சவுக்கு சங்கரும், திமுக அரசும்!

-சாவித்திரி கண்ணன்

எதிர்பார்த்தபடியே சவுக்கு சங்கர் கைது செய்யப்பட்டு உள்ளார். காரில் கஞ்சா இருந்தது, விசாரணைக்கு அழைத்துச் செல்லும் வழியில் விபத்து, சிறையில் காவலர்களால் கடுமையாக தாக்கப்படுவது.. போன்ற செய்திகள் உணர்த்துவது என்ன..?

ஊழல்களை அம்பலப்படுத்துகிறார்! அதிகாரத்தை நோக்கி திணற வைக்கும் கேள்வி கேட்கிறார்! எதற்கும் அஞ்சாத துணிச்சல்காரர் போன்ற பிம்பங்கள் சவுக்கு சங்கர் குறித்து இருந்தன… என்ற போதிலும், அவரது கைதுக்கு எதிராக பொதுச் சமூகம் எந்த எதிர்வினையும் ஆற்றவில்லை. மக்களிடம் இருந்தோ, சக பத்திரிகையாளர்கள், எழுத்தாளர்கள், கலைஞர்கள், சமூக ஆர்வலர்கள், மக்கள் இயக்கங்கள் ஆகியோரிடமோ எந்த அறச் சீற்றமும் வெளிப்படவில்லை.

அவர் பேசிய காணொளிகளை பல லட்சம் பேர் விரும்பி கேட்டு வந்தனர். பற்பல சிறிய, பெரிய ஊடகங்கள் அவரை நேர்காணலுக்கு தொடர்ந்து பயன்படுத்தி தங்கள் பார்வையாளர்களை – சந்தாதாரர்களை – அதிகரித்துக் கொண்டனர். இவ்வளவு பிரபலமாக இருந்தும் அவர் கைதுக்கு பொதுத் தளத்தில் அனுதாபம் இல்லாமல் போனது…! எதிர்ப்புகள் இல்லாமல் போனது! ஏன்? என்று பார்த்தால், மக்கள் அவரை தங்களுக்கானவராக உணரவில்லை. அவரும் மக்களுக்கானவராக செயல்படவில்லை. எனில், பல லட்சம் பேர் அவரது பேச்சுக்களை ஒரு சிறந்த பொழுதுபோக்காக பார்த்து ரசித்துள்ளனர் என்று தான் புரிந்து கொள்ள வேண்டியுள்ளது.

ஆனால், தொடக்க காலத்தில் அவர் ஒரு நேர்மையாளராக கருதப்பட்டார். அரசியல் விழிப்புணர்வாளராகவும் பார்க்கப்பட்டார். ஆனால், அவரே தான், பல சம்பவங்களில் உண்மைக்கு புறம்பாகப் பேசி, அந்த பிம்பத்தை சுக்கு நூறாக நொறுக்கிப் போட்டார்.

இந்த ஒட்டுமொத்த உலகமும் மெய் என நன்கறிந்த ஒன்றை பொய்யென அடித்து நிறுவ வேண்டும் என ஒரு அசைண்மெண்டை அதிகார மையம் அவருக்கு தரும் போது, அதை பல நேரங்களில் சிறப்பாக செய்துள்ளார்…இதனால் சவுக்கு சங்கர் மீதான மக்களின் மதிப்பீடு படுவேகமாக சரிந்தது என்ற போதிலும், அவர் தன்னை மாற்றிக் கொள்ளவில்லை.

இதற்கு முன்னதாக ”ஆசிரியர்கள் சரியாக பாடம் நடத்துவதில்லை. தண்டமாக சம்பளம் பெறுகிறார்கள் ” என சகட்டுமேனிக்கு பேசி ஒட்டுமொத்த ஆசிரியர்கள் சமூகத்தையே ‘கேரக்டர் அசாஷினேஷன்’ செய்தார்!

