ஆரோக்கிய வாழ்க்கைக்கு அடித்தளமாகும் கிராம்பு!

-அண்ணாமலை சுகுமாரன்

தங்கத்தை விட மதிப்பு மிக்கது கிராம்பு! அதன் பின்னே இருக்கும் நெடிய  வரலாறும், மருத்துவ குணங்களும் பிரமிக்கதக்கவை! பழந்தமிழர் தமிழர் காலந்தொட்டு பயன்படும் மூலிகை!  இது ஆரோக்கிய வாழ்க்கைக்கு இன்றியமையாதது! இது சமையலுக்கு மட்டுமல்ல, பலவிதமான நோய்களை தீர்க்கும் சர்வ ரோக நிவாரணி! 

கிராம்பைத் தெரியாதவர் உண்டோ ? இது இந்தோனேசியாவில் தோன்றிய தாவரம் எனக் கூறப்படுகிறது எனினும், பெருவாரியாக இந்தியாவிலும், இலங்கையிலும் பயிரிடப்படுகிறது. இந்தியாவில் தமிழ்நாடு, கேரளம், வடகிழக்கு மாநிலங்களில் அதிகம் விளைகிறது.

கிராம்பு ஒரு நறுமண மூலிகையாகும். சமையல்களில் சுவை சேர்க்கவும் பதப்படுத்தவும் பயன்படுகிறது. அசைவ சமையலில் கிராம்பின் பங்கு  மிகுதியானது. கிராம்பு (இலவங்கம்) Syzygium aromaticum) ஒரு மருத்துவ மூலிகை.

ஒவ்வொரு வீட்டின் சமையல் கூடங்களிலும் சீரகம், சோம்பு, கடுகு, வெந்தயம், பட்டை, கிராம்பு, ஏலம் என ஒரு மருத்துவக் களஞ்சியமே அடங்கியிருக்கும். இவற்றை அன்றாட உணவில் சேர்த்து சாப்பிடும் நாம் அதன் மருத்துவ பயன்களைப் பற்றி ஏனோ அதிகம் தெரிந்து கொள்ளவில்லை.

ஆனால், நம் முன்னோர்கள் இவற்றைப் பற்றி நன்றாக தெரிந்திருந்ததால் தான் அவற்றை தினமும் உபயோகப்படுத்தவே இவற்றை சமையலறையில் உள்ள அஞ்சறைப் பெட்டியில் வைத்தார்கள்.


இது மூலிகை வகையில் சாதுர் சாதம் எனப்படும் சாதுர் சாதம் என்பது ஏலம், இலவங்கம், இலவங்க பட்டை, சிறு நாகப்பூ எனும் நான்கு மணமுள்ள பொருள்களைக் குறிக்கும். கிராம்புகளில் ஆன்டி ஆக்ஸிடன்ட்கள், வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் நிறைந்துள்ளன.
மேலும், பல ஆரோக்கிய நன்மைகளையும் கொண்டுள்ளது.
பாரம்பரிய தமிழ் மருத்துவம், சீன மற்றும் ஆயுர்வேத மருத்துவத்தில் பல்வேறு நோய்களுக்கு சிகிச்சையளிக்க அவை பயன்படுத்தப்படுகின்றன.
இது பாக்டீரியா எதிர்ப்பு பண்புகளைக் கொண்டது.
இது அழற்சி எதிர்ப்பு பண்புகளைக் கொண்டது.
இது சிறந்த வாய்வு நிவாரணி.
இது வயிற்றில் அமில உற்பத்தியை அதிகரித்து, தசை சுருக்கத்தை மேம்படுத்தும். இது பூஞ்சை எதிர்ப்பு சக்தியைக்  கொண்டது ..

சமையலில் மிளகும், கிராம்பும் சேராமல் அசைவ உணவு தயாரிக்க முடியாது என்ற நிலை ஒரு காலத்தில் இருந்தது. அப்போது நாம் அதிகம் பயன்படுத்தும் மிளகாய் கண்டு பிடிக்கப்படவில்லை . மிளகு, கிராம்பின்  இந்தியாவின் ஆதிக்கம் குறைக்கவே,  ஐரோப்பியர்களால், மிளகாய் அதிகம் புழக்கத்தில் கொண்டுவரப்பட்டது.

