அண்ணன் ஜெயிலில்! தம்பி உல்லாச உலகில்!

-அஜித கேச கம்பளன்

மர்மக் கதைகளை எல்லாம் விஞ்சும் விதத்தில் உள்ளது செந்தில் பாலாஜியின் தம்பி அசோக்குமாரின் தலைமறைவு! பத்து மாதங்களைக் கடந்தும் அவரை பத்திரமாகப் பாதுகாப்பது யார்? மாபெரும் இந்திய அரசால் கைது செய்யவே முடியாத அப்பாடக்கரா அவர்? அதிகார மையங்களின் கடைக்கண் பார்வையில் காப்பாற்றப்படுகிறாரா?

ஊழல் குற்றச்சாட்டில் சிக்கி சிறையில் இருக்கும் முன்னாள் அமைச்சர் செந்தில்பாலாஜி, ஜாமீன் கேட்டு போராடி வரும் நிலையில், தலைமறைவாக இருந்து வரும் அவரது தம்பி அசோக்குமார் என்ன ஆனார் ?

எங்கு இருக்கிறார் அசோக்குமார் ?  உண்மையாகவே அவரை  பிடிக்காமல் முடியவில்லையா?  அல்லது பிடிக்க விரும்பவில்லையா? அவரது தலைமறைவில் மறைந்து இருக்கும் மர்மம் என்ன?

” சின்னவர் ” என்ற செல்லப் பெயரில் இன்னொரு ராமஜெயமாக, உருவெடுத்த அமைச்சர் செந்தில்பாலாஜியின் தம்பி அசோக்குமார்.

அரசியல் மற்றும் ஆட்சி அதிகாரத்தில் நிழல் அமைச்சர் என்பதையும் கடந்து நிஜ அமைச்சராக ஆடிய ஆட்டத்தால் கொங்கு மண்டலமே கதி கலங்கியது. அதிகாரிகள் இவர் முன் கைகட்டி நின்றனர். சிபாரிசுக்கு வருபவர்கள் வரிசை கட்டி நின்றனர். கண்டார்கர்கள் எல்லாம் இவர் கண் அசைவுக்கு காத்திருந்தனர். அப்படியாக அதிகார அரசியல் செய்த அசோக்குமார் இன்று அமலாக்கத்துறையால் தேடப்படும் குற்றவாளியாக சுற்றித் திரியும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார்.

இருப்பதை விட்டு விட்டு பறப்பதற்கு ஆசைப்பட்ட அமைச்சர் செந்தில்பாலாஜி தற்போது புழல் சிறையில் உள்ளார். இவர்,  அரசியலில்  பிரமாண்டத்தை ஏற்படுத்துவதாக கூறி ஒரு மாய பிம்பத்தை ஏற்படுத்தி விட்டு,  தம்பி அசோக்குமார் துணையோடு ஆட்சி அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்து பினாமி பெயரில் கோடிக் கணக்கில் சொத்துக்களை குவித்து அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தினார்.

“அதிமுகவில் அமைச்சராக இருந்த செந்தில்பாலாஜி ஒரு ஊழல் குற்றவாளி என்றும், அவரது தம்பி அசோக்குமார் ஊழல் செய்வதில், கட்டப் பஞ்சாயத்து செய்து கொள்ளை அடிப்பதில் கரூர் மாவட்டத்தையே தனது கட்டுப்பாட்டில் வைத்துள்னர் ” என எதிர்கட்சித் தலைவராக இருக்கும் போது சொன்னவர் தான் தற்போதை  தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின்!

திமுகவில் சேர்க்கப்பட்ட செந்தில் பாலாஜிக்கு  உடனடியாக மாவட்ட செயலாளர் பொறுப்பு முக்கிய துறையான மின்சாராம் மற்றும் மதுவிலக்கு ஆயத்தீர்வு துறை அமைச்சர் என திமுக வின் சீனியர் அமைச்சர்களை ஓரம் கட்டும் அளவில் அசைக்க முடியாத சக்தியாக திமுகவில் உருவெடுத்தார்.

இதனால், செந்தில் பாலாஜியின் அனைத்து திட்டங்களும் திமுக ஆட்சியில் அரங்கேற்றியதோடு,  சட்டவிரோதமாக டாஸ்மாக் பார்களை ஏற்படுத்தி,  “கரூர் கேங் ” என்ற பெயரில் தமிழகம் முழுதும் தங்களது கட்டுப்பாட்டில் வைத்துக் கொண்டு கொள்ளை அடித்தது நமது முதல்வருக்கே வெளிச்சம்.

