கோயில் சொத்துகளை அபகரித்து கொண்டிருப்பவர்கள் யார், யார்?

’அறம்’ சாவித்திரி கண்ணன்

பகுதி -2

தமிழக கோவில் சொத்துகளை அரசியல்வாதிகளும்,அதிகாரிகளும்,சூறையாடிக் கொண்டிருக்கிறார்கள் என்று பொத்தாம்பொதுவாக ஒரு குற்றச்சாட்டு வைக்கப்படுகிறது.

தமிழக அற நிலையத்துறை ஏற்படுத்தபட்ட பிறகு தான் கோவில் சொத்துகள் பறிபோவது ஒரளவேனும் தடுக்கப்பட்டது. இல்லையெனில்,முழுவதையும் தனியார்கள் எப்போதோ ’ஸ்வாகா’ செய்திருப்பார்கள்…என்று சிலர் வாதம் வைக்கிறார்கள்!

உண்மையில் கோவில் சொத்துகளை யார்,யாரெல்லாம் அபகரித்துக் கொண்டுள்ளனர், யாரெல்லாம்  சூறையாடிவருகின்றனர் என்று இந்த கட்டுரையில் தெளிவாக பார்த்துவிடலாம்!

உதாரணத்திற்கு சிதம்பரம் நடராஜர் கோவிலை தீட்சிதர் குடும்பங்கள் நீண்ட காலமாக தங்கள் கட்டுப்பாட்டில் வைத்திருந்தனர். அந்த கோயிலுக்கு சொந்தமாக பல ஆயிரம் ஏக்கர் நிலங்கள் இருந்தன! தமிழக அரசு கோர்ட்டில் வழக்கு தொடுத்து,போராடி அந்த கோவிலை மீட்டெடுத்த நிலையில் 440 ஏக்கர் நிலம் தான் மிஞ்சியது. அதையும் ஆவணங்களில் தான் பார்க்கமுடிந்தது. அதே போல கோவிலுக்கு வருமானமே இல்லை, உண்டியல் வசூல் தினசரி ரூபாய் 400 தான் என்று தீட்சிதர்கள் கூறி வந்தனர். ஆனால்,அரசு கையகபடுத்திய பின்பு தான் தினசரி பத்தாயிரம் வருகிறது என்ற உண்மை கண்டறியப்பட்டது.

இது ஒரு சாம்பிள்! அதுவும் நிகழ்காலத்தில் நடந்தது. எனவே ஆன்மீகவாதிகள், நல்லவர்கள் கைகளில் கோவிலை ஒப்படைத்தால் தான் கோவிலுக்கு நல்லது தப்புகள் நடக்காது என்ற வாதம் கேட்க நன்றாக உள்ளது. ஆனால், நல்லவர்கள், உண்மையான ஆன்மீகவாதிகளை கண்டடைவது மிகவும் சிரமம்!

மயிலை கபாலீசுவரர் கோயிலுக்குச் சொந்தமான பல ஆயிரம் கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துகளை வாடகையோ, குத்தகையோ கொடுக்காமல் அனுபவித்துக் கொண்டிருப்போர் பட்டியலை அக்கோயிலின் நிர்வாக அதிகாரியான பரஞ்சோதி வெளியிட்டிருக்கிறார். மொத்தம் 473 பேரில்  ஹிந்துக்கள்  மட்டுமே 471 பேராகும். இவர்களிலும் சில முதலியார்கள், நாடார்கள் தவிர அதிகமானோர் பிராமணர்களாகவே இருக்கிறார்கள்!

வாடகை கொடுக்காதவர்களின் பட்டியலில் பாரதிய வித்யா பவன் கபாலீசுவரருக்கு வைத்திருக்கும் வாடகை பாக்கி 32 இலட்ச ரூபாயாகும்!

பாரம்பரியமான பெரும் பணக்காரர்களின்  கிளப்பான மயிலாப்பூர் கிளப், பல கிரவுண்டு கோயில் நிலத்தைக் குத்தகைக்கு எடுத்திருக்கும் வகையில் கபாலிஸ்வரருக்கு வைத்திருக்கும் குத்தகை பாக்கி 3.57 கோடி ரூபாய். பிரபல அமிருதாஞ்சன்  நிறுவனம் கபாலீசுவரருக்கு வைத்திருக்கும் குத்தகைப் பாக்கி ரூ.6 கோடியே 45 இலட்சம்.

