காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி இரண்டு தொகுதிகளில் போட்டியிடுகிறார். இரு தொகுதிகளில் நிற்பது சுயநலமா? அல்லது தன்நம்பிக்கை இன்மையா? என்ற கேள்வி பல்லாண்டுகளாக ஜனநாயக ஆர்வலர்களால் கேட்கப்படுகிறது. சராசரி அரசியல்வாதியை போலன்றி, இரண்டில் ஒன்றென சரியான முடிவுக்கு வருவாரா ராகுல்?
‘இரு தொகுதிகளில் நிற்பதை அனுமதிக்கும் குறிப்பிட்ட சட்டப் பிரிவை திருத்த வேண்டும், இது மிகத் தவறானது..’ என்ற பொதுக் கருத்து ஜனநாயக ஆர்வலர்களிடமும், மக்களிடமும் பல ஆண்டுகளாக வலுப் பெற்று வருகிறது. இதன் விளைவாக கடந்த இருபதாண்டுகளாக ‘ஒரு வேட்பாளர், ஒரு தொகுதி’ என்ற நடைமுறையைக் கொண்டு வர வேண்டுமென்று இந்தியத் தேர்தல் ஆணையமும் வலியுறுத்தி வருகிறது.
ஒருவர் இரண்டு தொகுதிகளில் போட்டியிடுவதை மக்கள் பிரதிநிதித்துவ சட்டம் பிரிவு 33 (7) அனுமதிக்கிறது. ஆனால், அதே மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்தின் பிரிவு 70 எந்த ஒரு வேட்பாளருமே இரண்டு தொகுதிகளை பிரதிநிதித்துவப்படுத்த முடியாது என திட்டவட்டமாக வரையறுக்கிறது. ஆக, இரண்டில் ஒன்றை அவர் ராஜுனாமா செய்தே ஆக வேண்டும்.
இது ஒரு நாடாளுமன்றத் தொகுதியில் ஒரு குறிப்பிட்ட வேட்பாளர் மீது ஈடுபாட்டுடன் வாக்களித்து வெற்றி பெற வைத்த பல லட்சம் மக்களுக்கு அது பெருத்த ஏமாற்றத்தை தருகிறது. மேலும் ஒரு இடைத் தேர்தல் நடக்கும் போது, சுமார் பதினைந்து முதல் இருபது லட்சம் மக்கள் வாக்குச் சாவடிக்கு சென்று மீண்டும் வாக்களிக்க வேண்டிய நிர்பந்தம் உருவாகிறது. இதற்காக அந்த தொகுக்கானவர்களுக்கு விடுமுறை விட வேண்டும். பள்ளி, கல்லூரிகளுக்கும் விடுமுறை விட வேண்டி இருப்பதால் மாணவர்களின் கல்வியும் பாதிக்கப்படும்.
ஒரு நாடாளுமன்றத் தொகுதிக்கு சுமார் 10,000 அரசு ஊழியர்களேனும் வாக்குப்பதிவு தினத்தன்று மீண்டும் பணியாற்ற வேண்டும். அதற்கான சிறப்பு ஊதியம் அவர்களுக்கு பல கோடிகள் செலவாகும். இது தவிர வாக்குப் பதிவு இயந்திரங்கள், அவற்றை கொண்டு வருதல், பரிசோதனை செய்து நிறுவுதல், மீண்டும் எடுத்துச் சென்று பாதுகாத்தல், வாக்கு எண்ணிக்கையின் போது மீண்டும் பெரும் எண்ணிக்கையில் அரசு ஊழியர்கள், கட்சிக்காரர்கள் என பெரும் மனித உழைப்பை தர வேண்டும்.
இது மட்டுமின்றி, மீண்டும் ஒரு இடைத் தேர்தலை சந்திப்பதற்கு வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் அவரவர் பொருளாதார வசதியைப் பொறுத்து செலவு செய்ய வேண்டிய தேவை எழுகிறது. பெரிய கட்சிகள் என்றால், ஒரு நாடாளுமன்றத் தேர்தலுக்கு ஐம்பது முதல் நூறு கோடிகள் செலவு செய்கிறார்கள். கட்சிகளின் பூத் ஏஜெண்டுகளாக பல்லாயிரக்கணக்கானோர் களம் காண வேண்டும். எவ்வளவு நேரம், பணம், மனித உழைப்பு விரயமாகிறது என யோசித்துப் பார்த்தால், ஒரு தனி மனிதர் எந்த தொகுதி என்பதில் சரியாக முடிவு எடுக்க முடியாமல் போனதின் விளைவாக இத்தனை பேருக்கு பாதிப்பு ஏற்படுகிறது.
எல்லாவற்றுக்கும் மேலாக, ‘ராகுல்காந்தி எங்கள் தொகுதி வேட்பாளராக வேண்டும்’ என நெஞ்சு நிறைய பிரியத்துடன், நேசத்துடனும் வாக்களித்த மக்கள், அவர் தங்கள் தொகுதியை ‘வேண்டாம்’ என ராஜுனாமா செய்கிறார் என்ற நிலை வரும் போது, ஒருவித விரக்திக்கே செல்வார்கள்!