கரூர் மாவட்டம் மண்மங்கலம் அடுத்துள்ள இராமேஸ்வரப்பட்டி என்ற குக்கிராமத்தை  சேர்ந்த வேலுசாமி- ருக்குமணி    தம்பதியரின் மூத்த மகன் செந்தில்குமார் இளைய மகன்  அசோக்குமார்.

1975 ல் சாதாரண விவசாய குடும்பத்தில் பிறந்த செந்தில்குமார், எந்த அரசியல் பின்னணி மற்றும் பொருளாதார பின்புலம் என எதுவும் இல்லாமல் உதயமான இவரது அரசியல் பயணம் 2006 க்கு பிறகு அசூர வேகத்தில் வளர தொடங்கியது.  இவர் தமிழக அரசியல் மட்டுமல்லாது இந்திய அரசியல்வாதிகள் மத்தியில் பரபரப்பாக பேசக்கூடிய அளவிற்கு அசாத்திய சக்தியாக  உருவெடுத்தார்.

செந்தில்குமார் என்ற தனது பெயரை செந்தில்பாலாஜி என நியூமராலஜி படி  மாற்றிக்கொண்டார் இவர், 1996-ல் மண்மங்கலம் ஊராட்சியில் சுயேட்சை வேட்பாளராக களம் கண்டு ஊராட்சி மன்ற உறுப்பினராக அரசியலில் அடியெடுத்து வைத்தார். பின்னர்,  அதிமுகவில் இணைந்து ஒன்றியக் குழு உறுப்பினர், அதிமுக மாணவரணி அமைப்பாளர், எம்எல்ஏ, அமைச்சர் என படிப்படியாக செந்தில் பாலாஜியின் அரசியல் பயணம் வளர்ச்சிப் பாதையை நோக்கி நகர தொடங்கியது .

கையில் பணம் இல்லாவிட்டாலும், அரசியலுக்காக கடன் வாங்கியும், இருந்த சிறிய சொத்துக்களை விற்று அரசியல் செய்து வந்த செந்தில்பாலாஜியை இவரது தம்பி அசோக்குமாருக்கு தொடக்கத்தில் பிடிக்காது. அன்றைக்கு செந்தில் பாலாஜிக்கும்,  அசோக்குமாருக்கும் ஏழாம் பொருத்தமாகவே இருந்துள்ளது.

இந்த நிலையில், அமைச்சர் செந்தில் பாலாஜியும் அவரது சகோதரர் அசோக்குமாரும் இணைந்து கரூர் ராமகிருஷ்ணபுரம் பகுதியில், அபெக்ஸ் என்ற ஜவுளி ஏற்றுமதி  நிறுவனத்தை தொடங்கி நடத்தி வந்தனர். தொழில் சரியாக கைகொடுக்காததால் அசோக்குமார் தொழிலை விட்டு விட்டு அண்ணுக்கு துணையாக அரசியலில் இறங்கினார்.

இந்த காலகட்டத்தில் செந்தில் பாலாஜியின் நெருங்கிய உறவினரான கோகுல் என்பவர் இவருக்கு பக்க பலமாக இருந்து வந்துள்ளார். இவர் செந்தில் பாலாஜியின் அரசியல் தேவைக்கான பணம் முதல் மற்றும் கட்சி பணிக்கு பல்வேறு உதவிகள் செய்து வந்ததாக கூறப்படுகிறது. ஒரு காலகட்டத்தில்  கோகுலின் செல்வாக்கு மக்கள் மத்தியில்  வளரத் தொடங்கி உள்ளது. இதை பொறுத்துக் கொள்ள முடியாத அசோக்குமார் தனது அண்ணன் செந்தில் பாலாஜிக்கும், கோகுலுக்கும் இருந்து வந்த  நெருக்கத்திற்கு முற்றுப் புள்ளி வைத்து முடிவு கட்டியுள்ளார். அதன் பிறகு கோகுல் பொருளாதாரப் பிரச்சினை காரணமாக தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது.

எம்எல்ஏவாக, அமைச்சராக பதவி வந்தவுடன் செந்தில் பாலாஜியின்  நிழலாக மாறிய அசோக்குமாரை கட்சி தொண்டர்கள் முதல் நிர்வாகிகள் வரை செல்லமாக  ” சின்னவர் ” என்ற பெயரோடு வளம் வர தொடங்கினார்.

