வி.கே.பாண்டியன் ஒடிசாவில் ஓங்கி வளர்ந்தது எப்படி?

-சாவித்திரி கண்ணன்

வி.கே.பாண்டியன்! ஒடிசா மாநிலத்தில் இவர் தான் பிரதமர் மோடி, அமித்ஷா ஆகியோரின் டார்கெட்! பாஜகவும், காங்கிரசும் ஒருசேர இவரைத் தாக்குகின்றன! காரணம், ஒரு ஐ.ஏ.எஸ் அதிகாரியாக இருந்தவர் இன்று மக்கள் தலைவராக பரிணமித்துள்ளார்! நிழல் முதல்வரா? ஒடிசாவின் மருமகனா? அல்லது வில்லனா?

ஒடிசாவில் மட்டுமின்றி, தற்போது அகில இந்திய அளவிலும் பெரும் பேசுபடு பொருள் ஆகியுள்ளார் தமிழரான வி.கே.பாண்டியன். கடந்த கால் நூற்றாண்டாக காலை நான்கு மணிக்கு எழுந்து ஓய்வு ஒழிச்சலின்றி மக்கள் பணியாற்றிய கலெக்டராக, அதிகாரியாக அறியப்பட்ட பாண்டியன் ஒடிசா மக்களின் பாசத்தையும், நேசத்தையும் மிகப் பெரிய அளவில் வென்றெடுத்து எப்படி மக்கள் தலைவராக தற்போது உருவாகியுள்ளார் என்பதை அலசுகிறது இந்தக் கட்டுரை;

வி.கே.பாண்டியன் மதுரை மேலூருக்கு பக்கத்தில் உள்ள சின்னஞ்சிறு  ஊரான கூத்தப்பன்பட்டியில் பிறந்தவர். 2000 ஆம் ஆண்டில் ஒரு ஐ.ஏ.எஸ் அதிகாரியாக ஒடிசாவில் பணியாற்றத் தொடங்கிய இவர் அந்த மாநிலத்தின் ஐ.ஏ.எஸ் அதிகாரியான சுஜாதாவை மணந்து கொண்டார்.

2002 ஆம் ஆண்டில், அவர் கலஹண்டி மாவட்டத்தில் உள்ள தரம்கரின் சப் கலெக்டராக நியமிக்கப்பட்டார். அங்கு விவசாயிகள் நிறைந்த இந்த மாவட்டத்தில் விவசாயிகளின் நீண்ட நாள் கோரிக்கையான குறைந்தபட்ச ஆதரவு விலையை (MSP)  செயல்படுத்துவதில் காட்டிய ‘சின்சியாரிட்டி’ அவருக்கு விவசாயிகளிடம் செல்வாக்கை பெற்றுத் தந்தது.

2004 இல், ரூர்கேலாவில் கூடுதல் மாவட்ட மாஜிஸ்திரேட்டாக இருந்த நிலையில், ரூர்கேலா மேம்பாட்டு முகமையில் மக்கள் பணத்தை முதலீடு செய்து திவாலாகிப் போன போது, பாண்டியன்  பொறுப்பேற்ற ஐந்து மாதங்களில், 20 ஆண்டுகளுக்கும் மேலாக காத்திருந்த மக்களுக்கு பணத்தை திருப்பித் தந்தது பெரும் சாதனையாக பார்க்கப்பட்டது.

அடிக்கடி புயல், மழை போன்ற இயற்கை சீற்ரங்களால் ஒடிசா பாதிக்கப்படும் போதெல்லாம் இவர் போர்க்கால வேகத்தில் நிர்வாகத்தை முடுக்கி மக்களை இன்னல்களில் இருந்து மீட்டது இவரை ஒடிசாவின் ஹீரோவாக்கியது!

