நெடுஞ்சாலைகளில் மாயமாக மறையும் மரங்கள்!

-சாவித்திரி கண்ணன்

மாநகரமயமாக்கல், சாலை விரிவாக்கம், புதிய மேம்பாலங்கள் கட்டுதல்.. என்ற வகையில் சமீபகாலமாக தமிழகத்தில் சாலை இருபுறமும் இருந்த மரங்கள் பல்லாயிரக்கணக்கில் வெட்டப்பட்டு வருவதையும், இது தமிழக சுற்றுச் சூழலில் எப்படி மிக பாரதூரமான விளைவுகளை ஏற்படுத்துகின்றன என்பதையும் பார்ப்போம்;

இந்தியாவிலேயே நகரமயமாக்கலை மிக துரிதமாக செய்து வரும் மாநிலம் தமிழகம். பல சிறு நகரங்கள் மாநகரங்களாகி வருகின்றன. இதன் விளைவால் வரலாறு காணாத வகையில், சிறு நகரங்களை சுற்றி இருந்த கிராமங்கள், அவற்றின் நீர் நிலைகள், வயல்வெளிகள் ஆகியவை முழுங்கப்பட்டு வருகின்றன. இத்துடன் பன் நெடுங்காலமாக சாலையின் இருபுறமும் உள்ள எழில்மிகு குளிர் நிழல் தரும் மரங்கள் தொடர்ந்து வெட்டி வீழ்த்தப்பட்டு வருகின்றன! இரு வழிச் சாலைகள் நான்கு வழிச் சாலைகளாகவும், நான்கு வழிச் சாலைகள் ஆறுவழிச் சாலைகளாகவும் தொடர்ந்து விரிவாக்கம் பெற்ற வண்ணம் உள்ளன!

எந்த நடைமுறைகளையும் பின்பற்றாமல் சுற்றுச்சூழலைச் சீரழித்து, லட்சக்கணக்கான மரங்களை வெட்டி வீழ்த்தி, நூற்றுக்கணக்கான பாசனக் குளங்களை அழித்து, நான்கு அல்லது ஆறு வழிச்சாலை அமைக்கப்படுவது வளர்ச்சி என்ற பெயரால் நமக்கு நாமே செய்து கொள்ளும் தற்கொலையாகும். இப்படி தமிழகத்தின் நீர்வளங்களை மண்ணைப் மூடுவதாலும், மரங்களை வெட்டுவதாலும் வருங்காலத்தில் தண்ணீர் பஞ்சம் தலைவிரித்தாடும் நிலை உருவாகும். தமிழகம்  பாலைவனமாக மாறும் சாத்தியம் உருவாகும்.

சாலை விரிவாக்கம் என்ற பெயரில் 180 அடி முதல் 200 அடி அகலம் கொண்ட நெடுஞ்சாலைகளை அமைப்பது இயற்கையை சூறையாடும் அக்கிரமான செயலாகும். சாலை விரிவாக்கப் பணியால் பாசனக் குளங்கள் மூடி, நீர் நிலைகளை நிர்மூலமாக்கி வயிற்றுக்கு சோறிடும் விவசாயத்தை வீழ்த்துகிறார்கள்!

புவியியல் ரீதியாகக் தமிழ் நாட்டில் மன்னராட்சி காலங்களில் கிழக்கில் இருந்து மேற்காகச் சரிந்து காணப்படும் நிலத்தையும், தெற்கிலிருந்து வடக்காக சரிந்து காணப்படும் நிலத்தையும் கணக்கில் கொண்டு, ஒரு குளத்தை நிரப்பிய பின் அடுத்த குளத்தை நிரப்பும் வகையில் சங்கிலித் தொடர் போல் பல்லாயிரம் குளங்களுக்கு மழைத் தண்ணீர் வடிந்து செல்லும் வகையில் நீர் மேலாண்மையை திட்டமிட்டு செய்தனர் நம் முன்னோர்கள்! அவை அனைத்தையும் நவீன ஆட்சியாளர்கள் அழித்து வருகின்றனர். இனி மழை பெய்தாலும் கூட, சாலைகள் மூழ்குமே தவிர ஏரி,குளங்கள் நிரம்பாது.  நிலத்திற்குள் தண்ணீர் செல்லாது! ஆழ்துளை கிணறு வெட்டினாலும் தண்ணீர் கிடைக்காது.