பண்டைய காலத்தில் ரோமானியர்கள் தங்களின் தங்கத்தை தந்து மிளகை தமிழகத்தில் இருந்து வாங்கினர். நாகரீகத்தில் சிறந்து விளங்கிய, செல்வ செழிப்பு கொண்ட ரோமானிய மக்கள் மிக அதிகமாக  மிளகையும், கிராம்பையும் பயன்படுத்துவதால், ரோமானிய நாட்டின்  தங்கம் மிகுதியாக தமிழ்நாட்டிற்கு போவதாக வருந்தியதாக,ரோமானிய வரலாற்று குறிப்புகள் உள்ளன.


கிராம்பு அதன் காரமான மற்றும் மசாலா சுவைக்காக அறியப்பட்ட ஒரு பிரபலமான வணிகப் பொருளாகும். இது Syzygium aromaticum எனும் மரத்தின் உலர்ந்த பூ மொட்டுகளிலிருந்து பெறப்படுகிறது.

இயற்கை வரலாறு எனும் பண்டைய   புத்தகத்தில் ( 70 கி மு ,CE), ரோமானிய எழுத்தாளர் பிளினி தி எல்டர் (23-79 CE) கிராம்புகளை காரியோஃபிலோம் எனப்படும் ஒரு தானியமாக விவரித்தார்! இது மிளகை விட பெரியது மற்றும் உடையக் கூடியது மற்றும் இந்திய  மரத்தில் வளரும். கிராம்பு வாசனைக்காக இறக்குமதி செய்யப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

தென் கிழக்கு ஆசிய நாடுகளின் தீவுகளில் கிராம்பு அதிகம் விளைந்தது. எனவே தான், சாவகம் சுமித்ரா தீவுகள், கடாரம் போன்றவை தங்கள் ஆதிக்கத்தில் இருக்குமாறு  பண்டைய தமிழ் மன்னர்கள் பார்த்துக் கொண்டனர். அங்கிருந்து  கிராம்பு, இலவங்கம் போன்ற நறுமண பொருள்களையும், சேர நாட்டின் மிளகையும், பூம்புகார் வழியே ஏற்றுமதி செய்த  வளமான, வணிகச் சிறப்பு காலத்தை சங்ககால,பட்டினப்பாலை விவரிக்கிறது .

மருத்துவப் படிப்பு இஸ்லாமிய அறிஞர்களின் முக்கிய மையமாக இருந்தது. முஸ்லீம் மருத்துவர்களின் ஆய்வுகளின் அடிப்படையில், நோய்கள் என்பது  உடல் சமநிலையின்மையின் விளைவு என்று நம்பினர், மேலும் ஜாதிக்காய் மற்றும் கிராம்பு உள்ளிட்ட மூலிகைகள் மற்றும் மசாலாப் பொருட்களின் சரியான சமநிலையை உணவில் கொண்டிருந்தால், இந்த ஏற்றத் தாழ்வுகளை மீட்டெடுக்க முடியும் என நம்பினார்கள்.

புகழ்பெற்ற அரபு மருத்துவர் ஐசக் இபின் அம்ரானால் எழுதப்பட்ட 9 ஆம் நூற்றாண்டின் மருத்துவ நூல்களில் இந்த மசாலாப் பொருட்கள் முக்கிய பங்கு வகித்தன. அரபு மொழியில் எழுதப்பட்ட மற்றும் ஹீப்ரு, லத்தீன் மற்றும் ஸ்பானிஷ் மொழிகளில் மொழி பெயர்க்கப்பட்ட அவரது படைப்புகள், இடைக்கால ஐரோப்பாவின் மருத்துவ பாடத்திட்டத்தின் அடித்தளமாக மாறியது.

உணவு தயாரிப்பில் கிராம்பு மற்றும் ஜாதிக்காயை அதிகம் பயன்படுத்தியவர்கள் அரேபியர்கள். உண்மையில், மசாலாப் பொருட்கள் அவற்றின் நறுமணம் மற்றும் மருத்துவ குணங்களுக்காகவும், உணவில் சுவையை மேம்படுத்துவதற்காகவும் மத்திய கிழக்கு முழுவதும் பெரிதும் பாராட்டப்பட்டன. பண்டைய கிரேக்க எழுத்தாளர், புவியியலாளர் மற்றும் வரலாற்றாசிரியர் ஹெரோடோடஸ், கிமு 5 ஆம் நூற்றாண்டில் அரேபியாவின் மசாலாப் பொருட்கள் பற்றி எழுதினார், “முழு நாடும் அவற்றால் வாசனை வீசுகிறது, மேலும் ஒரு அற்புதமான வாசனையை வெளியேற்றுகிறது” (வரலாறுகள், புத்தகம் III). அதாவது, அரபியர்களும் தமிழ் நாட்டின் நறுமண பொருகளை அதிகம் சார்ந்து இருந்தனர் என்பது தெரிகிறது.


