ஊழல் குற்றச் சாட்டில் ஒழித்து விட முடியாத அரவிந்த் கெஜ்ரிவாலை அவர் கட்சி பெண் எம்.பியை புகார் தர வைத்து, நற்பெயரை கெடுக்க நினைக்கிறதா பாஜக? அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு ஏற்பட்டுள்ள அனுதாபத்தை சிதைக்கவா? ஸ்வாதிமாலிவால் என்பவர் யார்? உண்மையில் அவர் தாக்கப்பட்டாரா..? நடந்தது என்ன..?
அரவிந்த் கெஜ்ரிவால் வீட்டில் அக் கட்சியின் பெண் எம்.பி ஸ்வாதி மாலிவால் முதல்வரின் தனிச் செயலாளர் பிபவ் குமாரால் தாக்கப்பட்ட செய்தி பெரும் அதிர்வலைகளை உருவாக்கி உள்ளது. ”இது பாஜகவின் சதி” என்கிறது ஆம் ஆத்மி! சம்பவம் நடந்து ஐந்து நாட்களாகியும் கெஜ்ரிவால் மெளனம்! உண்மை என்ன?
அரவிந்த் கெஜ்ரிவாலால் ”பெண் சிங்கம்” எனப் பாராட்டப்பட்டவர் தான் ஸ்வாதி மாலிவால். ஐ.டி கிராஜுவேட்டான இவர் மிக இளம் பருவத்திலேயே பொது வாழ்க்கைக்கு வந்தவர். முதலில் கெஜ்ரிவாலின் பரிவர்த்தன் தொண்டு நிறுவனத்தில் அவரோடு இணைந்து களப் பணி ஆற்றியவர்! பற்பல மக்கள் பிரச்சினைகளுக்கு தெருவில் இறங்கி போராடியவர்! ஆம் ஆத்மியின் துவக்க கால இளம் தலைவர்! அண்ணா ஹாசாரே தலைமையில் கெஜ்ரிவால் ஊழலுக்கு எதிரான போராட்டங்களை முன்னெடுத்த போது, களத்தில் முன்னணியில் நின்றவர்.
பெண்கள் எங்கெல்லாம் பாதிக்கப்படுகிறார்களோ.., அங்கெல்லாம் சென்று களம் கண்டவர் என்பதால், ஆம் ஆத்மி கட்சி டெல்லியில் ஆட்சிக்கு வந்த பிறகு, இவருக்கு டெல்லி மகளிர் ஆணையத் தலைவர் பதவியைத் தந்தது. இவரும் மிகச் சிறப்பாக அதில் பணியாற்றி பெண்கள் பிரச்சினைக்கு முகம் கொடுத்தார் என ஊடகங்கள் புகழ்ந்தன! இதைத் தொடர்ந்து ஆம் ஆத்மியின் முதல் ராஜ்ய சபா எம்.பியாகவும் வாய்ப்பு பெற்றார் ஸ்வாதிமாலிவால்!
ஆக, இவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்தவர், தன் சமூக வலை தளப் பகுதியில், ‘மோடியின் மிகப் பெரிய அச்சுறுத்தல் அரவிந்த் கெஜ்ரிவால்’ என ஸ்டேட்டஸ் போட்டு இருந்தவர், இன்று ஆம் ஆத்மி கட்சிகாரர்களால், ”பாஜகாவின் ஆள்” எனக் குற்றம் சாட்டப்பட்டு இருக்கிறார்.
உண்மையில் என்ன நடந்தது என்று பார்ப்போம்.
கெஜ்ரிவால் ஜாமீனில் வெளிவந்த பிறகு மே 13 ஆம் தேதி காலை ஸ்வாதி மாலிவால் கெஜ்ரிவாலை சந்திக்க அவரது இல்லம் செல்கிறார். அப்போது அங்கு பாதுகாப்புக்கு இருந்த காவலர்கள் அப்பாயிண்மெண்ட் வாங்கி உள்ளீர்களா? எனக் கேட்க, இவர், ”இல்லை ஜஸ்ட் பார்த்துவிட்டு போக வந்தேன்” எனச் சொல்லி வலிந்து உள்ளே சென்றுள்ளார். அங்கு வரவேற்பரையில் உட்கார்ந்திருந்த ஸ்வாதி மாலிவாலிடம் அரவிந்த் கெஜ்ரிவாலின் தனிச் செயலாளர் அப்பாயிண்மெண்ட் இல்லாமல் வந்தது குறித்து கேள்வி எழுப்புகிறார். அனுமதி மறுக்கிறார். ஆனால், ”அவரை கண்டிப்பாக பார்த்துச் செல்வேன்” என பிடிவாதம் பிடிக்கிறார் ஸ்வாதி மால்வாலி!
