தோல்வியை நோக்கி மோடியை தள்ளிய ஆர்.எஸ்.எஸ்!

-சாவித்திரி கண்ணன்

”சந்தேகமில்லாமல் மீண்டும் பாஜக தான் அறுதி பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கும்” என்று எனப் பேசப்பட்ட நிலைமாறி, ”தற்போது பாஜக வெற்றி பெற வாய்ப்பே இல்லை” என்ற பேச்சும், ”தோல்வி பயத்தில் மோடி படு அபத்தமாக பேசுகிறார்” என்பதற்கும் பின்னணியில் ஆர்.எஸ்.எஸ் – மோடி மோதல் ஒடிக் கொண்டிருக்கிறது;

”மோடி அமித்ஷா கூட்டணிக்கும் ஆர்.எஸ்.எஸுக்கும் மோதல்” என்பது ஒரு வதந்தி அல்லது எதிர்கட்சியில் உள்ளோர் சிலர் பரப்பும் கட்டுக் கதையாக இருக்கலாம். ஏனென்றால், பாஜகவின் தாய் அமைப்பே ஆர்.எஸ்.எஸ் தான்! பாஜகவின் அடித்தளமே ஆர்.எஸ்.எஸ் தான். ஆர்.எஸ்.எஸின் கண்டுபிடிப்பு தான் மோடியே! இந்த அரசாங்கத்தை வழி நடத்திக் கொண்டிருப்பதே ஆர்.எஸ்.எஸ் தான். ஆகவே, இத்தகைய ஒரு மோதலுக்கு வாய்ப்பில்லை என பலருக்கும் தோன்றலாம்.

தனி நபர் செல்வாக்கு கோலோச்சாத அன்றைய பாஜக!

ஆனால், அளவுக்கு மீறிய அதிகார பலமும், பணபலமும் எந்த தனி மனிதனையும் அடியோடு மாற்றிவிடும். அது தான் மோடி விவகாரத்தில் நடந்துள்ளது. வாஜ்பாய், அத்வானி காலகட்டத்தில் கூட அவர்கள் இருவருமே மிகப் பெரிய ஆளுமைகள் என்றாலுமே கூட, கட்சியின் கூட்டு முடிவுக்கு கட்டுப்பட்டவர்களாவும், ஆர்.எஸ்.எஸுன் வழிகாட்டு நெறிமுறைகளை மீறாதவர்களாவுமே கடைசி வரை இருந்தனர். தனி நபர் செல்வாக்கு என்பதில்லாமல் அன்றைக்கு பாஜகவில் ஏகப்பட்ட பெரிய ஆளுமைகள் கோலோச்சினர். முரளி மனோகர் ஜோஷி, யஷ்வந்த் சின்ஹா, சுப்பிரமணியசாமி, அருண்ஷோரி, உமாபாரதி, கோவிந்தாச்சாரி போன்ற எண்ணற்ற ஐகான்கள் இருந்தனர். அத்துடன் ஜார்ஜ் பெர்ணாண்டஸ் போன்ற வெளிக் கட்சியைச் சேர்ந்த மாபெரும் ஆளுமைகளையும் அனைத்துச் செல்லும் பண்பு அன்று இருந்தது.

ஆனால், இந்திய அரசியல் என்பது எப்போதுமே தனி மனித கவர்ச்சியில் ஆட்டுவிக்கப்படுவது. நேரு, இந்திராகாந்தி என தேசிய அளவிலும் காமராஜர், எம்.ஜி.ஆர், கருணாநிதி, என்.டி.ராமாராவ், பி.ஜு.பட்நாயக், பால்தாக்கரே என மாநில அளவிலும் தனிமனிதக் கவர்ச்சியில் கண்டுண்டு கிடக்கிறது. ஆகவே, நாமும் போதிய சுய அறிவில்லாத ஒரு தனி நபரை கண்டெடுத்து தலைவராக்கி, அவரை நம் கட்டுப்பாட்டில் வைத்து ஆட்சியைக் கொண்டு செலுத்துவோம் என நம்பித் தான் மோடியைக் கண்டெடுத்து வளர்த்தனர்.

ஆனால், சுய அறிவாற்றலோ, செயல்திறனோ முற்றிலும் இல்லாத மூடரான மோடி அதிகாரம் அதிகரிக்க, அதிகரிக்க தாழ்வு மனப்பான்மை காரணமாக தன்னை பலசாலியாக காட்டிக் கொள்ள சுப்பிரியாரிட்டி காம்ப்ளஸுக்கு ஆளாகிப் போனார். அதன் விளைவு தான் அவர் அத்வானி, முரளிமனோகர் ஜோஷி, யஷ்வந்த் சின்கா, அருண்ஷோரி, சுப்பிரமணியசாமி போன்ற சீனியர்களை ஓரம் கட்டினார். இந்த வரிசையில் கடைசியில் உள்ள மூவரும் மோடியின் போதாமைகளை, முட்டாள் தனங்களை அதிகமாக பொதுவெளியில் தொடர்ந்து அம்பலப்படுத்தி வந்தாலும், வெகுஜன ஊடகங்களின் பலத்தால் மோடி தூக்கி நிறுத்தப்பட்டார்.