தற்போது அவர் கைது சம்பந்தப்பட்ட விவகாரத்தை எடுத்துக் கொண்டால், ரெட்பிக்ஸ் யூ டியூப் சேனலுக்கு பெலிக்ஸ் ஜெரால்டுக்கு தந்த பேட்டியில் சவுக்கு சங்கர் பேசியவை தன்னகங்காரத்தின் உச்சம் என்பதை கேட்பவர் எவருமே உணர முடியும். போலீசா? பொறுக்கீங்களா? சவுக்கு ஆவேசம் என்ற தலைப்பிலான அந்த யூ டியூப் நேர்காணலில் நான், நான், நான்… என  யாவருக்கும் மேலானவராக அவர் தன்னை கருதுவது துல்லியமாக வெளிப்பட்டது. இப்படி தன்னகங்காரத்தின் உச்சம் சென்றதால், தன் மனம் போனபடி எல்லா எல்லைக் கோடுகளையும் சர்வ சாதாரணமாக கடந்து பேசுகிறார்.

காவல்துறையில் சில குறிப்பிட்ட அதிகாரிகள் காவல்துறையில் பணிபுரியும் பெண்களை துஷ்பிரயோகம் செய்வது குறித்து பேச வரும் சவுக்கு சங்கர், அவருக்கே உரித்தான தன்னகங்காரத்தில் பாதிக்கப்பட்ட பெண்களையே குற்றம் சாட்டும் விதத்தில் இழிவாகப் பேசிச் செல்வது தான் கொடுமை.

உதாரணத்திற்கு தற்போது தமிழக காவல்துறையின் கூடுதல் டிஜிபியாக உள்ள அருண் என்பவரை சவுக்கு சங்கர் வெளிப்படையாக குற்றம் சாட்டி பேசியுள்ளார். ”போலீசா..? இவர்கள் பொறுக்கிகள்.., எந்த மாதிரியான இழி செயலையும் இவர்கள் செய்யத் தயங்குவதில்லை..” என்கிறார். ‘பெண் காவலர்களை அருண் என்ற அதிகாரி துஷ்பிரயோகம் செய்தார்’ எனச் சொல்ல வருகிறாரா? எனத் தெரியவில்லை. ஆனால், ‘பெண் காவலர்கள் அருணது உயர் பதவி காரணமாக, தங்களை துஷ்பிரயோகம் செய்து கொள்ள இடமளிக்கிறார்கள்’ என்பதை திட்டவட்டமாக அடித்துப் பேசுகிறார்.

அதை நெறியாளராக உள்ள பெலிக்ஸ் ஜெரால்டும் மறுக்காமல், கேள்விக்கே உட்படுத்தாமல் அப்படியே ஆமோதிக்கிறார்! இது தமிழக காவல்துறையில் பணிபுரியும் ஆயிரமாயிரம் பெண்களையும், அவர்களின் குடும்பத்தாரையும், உற்றாரையும், நண்பர்களையும் எந்த அளவுக்கு பாதிக்கும் என்பதை இருவருமே சிறிதும் உணரவில்லை.

மேலும், தமிழக சட்டம் ஒழுங்கு டிஜிபியாக இருக்கும் அருண் என்பவரை தனிப்பட்ட விதத்தில், ”உனக்கு தைரியம் இருந்தால் என்னோடு மோதிப் பார். அருண் சட்டையைக் கழட்டாமல் நான் விடப் போவதில்லை..” என்கிறார்! இது பொது நன்மைக்காக பேசும் பேச்சா? அல்லது தனிப்பட்ட விரோதம் காரணமாக பேசும் பேச்சா?

இந்த அருண் என்ற சட்டம் ஒழுங்கு கூடுதல் டிஜிபி, சவுக்கு மீடியாவில் வேலை பார்க்கும் சட்டக் கல்லூரி இளம் மாணவர் கார்த்திக்கை பொய் வழக்கு போட்டு கைது செய்துள்ளார் என்பதும், மற்றொரு நெறியாளர் லியோ என்பவரிடன் காதலியிடம் இருவருக்கும் உள்ள பிணக்கை பயன்படுத்தி ”நீ அவனைக் குறித்து புகார் தா..” என நிர்பந்தித்ததாகவும் ஆவேசப்படுகிறார் சவுக்கு சங்கர். இது உண்மையானால், மிகவும் கண்டணத்திற்கு உரியது என்பதில் மாற்று கருத்தில்லை.