தென்னிந்தியாவின் பண்டைய சோழ இராச்சியம் தென்கிழக்கு ஆசியா உட்பட பல்வேறு பகுதிகளுடன் விரிவான கடல் வணிகத் தொடர்புகளைக் கொண்டிருந்தது. மிளகு, ஏலக்காய், இலவங்கப்பட்டை, இஞ்சி மற்றும் மஞ்சள் போன்ற மசாலாப் பொருட்களை ஏற்றுமதி செய்து, சங்க காலத்தில் ரோமானியப் பேரரசுடன் தமிழ்நாடு ஒரு செழிப்பான வர்த்தகத்தைக் கொண்டிருந்தது.

சரி  ! இத்துடன் வரலாற்றை நிறுத்திக் கொண்டு , கிராம்பின் மருத்துவ பண்புகளைக் காணலாம் .

கிராம்பில் கார்போ ஹைட்ரேட், ஈரப்பதம், புரதம், வாலடைல் எண்ணெய், கொழுப்பு, நார்ப்பொருள், மினரல், ஹைட்ரோகுளோரிக் அமிலச் சாம்பல்கள், கால்சியம், பாஸ்பரஸ், தயமின், ரிபோ பிளேவின், நயாசின், வைட்டமின் சி மற்றும் ஏ போன்றவை உள்ளன.


கிராம்பின் மொட்டு, இலை, தண்டு போன்றவற்றிலிருந்து எண்ணெய் எடுக்கப்படுகிறது. நாம் அன்றாடம் பயன்படுத்தும் பற்பசைகளில் கிராம்பு சேர்க்கப்படுகிறது. இதிலிருக்கும் சுறுசுறு தன்மையானது வாய்க்கு புத்துணர்வைக் கொடுக்கிறது.கிராம்பு தைலம் பல்வலிக்கு கைகண்ட மருந்து .

இதன்  முக்கிய செய்கைகள்

• இசிவகற்றி
• அகட்டுவாய்வு அகற்றி
• பசித்தூண்டி

இதற்கு அஞ்சுகம், உற்கடம், கருவாய்க் கிராம்பு, சோசம், திரளி, வராங்கம் என்ற பல பெயர்களும் தமிழில் உண்டு.

Tamil               – Kirambu
English           – cloves tree
Sanskrit           – Lavanga
Telugu             – Lavangamu
Malayalam     – Krambu
Hindi               – Laung
Botanical name – Syzygium aromaticum

“பித்த மயக்கம் பேதியொடு வாந்தியும்போம்
சுத்த விரத் தக்கடுப்புத் தோன்றுமோ மெத்த
இலவங்கங் கொண்ட வருக் கேற் சுகமாகும்
மலமங்கே கட்டுமென வாழ்த்து.
சுக்கிலநட் டங்கர்ண சூர்வியங்க லாஞ்சனந்தாட்
சிக்கல்விடாச் சர்வா சியப்பிணியுமக்குக்குட்
டங்கப் பவோடு தரிபடருந் தோன்றிலில்
வங்கப்பூ வோடுரைத்து வா”

– என்கிறது அகத்தியர் குணபாடம்

பல் வலி, தேள்கடி, விஷக்கடி, கோழை, வயிற்றுப் பொருமல், குதவழிக் காற்றோட்டம் போன்றவற்றைக் குணமாக்கப் பயன்படுகிறது. வயிற்றில் சுரக்கும் சீரண (Hcl) அமிலத்தைச் சீராக்கும். ஜீரண உறுப்புகளில் சுரக்கும் நொதிகளை ஊக்குவிக்கும். இதனால் ஜீரணக் கோளாறுகள் நீங்குகின்றன.

இரத்தத்தை நீர்த்துப் போகச்செய்யும், இரத்தத்திலுள்ள கொழுப்பைக் குறைக்கும்.

