கெஜ்ரிவாலுக்கு ஒரு நீதி, ஹேமந்த் சோரனுக்கு ஒரு நீதியா?

-ஹரி பரந்தாமன்

அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு கிடைத்த இடைக்கால ஜாமீன் ஹேமந்த் சோரனுக்கு கிடைக்கவில்லை. தலை நகர் டெல்லி முதல்வருக்கு கிடைத்த நியாயம் ஜார்கண்டின் பழங்குடித் தலைவருக்கு மறுக்கப்படுகிறது! இந்த விவகாரத்தில் உச்ச நீதிமன்றத்தின் அணுகுமுறையை அலசுவதே இந்தக் கட்டுரையின் நோக்கமாகும்;

நில மோசடியில்  தொடர்புடைய பணமோசடி வழக்கில் அமலாக்க இயக்குனரகத்தால் தான் கைது செய்யப்பட்டதற்கு எதிராக ஹேமந்த் சோரன், ஜனவரி 31 அன்று கைது செய்யப்பட்டார். உடனே அதனை எதிர்த்து அவர் உச்ச நீதிமன்றம் சென்றார். உச்ச நீதிமன்றம் அவரை ஜார்க்கண்ட்டில் உள்ள உயர் நீதிமன்றத்தை அணுகச்  சொல்லியது.

உடனே அவர் உயர் நீதிமன்றத்தை அணுகினார். பிப்ரவரியில் வாதங்களை கேட்ட  உயர் நீதிமன்றம், தீர்ப்பிற்காக வழக்கை ஒத்தி வைத்தது. இரண்டு மாதங்களுக்கு பிறகு, தேர்தல் காலகட்டத்தில் மே  3 அன்று ஹேமந்த் சோரனின் வழக்கை தள்ளுபடி செய்தது உயர் நீதிமன்றம். . மேலும், இடைக்கால ஜாமீன் கோரி அவர் தாக்கல் செய்திருந்த மனுவையும் உயர் நீதிமன்றம் அன்றைய தினமே தள்ளுபடி செய்தது.

இந்தச் சூழலில், இதை எதிர்த்து உடனே அவர்  மே 6 -இல் உச்ச நீதிமன்றத்தை அணுகினார். அவரது வழக்கு மே 13 அன்று விசாரணைத்து வந்தது.

ஹேமந்த் சோரன்

இந்நிலையில், ”டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவாலுக்கு ஜாமீன் வழங்கியதைப் போல எனக்கும் ஜாமீன் வழங்க வேண்டும். நானும் ஜார்க்கண்ட்டில் தேர்தல் பிரச்சாரம் மேற்கொள்ள வேண்டியுள்ளது” என்று அவர் தனது மனுவில் குறிப்பிட்டுள்ளார். இந்த வழக்கை, நீதிபதிகள் சஞ்சீவ் கண்ணா மற்றும் தீபங்கர் தத்தா ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரித்தது.

ஹேமந்த் சோரன் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் கபில் சிபல், “அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு வழங்கப்பட்ட உத்தரவுக்கு உட்பட்டது இந்த வழக்கு. தேர்தல் பிரசாரம் செய்ய எனது மனுதாரருக்கும் இடைக்கால ஜாமீன் தேவை” என வாதிட்டார்.

அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு இடைக்கால பிணை வழங்கியதற்கு உச்ச நீதிமன்றம் கீழ்க்கண்ட காரணங்களை கூறியது.

18 ஆவது மக்களவைக்கான பொதுத் தேர்தல் இப்போது இந்தியாவில்  நடைபெற்றுக் கொண்டு இருக்கிறது. பொதுத் தேர்தல் என்பது ஜனநாயகத்தின் உயிர் நாடி. அதில் சுமார் 70 கோடி வாக்காளர்கள் வாக்களித்து அடுத்த ஐந்தாண்டுக்கு ஒன்றிய அரசை தேர்ந்தெடுப்பர். அரவிந்த் கெஜ்ரிவால் ஒரு மாநிலத்தின் முதல்வர் மட்டுமன்றி ஒரு தேசியக் கட்சியின் தலைவர் என்றெல்லாம் காரணங்களை கூறி, அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு இடைக்காலப் பிணை வழங்கியது உச்ச நீதிமன்றம்.