புகழ்பெற்ற பி.எஸ். ஹைஸ்கூல் என்று அழைக்கப்படும்  பெண்ணாத்தூர் சுப்பிரமணிய அய்யர் மேல்நிலைப் பள்ளி  கோயிலுக்குச் சொந்தமான 76 கிரவுண்ட் நிலத்தை 1928-இல் குத்தகைக்கு எடுத்தது. பின்னர் குத்தகை ஒப்பந்தம் 1979-இல் புதுப்பிக்கப்பட்டிருக்கிறது. பல பிரபல உயரதிகாரிகள் சம்பந்தப்பட்ட இந்தப்பள்ளி, 76 கிரவுண்டுகளுக்கு ஆண்டு குத்தகையாக ரூ. 1250 ஐ கூட தராமல் கபாலீசுவரரைக் கோர்ட்டுக்கு அலைய விட்டுக் கொண்டிருக்கிறது.

காமதேனு திரையரங்குக்கு எதிரே கபாலீசுவரருக்குச் சொந்தமான 25 கிரவுண்ட் நிலத்தை பயன்படுத்திவருபவர் பார்த்தசாரதி அய்யங்கார்.1901- இல் 99 வருடக் குத்தகையாக எடுத்த அய்யங்கார், இதனை உள்குத்தகைக்கு விட்டு, அது பல கை மாறி இன்று வணிக வளாகங்கள் உள்ளிட்ட கட்டடங்கள் எழுப்பப்பட்டு, 35 நபர்களின் வசம் உள்ளது. இப்படிப்பட்டவர்களிடம் சிக்கிய இந்தச் சொத்துகளை மீட்பதற்கு நீதிமன்றத்துக்கு அலைந்து கொண்டிருக்கிறார்கள் அறநிலையத்துறை அதிகாரிகள். மயிலாப்பூர் கிளப்பின் வாசலிலேயே, “இது கபாலீசுவரர் கோயில் சொத்து” என்று போர்டு எழுதி வைத்திருக்கிறது அறநிலையத்துறை. இத்தனைக்குப் பிறகும் இவர்கள் எந்தவித குற்றவுணர்வுமின்றி வலம் வருகின்றனர்!

மிகக் குறைந்த வாடகை, குத்தகை பாக்கியைக்கூடக் கொடுக்காமல், அறநிலையத்துறையை நீதிமன்றத்திற்கு அலைகழிக்கும் இவர்களைப் போன்றவர்கள் தான் கோவில்களில் இருந்து அரசாங்கம் வெளியேற வேண்டும் என்கிறார்கள் என்பதை நாம் கவனத்தில் கொள்ள வேண்டியுள்ளது.

முற்றும் துறந்தவர்கள் என்று சொல்லி,தங்களை துறவியாக ஆன்மீகவாதிகளாக அறிவித்துக் கொண்டவர்கள் தான் மடாதிபதிகள். தமிழகத்தில் பெரும்பாலான மடாதிபதிகள் மீது புகார்கள் உள்ளன.வழக்குகள் உள்ளன! மிகப் புகழ்பெற்ற தர்மபுர ஆதீனத்தின் கீழ் 27 கோவில்கள் உள்ளன! பல நூறு கோடிகளுக்கு சொத்துகள் உள்ளன! ஆனால்,எத்தனையெத்தனை புகார்களையும், வழக்குகளையும் சந்தித்துக் கொண்டுள்ளது அந்த மடம்! இவர்கள் நிர்வகிக்கும் வைத்தீஸ்வரன் கோவில் மீதான வழக்குகளே போதும் தனியார் கைகளுக்கு கோவில்கள் சென்றால், அதன் கதி என்னவாகும் என்று! திருவாவடுதுறை ஆதீன மடத்திற்கு ஆயிரம் கோடி ரூபாய்க்கும் அதிகமான சொத்துகள் உள்ளன. அந்த மடத் துறவிகளிடையே எவ்வளவு சண்டைகள், சர்ச்சைகள்!

வட மாநிலங்கள் பலவற்றில் தனியார்களின் கைகளில் தான் மந்திர் என்றழைக்கப்படும் கோவில்கள் உள்ளன! அந்த கோவில்களின் லட்சணத்தோடு ஒப்பிடும் போது தமிழக கோவில்கள் எவ்வளவோ தேவலை என்பதே உண்மை! காந்தியடிகள் காசி கோவில்,பூரி ஜெகன் நாதர் ஆலயம் போன்றவற்றில் வழிபட விரும்பி சென்ற போது அங்கிருந்த அர்ச்சகர்கள் எப்படி காசு ஒன்றே குறிக்கோளாக நடந்து கொண்டனர் என்பதை விவரித்துள்ளார். ஓரிடத்தில் அவருக்கு ஏற்பட்ட கசப்பான அனுபவத்தை குறிப்பிட்டு, ’’கோவில்களை வேசி மடங்களாக மாற்றிவிட்டார்களே’’ என்று கூறி வருந்துகிறார்!