ஜெயலலிதா ஆட்சி காலத்தில், இருக்கும் இடம் தெரியாமல் அசோக்குமார் அடக்கி வாசித்தார் என கூறப்படுகிறது. இருப்பினும், 2011-2015 வரை நடைபெற்ற அதிமுக ஆட்சிகாலத்தில் போக்குவரத்துத்துறை அமைச்சராக இருந்த செந்தில்பாலாஜி, ஓட்டுநர், நடத்துநர் மற்றும் பொறியாளர் பணிக்காக காலியாக இருந்த 300 பணியிடங்களுக்கு 600 பேர்களை நியமித்து பல பேர்களிடம் லஞ்சமாக பணம் பெற்றுக் கொண்டு அவர்களுக்கு வேலை வழங்காமல் ஏமாற்றினார். இதன் மூலையாக இருந்த அசோக்குமார் இதற்கான பணி ஆணை அனைத்தும் அவரது சொந்த மெயில் ஐடியில் இருந்து அனுப்பப்பட்டுள்ளது. ஜெயலலிதா ஆட்சியில் இருக்கும் இடம் தெரியாமல் இருந்த போதே இதுபோன்ற தில்லாலங்கடி  வேலையில்  ஈடுபட்டவர் அசோக் குமார். திமுக ஆட்சியில் சொல்லவா வேண்டும்?…..

செந்தில்பாலாஜி திமுக ஆட்சியில் அமைச்சராக பொறுப்பு ஏற்றதும் முதல்வர் மு.க.ஸ்டாலின் முதல் அவரது குடும்பம் வரை செல்வாக்கு  மிக்க, நம்பிக்கைக்குரிய (கிச்சன்) கேபினட் அமைச்சராக  குறுகிய காலத்தில் வளர்ந்து, திமுகவில் அசைக்க முடியாத சக்தியாக அசூர வளர்ச்சி அடைந்தார். இந்த அசூர வளர்ச்சிக்கு இணையாக அசோக்குமாரின் அரசியல் தலையீடு மற்றும் துறைசார்ந்த பணிகளில் முடிவு எடுப்பதில் அமைச்சரின் நிழலாக மட்டுமல்ல, நிஜமாகவும் மாறினார்.

பணிநியமனம் முதல் டெண்டர், இடமாற்றம்,  உள்ளிட்ட அனைத்து பணிகளிலும் நேரடி மற்றும் மறைமுக முடிவுகளை முடிவு எடுக்கும் சக்தியாக  இன்னொரு ராமஜெயமாக அசோக்குமார் உருவெடுத்தார்.

முதல்வரின் நன்மதிப்பை பெற  கட்சி பணியில் தீவிரம் காட்டிய அமைச்சர் செந்தில் பாலாஜி அரசு கோப்புகளில் கையெழுத்து போட மட்டும் பயன்படுத்தும் ரப்பர் ஸ்டாமாக மாறினார் என கூறலாம். காரணம், மின்சாரம் மற்றும் மதுவிலக்கு ஆயத்தீர்வைத் துறைகளில் அசோக்குமார் அனுமதியின்றி ஒரு அணுவும் அசையாது என கூறும் அளவிற்கு பவர்புல்  நபராக மாறினார்.

திமுக ஆட்சி பொறுப்பு ஏற்றவுடன் திமுகவால் நீண்டகாலம் தலைதூக்க முடியாமல் கிடந்த கொங்கு மண்டலத்தை காப்பாற்ற, கோவை மாவட்ட பொறுப்பு அமைச்சர் என்ற கட்சி பதவியை முதல்வர் மு.க. ஸ்டாலின் வழங்கினார்.

ஒரு அமைச்சர் இரண்டு பெரிய துறைகளை திறம்பட கவனிப்பதே சிரமம். இந்த நிலையில்,  இரண்டு துறைகளில் உள்ள அடிப்படை நிலைகள் பற்றி முழுமையாக தெரிந்து கொள்ளும் முன்பே அமைச்சர் செந்தில்பாலாஜி கோவை மாவட்ட பொறுப்பு அமைச்சராக்கப்பட்டார்.

இந்த நிலையில், அமைச்சரின் சகோதரர் அசோக்குமார் நிழல்  அமைச்சர் என்ற நிலைமாறி, நிஜ அமைச்சராக செயல்பட தொடங்கினார்.

