கொங்குமண்ணில் கொள்ளை போகும் இயற்கை வளம்!

-அஜிதகேச கம்பளன்

அதிமுக, திமுக என்ற இரண்டு ஆட்சிகளிலும் தொடர்ந்து தமிழகத்தின் இயற்கை வளங்கள் சூறையாடப்பட்டு வருகின்றன! இதற்கு சர்வ கட்சி ஒத்துழைப்பும் உள்ளது. திருடப்படும் திருப்பூர் மாவட்ட இயற்கை வளங்கள் குறித்தும், கொள்ளை போகும் கோவை மாவட்ட இயற்கை வளங்கள் குறித்தும் பார்ப்போம்;

மலைகள் தான் மனித சமூகத்திற்கு மகத்தான கொடைகளை வழங்கி வருகின்றன! நாம் குடிக்கும் தண்ணீர், விவசாயத்திற்கான பாசனத் தண்ணீர், தூய்மையான காற்று, பல்லுயிர் பெருக்கம், அரிய மரங்கள், மூலிகைகள், பறவைகள், விலங்குகள்..என எத்தனையோ விலைமதிப்பில்லா பயன்கள்! ஆனால், கேவலம் கரன்சி நோட்டுகளுக்காக இந்த இயற்கை அன்னையின் தாய்மடி களவாடப்படுகிறது.

திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே, ஆனைமலை புலிகள் காப்பகம், மேற்கு தொடர்ச்சி மலையின் ஒரு பகுதியாக, 2,920 ஏக்கர் பரப்பளவில் ஜம்புக்கல் மலைத் தொடர் அமைந்துள்ளது. தம்புரான் கோவில் மலை, துருவத்து கோட்டை மலை, வரையாட்டு கரடு, சாத்துவார் ஓடை மலை, தேக்கங்காடு என 10க்கும் மேற்பட்ட சிறிய அளவிலான மலைகள் சூழ்ந்துள்ள பசுமை கொஞ்சிய இந்த பூமி தற்போது சிறுகச் சிறுக பாலைவனமாகி வருகிறது. இம் மலைத் தொடர், அமராவதி ஆற்றுக்கு நீர் வரத்தாகவும், சிறிய ஓடைகள் ஓடவும் காரணமாயிருந்தது.

முன்பெல்லாம் ஆண்டியகவுண்டனுார், எலையமுத்துார், செல்வபுரம் உள்ளிட்ட மலையடிவாரத்திலுள்ள, 18 கிராம மக்கள், ஆடு, மாடு மேய்த்தும் வந்தனர். காலப்போக்கில் உருவான வறட்சியால் மக்கள் செல்வது குறைந்தது.

இந்தச் சூழலைப் பயன்படுத்தி அரசியல் செல்வாக்குள்ள வசந்தகுமார் என்ற நபர் ஒட்டுமொத்த மலையையும் ஆக்கிரமித்து, பல்லாயிரக்கணக்கில் மரங்களை வெட்டி அழித்து, துவம்சம் செய்து வருகிறார். சகல அரசியல் கட்சிகளும் இதில் சம்பந்தப்பட்டுள்ளன. இது குறித்து பொதுமக்களும், விவசாயிகளும் பல முறை மனு அளித்தும், போராட்டம் நடத்தியும் தடுக்க முடியவில்லை. மலைப் பகுதியில், 50 முதல் 80 அடி அடி அகலம் வரை பாதை அமைத்து , சுமார் 100 கி.மீ., தூரத்திற்கு அடர்மரங்களை அழித்து, மலைகளை உடைத்து  இதுவரை, ஆயிரம் ஏக்கருக்கும் அதிகமான காட்டுப்பகுதி துவம்சம் செய்யப்பட்டுள்ளது.

யார் கொடுத்த அதிகாரம்..?  தடுப்புவேலி அமைத்து தடுக்கப்பட்டுள்ள மலைப் பகுதி!

பிரம்மாண்ட ஜே.சி.பி இயந்திரங்கள், கிட்டாச்சி இயந்திரங்களைக் கொண்டும், வெடி வைத்து தகர்த்தும் மலைப் பகுதி தரைமட்டமானதோடு, பள்ளத்தாக்கவும் மாறிவிட்டது. அமராவதி ஆறு மற்றும் மலையடிவாரத்திலுள்ள குளங்களுக்கு வரும் நீர் வழித்தடம் பாதிப்படைந்துள்ளன!