படுவேகமான இயற்கை அழிப்போடு சட்டமீறலும் நடக்கிறது. அரசுக்குச் சொந்தமான இடத்தில் உள்ள மரங்களை வெட்டுவதற்காக ஏற்படுத்தப்பட்ட அனைத்து கட்டுப்பாடுகளும், நிபந்தனைகளும் மீறப்படுகின்றன! குறிப்பாக தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தின் மிகப் பெரிய ஒப்பந்ததாரரான லார்சன் அண்ட் டூப்ரோ என்ற கார்ப்பரேட் நிறுவனம் எந்த விதிமுறைகளையும் சிறிதளவும் பின்பற்றாமல் தமிழகத்தில் பல லட்சம் மரங்களை வெட்டி உள்ளது.

சாலை மேம்பாட்டுக்கு பணிக்காக ஒரு மரம் வெட்டினால், அதற்கு பதில் 10 மரக்கன்றுகள் நட வேண்டும் என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அதை பின்பற்றாவிட்டால் சாலை விரிவாக்கத்தின் போது மரங்களை வெட்ட வேண்டாம் என்றும் நீதிபதிகள் ஆவேசப்பட்டனர். அதனால், பல லட்சம் மரக்கன்றுகள் நடப்பட்டதாக அரசு ஆவணங்களில் செலவு கணக்கு மட்டும் எழுதி காட்டிவிடுகிறார்கள்!

நாகை விழுப்புரம் நான்கு வழிச்சாலை அமைக்கும் பணியானது நான்கு கட்டங்களாக பிரித்து நடைபெற்றது. அதன் முதல் கட்டம் சுமார் 56 கிலோ மீட்டர் தூரம் 2 ஆயிரத்து 5 கோடி மதிப்பில் நாகையிலிருந்து சட்டநாதபுரம் இடையே முடிந்தது. இரண்டாம் கட்ட பணியானது சட்டநாதபுரத்தில் தொடங்கி புண்டியங்குப்பம் வரையில் 56 கிலோ மீட்டர் தூரம் போடப்பட்டது. மூன்றாம் கட்ட பணியானது புண்டியங்குப்பம் பகுதியில் தொடங்கி, புதுச்சேரி வரையிலும், நான்காம் கட்ட பணியானது புதுச்சேரியில் தொடங்கி விழுப்புரம் வரையிலும் போடப்பட்ட வகையில் வெட்டப்பட்ட மரங்களுக்கு அளவே இல்லை.

நாகை – விழுப்புரம் நான்கு வழிச் சாலை

கோவையில் இருந்து மேட்டுப்பாளையம் வரையிலான நெடுஞ்சாலை தேசிய நெடுஞ்சாலை துறைக்கு உட்பட்ட சுமார் நாற்பது கிலோமீட்டர் தொலைவிலான சாலை போக்குவரத்து வசதிக்காக விரிவாக்கம் செய்து நான்கு வழி சாலையாக மாற்றப்பட்டதில் நூற்றுக்கணான மரங்கள் அழிக்கப்பட்டன!. இச்சாலையின் அகலம் அதிகரிக்கப்பட்டு விரிவாக்கம் செய்வதால் ரோட்டின் இருபுறமும் வளர்ந்து நிற்கும் பழமையான புளியன், வேப்பம், புங்கன் உள்ளிட்ட 700 க்கு மேற்பட்ட மரங்களை வெட்டி அகற்றப்பட்டதாக அவ்வூர் நக்கள் தெரிவிக்கின்றனர்.

கடலூர் -சேலம் தேசிய நெடுஞ்சாலை அகலப்படுத்தும் பணிகள் முழுவீச்சில் நடந்ததில் விருத்தாசலம் மணவாளநல்லூரில் இருந்து விருத்தாசலம் ரெயில்வே ஸ்டேசன் வரை 114 மரங்கள் வெட்டப்பட்டன!


கன்னியாகுமரி முதல் வாரணாசி வரை சாலை விரிவாக்கம் செய்யப்பட்ட போது, சாலையின் இரு பக்கங்களிலும் நின்றிருந்த 1.78 லட்சம் மரங்கள் வெட்டப்பட்டன.

இதற்குப் பதிலாக விரிவாக்கப்பணி முடிந்ததும் 10 லட்சம் மரக்கன்றுகள் நட்டிருக்க வேண்டும். ஆனால், நெடுஞ்சாலைத்துறை மரங்கள் நடவில்லை. இது நீதிமன்றத்தின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டு நிர்பந்தம் தரப்பட்டும் எதுவும் நடக்கவில்லை.