மின்சாரத் துறை மற்றும் மதுவிலக்கு ஆயத்தீர்வைத்துறைகளில்  டெண்டர் மற்றும் பணியிட மாற்றம், பணி நியமனம் உள்ளிட்ட அனைத்து வேலைகளையும் சின்னவரே கவனித்துள்ளார். சென்னையில் உள்ள அமைச்சர் வீட்டில் அசோக்குமாருக்கு என்ற தனி அறை ஒதுக்கப்பட்டு அந்த தனி அறையில் துறை சார்ந்த அனைத்து முக்கிய முடிவுகளும், ஆலோசனைகளும், டீல்களும் நடந்துள்ளது. கட்சிப் பணி என்றால் அமைச்சரை நேரில் பார்க்க வேண்டும், துறை ரீதியான அரசு வேலை என்றால் சின்னவரை பார்த்தால் போதும் என்ற நிலை உருவானது.

 “கரூர் கேங்” என்ற பெயரில் தமிழகம் முழுவதும் நூதன வசூல் வேட்டைக்கு மிகப்பெரிய நெட்ஒர்க் அமைத்தார் அசோக்குமார். நெருங்கிய உறவினர்கள் மற்றும் நண்பர்களை, பினாமி ஆட்களை இணைத்து தமிழக முழுவதும்  அனுமதி இல்லாத நவீன பார் நடத்தியும், பாட்டலுக்கு பத்து ரூபாய் வசூல் செய்யும் பணியை திறம்பட செய்துள்ளார். மேலும், டாஸ்மாக் கடைகளில் கணக்கிற்கு வராமல், எந்த வித பில் இல்லாமல் பார்களில் சரக்கு விற்பனை அரங்கேற்றி உள்ளனர்.

டாஸ்மாக் கடைகளில் ஒருபக்கம் அரசுக்கு வருவாய் ஏற்படுத்தும் டாஸ்மாக் சரக்கு விற்பனையும், மறுபக்கம் கரூர் கம்பெனிக்கு வருவாய் ஏற்படுத்தும்  டாஸ்மாக் விற்பனையும்  நடந்துள்ளது.

இது டாஸ்மாக் மூலம் அரசுக்கு கிடைக்கும் ஆண்டு வருவாய்க்கு இணையாக,  கரூர் கம்பெனியின் பார் விற்பனையின் மூலம் வருமானம் கிடைத்துள்ளது என கூறப்படுகிறது.

இவ்வளவு நடந்திருந்தும், அமலாக்கத் துறை டாஸ்மாக் தொடர்பாக ஏகப்பட்ட இடங்களில் பலகட்ட ரெய்டுகள் நடத்தியும் செந்தில் பாலாஜி மற்றும் அவரது சகோதரர் அசோக்குமார் மீது ஒரு வழக்கு கூட பதியவில்லை. நடத்தப்பட்ட ரெய்டுகளில் கண்டறிந்தவற்றை கமுக்கமாக மறைத்து விட்டனர். இதன் தொடர்சியாகத் தான் அசோக்குமாருக்கு பலமுறை சம்மன் அனுப்பினார்கள்! சம்மனுக்கு ஆஜராகாதவர்களை தேடப்படும் குற்றவாளியாக அறிவித்து உண்மையிலேயே தேடி இருந்தால் அசோக்குமார் என்றைக்கோ பிடிபட்டிருப்பார்.

சுமார் 320 நாட்களாக தலை மறைவாக இருக்கும் அசோக்குமார் இப்போது எங்கே இருக்கிறார்? அவருக்கு யார் அடைக்கலம் கொடுத்து வருகின்றனர் என்ற கேள்வி எழுந்துள்ளது. நிச்சயமாக அதிகார மையத்தின் அனுகூலம் இல்லாமல் அவர் பிடிபடாமலிருக்க வாய்ப்பில்லை. விஜய் மல்லையா, நிரவ் மோடி போன்ற பொருளாதார குற்றம் செய்த பெரும் தொழில் அதிபர்கள் வெளி நாடுகளில் சொகுசாக வாழ்வதை அனுமதித்து இருப்பதும் இந்த அரசுகள் தானே!

மத்திய பஜகவும், மாநில திமுகவும் இந்த விவகாரத்தில் மறைமுகமாக கை கோர்த்துள்ளனவா? அசோக்குமாரை பிடிக்காமல் தொடர்ந்து காலதாமதம் செய்கின்ற பேர அரசியல் மர்மமாக இருந்து வருகிறது.

கட்டுரையாளர்; அஜித கேச கம்பளன்

மூத்த பத்திரிகையாளர்

 

Support Aram

நேர்மையான, வெளிப்படையான,

சுதந்திரமான இதழியலுக்கு தோள்

கொடுங்கள்.

UPI QR CODE

Razorpay Payment Gateway

Personal Info

Donation Total: ₹1,000.00 One Time