இதனால் கோபம் அடைந்த அவரது உதவியாளரும், காவலரும் அவரை அங்கிருந்து வெளியேறும்படி கண்டிப்புடன் கூறுகின்றனர். அப்போது அதை மறுத்து அவர் அசையாமல் அங்கேயே உட்கார்ந்து காரசார விவாதத்தில் ஈடுபடுகிறார். பின்னர் வலுக்ககட்டாயமாக அவர் அங்கிருந்து காவலர்கள் சிலரால் வெளியேற்றப்படுகிறார். இவை தாம் இது வரையில் வெளியான சி.சி.டி.வி கேமரா பதிவில் இருந்து தெரிந்து கொள்ள முடிந்தவை;
இந்த சம்பவத்தன்று அரவிந்த் கெஜ்ரிவால் வீட்டில் இல்லை எனத் தெரிவிக்கப்படுகிறது! ”நல்ல வேளை கெஜ்ரிவால் வீட்டில் இல்லை. அவர் இருந்திருந்தால் அவர் மீதும் ஸ்வாதிமாலிவால் குற்றம் சாட்டி இருப்பார். ஸ்வாதி மாலிவால் டெல்லி மகளிர் ஆணையத் தலைவராக இருந்த போது சட்டத்திற்கு புறம்பாக சிலரை வேலைக்கு நியமித்த வகையில், அவர் பாஜகாவால் அச்சுறுத்தப்பட்டு, இப்படி புகார் செய்தார்’’ என்கிறது, ஆம் ஆத்மி தரப்பு.
இந்த விவகாரத்தில் இருந்து நாம் யூகித்தவற்றை இங்கே பகிர்கிறோம்.
கிட்டதட்ட இருபதாண்டு காலம் ஒரு கட்சித் தலைவரோடு இணைந்து பணியாற்றும் ஒருவர் முன் அனுமதி பெறாமல் வந்திருப்பதை பெரிய குற்றமாக கருத இடமில்லை. அவர் கெஜ்ரிவாலுக்கு கெட்ட பெயர் ஏற்படுத்த திட்டமிட்டு இருந்தால், அவர் இல்லாத நேரத்திற்கு அங்கு வந்து உட்கார்ந்திருந்தது எப்படி?
இந்த சம்பவத்தின் போது கெஜ்ரிவால் வீட்டில் இருந்தாரா? இல்லையா? என்பது உறுதிப் படவில்லை. இதை இது வரை யாருமே தெளிவுபடுத்தவில்லை.
ஒருவேளை கெஜ்ரிவாலுக்கு இவர் மீது முன் கூட்டியே அதிருப்தி இருந்திருக்க வாய்ப்பு உள்ளது. ‘கெஜ்ரிவால் சிறைக்கு சென்றவுடன் இவர் எந்த கட்சி வேலையும் செய்யாமல் அலட்சியம் காட்டினார்’ என உள்கட்சியில் குற்றச்சாட்டு உள்ளது. ‘அதனால் தான் சந்திக்க மறுத்திருக்கலாம்’ என யூகிக்க முடிகிறது. கெஜ்ரிவாலுக்கு ஸ்வாதிமாலிவால் மீது நல்லெண்ணமும், சுமுக உறவும் இருந்திருக்கும் பட்சத்தில் உதவியாளர் இவ்வாறு கடுமையாக நடக்க துணிந்திருக்க மாட்டார்.