ஆர்.எஸ்.எஸ்சானது மோடியின் இத்தகைய குணாதிசியங்களை விரும்பாவிடினும், ‘ஹிந்து ராஷ்டிரா என்ற மிகப் பெரிய நோக்கத்திற்காக நாம் சற்றே சகித்துக் கொள்வோம்..’என தொடர்ந்து மோடியை பிரமோட் செய்தார்கள்! ஏனென்றால், ‘மோடியும் நமக்காக தன் மனைவியை, சொந்தச் சகோதரர்களை, குடும்பத்தை துறந்தவர்’ என்பதும் ஆர்.எஸ்.எஸ் அனுசரணைக்கு ஒரு காரணமாயிருந்தது.

எவ்வளவோ விமர்சனங்கள் இருந்தாலும், ஆர்.எஸ்.எஸின் அடிப்படை, எளிமையான வாழ்க்கை முறையாகும். எளிமை என்பதை பொது வாழ்வின் இலக்கணமாகத் தரித்துக் கொண்ட இயக்கம் ஆர்.எஸ்.எஸ். ஆனால், அந்தப் பின்னணியில் இருந்து வந்த மோடியோ, மிகப் பெரிய ஆடம்பர மோகியாக திகழ்கிறார். அவர் பயன்படுத்தும் அதி உயர்ந்த விலை கொண்ட விதவிதமான கார்கள், உடைகள், வாட்ச், ஷு போன்றவைகள் உண்மையில் ஆர்.எஸ்.எஸுல் இருப்பவர்களை ஆரம்பத்தில் முகம் சுழிக்க வைத்துள்ளது. இதில் மோடியின் பால்யகால ஆண்டுகால நண்பரான பிரவீன் தொகாடியா (வி.ஹெச்.பி) மோடியிடம் நேரடியாகவே தன் விமர்சனத்தை வைத்ததில் அவரை பெரிய விரோதியாக ஆக்கிவிட்டார் மோடி!

நரேந்திர மோடி – பிரவீன் தொகாடியா மோதல்;

பிரவீன் தொகாடியா கேட்டதெல்லாம் இது தான்; நீயும் நானும் ஒன்றாக பட்டிதொட்டியெல்லாம் சுற்றி உள்ளோம். என் ஸ்கூட்டர் பின்னால் உன்னை உட்கார வைத்து ஆகமதாபாத்தில் வீதிவீதியாக வலம் வந்துள்ளேன். அன்றைக்கு கிடைத்ததை உண்டு, போகுமிடங்களில் நண்பர்கள் இடங்களில் பாயை விரித்து படுத்து தூங்கி எழுந்து, அவர்கள் தருவதை வாங்கி சாப்பிட்டு பணியாற்றி உள்ளோம். ஆனால், இன்றைக்கு நீ அளவற்ற ஆடம்பரப் பிரியனாகிவிட்டாய். நீ தேனீர் விற்றேன் என கதை விடுகிறாய்…வாயைத் திறந்தால் பொய்யா? என நட்பு அடிப்படையில் கிண்டல் செய்து சிரித்துள்ளார். இதற்கடுத்து ஒரு சில நாட்களில் பிரவீன் தொகாடியா கடுமையாக தாக்கப்பட்டார். ”இந்த தாக்குதலுக்கு பின்னால் மோடி இருக்கிறார்” என பகிரங்கமாகவே அவர் அறிவித்தார். இதையடுத்து அவரது பழைய வழக்குகளை தூசி தட்டி குஜராத் போலீஸ் அவரை என்கெளண்டர் செய்ய முயன்றதும், பிறகு அதை ஆர்.எஸ்.எஸ் தலையிட்டு தடுத்ததும் பழைய சம்பவங்கள்!

பால்ய கால நண்பர்கள்! கடும் பகைவர்களாயினர்!

இப்படியாக சொந்த இயக்கத்திலும் சகோதர இயக்கங்களிலும் அதிக விரோதிகளை உருவாக்கிக் கொண்ட மோடி, தற்போது ஆர்.எஸ்.எஸ் இயக்கத்தை மிகவும் அலட்சியப்படுத்த ஆரம்பித்த வகையில் பல கசப்பான சம்பவங்கள் இருதரப்பிலும் அரங்கேறி உள்ளன!

கர்வத்தால் தன்னிலை மறந்த மோடி!