இது போன்ற மனு விசாரணைக்கு வருகின்ற போது உயர் நீதிமன்ற உத்தரவுப்படி நெடுஞ்சாலகளில் மரங்கள் நடப்படும் என நெடுஞ்சாலைத்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டு சமாதனப்படுத்தப் படுவதோடு விவகாரம் முடிவுக்கு வந்து விடுகிறது. அதன் பிறகும் மரங்கள் நடப்படுவது பெயரளவுக்கு சிறிது செய்து சமாளிக்கிறார்கள்.

திருவண்ணாமலை கிரிவலப் பாதையை வணிகமயப்படுத்த, பக்தர்களுக்கு சாலையின் இருபுறமும் நிழல் தந்த மரங்களை வெட்டும் முயற்சிகள் நடந்தன. பக்தர்களும், சுற்றுச் சூழல் ஆர்வலர்களும் பெரும் போராட்டங்கள் நடத்தியதால், அப்பாதையில் வெட்டுவதாக திட்டமிடப்பட்ட 365 மரங்கள் தப்பின.

நாமக்கல் மாநகராட்சியாக மாற்றப்படுவதை ஒட்டி, நாமக்கல் வரும் பாதைகளை விரிவுபடுத்தும் வகையில் நாமக்கல்- சேலம், நாமக்கல்- ஈரோடு, நாமக்கல் – கோவை ஆகிய பாதைகளில் இருந்த பல்லாயிரம் மரங்கள் வீழ்த்தப்பட்டு, சாலை மூளியாக காட்சியளிக்கிறது. சாலைகள் வெயிலால் தகிக்கின்றன! அதே போல சேலம் அரூர் திருப்பத்தூர், வாணியம்பாடி பாதை விரிவுபடுத்தப்பட்டு விழுங்கப்பட்டுள்ளன மரங்கள்!

சேலம் உளுந்தூர்பேட்டை சாலை விரிவாக்கமும் பல நூறு மரங்களை கவு வாங்கியுள்ளது. கோவையில் இருந்து சென்னை நோக்கி ஆத்தூர், சேலம்,கள்ளக்குறிச்சி வழியாக சென்னை வரும் சாலையும் விரிவாக்கம் என்ற பெயரில் இயற்கையை விழுங்கிக் கொண்டது. தருமபுரி – பாலக்கோடு சாலை நான்கு வழிச் சாலையாக்கப்பட்டத்தில் அதர்ம முறையில் மரங்கள் அழிக்கப்பட்டுள்ளன.

இது போல இன்னும் நிறைய பட்டியல் போட சலிப்பாக உள்ளது. வெட்டப்படும் மரங்களை ஈடுகட்ட எந்த அர்ப்பணிப்போ, அக்கறையோ இல்லாத அரசு அமைப்பில் நாம் வாழ்கிறோம்.

‘திட்டங்களை போடு, உலக வங்கிகளிடம் கடனை வாங்கு, கமிஷனை கறாராக வசூலித்து விடு’ என்பதே இந்த ஆட்சியாளர்களின் அணுகுமுறையாக உள்ளது. காண்டிராக்டர்களுக்கும், கமிஷன் பெறுபவர்களுக்குமான பேராசையின் விளைவால், பெரு வளர்ச்சி என்ற பெயரில், பேரழிவே நடந்தேறி வருகிறது. இது தமிழகத்தை வெப்ப பூமியாக மாற்றிவிடும்.

உஷ்ணம் அதிகரிப்பால் ஏற்படும் உடல் உபாதைகள், நோய்கள் சொல்லி மாளாது. ஏப்ரல்,மே,ஜுன், ஜுலை ஆகிய நான்கு மாதங்கள் மட்டுமே வெப்ப காலம் என்ற நிலை மாறி, ஏழெட்டு மாதங்களுக்கு வெயில் காலம் நீடிக்கலாம். எல்லாவற்றுக்கும் மேலாக தண்ணீர் வங்கிகளை சூறையாடி விடுவதால், வருங்காலத் தமிழகம் தண்ணீர் பற்றாக்குறையால் பாலைவன பூமியாகலாம். மக்கள் விழித்தெழுந்தால் மட்டுமே இதற்கு தீர்வு உள்ளது.

சாவித்திரி கண்ணன்

 

 

Support Aram

நேர்மையான, வெளிப்படையான,

சுதந்திரமான இதழியலுக்கு தோள்

கொடுங்கள்.

UPI QR CODE

Razorpay Payment Gateway

Personal Info

Donation Total: ₹1,000.00 One Time