ஏ.ஆர்.ரகுமானின் சர்வதேச இசைக் கல்லூரி!

-சாவித்திரி கண்ணன்

சர்வதேச அளவில் இசைக் கொடியை பறக்கவிட்டு, ‘உலக இசை நாயகனாக’ வலம் வருகிறார் ஏ.ஆர்.ரகுமான். சமூக புறக்கணிப்புகளை சகித்து மேலெழுந்து வந்தாலும், அவர் ஒருபோதும் சனாதனிகளின் அங்கீகாரத்திற்கு ஏங்கியதில்லை. மாறாக, எளிய பின்புலமுள்ள மாணவர்களுக்கு சர்வதேச தரத்தில் இசை கற்பிக்கிறார்;

தமிழ்நாடு உலகத்திற்கு தந்த இசைக் கொடையே ஏ.ஆர்.ரகுமான்! அவரது தந்தை சேகர் அளப்பரிய திறமைகள் இருந்தும் – பல இசை அமைப்பாளர்களின் வெற்றிக்கு பின்னணியில் இருந்தவர் என்ற வகையில் – ஜொலிக்க முடியாமல் போனவர். தந்தை தொட நினைத்த உச்சத்தை எல்லாம் இந்த தனயன் அனாயசியமாக தொட்டுவிட்டார்.

ஒன்பது வயதில் தந்தையை இழந்த ரகுமான் தன் குடும்பத்தின் பொருளாதார நெருக்கடியால் பள்ளிப் படிப்பை கைவிட நேர்ந்தது. தந்தை வைத்திருந்த இசைக் கருவிகளை வாடகைக்கு விட்ட வகையிலும், எம்.எஸ்.விஸ்வநாதன், இளையராஜா, விஜயபாஸ்கர், ஹம்சலேகா..என அப்போதிருந்த இசை அமைப்பாளர்களின் இசை குழுக்களில் ஒரு இசைக் கலைஞராகவும் பணியாற்றி உள்ளார்.

சென்னை வானொலி, பொதிகை தொலைகாட்சிக்கும் இசை நிகழ்ச்சி செய்துள்ளார். நிறைய விளம்பரப் படங்களுக்கு அசத்தலாக இவர் இசை அமைத்துக் கொண்டிருந்த காலகட்டத்தில் தான் மணிரத்தினத்தின் ரோஜா பட வாய்ப்பு பெற்று இந்திய திரைஇசை உலகையே தன் முதல் படத்தின் மூலம் திரும்பி பார்க்க வைத்தார். தமிழ் திரை இசையில் தனிபெரும் இசை சக்கரவர்த்தியாக கோலோச்சிய இளையராஜாவின் பாடல்களில் சற்றே ஒரு சலிப்பு ஏற்படத் தொடங்கிய நேரம் அது! 1990 களில் ரகுமானின் கொடி உயர, உயர இளையராஜாவின் வாய்ப்புகள் குறைந்தன!

”சிறு வயதில் வறுமையால் கல்வி கற்க முடியாமல் போனது, வாய்ப்பு தேடி அலைந்த காலங்களில் பெற்ற அவமானங்கள், தூக்கிவிட ஆளில்லாமல் துவண்டு விழுந்து தனிமைப்பட்ட பொழுதுகள்.. என்னை தற்கொலைக்கு தூண்டியுள்ளன” என்று ஒருமுறை ரகுமான் கூறியுள்ளார். இந்தச் சூழல்களில் இறை நம்பிக்கையே அவரைத் தேற்றியது. திலீப்குமார் என்ற அவரது இயற்பெயரை அல்லா இரக்கா ரகுமான் என மாற்றிக் கொண்ட தருணத்தில் அல்லலுற்ற அவர் மனம் அமைதி அடைந்தது! ஆன்மீக ஒளி உள்ளமெங்கும் நிறைந்தது! இன்று வரை ரகுமான் யாரிடமும் கோபப்பட்டதாகவோ, வெறுப்பை காட்டியதாகவோ ஒரு நிகழ்வைக் கூட சொல்ல முடியாது.