அதற்கு முக்கிய காரணம், குஜராத் பனியாக்கள், குறிப்பாக தொழில் அதிபர்கள் மோடிக்கு கொடுத்த அதி முக்கியத்துவமாகும். ‘தொழில் அதிபர்களான தன் நண்பர்களால் தான் பாஜக, ஆர்.எஸ்.எஸ் ஆகியவற்றின் பொருளாதார தேவைகள் நிறைவேற்றப்படுகின்றன’ என்பதும், தன்னைக் கருதியே மக்கள் வாக்களிக்கிறார்கள்..’ என்பதுமான கர்வமே மோடியை தன்னை ஆர்.எஸ்.எஸுக்கு மேலானவராக எண்ண வைத்து விட்டது. அதாவது, அளப்பரிய செல்வக் குவியலும், அதிகாரக் குவியலும் அவரை தலை கீழாக மாற்றி, ஏறி வந்த ஏணியை எட்டி உதைக்க வைத்துவிட்டன.

இதன் விளைவாக வெங்கையா நாயுடு, ராஜ்நாத் சிங், நிதின் கட்காரி.. போன்ற சம காலத்தவர்களையும் கூட அவர் விலக்கி வைத்து விட்டார். பாஜகவின் முக்கிய பொறுப்புகளுக்கு ஆர்.எஸ்.எஸ்சின் சிபாரிசுகள் மட்டுமே அளவுகோலாக பார்க்கப்பட்ட நிலைமையை மோடி-அமித்ஷா கூட்டணி முறியடித்துவிட்டது. சத்தீஸ்கரில் ராமன்சிங்கை முதல்வராக்காமல் தவிர்த்தது, ராஜஸ்தானில் வசுந்தராஜேவை தவிர்த்தது, மத்திய பிரதேசத்தில் சிவ்ராஜ் சவுகானைத் தவிர்த்தது போன்றவை உதாரணங்கள் என்றால், இந்த நாடாளுமன்ற தேர்தல் விவகாரத்தில் ஆர்.எஸ்.எஸ் பரிந்துரைத்த பலருக்கு பாஜக சீட் தரவில்லை.

தங்களுக்கு தலையாட்டக் கூடிய தலைவர்களையே மத்தியிலும், மாநிலங்களிலும் நியமித்துக் கொண்டது மோடி-அமித்ஷா கூட்டணி! தற்போது ஜே.பி.நட்டா சமீபத்தில் தந்துள்ள பேட்டிகள், அறிக்கைகள் ஆகியவையே பாஜக தலைமை, ஆர்.எஸ்.எஸிடம் இருந்து விலகி நிற்க எத்தனிக்கிறது என்பதற்கு உதாரணமாகும்.

அதே போல தமிழகத்தில் மோடியின் தீவிர சீடராக தன்னை அறிவித்துக் கொண்ட அண்ணாமலை மோடி பாணியிலேயே தமிழக பாஜகவில் உள்ள மூத்த தலைவர்களை, முன்னோடிகளை ஓரக் கட்டுவதில் வேகம் காட்டி வருகிறார். சக கட்சித் தலைவர்களோடு முற்றிலும் இணக்கம் பாராட்ட மறுக்கிறார் என அண்ணாமலை மீது கட்சியினர் வைத்த குற்றச்சாட்டுகளை அடுத்து கோவையில் ஒரு கல்யாண மண்டபத்தில் விசாரணை நடத்தியது ஆர்.எஸ்.எஸ். இதில் பலரும் ”தங்கள் பணியை அண்ணாமலை பயன்படுத்திக் கொள்ள மறுப்பதோடு, தங்களை முற்றிலும் தவிர்க்கிறார். தனக்கென ஒரு சிறிய குழுவை வைத்துக் கொண்டு அதனோடு மட்டுமே இயங்குகிறார்” எனப் பேசினார்கள். இது தொடர்பாக அண்ணாமலையிடம் இறுதியில் விளக்கம் கேட்ட போது, ”என் வொர்க்கிங் ஸ்டைலே வித்தியாசமானது. நான் இப்படித்தான் இருப்பேன். எப்படி செயல்பட வேண்டும் என்பதை யாரும் எனக்கு சொல்லித் தர அவசியமில்லை. எனக்கு மோடிஜி மட்டுமே தலைவர். அவர் சொல்லுக்கு மட்டுமே கட்டுப்படுவேன்” எனக் கூறியுள்ளார்.