எனினும்,கோவில்களை அற நிலையத்துறை அதிகாரிகள் நேர்மையாகத் தான் நிர்வகிக்கிறார்களா? என்பதற்கு ’’ஆமாம்’’ என்று ஒற்றை வார்த்தையில் பதில் சொல்ல முடியவில்லை!

கிருபானந்தவாரியார் சொல்லுவார் அற நிலையத்துறை என்பது யானை மாதிரி என்று! ஆம், அதை யானை பட்டாளம் என்று தான் சொல்ல வேண்டும்! அவ்வளவு பெரிய கட்டமைப்பு! அத்தனை அதிகாரிகள்! இந்த பட்டியலை கீழே தருகிறேன். இவ்வளவு பெரிய அதிகாரிகள்,அலுவலர்கள் பட்டாளத்திற்கு சம்பளம் தருவது என்பது யானைகளின் பட்டாளத்திற்கு தீனிபோடுவதைக் காட்டிலும் செலவு கூடுதலானதாகும்!

அறநிலையத்துறைக்கு ஆணையராக ஐ.ஏ.எஸ் அதிகாரி ஒருவர் உள்ளார்.

ஆணையர், அதிகாரிகள், சார்நிலை அலுவலர்கள், செயல் அலுவலர்கள், அயல்பணி அலுவலர்கள், அலுவலக உதவியாளர்கள், காவலர்கள், சுகாதார பணியாளர்கள் உள்ளடங்கிய 2409 முதல்நிலை ஊழியர்கள் உள்ளனர்.

மூன்று கூடுதல் ஆணையர்கள் நான்கு இணைஆணையர்கள் (தலைமையிடம்), இணைஆணையர் (சட்டச்சேர்மம்) இணைஆணையர்  பல  உதவிஆணையர்கள் என ஏகப்பட்ட ஆணையர்கள்!.

இது தவிர, களப்பணியில் வருவாய்த்துறை வட்ட அடிப்படையில் 224 ஆய்வாளர்கள் பணிபுரிகின்றனர். நகை சரிபார்ப்பு அலுவலர்கள், ஆபரணங்கள் மற்றும் இதர  பொருட்களை மதிப்பீடு செய்வதற்காக  இணை ஆணையர் , ஏழு  மண்டலங்களுக்கு துணை ஆணையர் நிலையில் ஆறு சரிபார்ப்பு அலுவலர்களும், உதவி ஆணையர் நிலையில் நான்கு சரிபார்ப்பு அலுவலர்களும் பணிபுரிகின்றனர்.

கணக்குகளைத் தணிக்கை செய்ய தலைமைத் தணிக்கை அலுவலருக்கு உதவியாக இரண்டு துணைத் தலைமைத் தணிக்கை அலுவலர்கள், 18 மண்டலத் தணிக்கை அலுவலர்கள், 28 உதவித் தணிக்கை அலுவலர்கள் பணிபுரிகின்றனர். இணை ஆணையர் நிலை செயல் அலுவலர்கள் உள்ள எட்டு திருக்கோயில்களில் இவர்களுக்கு உதவியாக எட்டு மண்டலத் தணிக்கை அலுவலர்கள் பணிபுரிகின்றனர்.

திருக்கோயில்களின் திருப்பணிகளான, புதுப்பித்தல், புனரமைத்தல்,  மதிப்பீடு தயாரித்தல்..  போன்ற பணிகளை மேற்கொள்ள பொறியாளர்கள் மற்றும் வரைதொழில் அலுவலர்கள்  பணிபுரிகின்றனர். மேலும், உதவிக் கோட்டப்பொறியாளர்,  இளநிலை வரைதொழில் அலுவலர்,  உதவிப் பொறியாளர்கள் பணிபுரிகின்றனர்.

