”அதிமுக ஆட்சியில் நடந்த ஊழல் தொடர்பாக அறப்போர் இயக்கம் 25 புகார்கள் அளித்திருந்தது. இந்த மூன்றாண்டுகளில் இதில் எந்த முன்னேற்றமும் இல்லை. அதிமுக ஊழல்களில் சம்பந்தப்பட்ட அரசியல்வாதிகள், அதிகாரிகளை பாதுகாக்கும் திமுக, தற்போது தானும் ஊழலில் திளைக்கிறது” -அறப்போர் ஜெயராமன்;
ஊழலுக்கு எதிராக போராடி வரும் அறப்போர் இயக்கம் 2018 ஆம் ஆண்டில், அப்போதைய அ.தி.மு.க. ஆட்சியாளர்களும் அதானி நிறுவனமும் இணைந்து, நிலக்கரி இறக்குமதி செய்த விவகாரத்தில் 6,000 கோடி ரூபாய் ஊழல் செய்ததை அம்பலத்திற்கு கொண்டு வந்தது.
1.2 கோடி மெட்ரிக் டன் நிலக்கரியை சந்தை மதிப்பை விட, மூன்று மடங்கு அதிகம் கொடுத்து வாங்கி மக்கள் பணத்தை கப்ளீகரம் செய்ததை ஆதாரத்துடன் தெரிவித்தது. இந்த ஊழல் குற்றச்சாட்டு கூறப்பட்ட காலத்தில் மின்சார துறை அமைச்சராக நத்தம் விசுவநாதனும் மின்வாரியத் தலைவராக ஞான தேசிகன் ஐ.ஏ.எஸ்-ம் இருந்தனர்.
அறப்போர் இயக்கம் கொடுத்த புகார் அ.தி.மு.க ஆட்சியில் கிடப்பில் போடப்பட்டது. திமுக ஆட்சி ஏற்பட்டு மூன்று ஆண்டுகளாகியும் கூட உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை.
ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு கூறப்பட்ட இந்த ஊழல் புகார் தொடர்புடைய ஆதாரங்களை தற்போது வெளியிட்டு, ஃபினான்சியல் டைம்ஸ் (Financial Times) பத்திரிகையும் ஆர்கனைஸ்டு கிரைம் அன்ட் கரப்சன் ரிப்போர்ட்டிங் ப்ராஜெக்ட்(Organised Crime and Corruption Reporting Project)-ம் வெளியிட்டு எப்படியெல்லாம் ஊழல் நடைபெற்றது – மக்கள் பணம் சூறையாடப்பட்டுள்ளது என்பதை விளக்கி உள்ளன.
இந்த விவகாரம் குறித்து ராகுல் காந்தி கருத்து தெரிவித்ததும் இது நாடு முழுவதும் பேசு பொருளாகியுள்ளது. எக்ஸ் தளத்தில் அவர் “பாஜக ஆட்சியில் நடைபெற்ற மிகப் பெரிய நிலக்கரி ஊழல் வெளிச்சத்துக்கு வந்துள்ளது. பல ஆண்டுகளாக நடைபெற்று வரும் இந்த மோசடி மூலம் மோடியின் நண்பர் அதானி தரம் குறைந்த நிலக்கரியை போலி பில்கள் மூலம் மூன்று மடங்கு விலைக்கு விற்று பல ஆயிரம் கோடியை கொள்ளை அடித்துள்ளார். ஜூன் 6ஆம் தேதிக்கு பின் இதனை மத்திய அரசு விசாரித்து பொதுமக்களிடம் இருந்து கொள்ளையடிக்கப்பட்ட ஒவ்வொரு பைசாவுக்கும் கணக்கை மக்கள் முன்வைக்கும்” என்று பதிவிட்டுள்ளார்.