நாடாளுமன்றத் தேர்தலில் விலகி நின்ற ஆர்.எஸ்.எஸ்;

இதே வகையில் தான் மோடியும் உள்ளார். அதனால் தான் மோடி-அமித்ஷா தவிர்த்து, தேர்தல் பிரச்சாரத்தில் கூட வேறு எந்த முக்கியத் தலைவர்களும் ஈடுபடவில்லை. தன் கட்சியின் தேர்தல் பிரச்சாரத்தில் கூட தனக்கு இடமில்லை என்பது பாஜகவின் முக்கிய பல தலைவர்களை அதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளது. ஏற்கனவே, ஆர்.எஸ்.எஸ் சிபாரிசு செய்தவர்களுக்கு நாடாளுமன்றத் தேர்தலில் நிற்க சீட் தரவில்லை. இதனால், ஆர்.எஸ்.எஸ் தொண்டர்கள் இந்த தேர்தலில் பாஜகவிடம் இருந்து விலகி நிற்கும் நிலை உருவாகிவிட்டது. வழக்கமாக அந்தந்த பூத்களுக்கான வாக்காளர் லிஸ்ட் எடுத்து வீடுவீடாக ஓட்டு சிலிப்புகளை தருவார்கள் ஆர்.எஸ்.எஸ் தொண்டர்கள். ஆனால், அந்த சேவையை இந்த முறை மோடி-அமித்ஷா தலைமை மறுதலித்துவிட்டதானது ஆர்.எஸ்.எஸுக்கு மிகப் பெரிய மனக் காயத்தை ஏற்படுத்தியது.

ஆர்.எஸ்.எஸ் நிர்வாகிகள் மிகவும் பக்குவமானவர்கள். அவர்கள் தங்கள் கோபத்தை பொது வெளியில் ஒருபோதும் காட்டமாட்டார்கள். ஆனால், சிஸ்டமேட்டிக்காக செயல்பட்டு துரோகிகளை ‘களை’ எடுப்பதில் மிக வல்லவர்கள்! இந்த தேர்தலுக்கு பிறகு இந்திய அரசியலில் மோடி-அமித்ஷா இருவரும் மெல்ல,மெல்ல ஓரம் கட்டப்படுவார்கள். இதை சாத்தியமாக்கும் வண்ணமாகத் தான் தேர்தலுக்கு முன்பே சகலவிதத்திலும் திட்டங்களைத் தீட்டி அரங்கேற்றி வருகிறது ஆர்.எஸ்.எஸ்!

இந்த திட்டத்தின் அம்சமாகத் தான் முதல் வாக்கு பதிவிற்கு அடுத்து பாஜக தோல்வி முகம் காண்கிறது என்ற பரலான கருத்தாக்கத்தை ஆர்.எஸ்.எஸ்சானாது சூட்சுமமாக மீடியாக்களில் கசிய விட்டது. மோடி தப்பும், தவறுமாக பேசி அவமானப்படும் சூழலை அது தான் கூட இருப்பவர்களை வைத்து உருவாக்கி தந்து வேடிக்கை பார்த்து வருகிறது. இது தான் உடனிருந்தே கருவறுக்கும் செயல். மோடிக்கு சுய அறிவு கிடையாது என்பதையும், சுட்டுப் போட்டாலும் அவர் தனித்து தலைவராக முடியாது என்பதையும் ஆர்.எஸ்.எஸை விட அறிந்தவர் எவருமிலர்.

”மோடி மீண்டும் பிரதமரானால் அரசியல் சட்டங்களை மட்டுமல்ல, ஆர்.எஸ்.எஸ்சையே அழித்து விடுவார், ஆர்.எஸ்.எஸ் காரர்களும் தப்ப முடியாது” என சிவசேனாவின் தலைவர் உத்தவ் தாக்கரே பேசி இருப்பது கவனத்திற்கு உரியது. இதற்கு, ஆர்.எஸ்.எஸ் தரப்பில் கண்டணமோ, மறுப்போ தெரிவிக்கப்படவில்லை என்பதும் கவனிக்கத் தக்கதாகும்.

எது எப்படியோ, உள் முரண்பாடுகளால் மோடி மீண்டும் பிரதமராவது தடுக்கப்பட்டுள்ளது என்பதே தற்போதைய களயதார்த்தம். ஜுன் 4 க்கு பிறகு மறைந்திருக்கும் உண்மைகள் வெளி வந்தே தீரும்.

உட்பகை அஞ்சி தற்காக்க; உலைவு இடத்து

மண்பகையின் மாணத் தெறும். ( திருக்குறள் 883)

உட்பகைக்கு அஞ்சி ஒருவன் தன்னை தற்காத்துக் கொள்ள வேண்டும். தளர்ச்சி வந்த போது, மட்கலத்தை அறுக்கும் கருவி போல் அந்த உட்பகை தவறாமல் அழிவு செய்யும்.

சாவித்திரி கண்ணன்

 

Support Aram

நேர்மையான, வெளிப்படையான,

சுதந்திரமான இதழியலுக்கு தோள்

கொடுங்கள்.

UPI QR CODE

Razorpay Payment Gateway

Personal Info

Donation Total: ₹1,000.00 One Time