2005ல், பழங்குடிகள் நிறைந்த மயூர்பஞ்ச் மாவட்ட ஆட்சியராக இருந்த காலத்தில் ஒற்றைச் சாளர முறையை மாற்றுத்திறனாளிகள் சான்றிதழ்களை வழங்குவதற்காக அறிமுகப்படுத்தியதில் பல்லாண்டுகள் காத்திருந்தோர் 19,000 பேருக்கு ஒரே ஆண்டில் சான்றிதழ் கிடைத்தது. இந்தப் பணி அவருக்கு இந்தியக் குடியரசுத் தலைவரிடமிருந்து தேசிய விருதைப் பெற்றுத் தந்தது. பின்னர், இதே அணுகுமுறை தேசிய அளவில் ஒரு முன்மாதிரியாக கொள்ளப்பட்டத்தில் ஹெலன் கெல்லர் விருது பெற்ற ஒரே ஐ.ஏ.எஸ் அதிகாரி என்ற சிறப்பை தந்தது.

இதைத் தொடர்ந்து முதல்வர் நவீன் பட்நாயக் பாண்டியனை தன் சொந்த மாவட்ட மக்களுக்கு பயன்படுத்த விரும்பி, கன்ஜம் மாவட்ட ஆட்சியராக்கினார். அப்போது நூறு நாள் வேலைத் திட்டத்தை மிக விரிவாக செயல்படுத்தி ஏழை, எளியோரின் வாழ்வாதாரத்திற்கு பேருதவி செய்தார்.

அதில் பணியாற்றிய விவசாயக் கூலிகளின் ஊதியத்தை நேரடியாக அவர்களின் வங்கிக் கணக்கில் சேர்க்கும் அணுகுமுறையை கையாண்டார். இந்த வகையில் 1.2 லட்சம் விவசாயக் கூலிகளுக்கு வங்கிக் கணக்குகளைத் தொடங்கி அவர்களின் வாழ்வாதாரத்தை உறுதிபடுத்தினார். இதனால், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை வாய்ப்பு உறுதித் திட்டத்தை நாட்டிலேயே சிறந்த முறையில் செயல்படுத்திய சிறந்த மாவட்டத்திற்கான NREGSக்கான தேசிய விருதை இரண்டு முறை பெற்றுள்ளார்.

முதல்வர் நவீன் பட்நாயக்குடன் வி.கே.பாண்டியன்.

இவ்வளவு செயல்பாடுகளையும் உன்னிப்பாக கவனித்து வந்த முதல்வர் நவீன்பட் நாயக் 2011 ஆம் ஆண்டில், பாண்டியனை தன் தனிச் செயலாளராக நியமித்தார். சுமார் 12 ஆண்டுகள், அதாவது  2023 வரை இந்தப் பதவியில் இருந் காலகட்டத்தில் முதல்வரின் உள்ளக் கிடக்கையை நன்கு புரிந்து கொண்டு அபாரமாக செயலாற்றிய வகையில், 2019 இல் முதல்வரின் சிறப்பு திட்டமான ‘மாற்றத்திற்கான முன்னெடுப்புகள்’ என்ற 5T யின் செயலாளராக நியமிக்கப்பட்டு, அனைத்து துறைகளிலும் தலையிடக் கூடிய அதிகாரம் பெற்றார். இந்த காலகட்டத்தில் தான், இவரை ‘நிழல் முதல்வர்’ என ஊடகங்களும், எதிர்கட்சிகளும் பேசத் தொடங்கின!

ஒடிசாவின் அனைத்து அரசு பள்ளிகளையும் தனியார் பள்ளிகளுக்கு இணையாக  தரம் உயர்த்தினார். முதல்வரின் கனவு திட்டமான  முதியோர்களுக்கு மாத ஓய்வூதியமாக ரூ. 1000, இளைஞர்களுக்கு ஆண்டு உதவித்தொகையாக ரூ. 10,000 போன்றவை சரியாத தங்கு தடையின்றி கிடைக்கச் செய்தார்.