அந்தந்த கோயில்களின் நிர்வாகத்தைச் செய்ய,  செயல் அலுவலர் பணியிடங்கள் பல்வேறு நிலைகளில் உள்ளன.  மடங்களின் நிர்வாகத்தைக் கண்காணிக்க ஒரு மண்டலத் தணிக்கை அலுவலர், ஒரு கண்காணிப்பாளர், இரண்டு ஆய்வாளர்கள், இரண்டு தணிக்கை ஆய்வாளர்கள், இரண்டு உதவியாளர்கள் ஆகியோர் பணிபுரிகின்றனர். இது தவிர்த்து, மேலும் எக்கசக்கமான உடலுழைப்பு  பணியாளர்கள்  உள்ளனர்.

இத்தனை பெரிய பட்டாளத்திற்கு சம்பளம்,அலுவலகம்,போக்குவரத்து செலவுகள் என பெரிய செலவு செய்கிறது அரசாங்கம்! இதையெல்லாம் கோவில்களில் கிடைக்கும் வருமானத்தைக் கொண்டு செய்யவில்லை! கோவில்களின் வருமானத்தில் வெறும் 14% த்தை தான் அரசு இந்த நிர்வாகச் செலவுகளுக்கு எடுக்கிறது. மற்றபடி மக்களின் வரிப் பணத்தில் இருந்து தான் தருகிறது.ஆனால்,இந்த அதிகாரிகள் கோவில் சொத்துகளை மீட்க பெருமுயற்சி எடுக்கிறார்களா? என்றால், வெகு சிலர் தான் அதில் அக்கரை காட்டுகின்றனர். பாழடைந்த கோவில்களை புனரமைப்பதில் அக்கரை காட்டுகிறார்களா? என்றால், கிடையாது எனலாம்! சாதரண பக்தர்கள் தான் இது போன்ற விவகாரங்களில் ஆர்வம் காட்டுகின்றனர். அரசு அதிகாரிகளும், அலுவலர்களுக்கும் மாத சம்பளத்திற்கு கடனே என்று வேலை செய்பவர்களாகத் தான் உள்ளனர்.

அதிகாரிகளில் நேர்மையானவர்களும் உள்ளனர். ஊழல்வாதிகளும் உள்ளனர். அதிகார மமதை கொண்டவர்களும் உள்ளனர். கோவில் சொத்துகளை மீட்பதை தங்கள் தார்மீகக் கடமையாக பார்த்து,உளப்பூர்வமாக போராடி அவற்றை மீட்க முயற்சிக்கும் அதிகாரிகள் மிகக் குறைவு! கோவில் மீது ஈடுபாடும்,பொறுப்பும் உள்ள அதிகாரிகள் அமையும் போது அந்த கோவில்கள் மிக நன்றாக பராமரிக்கப்படுவதோடு,யாரும் எந்த தவறுகளும் செய்யமுடியாத சூழலும் ஏற்பட்டுவிடுகின்றது! மோசமான அதிகாரிகள் அமையும் போது தவறுகளுக்கு துணைபோய் விடுகின்றனர்! அப்படி துணைபோனவர்கள் தண்டிக்கப்பட்ட வரலாறுகளும் உள்ளன!

’’பிரபல ஸ்தபதி கீர்த்தி வர்மனிடம் பேசும் போது, ‘’எப்படிப் பார்த்தாலும் அற நிலையத்துறை என்ற அமைப்பை முற்றிலும் நிராகரிக்க முடியாது. வரலாற்றின் வளர்ச்சி போக்கில்,அனுபவங்களின் படிப்பினைகளால் நம் மரியாதைக்குரிய தலைவர்களால் கட்டமைக்கபட்டதே அற நிலையத்துறை! இதனால்,பல தவறுகள் தடுக்கப்பட்டுள்ளன! பல நல்ல முன்னேற்றங்கள் ஏற்பட்டுள்ளன! எல்லா அரசு அமைப்பிலும் இருக்கும் சில குறைபாடுகள்,முறைகேடுகள் இவற்றிலும் உண்டு. அவை களையெடுக்கப்பட்டு இன்னும் சிறப்பாக செயல்படச் செய்வது எப்படி என்று தான் பார்க்க வேண்டும்.’’ என்றார்.

