அற நிலையத்துறை அவசியமா? அனாவசியமா?

அறம் சாவித்திரிகண்ணன்

பகுதி-1

தமிழகத்தில் கோயில்கள் அரசின் கட்டுப்பாட்டில் இருப்பதா? இருக்க கூடாதா? என்ற விவாதங்கள் சமீப காலமாக வீரியமடைந்துள்ளன! கோயில் சிலைகள் மற்றும் நகைகள் அடிக்கடி காணமல் போவது, சொத்துகள் பறிபோவது,வாடகை பாக்கி வசூலிக்கப்பட முடியாமல் இருப்பது…ஆகிய காரணங்களை காட்டி..இந்துசமய அற நிலையத்துறை என்பதே அவசியமில்லை, கோயில்களை பக்தர்கள்,ஆன்மீகவாதிகள் கொண்ட குழுவிடம் தர வேண்டும் என்று சிலர் தொடர்ந்து பேசிவருகின்றனர்.அப்படியானால்,இந்து அற நிலையத் துறை என்ற ஒன்று உருவாவதற்கு முன்பு நமது கோயில்கள் எவ்வாறு பராமரிக்கப்பட்டன..? என்ற கேள்வியும், இந்து அற நிலையத்துறை ஏன் ஏற்படுத்தப்பட்டது? என்ற கேள்வியும் தவிர்க்க முடியாதவையாகின்றன!

மன்னர்கள் மற்றும் பிரிட்டிஷார் காலத்தில் கோயில்கள்

மன்னர்கள் காலத்தில் கோயில்களுக்கு சொத்துகள் அதிகமாக இருந்தன.அவற்றை கொண்டு கோயில்கள் சிறப்பாக நிர்வகிக்கப்பட்டன. கோயில்கள் வழிபடும் இடமாக மட்டுமின்றி கலைகளை வளர்க்கும் இடமாகவும் இருந்தது. அதற்காக தேவதாசி என்ற மரபினர் இருந்தனர்.அவர்கள் நாட்டியம் போன்ற கலைகளில் தன்னிகரற்று திகழ்ந்தனர். அவர்களுக்கு ஊதியம் மற்றும் சொத்துகள் மன்னர்களால் வழங்கப்பட்டுள்ளன! சோழர்கள் காலத்தில் பிராமணர்களுக்கு கிராமங்கள் பல நன்கொடையாக கொடுக்கப்பட்டன! இவை அனைத்துக்கும் வரிவிலக்கும் தரப்பட்டன!

அன்றைய தினம் எந்த நோக்கங்களுக்காக நிலங்கள் வழங்கப்பட்டனவோ, அவை சார்ந்து அவற்றுக்கு பெயர் வைக்கும் பழக்கமும் இருந்தது.

தேவதானம் – சிவன்கோயில்களுக்கு வழங்கப்பட்டவை

திருவிளையாட்டம் – பெருமாள் கோயிலுக்கு வழங்கப்பட்டவை

பன்னசந்தம் – சமண,புத்த ஆலயங்களுக்கு தரப்பட்டவை

மடப்புறம் – மடங்களுக்கு தரப்பட்டவை

பிரம்மதேயம் – பிராமணர்களுக்குத் தரப்பட்டவை

நமது முன்னோர்கள் கோயில்களுக்கு நிலம்,பொன்,பொருள்ஆகியவற்றை அள்ளி வழங்கினார்கள்! எங்கே சொத்துக்களும், பொன்னும்,பொருளும் குவிகிறதோ அங்கே முறைகேடுகள் நடப்பதற்கான வாய்ப்புகள் தானாகவே உருவாகி விடுகின்றன. ஆகவே, கோயில் சொத்துகள் முறைகேடாக கபளீகரம் செய்யப்படுகின்றன என்ற புகார்கள் எல்லா காலங்களிலும் இருந்துள்ளன. மன்னர் ஆட்சியின் வீழ்ச்சிக்குப் பிறகு பல செல்வாக்கானவர்கள் வசம் கோயில் சொத்துகள் சென்றன! அவர்களின் மீது நிலங்கள் தன்னிச்சையாக விற்கப்படுவது, நகைகள் காணாமல் போவது, பணத்தை தவறாக கையாளவது உள்ளிட்ட பல புகார்கள் எழுந்தன!