இதனால், கன மழை ஏற்படும் நேரங்களில் மலையின் பெரும்பகுதி நிலத்தில் மண் அரிப்பால், மலையடிவாரத்தில் உள்ள, பேச்சியாத்தாள் முடக்கு குட்டை, சில்லுாத்து குளம் உள்ளிட்ட குளம், குட்டைகளில், பல அடிகள் உயரத்திற்கு மண் தேங்கி, நீராதாரங்கள் மூடப்பட்டுள்ளன. இதில் கன்னிமார் ஓடை போன்ற ஓடைகளின் குறுக்கே கட்டப்பட்டிருந்த தடுப்பணைகள் கூட தப்பிக்கவில்லை. தற்போதைய கோடை மழை வெள்ளத் தண்ணீர் முழுவதும் வீணாகியது. பசுமையான மலைத் தொடரில் பல ஆண்டுகளாக கனிம வளக்கொள்ளை தொடர்கிறது.

மேலும், மலையைச் சிதைத்து வழித்தடங்கள் அமைத்ததில் காப்புக் காடுகள் அழிந்து விட்டன! மரங்கள் வெட்டப்பட்டது மட்டுமன்றி, எரிக்கப்பட்டுள்ளன! ஒட்டுமொத்த மலையையும் அழிக்கும் வகையில்,  இங்கே கனிம வளங்கள் கொள்ளை போய்க் கொண்டுள்ளன.

முன்னோர் மலைகளை பாதுகாக்கும் வகையில், பல நுாற்றாண்டுகளுக்கு முன் கட்டிய ஜம்புலிங்கேஸ்வரர் கோவில், தம்புரான் கோவில் இன்று களையிழந்து உள்ளன. மலை உச்சியில் விளக்கு மாடங்களுடன் கூடிய குளம், புராதன சிலைகள்,  தொல்லியல் சின்னங்கள் தொலைந்த வண்ணம் உள்ளன!

மேட்டுப்பாளையம் அருகே பவானி ஆற்றங்கரையோரம் கிராவல்கள் ஏற்படுத்தி மலைகளை விழுங்கி, ஆற்றோட்டத்தை நிலைகுலையச் செய்து பல்லாயிரம் கோடிகள் சம்பாதிப்பதில் ஆர்வம் காட்டும் முன்னாள், இன்னாள் ஆட்சியாளர்கள் பல தலைமுறைகள் பார்த்து, அனுபவித்து பரவசப்பட்ட இயற்கை வளத்தை அடுத்த தலைமுறைக்கு இல்லாமல் அழித்து வருகின்றனர்.

கொள்ளை போகும் கோவை மாவட்ட இயற்கை வளங்கள்!

அதிமுக, திமுக என இரு ஆட்சிகளிலும் கோவை மாவட்டத்தில் இருந்து நாள்தோறும் கனிம வளங்கள் கர்ண கொடூரமாக வெட்டி எடுக்கப்பட்டு ஆயிரத்திற்கு மேற்பட்ட லாரிகளில் கேரளாவுக்கு கொண்டு செல்லப்படுகிறது.

இயற்கை சூழல் நிறைந்த கோவை மாவட்ட வனப்பகுதியின் நெருக்கத்தில் உள்ள ஆனைமலை, பொள்ளாச்சி, கிணத்துக்கடவு, மதுக்கரை,  சூலூர், தொண்டாமுத்தூர், காரமடை, பெரியநாயக்கன்பாளையம் ஆகிய பகுதிகளில் கனிம வளங்கள் தொடர்ந்து சூறையாடப்பட்டு வருகின்றன. கல், ஜல்லி, மண், எம்-சேண்ட், கிராவல் மண் உள்ளிட்ட கட்டுமான பணிகளுக்கு பயன்படுத்தப்படும் கனிம வளங்கள் இந்தப் பகுதிகளில் தாறுமாறாக வெட்டி எடுக்கப்பட்டு கேரளாவுக்கு கடத்தப்படுகின்றன.

கோவை மாவட்ட கிணத்துக்கடவு, பொள்ளாச்சி, ஆனைமலை தாலுகாக்களில் முத்தூர், பெரும்பதி, செட்டிபாளையம், காரச்சேரி, தேகானி, கோதவாடி, அரசம்பாளையம் பொட்டையாண்டி புரம்பு, வீரப்ப கவுண்டனூர், சொக்கனூர், புரவி பாளையம், வழுக்குப்பாறை…  போன்ற பகுதிகளில் சிறுமலைகள் சின்னாபின்னப்படுத்தப்பட்டு எம்சாண்ட் எடுக்கப்படுகிறது. இங்கே காலக்கெடுவைக் கடந்தும் ஏராளமான கல் குவாரிகள் அரசியல்வாதிகள், அதிகாரிகள் கூட்டுறவால் இயங்கி வருகின்றன.

