மாநகராட்சிகளில் மக்கள் பங்கேற்பு வேண்டும்!

கிராமப்புற உள்ளாட்சிகளில் கிராம சபை நடத்தி, மக்களின் பங்கேற்புடன் திட்டங்கள் செயல்படுத்துவது போல நகராட்சிகள், மாநகராட்சிகளில் மக்கள் பங்கேற்பை உறுதிபடுத்த வார்டு சபை கூட்டங்களை நடத்த மறுப்பது ஏன்? உள்ளாட்சியை ஏன் வலுப்படுத்துவதில்லை?  Voice of People ஒருங்கிணைப்பாளர் சாரு கோவிந்தன் பேட்டி; 

உள்ளாட்சிகள் மக்களின் பங்கேற்புடன் தன்னாட்சி பெற்ற அமைப்புகளாக செயல்பட அரசியல் சட்டம் வழி வகுத்துள்ளது. கிராமப்புற உள்ளாட்சிகளுக்கு கிராம சபை நடத்துவது போல, நகர்ப்புற உள்ளாட்சிகளுக்கு பகுதி சபை, வார்டு சபை உள்ளன.  ஆனால், இவை சரி வர நடைபெறுவதில்லை. தேர்ந்தெடுக்கப்பட்ட மாநகராட்சி உறுப்பினர்களுக்கு கூட இதைப் பற்றிய விழிப்புணர்வு இல்லை. சென்னைப் பெருநகர நீர் வழங்கல் மற்றும் கழிவுநீர் வாரியம், சிஎம்டிஏ, சென்னை நதிகள் மறுசீரமைப்பு அறக்கட்டளை போன்றவை மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட உள்ளாட்சிகளின் கீழ் செயல்பட வேண்டும், நகர்புற வேலை வாய்ப்பு திட்டத்தில் பெண்களும் ஈடுபடும் வகையில் வேலைகளை உருவாக்க வேண்டும் என்கிறார் மக்களின் குரல் (Voice of People) ஒருங்கிணைப்பாளரான சாரு கோவிந்தன்.

நகராட்சி மன்ற பெண் உறுப்பினர்களின் வேலைகளை அவர்களது கணவர்களே செய்கிறார்கள் என்று சொல்லப்படுவது பற்றி…?

நகராட்சி, மாநகராட்சிகளின் தேர்ந்தெடுக்கப்பட்ட பதவிகளில் 50 % பெண்களுக்கு என சட்டம் வந்துவிட்டது. பல இடங்களில் பெண்கள் சுயேச்சையாக செயல்படுகிறார்கள். நன்றாகவே செயல்படுகிறார்கள். நகர்மன்ற கூட்டங்களில் சம்மந்தப்பட்ட பெண் உறுப்பினர்கள் தான் கலந்து கொள்ள முடியும், பேச முடியும் என்ற நிலை வந்துவிட்டது. இல்லையேல் செல் போன் படம் வழியாக அம்பலமாகும் நிலை ஏற்பட்டுள்ளது. பெண்களுக்கு நிர்வாகம் தெரியாது என்று ஆண்கள் தான் சொல்கிறார்கள். தேர்ந்தெடுக்கப்பட்ட பெண் உறுப்பினர்களுக்கு கேரளாவில் இருப்பது போல பயிற்சி அளிக்க வேண்டும். தேர்தல் முடிந்தவுடன் பயிற்சி கொடுப்பதோடு நின்றுவிடாமல், திறன்  மேம்பாட்டு பயிற்சிகளை தொடர்ந்து தர வேண்டும்.  தேர்ந்தெடுக்கப்பட்ட பெண்கள் சுதந்திரமாக செயல்பட,  அரசியல் கட்சித் தலைவர்கள் தனது கட்சிக்காரர்களுக்கு அறிவுறுத்த வேண்டும்.

பகுதி சபை, கிராம சபை கூட்டம் பற்றி விசாரிக்க சென்னை முழுவதும் உள்ள 200 நகர்மன்ற உறுப்பினர்களிடமும்  நாங்கள் செல்பேசியில் பேசினோம். பெரும்பாலும் சம்மந்தப்பட்ட பெண் உறுப்பினர்கள் தான் பேசினார்கள்.  வெகு சில பெண் உறுப்பினர்களின் – 7 அல்லது 8 இருக்கலாம் – குடும்ப உறுப்பினர்கள் (கணவன்/ மகன்) பேசினார்கள். அவர்களிடம் நாங்கள் பேச மறுத்து,  சம்மந்தப்பட்ட பெண் உறுப்பினர்களிடம் பேசினோம். ஆணாதிக்க சூழலில் பெண்களை அதிகாரப்படுத்துவது ஒரு தொடர் நிகழ்வு. இதில் அனைவருக்கும் பொறுப்பு உண்டு.