அந்த சமயத்தில் வேறு எந்தப் பார்வையாளரும் முதல்வரின் இல்லத்தில் காத்திருக்காத பட்சத்தில் இவரை சந்திக்க கெஜ்ரிவால் மனைவி சுனிதாவும் கூட ஆர்வம் காட்டவில்லை. சமீபத்தில் தேர்தல் பிரச்சாரத்தில் தீவிரமாக ஈடுபட்டவர் தான் சுனிதா! ஒரு ராஜ்யசபா எம்.பி, டெல்லி மகளீர் ஆணையத் தலைவர் என்ற முக்கிய பொறுப்பில் உள்ள கட்சியின் ஆரம்பகாலத் தலைவரை வலுக்கட்டாயமாக வெளியேற்றவும், பலவந்தமாக பிடித்து இழுத்து வெளியே தள்ளுவதும் கெஜ்ரிவாலுக்கும், ஸ்வாதிமாலிவாலுக்கும் பரஸ்பர அதிருப்தி முன்பே இருந்திருக்க வாய்ப்புள்ளது என்றே யூகிக்க வைக்கிறது. இல்லையெனில், கெஜ்ரிவால் இண்டர்காமிலாவது, கைபேசியாலாவது பேசி, இன்னொரு நாளுக்கு அப்பாயிண்மெண்ட் தந்திருக்கலாம். ஒரு பெண் தலைவரான – ராஜ்ய சபா எம்.பியும், டெல்லி மகளிர் ஆணையத் தலைவருமான – ஸ்வாதிமாலிவாலை பொறுமையாக கையாண்டு, அமைதிப்படுத்தி போக வைத்திருக்கலாம்.
ஸ்வாதிமாலிவாலை பொறுத்த வரை மரியாதை இல்லாத இடத்தில் இருந்து அவர் கண்ணியமாக வெளியேறி இருக்க வேண்டும். உதவியாளர்கள், காவலர்கள் என்பவர்கள் கருவிகளே! அவர்களிடம் வாதம் செய்வதிலோ, பிடிவாதம் காட்டுவதிலோ கடுகளவும் பயனில்லை என்பது ஏன் அவருக்கு புரியாமல் போயிற்று!
மேலும், கன்னத்தில் ஏழட்டு முறை ஒருவர் ஓங்கி அறைந்திருந்தால் அவரது கன்னமும், காதும் கடும் பாதிப்புக்கு ஆளாகி இருக்கும். மேலும் மார்பிலும், வயிற்றிலும் தாக்கப்பட்ட ஒருவர் இயல்பாக வீட்டில் இருந்து வெளியேற முடியாது. ஆகவே, தனக்கு நடந்த சம்பவத்தை ஸ்வாதிமாலிவால் மிகைப்படுத்தி சொல்கிறார் என்பதே நிஜம். தன் தந்தையே தன்னிடம் சிறுவயதில் முறைகேடாக நடந்து கொண்டதாகச் சொல்லி பரபரப்பை ஏற்படுத்தியவர் தான் ஸ்வாதிமாலிவால். இதனை ஸ்வாதியின் கணவரே மறுத்து, ”இவள் பொய் சொல்கிறாள்” எனக் கூறியதும் கவனத்திற்கு உரியது. ஆக, ‘ஸ்வாதி பொய் பேச அஞ்சாதவர்’ என்பதும், ‘சுய விளம்பரப் பிரியை’ என்பதும் பரவலாக முன்பே அறியப்பட்டது தான்!
இந்த சம்பவம் நடந்த போதே காவல் துறைக்கு ஸ்வாதிமாலிவால் தொலை பேசியில் உதவி கேட்டுள்ளார்! பிறகு காவல் நிலையம் சென்று புகார் தராமல் வாய் மொழியாக புகார் தந்து, பிறகு புகார் தருவதாகக் கூறியுள்ளார். இதன் மூலம் கெஜ்ரிவால் தன்னை அழைத்து பேசுவார் என அவர் நினைத்திருக்க வாய்ப்புள்ளது. சமாதான அழைப்பிற்கு காத்திருந்த அவர், கடைசி வரை அழைக்கப்படவே இல்லை. ஆம் ஆத்மியின் மற்றொரு தலைவரான சஞ்சய்சிங் ஸ்வாதிவால்மாலி தாக்கப்பட்டதற்கு அனுதாபம் தெரிவித்து, ”இந்த விவகாரத்தில் தன் செயலாளர் மீது கெஜ்ரிவால் நடவடிக்கை எடுப்பார்” என பேசி இருந்தது கவனத்திற்கு உரியது.
இந்த விவகாரத்தில் இன்று வரை கெஜ்ரிவால் மெளனித்து இருப்பது ஏன் என்று புரியவில்லை. தன் உதவியாளரையும், ஸ்வாதிமாலிக்கையும் அவர் ஒருசேர உட்கார வைத்து பேசி சுமூக சூழலை உருவாக்கி இருக்கலாம். ஸ்வாதியை ஓரம்கட்ட விரும்பினால், அதை ராஜதந்திரமாக படிப்படியாக கையாண்டு இருக்கலாம். இதன் மூலம் இந்த விவகாரத்தை பாஜக கையில் எடுக்காமல் செய்திருக்கலாம்.