தமிழக சட்டம், ஒழுங்கு டிஜிபி ஆ.அருண்

ஊடக பலம் என்பது தனிப்பட்ட சாகஸமல்ல! அது கூட்டு முயற்சி! அது சக ஊடகவியாளர்களின் உதவியுடன் கூட்டாக வெளிப்படும் போது தான் முழுமை பெறுகிறது. மேலும் பெருந்திரளான கண்ணுக்கு தெரியாத வாசக பரப்பு நம்மை கண்காணித்துக் கொண்டுள்ளது. வாசகர்களின் மனசாட்சியோடு நமது எழுத்தும், பேச்சும் பின்னிப் பிணைந்துள்ளது என்ற பிரக்ஜை இருந்தாலே போதும். அதுவே, நம்மை வழி நடத்திவிடும்.

நேர்மையான பத்திரிகையாளனுக்கான அடிப்படைப் பண்பே, அதிகார மையங்களிடம் இருந்து விலகி நின்று செயல்படுவது தான்!  ஆனால், சவுக்கு சங்கர் ஒரு சார்பு நிலையை வெளிப்படையாக எடுத்தார். அதிமுக ஆதரவு, குறிப்பாக எடப்பாடி பழனிச்சாமியை வெளிப்படையாக ஆதரித்தது, பாஜகவுடன் இணக்கம் பாராட்டியது.. என அவர் நிலைபாடு எடுத்தார். முதலமைச்சர் ஸ்டாலினைக் கூட, துச்சமாக ஒருமையில் பேசும் சவுக்கு சங்கர் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையை பேசும் போது மட்டும் ”திரு. அண்ணாமலை” என மரியாதையுடன் பேசி வந்தார். இதெல்லாம் ‘அவர் சுய ஆதாயத்திற்காக செயல்படுகிறார்’ என்ற மனநிலைக்கு மக்கள் வரக் காரணமாயிற்று.

தமிழக முதல்வர், அவரது மகன் உதயநிதி ஸ்டாலின், மருமகன் சபரீசன், தமிழக அமைச்சர்கள், ஊழல் அதிகாரிகள் குறித்த சவுக்கு சங்கரின் அவதூறான விமர்சன அணுகுமுறையில் நமக்கு உடன்பாடு இல்லை. ஆனால், அவர் பேசுவதில் சில உண்மைகள் இல்லாமலில்லை.

சவுக்கு சங்கர் போன்றவர்கள் எல்லாம் எட்டி உதைத்து, ஏறி மிதித்து துவம்சம் செய்யத்தக்க நிலையில், பேரவலமான ஒரு ஆட்சியை இந்த ஆட்சியாளர்கள் இங்கு நடத்திக் கொண்டிருப்பதை மக்கள் உணராமல் இல்லை. அதனால் தான் முதல்வர் குறித்தும், ஆட்சி குறித்துமான சவுக்கு சங்கர் விமர்சனங்களுக்கு மக்களிடையே கோபமோ, கொந்தளிப்போ இல்லை. மாறாக பெருத்த வரவேற்பு கிடைத்தது.

மத்திய பாஜக ஆட்சியின் அராஜகங்கள், அநீதிகள் குறித்து இங்கு பேசுகின்ற, எழுதுகின்ற ஊடகங்களும், அறிவு ஜீவிகளும், அரசியல் விமர்சகர்களும் கூட, திமுக அரசு குறித்த நியாயமான விமர்சனங்களை வைக்காமல், நழுவுகின்ற சூழலில் – இடதுசாரி இயக்கங்களும் கூட பல விஷயங்களில் திமுக அரசின் மக்கள் விரோத போக்கிற்கு மெளன சாட்சிகளாக கடந்து போகும் போது – சவுக்கு சங்கர் போன்றவர்கள் முக்கியத்துவம் பெற்று விடுகிறார்கள்!

சவுக்கு சங்கர் கைதில் அவர் பேசிய அவதூறு பேச்சுக்கான சட்ட பூர்வ நடவடிக்கையை அரசாங்கம் எடுக்கட்டும். ஆனால், கஞ்சாவை காரில் வைத்து, ‘கஞ்சா வழக்கு போடுவது’ என்ற பழைய ஜெயலலிதா ஆட்சி அணுகுமுறைகள் ஏற்கத்தக்கதல்ல. அதே போல சிறையில் வைத்து காவலர்கள் கடுமையாக தாக்குவது, கை, கால்களின் எலும்புகளை நொறுக்குவது.. என்பது தமிழக காவல் துறையின் கடைந்தெடுத்த கோழைத்தனமாகும். இதை தவிர்த்து, வழக்கை நேர்மையாக நடத்த முதலமைச்சர் ஸ்டாலின் அறிவுறுத்த வேண்டும். சவுக்கு சங்கர் கைதுக்கு முதலமைச்சர் விளக்கம் அளிக்க வேண்டும்.