பூரி ஜெகன்நாதரின் தீவிர பக்தரான பாண்டியன், 500 வருடங்களாக செயல்படுத்த முடியாதிருந்த ஜெகநாதர் கோயில் பாரம்பரிய வழித்தடத்தினை நடைமுறைப்படுத்தினார். இதன் மூலம் முதல்வர் நவீன் பட்நாயக்கிற்கு மக்கள் செல்வாக்கு பெருக காரணமானார். அது மட்டுமின்றி பாரபட்சமின்றி பூரி கோயிலுடன், மாநிலத்தில் உள்ள தேவாலயங்கள், மசூதிகள் பொலிவை பெற்றுத் திகழவும் நடவடிக்கைகளை மேற்கொண்டார்.

இளைஞர்களை உற்சாகப்படுத்தும் விளையாட்டு போட்டிகளை நடத்துவதில் வல்லவர் பாண்டியன். இந்த வகையில் இந்திய தேசிய ஹாக்கி அணி வெற்றி பெறக் கூடிய  உலகக் கோப்பையை சிறப்பாக ஏற்பாடு செய்து ஹாக்கியை மேம்படுத்துவதில் காட்டிய அர்ப்பணிப்பிற்காக பாண்டியன் சர்வதேச ஹாக்கி கூட்டமைப்பால் ஜனாதிபதி விருது பெற்றார்.

இந்தச் சூழலில் முதல்வர் நவீன் பட்நாயக்கின் விருப்பத்தின்படி 2023 இல், பாண்டியன் ஐ.ஏ.எஸ் பொறுப்பில் இருந்து விருப்ப ஓய்வு பெற்று,  முறைப்படி பிஜு ஜனதாதளத்தில் உறுப்பினராகி கேபினட் அமைச்சர் அந்தஸ்தைப் பெற்ற 5T என்ற மாற்றத்திற்கான முன்னெடுப்பின் தலைவரானார்.

இந்த ஆண்டில் மார்ச் தொடங்கி செப்டம்பர் வரை ஒடிசாவின் 147 தொகுதிகளையும் சுற்றி வந்து மக்களை சந்தித்து அவர்களோடு உரையாடல் நடத்தினார். இவரது பயணங்களும், மக்கள் சந்திப்பும், அவர்களின் பிரச்சினைகலை அறிந்து அவற்றை உடனுக்குடன் இவர் நிறைவேற்ற ஆணையிடுவதும் இவருக்கு மக்கள் மத்தியில் மிகப் பெரிய செல்வாக்கை வளர்த்தன. இவர் போகும் இடமெல்லாம் மக்கள் இவரை பெருந்திரளாக வரவேற்பதிலும், கைகுலுக்குவதிலும் ஆர்வம் காட்டுகின்றனர். இதனால் பாஜக, காங்கிரஸ் என்ற இரண்டு தேசிய கட்சிகளுமே பாண்டியனை தாக்குவதில் முனைப்பு காட்டத் தொடங்கின!

பாஜக எம்.பியான அபராஜிதா சாரங்க், ”தமிழரான பாண்டியன் ஒடிசாவின் நிழல் முதல்வராக செயல்படுவதை நாங்கள் வேடிக்கை பார்க்க முடியாது” என்றார்.

சப்தகி உல்கா என்ற காங்கிரஸ் எம்.பி, ”இவர் வருங்காலத்தில் ஒடிசாவின் முதல்வரானால் ஆச்சரியப்படுவதற்கில்லை” என்றார்.

ஆனால், பாண்டியனோ, ”நான் முதல்வர் நவீன் பாபுவின் கனவை நிறைவேற்றும் ஒரே லட்சியத்துடன் இருக்கிறேன். என்னை அவருக்கு வாரிசா? என்கிறார்கள்! ஆம், அவரது நற்பண்புகளுக்கு நான் வாரிசு அவ்வளவே” என்கிறார்.

