம் கலவரமாக வளர்த்தெடுக்க நினைக்கிறார் என்றால், அவரது தராதரத்தை என்னென்பது..? அவரும் தெருச் சண்டையில் இறங்கத் துடிக்கிறார் என்று தான் பொருள்!

”மக்கள் ராம்-ராம் என முழக்கமிடும் ராம நவமிக்கு ராஜஸ்தான் மாநிலத்தில்  காங்கிரஸ் தடை விதித்திருந்தது… இது நியாயமா..? ” என அங்கலாய்த்துள்ளார் பிரதமர்.

வட மாநிலங்களில் ராம நவமி என்பது எவ்வாறு நடத்தப்பட்டு வருகிறது..? அதுவும் குறிப்பாக பாஜக பொறுப்பேற்ற இந்த பத்தாண்டுகளில் அதை எப்படி நடத்தி வருகிறார்கள் என்பதற்கு எத்தனையோ உதாரணங்கள் உள்ளன. ராம நவமி ஊர்வலத்தை இஸ்லாமியர்களை இழிவுபடுத்தும் கோஷங்களை உச்சரிப்பதும், அவர்களின் மசூதி, கடைகள், வீடுகள் போன்றவற்றை தாக்கும் நிகழ்வாகவும் தொடர்ந்து வளர்த்தெடுத்து வருகிறது பாஜகவும், அதன் இந்துத்துவ வெறி அமைப்புகளும். இதற்கு எண்ணற்ற சம்பவங்களே சாட்சி!

குஜராத், உத்திரபிரதேசம், உத்திரகாண்ட், மத்திய பிரதேசம், மகாராஷ்டிரா, கர்நாடகம், பீகார், மேற்கு வங்கம்..என எத்தனை இடங்களில் எவ்வளவு மோசமான நிகழ்வுகளை, கலவரங்களை, சேதாரங்களை, தாக்குதல்களை, சாவுகளை நீங்கள் அரங்கேற்றி உள்ளீர்கள்! இதைத் தொடர்ந்தே ‘காவல்துறையின் சட்டதிட்டங்களின்படி மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்காமல் நடத்த முடியாது’ எனும் போது ராஜஸ்தான் முதல்வர் அசோக்கெலாட் கலவரத்தை தடுக்கும் விதமாக அனுமதியை மறுத்துள்ளார்!

”அன்பை போதிக்கும், ஒற்றுமையை பலப்படுத்தும் ஆன்மிக, பக்தி நிகழ்வுகளைக் கூட, அராஜகம் செய்யும் விழாவாக்குவேன்” எனக் கூறுவது தான் இந்துக்களுக்கான ஆதரவா? இல்லை இது ஆபத்தல்லவா..?

”காங்கிரஸ் தேர்தல் அறிக்கை வெளியானபோதே அதில் முஸ்லிம் லீக்கின் முத்திரை இருப்பதாக கூறியிருந்தேன். அரசியலமைப்புச் சட்டம் உருவாக்கப்பட்டபோது, இந்தியாவில் மத அடிப்படையில் இடஒதுக்கீடு கிடையாது என்று அம்பேத்கர் தலைமையில் முடிவு செய்யப்பட்டது. ஆனால், காங்கிரஸ் வாக்கு வங்கிக்காக அம்பேத்கரின் வார்த்தைகள் மீது அக்கறை கொள்ளவில்லை. அரசியலமைப்பின் புனிதம் பற்றியும் கவலை கொள்ளவில்லை. நாட்டின் அரசமைப்பை காங்கிரஸ் மாற்ற நினைக்கிறது! எஸ்.சி, எஸ்.டி மற்றும் ஓபிசி மக்களின் உரிமைகளை காங்கிரஸ் கட்சி பறிக்க நினைக்கிறது. எஸ்.சி, எஸ்.டி மற்றும் ஓபிசி இட ஒதுக்கீட்டில் 15 சதவீதத்தை மத அடிப்படையில் வழங்க காங்கிரஸ் திட்டமிட்டு வருகிறது….” என்கிறார் பிரதமர்.