கடலில் மிதக்கும் பனிக்கட்டியின் சிறிய பகுதி மட்டும் வெளியில் தெரியும் பெரும் பகுதி கடலுக்குள் இருக்கும். இந்த அடிப்படையில் தான், இந்தியா முழுக்க நிலக்கரி சப்ளை செய்துள்ள அதானி நிறுவனத்தின் மீது விரிவான விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.
மேலும், அறப்போர் இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் ஜெயராம் வெங்கடேசன் இந்த விவகாரம் குறித்து நம்முடைய “அறம் ” இதழுக்கு அளித்த பேட்டி:
நம் மாநிலத்தில் உள்ள மேட்டூர், எண்ணூர் அனல் மின் நிலையங்களுக்கு தேவையான நிலக்கரியில் சுமார் பாதி அளவு வெளிநாட்டில் இருந்து இறக்கப்படுகிறது.
2012 -16 காலகட்டத்தில், அப்போது இருந்த அ.தி.மு.க. அரசின் மின்சாரத் துறை அமைச்சராக நத்தம் விசுவநாதன் மின்வாரிய தலைவராக ஞான தேசிகன் ஐஏஎஸ் -ம் இருந்தனர்.
அந்த காலகட்டத்தில் இறக்குமதி செய்யப்பட்ட 2.44 கோடி மெட்ரிக் டன் அளவில் 1.2 கோடி மெட்ரிக் டன் நிலக்கரியை அதானி நிறுவனம் சப்ளை செய்தது.
இந்த நிறுவனம் குறைந்த தரம் கொண்ட நிலக்கரியை அதிக தரம் கொண்டதாக சொல்லியும் சந்தையில் அப்போது விற்பனை செய்யப்பட்ட தொகையை விட மூன்று மடங்கு அதிக விலை வைத்தும் தமிழக மின்வாரியத்துக்கு விற்பனை செய்திருப்பதையும் நாங்கள் கண்டுபிடித்தோம்.
எந்த முறைகேட்டை நாங்கள் கண்டுபிடித்தாலும், அதைத் தீர விசாரிக்காமல் வெளிப்படுத்துவதில்லை. இந்த விவகாரத்திலும் அதை கடைபிடித்தோம்.
தமிழக அரசின் செய்தித் தாள் நிறுவனம் (Tamil Nadu news print and papers limited) அதே காலகட்டத்தில் இதே தரம் கொண்ட நிலக்கரியை வாங்கி இருந்தது. ஒரு மெட்ரிக் டன்னுக்கு அந்த நிறுவனம் 70 டாலர் விலை கொடுத்திருந்தது. அதே நிலக்கரிக்கு மின்சார வாரியம் 91 டாலர் கொடுத்திருந்தது. இது தவிர, மத்திய தணிக்கை துறை அறிக்கையிலும் இந்த முறைகேடு வெளிவந்திருக்கிறது.
2018- ல் நாங்கள் புகார் செய்த போது, அப்போது இருந்த அதிமுக அரசு கண்டு கொள்ளவில்லை. ஆட்சி மாற்றம் ஏற்பட்டு மூன்று ஆண்டுகள் ஆகியும் கூட தற்போது திமுக அரசு உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை.
இப்போது ஃபினான்சியல் டைம்ஸ் (Financial Times) பத்திரிகை பல்வேறு ஆவணங்கள் மூலம் இந்த ஊழலை மீண்டும் அம்பலப்படுத்தி உள்ளது.
இந்தோனேசியாவில் ஒரு மெட்ரிக் டன் நிலக்கரியை 28 டாலருக்கு வாங்கி அதை 92 டாலருக்கு அதானி நிறுவனம் விற்பனை செய்துள்ளது.
ஒரு கிலோவுக்கு 3,500 கிலோ கலோரி தரம் கொண்ட கரியை 6,000 கிலோ கலோரி தரம் கொண்டதாக ஏமாற்றி விற்றுள்ளனர். இதற்காக தயாரிக்கப்பட்ட போலி ஆவணங்கள் எல்லாம் இப்போது வெளிவந்துள்ளது.