வாயில் ஏற்படும் துர் நாற்றத்தைப் போக்க உதவும். உடலைப் பருமனடையச் செய்யவும், வளர்ச்சிதை மாற்றப் பணிகளுக்கும், சூட்டைச் சமப்படுத்தவும், இரத்த ஓட்டத்தை முறைப்படுத்தவும் உதவும்.

பித்தம் அதிகம் உள்ளவர்கள் தினமும் ஒன்று அல்லது இரண்டு கிராம்பை வாயில் போட்டு மெதுவாக மென்று சாறு இறக்கினால், பித்தம் குறையும்.

கிராம்புப் பொடியை வறுத்து அரை கிராம் தேனில் குழைத்து சாப்பிட்டால் வாந்தி நிற்கும்.


நான்கு கிராம் கிராம்பை மூன்று லிட்டர் தண்ணீரில் போட்டு அரை பங்காக சுண்டும் அளவிற்கு கொதிக்க வைத்துப் பருகினால் காலரா குணமடையும்.

சிறிது சமையல் உப்புடன் கிராம்பை சப்பிச் சாப்பிட்டால் தொண்டை எரிச்சல், கரகரப்பு நீங்கி தொண்டை சரியாகும். தொண்டை அடைப்பால் ஏற்படும் எரிச்சலைத் தவிர்க்க, சுட்ட கிராம்பு மிகச் சிறந்தது.

கிராம்பு எண்ணெய் மூன்று துளியுடன் தேன் மற்றும் வெள்ளைப் பூண்டுச் சாறு சேர்த்து படுக்கைக்குப் போகும் முன்பு சாப்பிட ஆஸ்துமாவால் ஏற்படும் சுவாசக் குழல் அழற்சி சரியாகும்.

முப்பது மில்லி நீரில் ஆறு கிராம்புகளைப் போட்டு கொதிக்க வைத்து அந்தக் கசாயத்தில் தேன் கலந்து குடித்தால் ஆஸ்துமா கட்டுப்படும்.

கிராம்புப் பொடியை பற்பொடியுடன் கலந்து பயன்படுத்தி வர, வாய் நாற்றம், ஈறு வீக்கம், பல்வலி ஆகியவை குணமாகும். கிராம்பு எண்ணெயை பாதிக்கப்பட்ட ஈறுகளில் தடவி வர குணம் கிடைக்கும்.

3-5 துளி நல்லெண்ணெயில் ஒரு கிராம்பை சூடு காட்டி, அந்த எண்ணெயை வலியுள்ள காதில் இட்டால் சுகம் கிடைக்கும். தசைப்பிடிப்புள்ள இடத்தில் கிராம்பு எண் ணெயைத் தடவி வர குணம் கிடைக்கும்.


கிராம்பு மற்றும் உப்பை பசும்பாலில் அரைத்து அந்தப் பசையைத் தடவினால் தலைவலி பறந்து விடும். தலையிலுள்ள நீரை உப்பு உறிஞ்சி எடுப்பதால் தலைபாரம் குறைந்து குணம் கிடைக்கிறது.

இவை பெரும்பாலும் ஊக்கு வித்தல், தூண்டுதல் உண்டாக்கும் பொருளாக உள்ளது. பல வலிகளைப் போக்குவதுடன் வயிற்றுப் பொருமல், குதவழிக் காற்றோட்டம் போன்றவற்றுக்கும் மிகச் சிறந்த நிவாரணி.

உடலைப் பருமடையச் செய்யவும், வளர்ச்சிதை மாற்றப் பணிகளுக்கு உதவவும், சுட்டை சமப்படுத்தவும், ரத்த ஓட்டத்தை முறைப்படுத்தவும் இது பலன் அளிக்கிறது.  ஜீரண உறுப்புகளில் சுரக்கும் நொதிகளை கிராம்பு ஊக்குவிக்கிறது. இதனால் ஜீரணக்கோளாறுகள் நீங்குகின்றன.

கிராம்புப் பொடியை வறுத்து அரை கிராம் தேனில் குழைத்து சாப்பிட்டால் வாந்தி நிற்கும். கிராம்பில் உள்ள விறைக்கப் பண்ணும் ஒரு பொருள் வயிற்றிலுள்ள சில உறுப்புகளை விரைப்படையச் செய்து வாந்தியைத் தடுக்கிறது.

நான்கு கிராம் கிராம்பை மூன்று லிட்டர் தண்ணீரில் போட்டு அரை பங்காக சுண்டும் அளவிற்கு கொதிக்க வைத்துப் பருகினால், காலரா குணமடையும்.