மேலும், அரவிந்த் கெஜ்ரிவால்பேரில் கடுமையான குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டிருந்தாலும்  அவர் நீதிமன்றத்தால் இதுவரை தண்டிக்கப்படவில்லை. அவருக்கு எந்த குற்றப் பின்னணியும் இல்லை. ஆகவே, அவர் சமூகத்திற்கு ஆபத்தை விளைவிக்க கூடிய நபர் அல்ல போன்ற காரணங்களைக் கூறி, அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு இடைக்காலப் பிணை வழங்கியது உச்சநீதிமன்றம்.

அமலாக்கத்துறை ஒன்பது முறை அழைப்பு அனுப்பியும்,  அரவிந்த் கெஜ்ரிவால் ஆஜராகவில்லை என்ற குற்றச்சாட்டு உண்மை தான் என்றாலும் ,மேற் சொன்ன காரணங்கள் வலுவானதாக இருப்பதால் அவருக்கு இடைக்கால பிணை அளிக்கப்படுகிறது’’ என்றது உச்ச நீதிமன்றம்.


அரவிந்த் கெஜ்ரிவால்  வழக்கில் அவருக்கு இடைக்கால பிணை வழங்க உச்ச நீதிமன்றம் கூறிய  காரணங்கள் அனைத்தும் அப்படியே ஹேமந்த் சோரன் வழக்குக்கும் பொருந்தும் என்றும் , எனவே ஹேமந்த்  சோரனுக்கும் இடைக்காலப் பிணை வழங்க வேண்டும் என்று ஹேமந்த் சோரனின் வழக்கறிஞர் கபில் சிபல் வாதாடினார்.

மேற்சொன்ன காரணங்கள்  ஹேமந்த் சோரன் வழக்குக்கு பொருந்துமா? பொருந்தாதா? என்று உச்ச நீதிமன்ற நீதிபதிகள் தெளிவுபடுத்தாமலே, ’’

அமலாக்க இயக்குனரகத்தை விசாரிக்காமல் ஹேமந்த் சோரனுக்கு இடைக்கால ஜாமீன் வழங்க முடியாது என்று தெரிவித்து, வழக்கை மே 20-ஆம் தேதிக்கு பட்டியலிடுவதாகக் ’’ கூறினர்.

ஜார்க்கண்டில் 4 மக்களவைத் தொகுதிகளுக்கு மே13 அன்று வாக்குப்பதிவு நடைபெற்று முடிந்த நிலையில் மீதமுள்ள 10 மக்களவைத் தொகுதிகளுக்கான தேர்தல், மூன்று கட்டங்களாக மே 20, 25, ஜூன் 1 ஆகிய தேதிகளில் நடைபெறவுள்ளது குறிப்பிடத்தக்கது.

ஆகவே, சோரன் தரப்பில் ஆஜரான கபிள் சிபல் மற்றும் அருணாப் சவுத்ரி ஆகியோர், “அதற்குள் தேர்தல் முடிந்துவிடும். இந்த விவகாரத்தில் நீண்ட நாள் எடுத்துக் கொண்டால் அது அவருக்கு பாரபட்சம் காட்டுவதாக ஆகிவிடும். ஆகவே, குறைந்தபட்சம் வழக்கை மே 17 அன்றாவது விசாரிக்க வேண்டும் என்றும் உறுதிப்பட தெரிவித்தனர்.

மே 17 க்கு பின்னர்  உச்சநீதிமன்றத்திற்கு கோடை விடுமுறை என்பதால் மே 17 அன்று மிகக் கடுமையான பணிச் சுமை நீதிமன்றத்திற்கு இருக்கும் என்றும், எனவே வழக்கை  மே 20-இல்  கோடைகால அமர்விற்கு ஒத்தி வைப்பதாக உச்ச நீதிமன்றம் கூறியது.

”குறைந்தபட்சம் மே 17 அன்று விசாரிக்க கூட உச்ச நீதிமன்றம் தயாராக இல்லை என்றால், வழக்கை  வாபஸ் பெறுவதாகவும் அவருடைய கட்சிக்காரர் ஹேமந்த் சோரன் சிறையிலேயே இருக்கட்டும்’’ என்றும் கடுமையாக வழக்குரைஞர் கபில் சிபல் வாதாடிய பின்னரே வழக்கு மே 17க்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.


அமலாக்கத் துறையும், வருமான வரித்துறையும், சிபிஐயும்  எதிர்க்கட்சிகளை முடக்குவதற்கும், ஒடுக்குவதற்கும் பாஜக அரசு பயன்படுத்துகிறது என்கின்ற குற்றச்சாட்டுகள் வலுவாக முன் வைக்கப்படுகையில் ,குறைந்தபட்சம் உச்ச நீதிமன்றம்  அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு இடைக்காலப் பிணை வழங்கியது போல ஹேமந்த் சோரனுக்கும் வழங்கி இருக்க வேண்டும்.