உதாரணத்திற்கு கேரளாவின் வயநாடு தொகுதியில் சென்ற 2019 தேர்தலில் தன்னை எதிர்த்து போட்டியிட்ட கம்யூனிஸ்ட் வேட்பாளரைக் காட்டிலும், சுமார் நான்கரை லட்சம் ஓட்டு வித்தியாசத்தில் ராகுல்காந்தி வென்றார். இப்போதும் அதே போன்ற வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறும் நிலையில் தான் உள்ளார். அவரது வெற்றி வாய்ப்பு கேரளாவின் வயநாடு தொகுதியை பொறுத்த அளவில் பிரகாசமாகவே உள்ளது.
கேரள மக்கள் ராகுலை மிகவும் நேசிக்கிறார்கள். இந்த நிலையில் அவர் தங்கள் குடும்பத்தின் பாரம்பரிய தொகுதியான உத்திர பிரதேசத்தின் ரேபரலியில் வெற்றி பெற்று விடக் கூடுமானால், இதை ராஜுனாமா செய்தே ஆக வேண்டும். அந்த முடிவு வயநாடு மக்களை மிகவும் பாதிக்கவே செய்யும். ஒருவேளை ரேபரலி தொகுதியை வேண்டாம் என முடிவு செய்தால், அது நேரு குடும்பத்தின் பாரம்பரிய தொகுதி என்பதால் ராகுல் காந்தி கடுமையான விமர்சனங்களை சந்திப்பார்.
ராகுல்காந்தி வடக்கு, தெற்கு இரண்டையும் பிரதிநிதித்துவப் படுத்தவே நிற்கிறார் என்பது போன்ற வாதங்கள் அபத்தமானவையாகும். நாடு எவ்வளவோ மாற்றங்களை கண்டு முன்னோக்கி போய்க் கொண்டுள்ளது. அவரைப் போன்ற பெரிய தலைவர்கள் அனைத்து இந்தியாவுக்கும் பொதுவானவர்கள். அவர் எந்த தொகுதியைச் சார்ந்தவர் என்றாலும், ஓட்டு மொத்த இந்தியருக்குமே பொதுவானவர். ராகுல்காந்தி எங்கு வேண்டுமானாலும் நிற்க முடிந்தவர்.
Also read
ஒரு வேட்பாளர் ஒரு தொகுதியில் மட்டும் தானே வாக்களிக்க முடிகிறது. அப்படி இருக்க ஒரு வேட்பாளர் இரண்டு தொகுதியில் நிற்கலாம் என்ற ஸ்பெஷல் வாய்ப்பு எதற்கு? இது, ‘ஜனநாயக நாட்டில் இந்திய மக்கள் அனைவரும் சமம்’ என்பதை மீறுவதாக அல்லவா உள்ளது. ஆக, இந்தத் தவறை ராகுல்காந்தி போன்ற ஒருவர் செய்யக் கூடாது. மீறினால், அவர் மீதான நம்பிக்கைகள் பொய்த்து, அவரும் சராசரி அரசியல்வாதியாகவே கருதப்படுவார்.
அதனால், எதிர்கட்சிகளின், ”தோல்விக்கு பயந்து, ரேபரலியில் நிற்க பயப்படுகிறார்” என்ற துர்பிரச்சாரத்திற்கு பலியாகாமல், துணிந்து ஒரே தொகுதியில் நின்று மக்களுக்கு நம்பிக்கை தர வேண்டும். தன் பொருட்டு மீண்டும் ஒரு தொகுதிக்கு தேர்தல் நடத்த வேண்டிய நிர்பந்தத்தை தவிர்க்க வேண்டும். ‘இரண்டில், ஒன்று’ என்பதை தேர்தலுக்கு பிறகு தீர்மானித்துப் பயனில்லை. அதை தேர்தலுக்கு முன்பே தெளிவாக தீர்மானிப்பது சகல விதத்திலும் பயனளிக்கும்.
சாவித்திரி கண்ணன்
ராகுல் செய்தது சரி
தேர்தல்
“தொகுதியில் வாக்குரிமை இல்லாதாரைஅத் தொகுதியில் வேட்பாளராய் அனுமதித்தல் விவேகமன்று (விநோதம்)”
வயநாடு நாடாளுமன்ற தொகுதியில் 60 சதவீத மக்கள் இஸ்லாமியர்கள். துவக்கத்திலிருந்தே முஸ்லீம் லீக் காங்கிரஸ் கூட்டணியில் உள்ளது. சாதாரணமாகவே வயநாடு நாடாளுமன்ற தொகுதி முஸ்லீம் லீக் ஆதரவினால் தான் வெற்றி பெற முடியும். ஆகவே ராகுல் காந்தி என்ன வேறு எவரை நிறுத்தினாலும் வெற்றி பெற முடியும். வயாநடு மக்கள் ராகுல் காந்தியின் மீது ஏற்பட்ட பாசத்தினால் இல்லை என்பதை நினைவு படுத்த வேண்டும்.