கிழக்கிந்திய கம்பெனி நிர்வாகத்திடம் மக்கள் புகார் செய்தனர். இதனால், மதராஸ் நிலைக்கொடைகள் மற்றும் வாரிசு இன்மையால் அரசுப் பொருட்கள் ஒழுங்குறுத்தும் சட்டம் 1817ல் உருவாக்கப்பட்டது .இந்த சட்டம் கோயில் சொத்துகளை அரசு எடுத்துக் கொள்வதற்கல்ல, மாறாக தவறுகளை தவிர்க்கவும்,முறையாக பராமரித்து மேம்படுத்தவுமே என ஆங்கில அரசு தெளிவுபடுத்தியது. கோவில் நன்கொடைகள், வருவாய் ஆகியவற்றை அன்றைய வாரியம் கண்காணித்தது.ஆனபோதிலும்.உள்ளுர் முக்கியஸ்தர்களை கொண்ட குழுவிடம் கோயில் தொடர்பான பொறுப்புகள் ஒப்படைக்கப்பட்டன! உள்ளுரின் பக்தர்கள் குழுவும் இவர்களோடு இணைக்கப்பட்டன! இத்தனை நல்முயற்சிகளுக்கு பிறகும், கோயில் சொத்துகள் தொடர்பான கொள்ளைகளை முற்றமுழுக்க முடிவுக்கு கொண்டு வரமுடியவில்லை! ஒரு அன்னிய அரசு,அதுவும் கிறிஸ்துவர்களால் ஆளப்படும் அரசு என்பதை கருத்தில் கொண்டு பிரிட்டிஷ் அரசும் ஒரளவுக்கு மேல் கோயில் விவகாரங்களில் மூக்கை நுழைக்க தயங்கியது கொள்ளையடிப்பவர்களுக்கு வசதியாகப் போய்விட்டது!

மன்னர்கள் காலத்திலும்,அதன் பிறகும் கோவிலுக்கு வழங்கப்பட்ட சொத்துகள் களவாடப்பட்டன! கோயில் நகைகளுக்கு எந்த முறையான ஆவணமும் இல்லாத நிலை தொடர்ந்தது. கோயிலை நிர்வகித்தவர்கள் கோயில் சொத்துகளை தன்வசப்படுத்துவதில் எந்தவித குற்றவுணர்வுமற்றவர்களாக இருந்தனர்!

ஆகவே, 1926ல் நீதிக் கட்சி ஆட்சியின்போது மதராஸ் இந்து சமய அறநிலையங்கள் சட்டம் II/1927 இயற்றப்பட்டு,அதற்கு இந்து சமய அறநிலைய வாரியம் என பெயரிடப்பட்டது.

இந்த சட்டத்தின்படி நிர்வாகம் சரியாக இல்லாத கோவில்களுக்கு நிர்வாக அதிகாரிகளை நியமிக்கும் அதிகாரம் அரசுக்கு சென்றது. ஆனால், இந்தச் சட்டத்திற்கு சனாதனிகள் கடும் எதிர்ப்புத் தெரிவித்தனர்.ஆயினும் அன்றைய முதல்வரான பனகல் அரசர் பிரிட்டிஷ் அரசு உதவியுடன் இந்த சட்டத்தை கறாராக அமல்படுத்தி கோவில் சொத்துகளை பாதுகாத்தார்!

இதனால்,கோவில்கள் அரசின் கட்டுப்பாட்டில் வந்தன. இதனால்தான் 1937 – 39  காலகட்டத்தில் இராஜாஜி முதல்வராக இருந்தபோது கோவில்களில் தாழ்த்தப்பட்டோர் ஆலயப் பிரவேச சட்டத்தை அமல்படுத்தினார்.1947 -49 வரை முதல்வராக இருந்த ஓமந்தூர் ராமசாமி,கடும்முயற்சிகள் எடுத்து அபகரிக்கப்பட்டிருந்த பல நூறு ஏக்கர் கோவில் நிலங்களையும், ஆபரணங்களையும் மீட்டெடுத்தார். அத்துடன் கோவில்களில் நிலவிய தேவதாசி முறையையும் முடிவுக்கு கொண்டு வந்தார். இதைத் தொடர்ந்தே 1951ல் மதராஸ் இந்து சமயம் மற்றும் அறக்கொடைகள் சட்டம் XIX 1951-ல் இயற்றப்பட்டது. இதன் மூலம் அறங்காவலர் முடிவுக்கு கொண்டுவரப்பட்டு முறையான அதிகாரிகள்,அலுவலர்கள் நியமிக்கப்பட்டனர்.