சிறிது சமையல் உப்புடன் கிராம்பை சப்பிச் சாப்பிட்டால், தொண்டை எரிச்சல், கரகரப்பு நீங்கி தொண்டை சரியாகும். தொண்டை அடைப்பால் ஏற்படும் எரிச்சலைத் தவிர்க்க, சுட்ட கிராம்பு மிகச் சிறந்தது.


கிராம்பு எண்ணெய் மூன்று துளியுடன் தேன் மற்றும் வெள்ளைப் பூண்டுச் சாறு சேர்த்து படுக்கைக்குப் போகும் முன்பு சாப்பிட ஆஸ்துமாவால் ஏற்படும் சுவாசக் குழல் அழற்சி சரியாகும்.

முப்பது மில்லி நீரில் ஆறு கிராம்புகளைப் போட்டு கொதிக்க வைத்து அந்தக் கசாயத்தில் தேன் கலந்து குடித்தால் ஆஸ்துமா கட்டுப்படும்.

கிராம்புப் பொடியை பற்பொடியுடன் கலந்து பயன்படுத்தி வர, வாய் நாற்றம், ஈறு வீக்கம், பல்வலி ஆகியவை குணமாகும். கிராம்பு எண்ணெயை பாதிக்கப்பட்ட ஈறுகளில் தடவி வர குணம் கிடைக்கும்.

3 துளி நல்லெண்ணெயில் ஒரு கிராம்பை சூடு காட்டி அந்த எண்ணெயை வலியுள்ள காதில் இட்டால், சுகம் கிடைக்கும்.  தசைப்பிடிப்புள்ள இடத்தில் கிராம்பு எண்ணெயைத் தடவி வர குணம் கிடைக்கும்.  கிராம்பு மற்றும் உப்பை பசும்பாலில் அரைத்து அந்தப் பசையைத் தடவினால் தலைவலி பறந்துவிடும். தலையிலுள்ள நீரை உப்பு உறிஞ்சி எடுப்பதால் தலைபாரம் குறைந்து குணம் கிடைக்கிறது.  கண் இமைகளில் ஏற்படக்கூடிய அழற்சிகளை போக்க கிராம்பை நீரில் உரசி அந்த நீரைப் பயன்படுத்தினால் குணம் கிடைக்கும்.


சொத்தைப்பல் மற்றும் பல் சம்பந்தப்பட்ட நோய்களுக்கு கிராம்பே உடனடி நிவாரணி. ஆகவே கிராம்பு சேர்க்கப்பட்ட பற் பசைகளையோ, பற் பொடியையோ பயன்படுத்த வேண்டும்.

வயிற்றில் புண் இருந்தால் வாயிலும் புண்கள் உண்டாகும். இவர்கள் கிராம்பை அரைத்து அதனுடன் தேன் கலந்து சாப்பிட்டு வந்தால் வாய்ப்புண், வயிற்றுப்புண் குணமாகும்.

கிராம்பை நீர்விட்டு அரைத்து நெற்றியிலும் மூக்குத் தண்டின் மீதும் பற்று போட்டு வந்தால் தலையில் கட்டிய நீர் இறங்கி, தலைபாரம் குறையும். ரசனையுள்ள தஞ்சைகாரர்கள் வெற்றிலையுடன் கிராம்பையும் சேர்த்து ஒருவித லயத்துடன்,போட்டுக் கொள்வார்கள்.
பாடகர்களுக்கும் தொண்டை கரகரப்பை நீக்கும். உடனடி நிவாரணி கிராம்பு.
இன்னமும் சொல்ல நிறைய இருக்கு! ஆனால், இத்துடன் நிறுத்திக் கொள்வோம் .

கிராம் பூ!  பெயரிலேயேத் தெரியும் இது ஒரு பூ –
ஆனால் தலையில் வைக்க முடியாத தலை சிறந்த பூ!

கட்டுரையாளர்; அண்ணாமலை சுகுமாரன்
‘நம்ம ஊரு மூலிகைகள்’ உள்ளிட்ட நூல்களின் ஆசிரியர்.

Support Aram

நேர்மையான, வெளிப்படையான,

சுதந்திரமான இதழியலுக்கு தோள்

கொடுங்கள்.

UPI QR CODE

Razorpay Payment Gateway

Personal Info

Donation Total: ₹1,000.00 One Time