‘பகுதிக் குழு, வார்டு குழு கூட்டங்களை மாநகராட்சி, நகராட்சிகள் நடத்த வேண்டும்’ என தொடர்ச்சியாக நீங்கள் வலியுறுத்தி வருகிறீர்கள். இதைப் பற்றி?

நகர்ப்புற உள்ளாட்சிகளான நகராட்சி, மாநகராட்சிகளில் மக்களின் பங்கேற்பை உறுதி செய்வதற்காக 2006 ல் நகர்ராஜ் மசோதா என்ற மாதிரி சட்டத்தை மத்திய அரசு  கொண்டு வந்தது, தமிழக அரசு 2010 ம் ஆண்டு இதற்கான சட்டத்தை கொண்டு வந்தது. இதன்படி மாநகராட்சி, நகராட்சிகள்  பகுதி சபைகளையும், வார்டு சபைகளையும், உருவாக்க வேண்டும். சட்டத்தை 2010 ல் திமுக கொண்டு வந்தாலும் அதன் பிறகு ஆட்சி அமைத்த அதிமுக அரசு அதற்கான விதிகளை உருவாக்கவில்லை. எனவே, இதற்கான விதிகளை உருவாக்க வேண்டும் என்று தன்னாட்சி, அறப்போர் இயக்கம், சட்டப் பஞ்சாயத்து, சென்னைப் பெருநகர கட்டுமான அமைப்புச் சாரா தொழிலாளர் சங்கம் போன்ற மக்கள் அமைப்புகளோடு இணைந்து நாங்கள் அதற்கான பரப்புரையை மேற்கொண்டோம். கேரளா, கர்நாடகாவில் உள்ள நகர்ப்புற உள்ளாட்சிகளில் பகுதி சபை, வார்டு சபை போன்றவை இயங்குகின்றன.

பிப்ரவரி 2022  ல் நகர்ப்புற உள்ளாட்சிகளுக்கான தேர்தல் நடந்தது. முதலமைச்சர் ஸ்டாலினும் அமைச்சர் கே.என்.நேருவும் இதற்கு ஆதரவு அளித்தார்கள். ஆனால், மக்களிடம் கருத்துக் கேட்காமல், வரைவு விதிகளை சுற்றுக்கு விட்டு  ஜூன் 2022 ல் விதிகளை தமிழக அரசு உருவாக்கியது. அப்போது நகராட்சிகளின் செயலாளராக சிவதாஸ் மீனா (தற்போது தலைமைச் செயலாளர்) இருந்தார்.  ஒரு வழியாக ஜனவரி 2023 ல் சென்னை மாநகராட்சி 200 வார்டுகளிலும், பகுதி சபை, வார்டு சபை கூட்டங்கள் நடக்கும் என தீர்மானம் இயற்றியது.

வார்டு சபை பற்றி விரிவாகச் சொல்லுங்களேன்?

வார்டு சபைக்கும், ஏரியா சபைக்கும் அந்தந்த நகர்மன்ற உறுப்பினர்களே தலைவர்கள் ஆவார்கள். மக்களின் தேவைகளையும், விருப்பங்களையும் அறிந்து கொண்டு அதற்கு முன்னுரிமை கொடுக்க வேண்டும் என்பது தான் இதன் அடிப்படையாகும்.  ஒரு வார்டை பத்து பகுதிகளாக பிரித்து ஒவ்வொரு பகுதியிலும் உள்ள மக்களைக் கூட்டி அவர்களின் கருத்தைக் கேட்க வேண்டும். அந்த வார்டு சபையில் பேசுவதற்கு ஏற்ப, நகர்மன்ற கூட்டத்தில் மன்ற உறுப்பினர் செயல்பட வேண்டும் என்பது தான் இதன் அடிப்படை. இது மக்களின் பங்கேற்பு ஜனநாயகத்தை உறுதி செய்யும் முயற்சி ஆகும்.

சென்னை மாநகராட்சியில் ஒரு சில உறுப்பினர்கள் மிகச் சிறப்பாக வார்டு குழுக் கூட்டத்தை சிறப்பாக நடத்தியுள்ளனர். 12 வார்டு திமுக உறுப்பினர் கவி கணேசன், 170 வது வார்டு அதிமுக கதிர் முருகன், 126 வது வார்டு காங்கிரஸ் கட்சி அமிர்த வர்ஷினி ஆகியோரை குறிப்பிட்டு பாராட்டலாம்.
ஆனால், இதன் செயல்பாடு குறித்து பல நகர்மன்ற உறுப்பினர்களுக்குக் கூட தெரியவில்லை. எனவே, அத்தகைய கூட்டங்கள் முறைபடி நடைபெறுவதை உறுதி செய்ய வேண்டும்.

