அவுரி உற்பத்தியில் உலகத்திலேயே சிறந்து விளங்கும் நாடு இந்தியா! அவுரி பயிர்களுக்கு பின்னணியில் பல அரிய வரலாற்று செய்திகள் உள்ளன! மனித குலத்திற்கு அளப்பரிய பயன்கள் தரும் அற்புத மூலிகை! இயற்கையான மலமிளக்கியாகும். 18 வித விஷங்களை முறிக்கும். இன்னும் சொல்வதற்கு எத்தனையோ..!
ஆங்கிலேயர்கள் இந்தியாவிற்கு வணிகம் செய்ய வந்ததற்கான காரணங்களில் முக்கியமானது ‘இங்கிருந்து சில ஆயிரம் ஆண்டுகளாக தொடர்ந்து ஏற்றுமதி செய்யப்பட்ட நீல நிற இயற்கை சாயத்தை தரும் அவுரியைத் தேடித் தான்’ என வரலாற்றாளர்கள் கூறுகிறார்கள் .
அப்போது அது இண்டிகோ என்று அறியப்பட்டது.
‘இண்டிகோ’ என்னும் பெயர் அதன் பிறப்பிடமான நாட்டோடு இருக்கும் தொடர்பைக் காட்டுகிறது. ‘இண்டிகோ’ என்பதற்கு ‘இந்தியாவில் இருந்து’. என்பது பொருள் . இண்டிகோ சாகுபடி முறை 5,000 ஆண்டுகளுக்கு முன்பு சிந்து சமவெளியில் (இன்றைய வடமேற்கு இந்தியா மற்றும் பாகிஸ்தான் ) இருந்ததாக கருதப்படுகிறது.
அந்த இயற்கை சாயமான இண்டிகோவுக்கு உலகளவில் அதிக தேவை இருந்தது. ஐரோப்பாவில் நீல நிற சாயத்திற்கான தேவை காரணமாக அப்போது இண்டிகோ வர்த்தகம் மிகவும் லாபகரமாக இருந்தது. அந்த இண்டிகோ என்பது தான் தமிழில் அவுரி என்று அழைக்கபட்டது .
நீலி என சமஸ்கிருதத்திலும், ‘சென்னா’ என ஆங்கிலத்திலும் அறியப்படும் அவுரி எனும் குறுஞ் செடியினம் இந்தியாவில் தென்னாட்டிலும், வங்கத்திலும் அதிகம் பயிராகும் ஒரு தாவரமாகும். இதற்கு ‘வண்ணான் அவுரி’ என்ற பெயரும் உண்டு.
அவுரிச் செடிகள் சுமார் மூன்று அடி உயரம் வரை வளரும். இலைகள் ஆவாரம் செடிகளின் இலைகளைப் போன்றிருக்கும். பூக்கள் வெளரி மஞ்சள் நிறமாகவும் காய்கள் முதிர்ச்சி அடையும் போது சற்றே கருப்பு நிறமாகவும் இருக்கும்.
சுமார் ஐம்பது ஆண்டுகளுக்கு முன் வரை, விளை நிலங்களில், நெல் அறுவடைக்குப் பின், அதில் அவுரி பயிரிட்டு பின் தண்ணீர் வந்து உழ ஆரமிக்கும் போது அவுரியையும் சேர்த்து உழுவர்.
அது ஒரு சிறந்த பசுந்தாள் உரம் மட்டுமல்ல, அவுரி எனும் மூலிகை 18 வகை நஞ்சை நீக்கும் குணம் படைத்தது!
ஆதலால், அது நிலத்தில் இருக்கும் சேர்ந்து விட்ட நஞ்சை நீக்கி விடும். எனவே, அதில் விளையும் உணவினை உண்ணும் மக்களும் உரமாக இருந்தனர். ஆனால், இப்போதெல்லாம் செயற்கை உரம் போடுவதால் மனிதனின் உரமும் போய்விட்டது. எளிதில் நோய் தாக்கும் படி மக்களும் பூஞ்சையாக மாறிவிட்டார்கள்.
ஆனால், இப்போதும் அவுரி, நெல்லை விட மதிப்பு வாய்ந்த தாவரமாக இருந்து வருகிறது . நமது நாட்டில் இருந்து ஏற்றுமதி ஆகும் இந்திய மூலிகை வகைகளில் அவுரிக்கு பெரும் பங்கு இருக்கிறது.