இதற்காகவே காத்திருந்தது போல, தேசிய மகளிர் ஆணையம் இதனை சூமோட்டோவாக எடுத்து விசாரிக்க தொடங்கியவுடன் பாஜக அரசியலாக்கி குளிர்காய ஆரம்பித்துவிட்டது. அப்போது கூட தன் உதவியாளரை மறைத்து வைத்து, பெண் அமைச்சர் அதிஷி மூலம் ஸ்வாதிமாலிவால் மீது புகார் பட்டியல் வாசிக்க வைத்துள்ளார் கெஜ்ரிவால். ஏன் கெஜ்ரிவாலின் உதவியாளர் ஓடி ஒளிந்தார்? கடைசியில் தற்போது கைதாகி உள்ளார். இதன் மூலம் தற்போது காவல்துறை கஸ்டடிக்கு தன் மிக நெருங்கிய உதவியாளரை தாரை வார்த்துள்ளார் கெஜ்ரிவால். காவல்துறை கட்டுப்பாட்டுக்கு சென்ற கெஜ்ரிவாலின் உதவியாளரிடம் அவர் குறித்த ரகசியங்களை எல்லாம் துருவி எடுத்து விடும் பாஜக அரசு. ஸ்வாதிமாலிவாலை அழைத்து பேசி இருந்தாலே, இந்த பிரச்சினை விஸ்வரூபம் எடுப்பதை கெஜ்ரிவால் தவிர்த்து இருக்கலாம்.
அத்துடன் முதல்வர் வீட்டில் உள்ள சி.சி.டி.வி கேமரா பதிவை முழுமையாக வெளிப்படுத்தாமல் ஒரு சிலவற்றை மட்டும் எடிட் செய்து வெளியிடுகிறது ஆம் ஆத்மி. தலைவர் கெஜ்ரிவால் தன் உதவியாளர் மீது கூட நடவடிக்கை எடுக்க முடியாதவர் என்றால், அவர் மீது மக்களுக்கு எப்படி நம்பிக்கை வரும்? ஒரு உட்கட்சிப் பிரச்சினையை எப்படி அணுகுவது என்பது தெரியாமல் சின்ன விவகாரத்தை பூதாகரமாக வளரவிட்டு, அவஸ்த்தைபடுகிறது ஆம் ஆத்மி தலைமை!
கெஜ்ரிவால் மற்ற ஆட்சியாளர்களை விட, நல்லாட்சி தருகிறார். அதிக நன்மை தரக்கூடிய – குறைந்த அளவிலான ஊழல் கொண்ட – ஒரு ஆட்சியை அவர் டெல்லி மக்களுக்கு தந்து நல்ஆதரவை பெற்றுள்ளார். ஆனால், கட்சியின் சக தலைவர்களை அவருக்கு எப்படி நடத்த வேண்டும் என்பது ஆரம்பத்தில் இருந்தே சரிவரத் தெரியவில்லை. அதனால் தான் ஏற்கனவே பிரசாந்த் பூஷன், யோகேந்திர யாதவ் போன்ற ஆகச் சிறந்த பல ஆளுமைகளை இழந்தார்! அதே தவறைத் தான் தற்போதும் தொடர்ந்து கொண்டுள்ளார்.
சாவித்திரி கண்ணன்
அரவிந்த் கெஜ்ரிவால் வீட்டிற்கு சுவாதி பாடிவால் எதற்கு வந்தார் என்பதே இன்றுவரை ஒருவருக்கும் தெரியவில்லை. ஒரு உயர்ந்த பதவியில் உள்ள சுவாதி கௌரவமாக வெளியேறியிருக்க அதை அவர் செய்யவில்லை. மேலும் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கும் இவருக்கும் இடையே உள்ள பிரச்சனை என்னவென்று தெரியவில்லை. இருவரில் எவரேனும் ஒருவர் வாய் திறந்தால் தான் நாட்டிற்கு நல்லதோ இல்லையோ அரவிந்த் கெஜ்ரிவாலின் தற்போதைய நிலைக்கும், அவருடைய எதிர்கால அரசியலுக்கும் நல்லது
வணக்கம் தோழர்
மிகவும் தெளிவான அரசியல் பதிவு
அறம் வாசிக்க கிடைத்தமைக்கு மகிழ்ச்சி
நன்றி