மேலும், இங்கு நாம் சொல்ல வருவது இது தான்; கீழ்கண்ட விவகாரங்களில் சவுக்கு சங்கரின் செயல்பாடுகளே அவர் எப்படிப்பட்டவர் என்பதற்கு சாட்சியாகும்.

கள்ளக் குறிச்சி ஸ்ரீசக்தி மெட்ரிகுலேஷன் பள்ளியில் இளம் மாணவி ஸ்ரீமதி பாலியல் வன்புணர்வுக்கு உள்ளாக்கப்பட்டு, கொடூரமான முறையில் கொல்லப்பட்ட விவகாரத்தில் ஒட்டுமொத்த தமிழகமே கொதித்து எழுந்த நிலையில் கூலாக அந்த கொலைகார பள்ளி முதலாளியை ஆதரித்ததோடு, இறந்த மாணவிக்கு ஒரு கள்ளக் காதலனை கற்பித்து, அந்த மாணவியின் தாயாரையும் அவதூறு செய்தார்! இந்த விவகாரத்தில் ஆர்.எஸ்.எஸ் பின்னணியில் மத்திய பாஜக அரசின் ஆதரவு பெற்ற பள்ளி ஓனரை பாதுகாத்த தமிழக அரசுக்கு உதவியாகவே செயல்பட்டார்.

ஒட்டுமொத்த உலகையே அதிரச் செய்த தூத்துக்குடி ஸ்டெர்லைட்டுக்கு எதிரான போராட்டத்தில் 13 அப்பாவி மக்களை அநீதியாக போலீசார் சுட்டுக் கொன்ற போது,  ”அந்த மக்கள் கூட்டத்தில் நிறைய நக்சலைட்ஸ் இருந்தனர். எனவே, அந்த துப்பாக்கி சூட்டை தவறாக பார்க்க முடியாது! போலீசார் திட்டமிட்டு சுடவில்லை, ஏதோ குறி தவறி சுட்டுவிட்டனர். அதுவும் ஒரே ரவுண்டு தான்’’ என வரிந்து கட்டி நியாயப்படுத்தினார்.

தர்மபுரியில் தலித் இளைஞர் இளவரசன் காதலித்த காரணத்திற்காக சாதி ஆதிக்க சக்திகளால் ரயில் தண்டவாளத்தில் தள்ளி சாகடிக்கப்பட்ட கொடூர நிகழ்வில் அதை, ”தற்கொலை தான் ” எனக் போலீசின் குரலாய் பேசினார்.

ஆர்.எஸ்.எஸ் முக்கியஸ்தரின் மகளான இளம் பெண் சுவாதியின் ஆணவக் கொலையில் தொடர்புடைய இந்துத்துவ கொலையாளிகள் குறித்து மிக நன்கு தெரிந்திருந்தும், உண்மைக்கு புறம்பாக அப்பாவி கிராமத்து பையன் ராம்குமாருக்கு தொடர்பு உள்ளதாக அடித்துப் பேசினார்.

சவுக்கு சங்கர் கைதை ஆதரிப்பதா? எதிர்ப்பதா?

எனவே, யாரோ சிலர் எடுத்து வீசி எறியக் கூடிய அம்பாகவே அவர் இயங்கி வந்தார். அவரை தற்போதைய முதல்வரும் கூட, தன் இல்லத்திற்கு அழைத்துப் பேசி சமாதானம் செய்து தனக்கான அம்பாக மாற்ற முயன்ற செய்திகள் எல்லாம் கூட வெளி வந்தன. சமரச முயற்சிகள் கைகூடாத நிலையில் சந்தர்ப்பம் பார்த்து, தூக்கி உள்ளனர் சவுக்கு சங்கரை!

ஒரே வார்த்தை; சர்வாதிகாரத்தை தவிர்த்து, சட்ட பூர்வமாக அணுகுங்கள்!

சாவித்திரி கண்ணன்

அறம் இணைய இதழ்

 

 

Support Aram

நேர்மையான, வெளிப்படையான,

சுதந்திரமான இதழியலுக்கு தோள்

கொடுங்கள்.

UPI QR CODE

Razorpay Payment Gateway

Personal Info

Donation Total: ₹1,000.00 One Time