குறிப்பாக தமிழ்நாட்டில் திருநெல்வேலி மாவட்டத்தில் அதிகம் விளைவதால் ‘திருநெல்வேலி சென்னா’ என்னும் ஏற்றுமதி பெயரால் அழைக்கப்படுகிறது.
தமிழ் நாட்டில் மதுரை, இராமநாதபுரம், விருதுநகர் ஆகிய மாவட்டங்களிலும், ஆந்திர மாநிலத்தில் கடப்பா மாவட்டத்திலும், மஹாராஷ்டிர மாநிலத்தில் பூனாவிலும் அதிக அளவில் சாகுபடி செய்யப்பட்டு வருகிறது. இச் செடியினின்றும் நீலம் எடுக்கப்பட்டு ஏராளமாய் மேல் நாட்டுக்கு அனுப்பப்படுகிறது.
பண்டைய நாட்களில் இருந்தே நமது கிராம மக்கள் பருத்தி நூல்களுக்கும் தாங்களாகவே நெய்த பருத்தி துணிகளுக்கும் அவுரியைப் பயன்படுத்தி சாயம் தோய்த்தனர்.
அப்படிப்பட்ட ஆடைகள் மக்களின் அன்றாட வாழ்க்கையில் அதிகமாக பயன்படுத்தப்பட்டன. நமது நீலச் சாயத்துணி உலகப் பிரசித்தி பெற்றது. நமது பருத்திக்கும், அவுரிக்கும் ஆசைப்பட்டே ஆங்கிலேயர் இங்கே வந்தனர்.
இன்னும் உலகில் இயற்கை சாயத்துக்கு மதிப்பிருக்கிறது, நாம் தான் நமது இயற்க்கை செல்வங்களை மிகக் குறைந்த விலைக்கு அயல்நாடுகளுக்கு விற்றுவிட்டு, அங்கிருந்து வரும் செயற்கை சாயங்களை பயன்படுத்தி, தோல் வியாதிகளில் சிக்கித் தவிக்கிறோம். பிறகு, அதற்கும் ஆங்கில மருந்துகளுக்கு அவர்களையே நம்பி இருக்கிறோம் .
அவுரி எனும் சென்னாவின் மருத்துவப் பயன்பாடுகள் அரேபிய மருத்துவர்களால், வரலாற்று ஆவணங்களில் ஆவணப்படுத்தப்பட்டு உள்ளன. ஆனால், அதற்கும் முன்பே சிந்து வெளியில் இவை பயன்பட்ட ஆதாரங்கள் கிடைத்துள்ளன. மிகச் சமீபத்தில், அதன் எச்சம் கிமு 3,150 க்கு முந்தைய எகிப்திய மட்பாண்ட ஜாடிகளில் கண்டுபிடிக்கப்பட்டது. இதிலிருந்து சுமார் ஐயாயிரம் ஆண்டுகளாக இந்த மூலிகையின் உலகளாவிய பயன்பாட்டையும், மக்களின் ஈடுபாட்டையும் அறியலாம்.
பெரும்பாலான தாவரங்கள் வளரவே போராடும் இடத்தில், அவுரி பயிர் செழித்து வளரும். இந்த வறட்சியைத் தாங்கும் பயிர், புதர் பாலைவன சுற்றுச் சூழல் அமைப்புகளுக்கு ஏற்றது. அவுரி தற்போது இந்தியாவில் அதிகம் விளைகிறது! இதனால் உலகின் மிகப் பெரிய அவுரி உற்பத்தி செய்யும் நாடாக இந்தியா விளங்குகிறது.
அவுரி இலைகள் சாயம் மட்டும் தருவதல்ல, அது மிகச் சிறந்த மூலிகை குணங்களைக் கொண்டது.
உரியலவுரித்துழைத்தான் ஓதுபதினெண்
அரிய நஞ்சைத் தின்றவர்க்கும் ஆகும் – தெரிவரிய
வாத வெப்பு காமாலை மைந்தர்குறு மாந்தஞ்
சீதம் அகற்றும் தெரி —– என்கிறது குண பாடம்
இயற்கையாக கிடைக்கும் மிகச் சிறந்த மலமிளக்கி.
18 வகை விஷங்களை உடலில் இருந்து நீக்கும் வன்மை பெற்றது.
காமாலை, சீதளம், முப்பிணி, கீல்வாதம் இவைகளைப் போக்கும்.
உடல் பொன்னிறம் பெறும் என்கிறது குணபாடம்!
இதன் குணங்கள் இவை என்று வகைபடுத்துகிறது .
சோபாநாசினி, விஷநாசகாரி, மலகாரி, உற்சாககாரி.