.அறநிலையத் துறையின் தோற்றம்

1959- ல் காமராஜர் முதல்வராக இருந்தபோது, வாரியமாக இருந்த அறநிலையத்துறையை ஒரு அரசுத்துறையாக மாற்றி வலுப்படுத்தினார். ஒவ்வொரு கோயிலையும் நிர்வகிக்க அறநிலையத்துறை அதிகாரிகளோடு உள்ளூர் முக்கிய பிரமுகர்களைக் கொண்ட அறங்காவலர் குழு உருவாக்கப்பட்டது.

1959-ஆம் ஆண்டு தமிழ்நாடு இந்து சமய மற்றும் அறநிலைக்கொடைகள் சட்டத்தில் இந்து சமய நிறுவனங்கள் தொடர்பாக ஆலோசனை வழங்க உயர்நிலை ஆலோசனைக்குழு அமைக்க வழிவகை செய்யப்பட்டது. இந்தகுழுவில்,  தமிழ்நாடு முதலமைச்சர் தலைவராகவும்,  அறநிலையத்துறை அமைச்சர் துணைத்தலைவராகவும், சுற்றுலா, பண்பாடு மற்றும் அறநிலையங்கள் துறை அரசுச்செயலாளர்கள் அலுவல்சார் உறுப்பினர்களாகவும்,  இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் அலுவல்சார் உறுப்பினர் – செயலராகவும் மற்றும் 9 நபர்களுக்கு மிகாமல் அலுவல்சாரா உறுப்பினர்களையும் கொண்டதாகும்.

தமிழகத்தில் கோயில்கள் எண்ணிக்கை

தமிழக கோயில்கள் – 36,612

திருமடங்கள் – 56

மடத்துடனான கோயில்கள் – 57

சமணகோயில்கள்– 17

மொத்தம்- 36,742

அதிக வருமானம் வரும் கோயில்களில் குறிப்பிடத்தக்கவையாக பழனி முருகன் கோயில்,சமயபுரம் மாரியம்மன் கோயில்,ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயில், திருச்செந்தூர் முருகன் கோயில்,மதுரை மீனாட்சியம்மன் கோயில்..ஆகியவற்றைக் குறிப்பிடலாம்!

இந்த கோயில்கள் அனைத்தும் தமிழக அரசின் இந்து அறநிலையத்துறையின் கீழ் வருகிறது. இந்த கோயில்களுக்கு ஏராளமான சொத்துகள் உள்ளன! அந்த சொத்துகள் அக்கால மன்னர்கள், சிற்றரசர்கள், பண்ணையார்கள் ,வாரிசு இல்லாத செல்வந்தர்கள் ஆகியோரால் கோயில்களுக்கு வழங்கப்பட்டவையாகும்! ஆனால்,அப்படி வழங்கப்பட்டவை தொடர்பான ஆவணங்களை முறையாக பராமரிக்காத காரணத்தாலும், செல்வாக்குள்ளவர்கள்  சிலர் வசம் அவை சிக்கி விட்ட காரணத்தாலும் சில ஆயிரம் ஏக்கர் நிலங்கள்,கட்டிடங்கள்…போன்றவை கை நழுவிப் போய்விட்டன!

சொத்துகள் அதிகம்! சோகங்களும் அதிகம்!