முதமுதாலாக சென்னையில் கவுன்சிலர் கவி கணேசன் நடத்திய ஏரியா சபை கூட்டம்.

ஒரு வருடத்தில் நான்கு முறை, அண்ணா பிறந்த நாள் (செப் 15), மனித உரிமை நாள் ( டிசம்10), வாக்காளர் தினம் (ஜனவரி 25) அம்பேத்கர் பிறந்த நாள் (ஏப்ரல் 14) என இந்தக் கூட்டங்களை நடத்த வேண்டும் என தமிழக அரசு ஆணை வெளியிட்டுள்ளது நல்ல அம்சமாகும்.

கடந்த ஏப்ரல் 14 ன் போது பாராளுமன்ற தேர்தலை ஒட்டி வார்டு சபை கூட்டம் நடக்கவில்லை. ஆனால், அதற்கு பதிலாக எந்தத் தேதியில் நடத்தலாம் என்பது போன்ற எந்த அறிவிப்பையும் தமிழக அரசு வெளியிடவில்லை. இவையெல்லாம் அதிகாரிகள், இத்தகைய ஜனநாயக நடைமுறைகளை எவ்வளவு மேம்போக்காக கருதுகிறார்கள் என்பதற்கான அறிகுறிகளாகும்.

சென்னை மாநகராட்சி செயல்பாடு குறித்து ஏதும் சொல்கிறீர்களா?

சென்னை மாநகராட்சி பழம் பெருமை உள்ள, அதிகாரம் மிக்க, வருமானம் உள்ள உள்ளாட்சி. எத்தனை வார்டுகளில் பகுதி சபை கூட்டம் நடைபெற்றுள்ளது என்பது போன்ற விவரங்களை நீங்கள் அதன் வலைத்தளத்தில் தெரிந்து கொள்ள முடியுமா என்றால் முடியாது. கடல் மாசடைந்து விட்டது; ஏரிகள் மாசடைந்துவிட்டன; காற்று மாசடைந்து விட்டது என்றால், அதற்குரிய விதிகளை அமலாக்கதே கரணமாகும். கடல் நீரை குடிநீராக மாற்ற நான்காவது ஆலையை அமைக்க உள்ளனர். இதனால், கடல் நீரின் தன்மை மாறுகிறது. இதனால் கடல் வாழ்  உயிரினங்களுக்கு ஆபத்து ஏற்படும் என்று சுற்றுச் சூழல் ஆர்வலர்கள் கூறுகின்றனர்.


சென்னைப் பெருநகர நீர் வழங்கல் மற்றும் கழிவுநீர் வாரியம், கட்டட வரைபட அனுமதி வழங்கும் சிஎம்டிஏ, சென்னை நதிகள் மறு சீரமைப்பு அறக்கட்டளை  போன்றவை தன்னாட்சி பெற்ற அமைப்புகளாக செயல்படுகின்றன.  ஆனால், இவையெல்லாம் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட உள்ளாட்சி நிர்வாகத்தின் கீழ் செயல்பட வேண்டும். சோதனை முயற்சியாக இரண்டொரு வார்டுகளில் நகர்ப்புற வேலை வாய்ப்புத் திட்டத்தை தமிழக அரசு கொண்டு வந்தது. கால்வாய் மண் எடுத்தல் போன்ற கடினமான வேலைகளாக இருப்பதால் அவைகளில் பெண்கள் பங்கு முடியவில்லை. எனவே, பூங்கா பராமரிப்பு, நூலக பராமரிப்பு போன்ற பல வகையான வேலைகளையும் இதில் கொண்டு வர வேண்டும். அப்போது அதிகம் பேர்  பலன் பெறுவார்கள்.

சென்னை மாநகராட்சி தூய்மைப் பணியாளர்களுக்கு இரண்டு செட் சீருடைதான் தருகிறார்கள். இவை போதுமானது அல்ல. கையுறை போதுமான அளவு தருவதில்லை. வருங்கால வைப்பு நிதி, இஎஸ்ஐ போன்றவைகளை முறையாக ஒப்பந்தக்காரர்கள் தருகிறார்களா என்பதை மேயர் உறுதி செய்ய வேண்டும். நிரந்தர ஊழியர்களுக்கு உரிய சம்பளம் போன்றவைகளை ஒப்பந்த ஊழியர்களுக்கும் விரிவுபடுத்த வேண்டும்.

நேர்காணல் செய்தவர் : பீட்டர் துரைராஜ்.

 

Support Aram

நேர்மையான, வெளிப்படையான,

சுதந்திரமான இதழியலுக்கு தோள்

கொடுங்கள்.

UPI QR CODE

Razorpay Payment Gateway

Personal Info

Donation Total: ₹1,000.00 One Time