அவுரியின் இலை மற்றும் காய்கள் மலச்சிக்கல் நோயைக் குணப்படுத்த பெரிதும் பயன்படுகின்றது. இலைகளிலும் காய்களிலும் ‘சென்னோஸைடு’ மூலப் பொருட்கள் அடங்கியுள்ளன. அவுரி ஒன்று மட்டுமே இயற்கை மலமிளக்கியாகப் பயன்படுத்தப்படுகிறது.
அதன் மற்ற பெயர்கள்:
Botanical-Indigofera tinctoria Linn. (fam.Fabaceae)
Sanskrit-Nilika
English-Indigo
Gujarath-Gali
Hindi-nili
Kannada-Karunili
Malayalam-Neelamar Marathi-Neel
Tamil-Avuri
Telugu-Nili chettu.
இதன் இலையை அரைத்து கொட்டைப் பாக்கு அளவு வெள்ளாட்டுப் பாலில் கலந்து சாப்பிட, நிச்சயமாக மஞ்சள் காமாலை, கல்லீரல் நோய்கள் தீரும். தினம் ஒரு வேளையாக, மூன்று நாள் சாப்பிட வேண்டும்.
இதன் இலையை அரைத்து தோல் நோய்கள், சிரங்குகளுக்கு பூச குணமாகும்.
இதன் இலையை அரைத்து விளக்கெண்ணையுடன் கலந்து, சிறு குழந்தைகளின் தொப்பிளை சுற்றி தடவ, மலம் வெளியாகும். இது ஒரு பாதுகாப்பான வைத்தியம்.
முடி வளர்க்கும் தைலங்களில் கரிசாலை, நெல்லிக்காய், இவைகளுடன் அவுரியும் சேர்க்கப்படுகிறது. கேசத்தின் நிறத்தை மாற்றும் சக்தி உள்ள மூலிகை.
அவுரி இலை சாறு பல விஷங்களை நீக்கும். நல்ல பாம்பு விஷத்துக்குக் கூட தரலாம்.
அவுரி வேரை நன்றாக அரைத்து நெல்லிக்காய் அளவு அரை ஆழாக்கு நாட்டுப் பசுவின் பாலில் கலக்கி, வடிகட்டி தினம் ஒரு வேளை என எட்டு நாள் தர சிலந்தி, எலி போன்றவை கடிப்பதால் ஏற்படும் விஷம் நீங்கும்.
இதில் நெல்லிக்காய் அளவு என்று சொல்வது பிரமாணம். பசும் பாலில் கலந்து என்பது அனுபானம். சித்த மருந்துகளில் இவை இரண்டும் முக்கியம்.
மேலும் சுத்தி செய்வது மிக முக்கியம். அத்தகைய சுத்தி செய்வதில் ஒவ்வொன்றுக்கும்
ஒவ்வொரு தனி முறை உள்ளது. ஆனால், அவைகள் முழுவதும் எது என்பது தெரியாத நிலையில், எந்த மருத்துவ பொருளையும் நீலி இலை சாறில் ஊற வைத்து பயன்படுத்தினால் அந்த மருந்து சுத்தி ஆகும். அத்தனை சக்தி வாய்ந்தது இந்த நீலி.
அவுரி வேரையும், சுக்கையும் சம அளவு நீருடன் கலந்துமண் சட்டியில் அது சரிபாதியாக ஆகும் வரை காய்ச்சி, அதை முன்பு தந்த மருந்துகளின் வீரியம் உடலில் இருந்து நீங்கத் தருவது வழக்கம்.
பொதுவாக நல்ல ஒரு மருத்துவர் தனது மருத்துவ முறையை தொடங்குவதற்கு முன்பு அது வரை வேறு வைத்தியர்களிடம் உண்டு வந்த மருந்துகளின் வீரியத்தை உடலில் குறைத்து விட்டு, பிறகு தான் தங்களது மருந்தை கொடுக்க ஆரம்பிப்பது வழக்கம்.
நீலி பிருங்காதி தைலம், நீலின்யாதி கிருதம், நீலிகாதி தைலம் போன்ற கடைகளில் கிடைக்க கூடிய மருந்துகளிலும் இந்த அவுரி எனும் நீலியே பயன்படுத்தபடுகிறது. தீப்புண், தீயினால் ஏற்பட்ட கொப்புளங்களை சரியாக்க இந்த அவுரி பயன்படும்.