பள்ளிப் படிப்பை கூட முடித்திராத ஏ.ஆர்.ரகுமானுக்கு உலகின் தலை சிறந்த பல்கலைக் கழகங்களான அண்ணா பல்கலைக் கழகம், டிரினிட்டி காலேஜ் ஆப் மியூசிக், பெர்கிலீ காலேஜ் ஆப் மியூசிக், அலிகார் முஸ்லீம் பல்கலைக் கழகம் போன்றவை ‘டாக்டரேட்’ பட்டம் தந்து கெளரவித்துள்ளன. 32 பிலிம் பேர் விருதுகள், 11 IIFA விருதுகள், ஆறு தேசிய விருதுகள், பத்மஸ்ரீ, பத்மவிபூஷன் போன்ற இந்திய விருதுகள், ஆஸ்கார், கோல்டன் குளோப், பாப்தா, கிராமி போன்ற சர்வதேச விருதுகள்.. என நீளமான பட்டியல் போடும் அளவுக்கு இந்தியாவின் பல்வேறு மாநிலங்களும், பல்வேறு நாடுகளும் அவருக்கு விருதுகள் தந்துள்ளன.

இரண்டு ஆஸ்கார் விருதுகள் பெற்ற ரகுமான்

இந்த விருதுகள் யாவும் அவரைத் தேடி வந்தவைகளே! பல விருதுகளை அவரால் சென்று வாங்க முடியாத நிலையில், அதை தன் நண்பர்களை பெற வைத்து, அந்த விருதுகளும் நண்பர்களிடமே தங்கிவிட்டன என்கிறார்.  நெளஷ்த் அலிகான், மைக்கேல் ஜாக்சன், சாரா பிரிஷ்மென், மைக்கேல் பொல்டர் போன்ற சர்வதேச இசை விற்பன்னர்கள் பலரோடு ஈகோ இல்லாமல் பணியாற்றிவர் ரகுமான். இவ்வளவு பிஸியான நிலையிலும், அவர் ஒரு லட்சியத்தை மனதில் ஏந்தி, அதற்காக தன் நேரத்தையும், உழைப்பையும் கணிசமாக செலவழித்து வருகிறார்.

பொருளாதார வசதி இல்லாத தான், அனுபவித்த துன்பங்களை மனதில் வைத்து, ‘அன்று தன்னைப் போல தூக்கிவிட ஆளில்லாத வறுமையில் உழலும் இளையோர்களை கண்டெடுத்து ஊக்குவிக்க வேண்டும், உலகத் தரத்திற்கு அவர்களை உயர்த்த வேண்டும்’ என்ற குறிக்கோளுடன் கடந்த 16 ஆண்டுகளாக சமூகத்தில் மிகப் பின்தங்கிய நிலையில் உள்ள குறிப்பிட்ட எண்ணிக்கையிலான மாணவச் செல்வங்களை தேர்ந்தெடுத்து இசைப் பயிற்றுவிக்கிறார். அதுவும், குறிப்பாக அரசு மாநகராட்சி பள்ளி மாணவர்களில் இசை ஆர்வமுள்ளவர்களை கண்டெடுத்து கட்டணமில்லா இசையைக் கற்பிக்கிறார். எதிர்கால இசைத் தலைமுறையை உருவாக்குவதற்காகவே அவர் ஏற்படுதிய கே.எம்.காலேஜ் ஆப் மியூசிக் அண்ட் டெக்னாலஜி என்ற பெரிய இசைக் கல்வி நிறுவனத்தில்  எளிய சமூக பின்பலமுள்ள மாணவர்களுக்கும் குறிப்பிட்ட எண்ணிக்கையில் இடம் தருகிறார்.