சிறு மலைகள் சிதைக்கப்பட்டு பாறைகள் களவாடப்பட்டதால் வன விலங்குகளின் வாழிடம் கேள்விக்குள்ளாகி அவை அருகி வருகின்றன. குவாரிகளின் பயங்கர வெடிச்சத்தம் சிறு மலைகளில் வசித்து வந்த பறவைகளின் இனப்பெருக்கத்தை இல்லாமலாக்கிவிட்டது.

கோவை மாவட்டத்தில் பெரிய அளவில் வெட்டி எடுக்கப்படும் கனிம வளங்கள் கேரளாவிற்கு தங்கு தடையின்றி கொண்டு செல்லப்படுகின்றன. இந்தக் கனிமவளச் சூறையாடலால்  கோவை மாவட்ட இயற்கை வளமே சூனியமாகி வருகிறது. விவசாய நிலங்களுக்கு செல்ல வேண்டிய நிலத்தடி நீர் கருங்கற்களின் பள்ளங்களில் தேங்கிடும். விவசாயத்தில் பயிரிடப்படும் பரப்பளவு  குறைந்து கொண்டே வருகிறது.  கோவையில் இருந்து கேரளாவுக்கு ஒவ்வொரு நாளும் கணக்குவழக்கற்ற கனிம வளம் லாரிகளில் ஏற்றிச்  செல்லப்படுகிறது. இந்த நிலை தொடர்ந்தால் வெகுவிரைவில் கோவையிலுள்ள சகல நீர் வழித்தடங்களும் நிர்மூலமாகிவிடும். அதன் பிறகு விவசாயம் வீழ்த்தப்பட்டுவிடும். குளிர்தரு கோவை மாவட்டம் கொதிமிகு கோவையாகிவிடும்.

நொய்யலை நொண்டி எடுக்கும் மணல் மாபியாக்கள்;

கோவையின் ஜீவ நதியாக பார்க்கப்படும் நொய்யல் ஆறு உருவாகுமிடமான தொண்டாமுத்தூர் வட்டாரத்தில் உள்ள தொம்பிலிபாளையம் கூடுதுறை, விராலியூர், ஆட்டுக்காரன்கோவில் பள்ளம், வடிவேலாம்பாளையம் பள்ளம், ஆலாந்துறை ஆகிய பகுதிகள் ஆறு, வாய்க்கால், குளம், குட்டைகள் என நீராதாரங்கள் நிறைந்துள்ள மண்வளம் மிக்க செழிப்பான பூமியாகும். இதனால் இந்தப் பகுதியில் விவசாயம் செழுமையாக உள்ள நிலையில், இதை சீரழித்தே தீருவது என  இப்பகுதியில், டன் கணக்கில் மணல் அள்ளி இயற்கை வளங்களை சுரண்டுவது அதிகரித்துள்ளது.

இதை தடுக்கக் கோரிய விவசாயிகளின் குரல் அரசு நிர்வாகத்தால் அலட்சியப்படுத்தப்பட்டு வருகிறது. இந்த இயற்கை வளச் சுரண்டலால் நொய்யல் ஆற்றில்  நான்கடிக்கும் மேலாக சென்ற நீரோட்டம் தற்போது இரண்டடியாக குறைந்து செல்கிறது. காலப் போக்கில் இதுவுமற்று இத்துப் போவதற்குள் மக்கள் விழித்துக் கொண்டு போராட வேண்டும்.

சின்னாபின்னப்படும் சின்னாம்பதி!

இதே போல தமிழக – கேரள எல்லைப் பகுதியான கோவை சின்னாம்பதி மலை கிராமப் பகுதியில் விவசாய நிலங்களில் மிகப் பெரிய அளவில் (50 அடிக்கும் மேல்) பள்ளம் தோண்டி மண் எடுக்கப்பட்டு கேரளாவிற்கு மண் எடுத்துச் செல்லப்படுகிறது. இதனால் மலை  வனவிலங்குகள் நடமாடும் வனத்தை ஒட்டிய வழித்தடங்கள் தடைபட்டுள்ளது. நீர் வழிப்பாதைகள் தடைபட்டு, விவசாய நிலங்களுக்கான நிலத்தடி நீர் குறைந்து விவசாயம் பாதிக்கப்படுகிறது.

இயற்கைவளத்தை காப்பதற்கு விடுதலைப் போராட்டத்தைவிட வீரியமான மக்கள் போராட்டம் ஒன்று காலத்தின் தேவையாகும்.

கட்டுரையாளர்; அஜிதகேச கம்பளன்

 

Support Aram

நேர்மையான, வெளிப்படையான,

சுதந்திரமான இதழியலுக்கு தோள்

கொடுங்கள்.

UPI QR CODE

Razorpay Payment Gateway

Personal Info

Donation Total: ₹1,000.00 One Time