இங்கு நாம் முக்கியமாக கவனிக்க வேண்டியது, அதானி நிறுவனம் ஒரு கையில் பொருளை வாங்கி, மூன்று மடங்கு அதிகமாக விலை வைத்து மறு கையில் விற்பனை செய்துள்ளது. அதாவது, கைமாற்றி விடும் வேலை செய்து பல்லாயிரம் கோடி சுருட்டி உள்ளது.
இந்தப் பத்திரிக்கை 22 ஷிப்ட் மென்ட்களின் ஆவணங்களை ஆய்வு செய்து செய்தி வெளியிட்டுள்ளது. ஒரு ஷிப் மென்ட் என்பது சுமார் 19 ஆயிரம் மெட்ரிக் டன் அளவு கொண்டது. அப்படியானால், தமிழக மின்வாரியத்துக்கு சப்ளை செய்த 1.2 கோடி மெட்ரிக் டன் அளவுக்கு எவ்வளவு ஊழல் நடந்திருக்கும் என்பதை தோராயமாக புரிந்து கொள்ள முடியும்.
இது தமிழ்நாட்டுக்கு நடந்தது, இதே போல இந்தியா முழுவதுக்கும் கடந்த 15 ஆண்டுகளாக இவர்கள் சப்ளை செய்துள்ளார்கள். இந்த மிகப்பெரிய நிலக்கரி ஊழல் விவகாரத்தில் சிபிஐ, அமலாக்கத்துறை போன்ற மத்திய புலனாய்வு அமைப்புகள் தலையிடாமல் இருப்பதற்கு காரணம், அதானி மோடியின் நண்பர் என்பதால் தான்.!
திமுக ஆட்சிப் பொறுப்பு ஏற்றதும் லஞ்ச ஒழிப்புத்துறையை மூன்று முறை அணுகி முறையிட்டோம். அரசின் உத்தரவுக்காக அவர்கள் காத்திருப்பது தெரிந்தது. சம்பந்தப்பட்ட கோப்பில் அப்போது தலைமைச் செயலாளராக இருந்த இறையன்பும் கையெழுத்து போட்டு அடுத்த கட்ட நடவடிக்கைக்காக அனுப்பி வைத்தார். முதலமைச்சரின் நேரடி கண்காணிப்பில் உள்ள பொதுத் துறையின் கீழ் இந்த விவகாரம் உள்ளது. இது வரை நிலுவையில் தான் இருக்கிறது.
இப்போது ஃபினான்சியல் டைம்ஸ் மற்றும் ஆர்கனைஸ்ட் க்ரைம் அண்ட் கரப்சன் ரிப்போர்ட்டிங் ப்ராஜெக்ட் வெளியிட்டுள்ள ஆதாரங்களையும் கூடுதலாக லஞ்ச ஒழிப்புத்துறை போலீசாரிடம் கொடுத்து உரிய நடவடிக்கை கோருவோம். இவ்வாறு அவர் கூறினார்.
தொடர்ந்து நம் கேள்விகளுக்கு பதில் அளித்தார்.
கடந்த அதிமுக ஆட்சியில் நடைபெற்ற ஊழல்கள் தொடர்பாக நீங்கள் கொடுத்த புகார்கள் எத்தனை?அவற்றின் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் என்ன?
மொத்தம் நாங்கள் கொடுத்த ஊழல் புகார்கள் 25. இவற்றில் நான்கு மீது எஃப் ஐ ஆர் பதிவு செய்யப்பட்டுள்ளது. அவ்வளவு தான். பெரிய முன்னேற்றமில்லை.
திமுக ஆட்சிக்கு வந்து மூன்று ஆண்டுகள் ஆகிறது .கடந்த அதிமுக ஆட்சிக்கும் இந்த ஆட்சிக்கும் செயல்பாட்டில் வேறுபாட்டை பார்க்கிறீர்களா? தமிழக அரசின் உணவு வழங்கல் துறை, மாநகராட்சி ஆகியவற்றின் செயல்பாடுகளில் மாற்றம் உள்ளது .மற்ற துறைகளில் மாற்றம் தெரியவில்லை.