இது பிரதமரின் வளமான கற்பனை. நடக்காத ஒன்றை ஊகத்தின் அடிப்படையில் பேசுவதற்கு யார் தான் பதில் சொல்ல முடியும்..? பைத்தியங்களின் உளறல்களுக்கெல்லாம் பதில் அளிக்க முன் வந்தால் அதற்கு முடிவே இருக்காதே..!

இதன் மூலம் ஒன்று மட்டும் உறுதியாகத் தெரிகிறது. பிரதமரின் மனமெங்கும் இஸ்லாமிய துவேஷம் பொங்கி வழிகிறது. அந்த வெப்ப தகிப்பில் அவரது அறிவு நிதானம் இழந்துள்ளது. ‘உண்மையில் எவ்வளவு ஆபத்தான ஒருவரை நாம் இது வரை நாட்டின் தலைமை பொறுப்பில் வைத்திருந்தோம்’ என்பது அதிர்ச்சியளிக்கிறது.

”தீவிரவாதம் மற்றும் நக்சல் அமைப்புகளுக்கு எதிராக பாஜக கடுமையான நடவடிக்கை எடுத்து வருகிறது. ஆனால், அவற்றுக்கு காங்கிரஸ் ஆதரவளிப்பதோடு, அது போன்றவர்களை துணிச்சல்காரர்கள் என்று அழைக்கிறது. தீவிரவாதிகள் கொல்லப்படும்போது காங்கிரஸின் மிகப்பெரிய தலைவர் கண்ணீர் வடிக்கிறார்…” எனப் பேசி இருக்கிறார் மோடி.

பீமா கோரேகான் வழக்கில் 16 பேர்  உபாவில் கைது செய்யப்பட்டனரே! இதில் ஆதிவாசிகளுக்காகவே தன்வாழ்வை ஒப்படைத்த சமூக சேவகர்  83 வயதான   பாதிரியார் ஸ்டேன் சாமி,  விவசாயிகள் ஒப்பந்தக்காரர்களால்  சுரண்டப்படுவதை எதிர்த்த மகேஷ் ராவத்,  நாக்பூர் பல்கலைக்கழக பேராசிரியர் சோமா சென், 80 வயதான தெலுங்கின் மக்கள் கவிஞர் வரவர ராவ்,  தலித் சிந்தனாவாதியான ஆனந்த  டெல்டும்டே ,தொழிற்சங்கவாதியான சுதா பரத்வாஜ் போன்ற  அனைவருமே மோடியின் பார்வையில் நக்சல்கள், தீவிரவாதிகள்! ஆனால், மனசாட்சியுள்ள மக்களின் பார்வையில் இவர்கள் மக்களுக்காக தங்கள் வாழ்நாளை அர்ப்பணித்தவர்கள்!

ஆக, பாஜக என்ற இந்த மதவெறிக் கூட்டத்தின் தோல்வி பயம் தான் அவரக்ளை இவ்வாறு பேச வைக்கிறது. மோடி என்பவர் தனி மனிதரல்ல. அவர் ஆர்.எஸ்.எஸ்சால் இயக்கப்படும் ஒரு இயந்திர மனிதர். அவர்களின் அஜந்தாக்களை நிறைவேற்ற அவர்களால் வேலைக்கு அமர்த்தப்பட்ட ஒரு மனிதர். அவரிடம் நாம் வெறென்ன எதிர்பார்க்க முடியும்..?

சாவித்திரி கண்ணன்

 

Support Aram

நேர்மையான, வெளிப்படையான,

சுதந்திரமான இதழியலுக்கு தோள்

கொடுங்கள்.

UPI QR CODE

Razorpay Payment Gateway

Personal Info

Donation Total: ₹1,000.00 One Time