‘ஒடிசாவில் பீஜு ஜனதா தளத்துடன் கூட்டணி வைத்து அதை படிப்படியாக விழுங்க திட்டமிட்ட பாஜகவின் செயல்பாட்டிற்கு முற்றுப்புள்ளி வைத்தவர் பாண்டியன் தான்’ என ஊடகங்கள் எழுதுகின்றனர். ‘பாஜகவிடம் இருந்து விலகி நிற்கும் தந்திரோபாயத்தை முதல்வரிடம் வலியுறுத்தி பாண்டியன் வெற்றி பெற்றார்’ என்கிறார்கள்! இதனால் தான் மோடி கோபப்பட்டு, ”பூரி ஜெகன் நாதர் கோவிலின் தொலைந்து போன சாவிகள் தமிழ்நாட்டில் உள்ளன” என ஒடிசா தேர்தல் பிரச்சாரத்தில் பேசி அதிரடியை கிளப்பி உள்ளார்.

வி.கே.பாண்டியன் மீது இது வரை அதிகாரபூர்வமாக ஊழல் குற்றச்சாட்டுகள் இல்லை. சொத்து சேர்த்தார் என்ற புகார்களோ, ஒடிசாவில் சம்பாதித்து தமிழ் நாட்டில் முதலீடு செய்துள்ளார் என்ற புகார்களோ இல்லை. அப்படியான புகார்கள் இவருக்கு முன்பாக முதல்வரின் செல்லப் பிள்ளையாக வலம் வந்து பின்னர் அதிரடியாக விலக்கி வைக்கப்பட்ட பியாரிமோகன் மகோபாத்ரா என்ற ஐ.ஏ.எஸ் அதிகாரி மீது உண்டு.

தற்போதைய நிலவரப்படி, இவர் ஒடிசாவில் பிரம்மச்சாரியான முதல்வர் நவீன்பட் நாயக்கிற்கு அடுத்தபடியான செல்வாக்குள்ளவர் என்பதே கள யதார்த்தம். ஓடிசாவின் கிராமங்கள் தொடங்கி நகரங்கள் வரை ஒவ்வொரு பகுதியிலும் பாண்டியனால் பலன் பெற்ற ஏராளமான மக்கள் அவரை கொண்டாடித் தீர்க்கின்றனர். குறிப்பாக பெண்களும், இளைஞர்களும் பாண்டியனை மிகவும் விரும்புகின்றனர். இதனால், அதிருப்தி அடைந்த பிஜு ஜனதாதளக் கட்சியின் முக்கியஸ்தர்கள் சிலர் கட்சியில் இருந்தே விலகியுள்ளனர். ‘இந்த மண்ணுக்கு சம்பந்தமில்லதவன் இங்கே எப்படி முக்கியத்துவம் பெறலாம்’ என்பது அங்கு பெரிய பேசுபடு பொருளான போதிலும், ஏறத்தாழ கால் நூற்றாண்டாக அங்கு தன் சேவையின் மூலம் மிக ஆழமாகவே காலூன்றியுள்ளார் பாண்டியன்.

இவரைப் போலவே, இவரைவிட சீனியரான மற்றொரு தமிழகத்தின் ஐ.ஏ.எஸ் கேடரான ஆர்.பாலகிருஷ்ணன் ஒடிசாவில் கூடுதல் தலைமைச் செயலாளராக சிறப்பாக பணியாற்றி ஓய்வு பெற்றும் தொடர்ந்து ஐந்தாண்டுகளுக்கும் மேலாக முதல்வரின் ஆலோசகராக செயல்படுகிறார்! தொல்லியல் ஆய்வாளரான ஆர்.பாலகிருஷ்ணனுக்கு தமிழ்நாட்டில் இருக்கும் தொடர்புகளும், நெருக்கமும் கூட பாண்டியனுக்கு இருப்பதாகத் தெரியவில்லை. எங்கே வாழ்கின்றாரோ, அந்த மண்ணுக்கும், மக்களுக்குமானவராக தன்னை கட்டமைத்துக் கொண்டார் பாண்டியன் என்றே சொல்லத் தோன்றுகிறது.

சாவித்திரி கண்ணன்

Support Aram

நேர்மையான, வெளிப்படையான,

சுதந்திரமான இதழியலுக்கு தோள்

கொடுங்கள்.

UPI QR CODE

Razorpay Payment Gateway

Personal Info

Donation Total: ₹1,000.00 One Time