இன்றைய நிலவரப்படி, தமிழக அறநிலையத்துறை வசம் மொத்தம் 4,78,348 ஏக்கர் நிலங்கள் உள்ளன. 33,665 மனைகள் உள்ளன. இவை 1,23,729 பேருக்கு குத்தகை விடப்பட்டுள்ளன  . 22,600 கட்டிடங்கள்  உள்ளன!  இதில் அடிமனை குத்தகைதாரர்களாக  55,000  பேரும்,கட்டிடங்களில் வசிப்போராக  35,000   பேரும், வியாபாரம் செய்பவர்களாக 16,000 பேரும் உள்ளனர். இவை எல்லாவற்றுக்குமாக வரக் கூடிய வருமானம் வெறும் 56.58 கோடி தான்! ஆனால், நியாயப்படி பார்த்தால் இந்த அளவுக்கான சொத்துக்களுக்கு இன்றைய மார்க்கெட் நிலவரப்படி சில ஆயிரம் கோடியாவது வருமானம் வர வேண்டும்…என பக்தர்கள் தரப்பில் சொல்லப்படுகிறது.

தமிழகத்தின் மொத்த கோயில்களில் இரண்டு சதவிகித கோயில்களில் மட்டுமே நல்ல வருமானம் கிடைக்கிறது.எட்டு சதவிகித கோயில்களில் சுமாரான வருமானம் வருகிறது. மீதமுள்ள 90% கோயில்கள் சிரமதசையில் தான் உள்ளன! இவற்றில் பல கோயில்களில் ஒரு கால பூஜையே கேள்விக்குறியாகத் தான் உள்ளது. பலகோயில்களின் வாசலில் யார்,யார் எவ்வளவு வாடகை பாக்கி வைத்துள்ளார்கள் என்றுவெளிப்படையாக எழுதி போர்டு வைத்துள்ளனர்.

சென்னை கபாலீஸ்வரர் கோயிலுக்கு வர வேண்டிய வாடகை பாக்கி மட்டுமே பல கோடி ரூபாய்க்கும் அதிகமாக உள்ளது. திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலுக்கு சென்னை அடையாறில் அருணாச்சலபுரத்திலும், ராயப்பேட்டை மீர்சாகிப் பேட்டையிலும், தண்டையார்பேட்டை தனபால் நகரிலும் நிலங்கள் ஏக்கர் கணக்கில் உள்ளன! ஆனால், இவற்றின் முலமாக உரிய வருமானத்தை பெறமுடிவதில்லை! இதை முன்னிட்டு கோவில் நிர்வாகத் தரப்பில்,’’வாடகைதராதவர்கள் அக்னி சொருபமான அண்ணாமலையாரை ஏமாற்றிவருகின்றனர்! சிவன் சொத்து,குலநாசம்!’’ என்றுஅறிக்கை தந்தனர். மேற்படி சொன்னவை ஒரு சில உதாராணங்களே!

இப்படி வாடகையும்,குத்தகையும் தராதவர்கள் மீதும், நிலஅபகரிப்பாளர்கள் மீதும் 16,770   வழக்குகள்போடப்பட்டன! இதற்காகவேசிறப்பு வருவாய் நீதிமன்றங்கள் பத்து இடங்களில்செயல்பட்டன!இதில்அறுபது சதவிகிதவழக்குகளில்தீர்ப்புகள் கிடைத்தது.ஆயினும் ஒருசில ஆயிரம் ஏக்கர்நிலங்களும்,ஓரளவு வாடகைபாக்கியும் தான் வசூலிக்கமுடிந்தது.கடந்த 25 ஆண்டுகளில் சுமார் 50,000 ஏக்கர்நிலங்கள் பறிபோய்விட்டது. அதனால்,இனி இருப்பதையாவது முறையாக பராமரிக்க வேண்டும் என்ற தவிப்பே மேலோங்கியுள்ளது! இதை இந்து அறநிலையத்துறை காப்பாற்றுமா? இல்லை கை நழுவவிடுமா? என்பதை அடுத்த அத்தியாயத்தில் பார்ப்போம்!

’அறம்’ சாவித்திரி கண்ணன்

(தொடரும்)

 

 

 

 

Support Aram

நேர்மையான, வெளிப்படையான,

சுதந்திரமான இதழியலுக்கு தோள்

கொடுங்கள்.

UPI QR CODE

Razorpay Payment Gateway

Personal Info

Donation Total: ₹1,000.00 One Time