இங்கு உலகத் தரத்திற்கான இசைக் கல்வியை மாணவர்களுக்கு தானே நேரடியாகவும், மிகப் பெரிய இந்திய  மற்றும் சர்வதேச இசை ஆசிரியர்களைக் கொண்டும் பயிற்றுவிக்கிறார்! இதற்காக அவர் உருவாக்கியதே உலகின் முதல் சிம்பொனி இசைக் குழுவான ‘சன்சைன் ஆர்கெஸ்டிரா’ (Sunshine Orchestra). ரகுமானும் சிம்பொனி இசை தந்து ‘மேஸ்ட்ரோ’ பட்டம் பெற்ற போதிலும், ஒருபோதும் தன் பெயருக்கு முன்னால் ‘மேஸ்ட்ரோ’ எனப் போட்டுக் கொள்ள மாட்டார். போட அனுமதிக்கவும் மாட்டார்.

ரகுமானின் இசைக் கல்லூரியில் ஹிந்துஸ்தானி, வெஸ்டர்ன், பாப், ஜாஸ், நாட்டுப்புற இசை என அனைத்து வகை இசையும் அதற்கான ஆசிரியர்களைக் கொண்டு கற்பிக்கப்படுகிறது. இசை வரலாறு தொடங்கி நவீன ரெக்கார்டிங் தொழில் நுட்பம் வரை கற்பிக்கிறார். கிடார், வயலின், ப்ளுட், பியானோ, மற்றும் பல மேற்கத்திய இசைக் கருவிகளில் பயிற்சி தருகிறார். ஒரு வருட சர்டிபிகேட், இரண்டு வருட டிப்ளமா, நான்கு வருட படிப்பு போன்றவற்றை இங்கு அறிமுகப்படுத்தி அவரவர் விருப்பத்திற்கேற்ப கற்பிக்கிறார்கள். இங்கு இந்தியாவின் பல பகுதிகளில் இருந்தும், வெளிநாட்டு மாணவர்களும் வந்து, உரிய கட்டணம் செலுத்தி பயின்று செல்கிறார்கள். அவர்களில் இலங்கையில் இருந்து வந்த தினேஷ் சுபாஷினியும், பங்களாதேஷில் இருந்து வந்த இமான்ஷாப் அவர்களும் இன்று அங்கு பிரபல கம்போசர்களாக உள்ளனர்.

இந்த இசைக் கல்லூரி லண்டனில் உள்ள மிடில்செக்ஸ் யூனிவர்சிட்டியுடன் இணைந்து செயல்படுகிறது. அந்த வகையில் இலண்டன், அமெரிக்கா, ஐரோப்பாவில் இருந்தும் ஆசிரியர்கள் வந்து கற்பிக்கிறார்கள். இங்கு படித்த மாணவர்கள் பலர் சர்வதேச இசைக் குழுக்களில் வாய்ப்பு பெற்று இயங்கி வருகின்றனர். தன் வேலைபளுவால் தனக்கு வரும் வாய்ப்புகளை ரகுமான் தன் மாணவர்களுக்கு சிபாரிசு செய்கிறார். அந்த வகையில் ஹாலிவுட் படங்களின் வாய்ப்புகளைக் கூட தன் மாணவர்களுக்கு தந்துள்ளார் ரகுமான்.

நம்மிடையே  நிலவிய ஏற்றத் தாழ்வுகளால் தலைமுறை தலைமுறையாக நாம் அனுபவித்த அனைத்து சாபங்களையும் ஒழித்து, ஏழைகளை முன்னேற்றி, கலை மற்றும் அறிவியல் துறைகளில் தலைவர்களை உருவாக்கும் கனவுகளுடன் தான் இயங்குவதாக ரகுமான் குறிப்பிடுகிறார்.