இப்போதெல்லாம் வயல்களில் அவுரி இல்லாததால் கிராமத்து மாடுகளுக்கும் கண்டதைத் தின்று அவைகளுக்கு பலவித நோய்கள் வருகின்றன. பசுவின் பால் கூட இப்போது சுத்தமாக இல்லை
அதிலும் நஞ்சு கலந்து விட்டது.
மனிதர்களுக்கு வைத்தியம் கண்டது போல் மாடுகளுக்கும் வைத்திய முறை கண்டிருந்தனர், நமது பண்டைய தமிழர். அத்தகைய மாட்டு வைத்திய முறைகள் அடங்கிய நூலுக்கு ‘மாட்டு வாகடம்’ என்று பெயர்.
இவ்வாறு ஒவ்வொரு மிருகத்திற்கும் ‘ஆட்டு வாகடம்’, ‘பறவை வாகடம்’ போன்று இருந்தது. இந்த வைத்திய முறைகளில் அவுரிக்கு பெரும் பங்கு உண்டு.
ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக, தலைமுறை தலை முறையாக நம் முன்னோர்கள் ஆராய்ச்சி செய்து கண்டு பிடித்த இது போன்ற அறிவியல் பூர்வமான, சித்த வைத்தியக் கூறுகள், கால வெள்ளத்தால் அழிந்து, மறைந்து போய்க் கொண்டிருக்கிறது.
அத்தோடுகூட அவுரிக்கு இந்திய வரலாற்றிலேயும் முக்கிய பங்கிருக்கிறது. அதிகப்படியான இண்டிகோ சாகுபடி உலகளவில் அதன் அதிக தேவை இருந்ததால் வங்காளத்தில் 1,777 இல் ஆங்கிலேயர்களின் பேராசையால் இதன் தீவிர சாகுபடி தொடங்கியது. எங்கும் அவுரி மயமாகியது! உண்ணும் உணவு உற்பத்தி குறைந்தது. அதனால் பெரும் பஞ்சங்கள் தோன்றி, மக்கள் மடிந்தனர்.
விவசாயிகள் யாரேனும் இண்டிகோ பயிரிட மறுத்து, அதற்குப் பதிலாக நெல் பயிரிட்டால், பயிர்களைச் சூறையாடுவது, எரிப்பது, விவசாயியின் குடும்பதினரைக் கடத்துதல் போன்ற அராஜகமான வழிகளில் ஆங்கிலேயர்கள் விவசாயியை இண்டிகோ வளர்க்க நிர்பந்தித்தினர்.
பிறகு, 19 ஆம் நூற்றாண்டில் விவசாயிகள் இயக்கங்கள் பல இதற்கு எதிர்ப்பாக எழுந்தது. இதனால் இண்டிகோ கிளர்ச்சி எனும் பெரும் கலகம் வெடித்தது.
இந்த கிளர்ச்சி 1859-60 இல் வங்காளத்தில் விரிவாக நடந்தது. பிரிட்டிஷ் ஆட்சிக்கு எதிரான முதல் பெரிய விவசாயிகள் எழுச்சிகளில் இது முக்கிய ஒன்றாகும். பிறகு அவர்களை சமாதானம் செய்ய அவுரி ஆணையம் என்று தோன்றியது . இந்திய சுதந்திரப் போராட்டத்திற்கு தன்னை ஒப்புக் கொள்ளும் முன்பாகவே மகாத்மா காந்தி 1917 ஆம் ஆண்டு அவுரி பயிரிடும் சம்ராண் பகுதி விவசாயிகளுக்காக ஓராண்டு முழுக்க அவர்களுடனேயே தங்கிப் போராடி அவர்களுக்கு நீதி பெற்றுத் தந்தது வரலாறு!
நாய்கடி விஷத்தால் ஏற்படும் -ஹைடிரோ போபியாவுக்கு நன்றாக குணம் கிடைக்கச் செய்யும்.
நீலச் சாயம், நீலி, இந்த மூலிகை அத்தனையும் வரலாறும், மருத்துவ பண்புகளும் அதிகம் கொண்டது. அடுத்த மூலிகை பற்றி அடுத்த வாரம் காணலாம்.
கட்டுரையாளர்; அண்ணாமலை சுகுமாரன்
‘நம்ம ஊரு மூலிகைகள்’ உள்ளிட்ட நூல்களின் ஆசிரியர்.
Very excellent research sir…thank you very much for this paper it will useful for me to teach the social science to my students
Super
மிக்க நன்றி தங்கள் வாழ்த்துக்கள் எனக்கு மேலும் எழுத ஊக்கப்படுத்தும் வணக்கம்