திமுக ஆட்சியில் மின்சாரத்துறை எப்படி உள்ளது..?
செந்தில் பாலாஜி அமைச்சராக இருந்த 2021- 23 காலகட்டத்தில் 26,500 மின்மாற்றிகள் வாங்கியதில் 400 கோடி ஊழல் நடந்துள்ளது. இதை நாங்கள் ஆதாரங்களுடன் கண்டுபிடித்து உரிய நடவடிக்கை கோரி லஞ்ச ஒழிப்புத்துறை போலீசில் புகார் கொடுத்தோம். அங்கு நடவடிக்கை இல்லாததால் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்துள்ளோம் அந்த வழக்கு அண்மையில் விசாரணைக்கு வந்தது.
எங்கள் புகாருக்கு பதில் அளிக்கும்படி தமிழக அரசுக்கும் லஞ்ச ஒழிப்பு போலீசாருக்கும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
திமுக ஆட்சியைப் பற்றி உங்கள் மதிப்பீடு என்ன..?
அதிமுக ஆட்சியில் ஊழல்களைச் செய்த அரசியல்வாதிகள், அதிகாரிகள் மீது இது வரை திமுக அரசு நடவடிக்கை இல்லை. அந்த ஊழலுக்கு துணை போன அதிகாரிகள் இந்த ஆட்சியில் முக்கிய பொறுப்பில் உள்ளனர். ஆக, திமுக ஆட்சியிலும் ஊழல்கள் தொடர்கின்றன. இது தொடர்பாக ஏழட்டு புகார்கள் தந்துள்ளோம்.
மின்சாரத் துறையில் நடந்த ஊழலைப் போலவே அமைச்சர் மூர்த்தியின் பத்திரபதிவு துறையிலும் மிகப் பிரம்மாண்ட ஊழல்கள் அரங்கேறி வருகின்றன. அதிமுக, திமுக இரண்டு ஆட்சிகளிலுமே விலை மதிப்புள்ள ஆயிரம் ஏக்கர் நிலங்கள் சட்டவிரோதமாக பதிவு செய்யப்பட்டுள்ளன.
அமைச்சர் துரைமுருகனின் கனிம வளத் துறையில் கணக்கற்ற முறையில் இயற்கை வளம் சுரண்டப்பட்டு வருகிறது. இதில் திருநெல்வேலி மற்றும் திருப்பூரில் மட்டுமே சட்டவிரோதமாக ரூ 700 கோடிகள் அளவுக்கு சுரண்டப்பட்டுள்ளன.
அமைச்சர் எ.வ.வேலுவின் நெடுஞ்சாலைத் துறையில் ரோடு போடாமலே போடப்பட்டுவிட்டதாக ரூ 4 கோடிகளை தந்துள்ளதை அம்பலப்படுத்தினோம்.
அரசுத் துறையில் நடக்கும் பெரிய ஊழலை ஒரு சாதாரண விஷயமாக கடந்து செல்லக் கூடாது. கொள்ளையடிக்கப்படும் பணம் மக்களின் வரிப் பணமாகும்.
அந்தப் பணம் மறுபடியும் மக்கள் தலையில் சுமத்தி தான் வசூலிக்கப்படுகிறது என்பதை புரிந்து கொண்டு அந்த அடிப்படையில் அணுக வேண்டும். வெறும் பணச் சுமையோடு அல்லாமல், மக்களின் உடல் நலம், விலை மதிப்பற்ற மனித உயிர்களோடும் ஊழல்வாதிகள் விளையாடுகிறார்கள் என்பதை அறிய வேண்டும்.
தமிழக மின்வாரியத்துறைக்கு இப்போது உள்ள கடன் சுமார் 1.5 லட்சம் கோடி.