கல்வியாளர் ராமசுப்பிரமணியத்திடம் பேசிய போது,’’கோவில்களுக்குள் அரசாங்கம் நுழையக் கூடாது.அதை நல்ல பக்தர்கள்,ஆன்மீகவாதிகளிடம் தந்துவிட வேண்டும். நல்ல வசதி படைத்தவர்கள் கோவில்களுக்கு பொறுப்பேற்றால், கோவிலில் இருந்து எடுக்கமாட்டார்கள். கோவிலுக்கு தன் பங்கிற்கு ஏதாவது செய்வார்கள்! அரசாங்கத் தலையீட்டால் அரசியல்வாதிகள் உள்ளே வருகிறார்கள்! ஊழலுக்கு வழிவகை ஏற்பட்டுவிடுகிறது. நிர்வாகத்தை சூப்பர்வைசிங் வேண்டுமானால் அரசாங்கம் செய்யட்டும்! அற நிலையத்துறை ஆடிட்டர்களை மட்டும் கொண்டு ஆடிட் செய்யக்கூடாது. வெளியில் இருந்தும் ஆடிட் செய்ய வேண்டும். சிதம்பரம் கோவில் போன்று தனியார்களிடம் கோவில்கள் இருக்க வேண்டும்.அது தான் நல்லது.அற நிலையத்துறையில் வேற்று மதத்தினரை அரசாங்கம் வேலைக்கு எடுக்க கூடது.’’என்றார்.

அற நிலையத்துறை முன்னாள் அதிகாரி வீரபத்திரனிடம் பேசும் போது, ’’இந்து அறநிலையத் துறை சட்டப் பிரிவு 34 மற்றும் 78,79,79c ன் படி ஒரு கோயிலுக்கு சொந்தமான நிலம் என்பது ஒரு போதும் விற்க முடியாதது. குத்தகைக்கோ வாடகைக்கோ மட்டுமே விட முடியும் ! இதன்நோக்கம், இந்த வருவாயின் மூலமாக கோயில் பூஜைகள் மற்றும் காரியங்கள் தடையின்றி நடக்க வேண்டும் என்பதே!

இந்து அறநிலையச் சட்டத்தின் 34-வது பிரிவின்படி அரசு ஒப்புதல் இல்லாமல் கோயில் நிலங்களை விற்பதோ, நீண்ட கால குத்தகைக்கு விடுவதோ தடைசெய்யப்பட்டுள்ளது. கோயில் மனைகளில் நிரந்தரமாகக் கூடாரமிட்டிருப்பவர்களை வெளியேற்றும் வகையில், நகர்ப்புறக் குத்தகைக்காரர் பாதுகாப்புச் சட்டத்திலிருந்து விதிவிலக்கு கொடுக்கப்பட்டுள்ளது. கோயிலுக்குச் சொந்தமான கட்டிடங்களில் இருக்கும் குடித்தனக்காரர்கள் வெளியேறாமல் வழக்கு போடுவதைத் தடுக்கும் விதமாக வாடகைக் கட்டுப்பாட்டுச் சட்டத்திலிருந்தும் விதிவிலக்கு கொடுக்கப்பட்டுள்ளது. நீதிமன்றங்களில் வழக்குகள் தாமதமானால்,  ஆணையர்களே கோயில் சொத்துகளிலிருந்து சம்பந்தப்பட்டவர்களை வெளியேற்ற உத்தரவிடும் அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது. இவையெல்லாம் நல்ல முயற்சிகள். இப்படியான நடவடிக்கைகள் வளர்த்தெடுக்கப்பட வேண்டும்.’’ என்றார்.

மதுரை ஸ்ரீவிசாலாட்சி காசிவிஸ்வநாதர் கோயில் அறங்காவர் பத்மநாபனிடம் பேசிய போது, ‘’எங்க கோவில் தனியாருக்கானது.எங்க முன்னோர்கள் கட்டியது.அதை நிர்வகிக்கும் சட்டதிட்டங்கள் அன்றே உருவாக்கப்பட்டு பல வருடங்களாக நடைமுறையில் உள்ளது. செலவுகளுக்கான பணம் கோவிலுக்கான சொத்துக்களில் இருந்து வரும் வருமானத்தின் மூலம் நிர்வகிக்கப்படுகிறது. நாங்கள் வெளியாரிடம் நன்கொடை பெறுவதில்லை.கோவிலில் உண்டியல் வைக்கவில்லை. வைத்துவிட்டால், அங்கே அரசாங்கம் வந்துவிடும்! நல்ல காரியங்கள் நடக்கும் போது, அதற்கான தேவைகளை பக்தர்களே பொறுப்பெடுத்து செய்வது வழக்கமாக உள்ளது! பூக்கள்,பழங்கள், தேங்காய்,பால்,பிரசாதம்,தோரணம் என ஒவ்வொன்றையும் ஒவ்வொருவர் ஆர்வத்துடன் பொறுப்பேற்றுக் கொள்வர்! கோவில் நிர்வாகம் என்பது அரசோ, தனியாரோ அங்கேயுள்ள தனிப்பட்ட நபர்களை பொறுத்து தான் சிறப்படைவதும், சீரழிவதும் நடக்கின்றன!’’ என்றார்.