ஹிந்தி, மலையாளம், குஜராத்தி, பெங்காலி, ஹாலிவுட், சீனா மற்றும் ஐரோப்பிய படங்களுக்கு எல்லாம் பணியாற்றினாலும், தாய் மொழியாம் தமிழ் மீது அளப்பரிய பற்று கொண்ட ரகுமான், தான் இரண்டு ஆஸ்கார் விருதுகளைப் பெற்ற அந்த தருணத்தில், அந்த சர்வதேச மேடையில், ”எல்லா புகழும் இறைவனுக்கே” எனத் தமிழில் பேசினார். தன் டிவிட்டரில் பாரதியார், பாரதிதாசன் கவிதைகளை அவ்வப்போது பகிர்வதும் ரகுமான் வழக்கம். இதன் தொடர்ச்சியாகத் தான் தமிழிசை மரபுகளை ஆழமாக ஆய்வு செய்தவரும், அதன் தொன்மை, வரலாறு, பண்கள், சுருதி முறைகள் போன்றவற்றை எடுத்தியம்பும் ‘கருணாமிர்தசாகரம் என்ற நூலை இயற்றியவரும், ‘கர்நாடக இசையின் மூலம் தமிழிசையே’ என பல்வேறு ஆய்வுகள் செய்து நிருபித்தவருமான மாபெரும் இசை அறிஞர் ஆபிரகாம் பண்டிதர் குறித்து உரிய ஆய்வாளர்களைக் கொண்டு ஆய்வைச் செய்து அரிய நூல் ஒன்றையும் வெளிக் கொண்டு வந்தார்!

இப்படியாக தான் உருவான தமிழ்ச் சமூகத்திற்கும், ஆதரவற்ற எளியோருக்கும் விளம்பரமில்லாமல் அளப்பரிய நற்காரியங்களைச் செய்யும் ரகுமான், எந்த அதிகார மையத்துடனும் தன்னை அடையாளப்படுத்திக் கொள்ளாதவர். ஆன்மீகத்தில் ஆழ்ந்து திளைப்பவரென்றலும், பற்றற்வர் போல பாசங்குதனம் செய்யாதவர்! நாளொன்றுக்கு ஐந்து முறை தொழுகை, ரம்ஜான் மாதம் முழுக்க நோன்பு, இறைதூதர்களின் சமாதியான தர்க்காகளுக்கு சென்று வழிபாடு, தியானம் போன்றவற்றில் ஈடுபடும் ரகுமான் இவற்றையுமே கூட மக்களோடு மக்களாக – சராசரி மனிதர்களில் ஒருவராகவே – செய்கிறார்.

பழங்குடிகள் நிறைந்த நாகாலாந்தின் இசைக் கலாச்சாரத்தைப் பற்றிய ஆவணப்படம் ஒன்றை தயாரித்துள்ள ரஹ்மான், இந்த ஆவணப் படத்தின் பணிகளோடு அங்கு இருக்கும் பழங்குடி குழந்தைகளுக்கான ஆசிரமம் ஒன்றை தத்தெடுத்து, அங்கு இருக்கும் ஆதரவற்ற குழந்தைகளுக்கு இசைக் கற்கும் வாய்ப்புகளை உருவாக்கித் தந்துள்ளார்.

தமிழ் சமூகத்தால் இளையராஜா பெற்றதென்ன? தந்ததென்ன?

ஒரு தமிழன் சர்வதேச மனிதனாக தன்னை முழுமையாக தகவமைத்து சாதி, மதம், இனம் ஆகிய எல்லைகளை முற்றிலும் கடந்து, உலகளாவிய முறையில் எப்படி இயங்குவது என்பதற்கு ஏ.ஆர்.ரகுமானே இலக்கணம். எத்தனை உச்சத்திற்கு சென்றாலும், ‘எளியோரை ஏற்றம் பெற வைப்பதே முதன்மை இலக்கு’ என்று இயங்குவது தனிச் சிறப்பாகும்.

சாவித்திரி கண்ணன்

Support Aram

நேர்மையான, வெளிப்படையான,

சுதந்திரமான இதழியலுக்கு தோள்

கொடுங்கள்.

UPI QR CODE

Razorpay Payment Gateway

Personal Info

Donation Total: ₹1,000.00 One Time