தேர்தல் அறிவிக்கப்பட்டவுடன் மாநில அரசின் அனைத்து அமைப்பும் தேர்தல் ஆணையத்தின் கட்டுப்பாட்டுக்குள் இயங்கும் என்று சட்ட நிலை இருக்கையில், அதே நிலை ஒன்றிய அரசின் கட்டுப்பாட்டில் இருக்கும் அமைப்புகளான அமலாக்கத்துறை, வருமான வரித்துறை, சிபிஐ போன்றவற்றுக்கும் பொருந்தும். ஆனால், ஒன்றிய அரசின் கட்டுப்பாட்டில் இருக்கும் மேற் சொன்ன அமைப்புகள் எதிர்க்கட்சிகளை ஒடுக்கும் வேலைகளை தேர்தல் காலத்தில் கூட,  தொடர்ந்து செய்கின்றன . இந்த அமைப்புகளின் அழிச்சாட்டியங்களை கட்டுப்படுத்த உச்ச நீதிமன்றம் முன்வர வேண்டும்.

தகுந்த சாட்சியங்களோ, ஆவணங்களோ இன்றி பி. எம் எல் ஏ சட்டத்தின் கீழ் அமலாக்கத் துறையால் கைது செய்யப்பட்டு, சிறையில் வாடும் டெல்லியின் துணை முதல்வர் சிசோதியா 2023 பிப்ரவரியிலிருந்து இது வரை சிறையில் வைக்கப்பட்டுள்ளார். மணீஸ் சிசோடியாவைத் தொடர்ந்து, ஆம் ஆத்மி கட்சி நாடாளுமன்ற மேலவை உறுப்பினர் சஞ்சய் சிங், மற்றும் அமைச்சரும் முன்னணி தலைவருமான சத்யேந்திர குமார் ஜெயின் ஆகியோரும் இதே பண மோசடி குற்றத்திற்காக பி.எம்எல் ஏ. சட்டப் பிரிவுகளின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளனர். தெலுங்கானாவின் முன்னாள் முதல்வர் சந்திரசேகர ராவின் மகள் கவிதாவும் நீண்ட காலமாக அமலாக்க துறையால் சிறைவைக்கப்பட்டுள்ளார். இவர்கள் அனைவரும் எதிர்கொள்ளும் குற்றச்சாட்டும், அரவிந்த் கெஜ்ரிவால் எதிர் கொள்ளும் குற்றச்சாட்டும் ஒன்றே ஆகும். எனவே இவர்களுக்கும் கூட இடைக்கால பிணை வழங்க வேண்டும். ஐம்பது நாட்கள் சிறையில் இருந்த கெஜ்ரிவாலுக்கு பிணை கிடைக்கிறது என்றால், மாதக்கணக்கிலும், ஆண்டுக் கணக்கிலும் சிறையில் தள்ளப்பட்டிருக்கும் முக்கிய அரசியல் தலைவர்களுக்கு இடைக்கால பிணை மறுக்கப்படலாமா?

ஜார்க்கண்டில் வெறும் 14 மக்களவை  தொகுதிகளுக்கான தேர்தலை நான்கு கட்டமாக இழுத்தடித்து நடத்துகிறது தேர்தல் ஆணையம் ! எவரின் சவுகரியத்திற்காக இம்மாதிரியான தேர்தல் அட்டவணையை தேர்தல் ஆணையம்  அறிவித்துள்ளது என்பது  சொல்லாமலே விளங்கும். தேர்தல் ஆணையம் நடுநிலையுடன் செயல்படவில்லை என்ற குற்றச்சாட்டை புறந்தள்ளி விட முடியாது. இது போன்ற குற்றச்சாட்டுகள் நீதிமன்றங்களின் மீதும் வந்து விடக் கூடாது என்பதே நம் கவலையாகும்.

கட்டுரையாளர்; ஹரி பரந்தாமன்

முன்னாள் நீதிபதி

சென்னை உயர் நீதிமன்றம்

Support Aram

நேர்மையான, வெளிப்படையான,

சுதந்திரமான இதழியலுக்கு தோள்

கொடுங்கள்.

UPI QR CODE

Razorpay Payment Gateway

Personal Info

Donation Total: ₹1,000.00 One Time