ஆன்மீகப் பேச்சாளரும், தமிழ் அர்ச்சனை பயிற்சியின் பிதாமகருமான சத்தியவேல் முருகனாரிடம் பேசும் போது, கோவில்களை தனியாரிடம் ஒப்படைப்பது போன்ற விபரீதம் வேறெதுவுமில்லை! தனியாரிடம் சென்றால், சிறப்பாக நிர்வகிப்படும் என்பது அதீத கற்பனை! அதனால் பிரச்சினைகள் தான் அதிகமாகும்!

அவர்களிடம் வெளிப்படைத் தன்மையை எதிர்பார்க்க முடியாது. அரசாங்கம் விளக்கம் கேட்டால் கூட, ’எங்கள் நிர்வாகத்தில் தலையிட உங்களுக்கு உரிமை இல்லை’ என்று கூறிவிடுவார்கள்! உள்ளுக்குள் என்ன நடக்கிறது என்று யாருக்கும் தெரிய வராது. அற நிலையத்துறை என்றால், மக்கள் கேள்வி கேட்க முடியும்.தவறுகளை சுட்டிக்காட்டி அதிகாரிகளை தண்டிக்க முடியும். நிவாரணம் கிடைக்க வாய்ப்புள்ளது. ஆனால், தனியாரிடம் எதுவும் நடக்காது. பேராசை என்பது மனித இயல்பு! பெரும் சொத்துகள் ஒருவரிடம் அல்லது ஒரு குழுவிடம் ஒப்படைக்கப்படும் போது,அதில் தவறுகள் நடக்கும் வாய்ப்புகள் அதிகம் என்பதே கடந்தகால படிப்பினை நமக்கு சொல்கிறது .இதற்கு சிதம்பர கோவிலும்,சில மடங்களுமே சாட்சியாகும்! என்றார்.அதேசமயம் அற நிலையத்துறை அதிகாரிகள் கோவில் சொத்துகள் விவகாரத்தில்,சிலைகள் விவகாரத்தில் இன்னும் சிரத்தையோடு செயல்பட  வேண்டும்.பல கோவில்களில் சிலைகள்,சொத்துக்களின் பட்டியல் போன்றவை முறையாக பராமரிக்கப்படுவதில்லை.அதை கண்ணும்,கருத்துமாக செய்ய வேண்டும்.’’ என்றார்.

தமிழகத்தில் கடந்த ஐந்தாண்டுகளாக அறங்காவலர்கள் கோவில்களில் நியமிக்கபடாமல் உள்ளது. அதில் நல்ல யோக்கியமானவர்களாகப் பார்த்து நியமிக்க வேண்டும். அத்துடன் கோவில் சொத்துகளை,சிலைகளை,ஆவணங்களை முறையாக பராமரிக்க தவறிய அதிகாரிகளை தண்டிக்க வேண்டும். ஏனென்றால்,சில கோவில்களில் சில ஆண்டுகளுக்கு முன்பு காணாமல் போன சிலைகள் கண்டெடுக்கபடும் போது அது தாங்கள் நிர்வகிக்கும் கோவிலுக்கானது தான் என்பது கூடத் தெரியாமல் அவற்றை திருப்பி அனுப்பும் அதிகாரிகள் உள்ளனர் என்பது கவலையளிக்கிறது. இந்த வகையில் வழிபாட்டுக்குரிய சிலைகள் பலவும் அருங்காட்சியகத்தில் உள்ளன!தவறுகளுக்கு துணை போபவர்கள் யாராயிருந்தாலும் அவர்கள் கடும் தண்டனைக்கு உள்ளாக்கப்பட்டால் தான் மக்களுக்கு அரசின் மீதான நம்பிக்கை பலப்படும்.

 

அறநிலையத்துறை அவசியமா? அநாவசியமா? (பகுதி – 1)

 

Support Aram

நேர்மையான, வெளிப்படையான,

சுதந்திரமான இதழியலுக்கு தோள்

கொடுங்கள்.

UPI QR CODE

Razorpay Payment Gateway

Personal Info

Donation Total: ₹1,000.00 One Time