இப்படி நடக்கும் பல்லாயிரம் கோடி இழப்புகளை ஈடுகெட்ட, மின் கட்டணத்தை உயர்த்துவார்கள். இதில் பெரும்பாலும் பாதிக்கப்படுவது சாமானிய மக்களும் சிறு, குறு தொழில் செய்வோரும் தான்.
தரக்குறைவான நிலக்கரியை அதிகளவு பயன்படுத்த வேண்டி இருக்கும். இதனால் அனல் மின் நிலையங்களைச் சுற்றி உள்ள பொதுமக்கள் உடல்நலம் கெடும். விளைநிலம் பாதிக்கும். காற்று மாசு காரணமாக இந்தியாவில் ஆண்டுக்கு 20 லட்சம் பேர் இறப்பதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
எனவே, அரசுத் துறையில் நடைபெறும் எந்த ஒரு ஊழலும் மக்கள் மீதான சுரண்டலும், துரோகமும் ஆகும்.
இவ்வாறு அவர் பதில் அளித்தார்.
நேர்காணல்: ம.வி.ராசதுரை
இந்த நிலக்கரி ஊழல் அதிமுக ஆட்சியில் தொடங்கப்பட்டது அல்ல. 1996 ஆம் ஆண்டு திமுக ஆட்சியில் இருந்தபோது இதில் ஊழல் நடைபெற்றதாக கூறிய சுப்பிரமணியசாமி அன்றைய முதல்வர் கருணாநிதி பதவி விலக வேண்டும் என்று கூறினார். ஆனால் அன்று அது எடுபடவில்லை..
மிக சாதுரியமாக கருணாநிதி அந்த பிரச்சினையை அன்று எதிர் கொண்டார். பின்னர் அதிமுக ஆட்சியில் இதே ஊழல் வேறு வடிவம் பெற்றது. மின் துறை அமைச்சராக நத்தம் விஸ்வநாதன் இருந்தபோது (அதிமுக ஆட்சி) நவீன தொழில்நுட்பத்துடன் கூடிய சிறிய மின்மாற்றி வாங்கப்பட்டது. நாடு முழுவதும் சாலையோரம் அமைக்கப்பட்டு இருந்த பெரிய மின் மாற்றிகள் மாற்றப்பட்டு சிறிய மின்மாற்றிகள் பொருத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டது.
ஆனால் மிக மிக சொற்பமான இடங்களில் மட்டும் அந்த சிறிய மின் மாற்றிகள் மாற்றப்பட்டு பின்னர் மீதமுள்ள சிறிய மின்மாற்றிகள் என்னவானது என்று எனக்கு தகவல் இல்லை. ஆனால் இன்றளவும் பெரிய மின்மாற்றிகள் தான் நடைமுறையில் உள்ளன.
அதிமுக திமுக என ஆட்சிகள் மாறின ஆனால் காட்சிகள் மாறவில்லை. திராவிட கட்சிகள் ஒருவருக்கு ஒருவர் கை கோர்த்தனர்.. மக்கள் ஆளுமைகளான கருணாநிதி ஜெயலலிதாவிற்கு பின்னர் மறைமுகமாக இரண்டு கட்சிகளும் ஒன்று சேர்ந்தன. அதிமுக திமுக ஆட்சி பின்னர் திமுக அதிமுக ஆட்சி. இவர்களிடமே பொறுப்புகள் இருந்ததால் இந்த துறையில் நடைபெற்ற ஊழல் குறித்து பல்வேறு வகையில் தெரிவிக்கப்பட்டும் ஒருவர் மீது கூட நடவடிக்கை எடுக்கப்படவில்லை. அறப்போர் ஜெயராமனின் கட்டுரைக்கு பின்னர் தொடர்ந்து அவர் இது விஷயமாக போராடலாம். ஆனால் இன்றைய முதல்வர் மின் துறை ஊழல் குறித்து நடவடிக்கை எடுக்க யோசிக்க கூட போவதில்லை.