கடைசி கட்ட வாக்கு பதிவு நடக்கும் நாளன்று விவேகானந்தர் பாறை மீது மோடி தியானம் செய்யும் காட்சிப் படிமம் அனைத்து ஊடகங்களிலும் தலைப்பு செய்தியாவதே ஒரு நுட்பமான தேர்தல் பிரச்சார உத்தி தான். ஆனால், மதவெறி மனிதன், மனித நேயத்தின் உச்சமான ஆன்மீகத் துறவியைத் தன் அரசியல் பகடைக் காயாக்குவதா?
தமிழ் நாட்டின் தென்கோடி ஊரான முக்கடல் சங்கமிக்கும் கன்னியாகுமரி தற்போது கலவரப்பட்டு கிடக்கிறது. பாதுகாப்புக் கெடுபிடிகளால் பொதுமக்களின் நடமாட்டங்கள், வணிக நிறுவனங்கள், போக்குவரத்து என அனைத்தும் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளது. காபந்து சர்க்காரின் பிரதமராக இருக்கும் நரேந்திர மோடி விவேகானந்தர் பாறையில் அமர்ந்து இரண்டு நாட்கள் தியானம் செய்ய வரவுள்ளாராம். அவருக்கென்ன கண்ணை மூடிக் கொண்டு ஒரு கண்கட்டு வித்தை காட்டுகிறார்! ஆனால், பாதுகாப்பில் உள்ள காவலர்களுக்கோ கண் விழி பிதுங்கி விடுகிறது. சுற்றுலா பயணிகள் சுத்தமாக நடமாடவே முடியாது.
வீரத் துறவி என்றும், விவேகத்தின் ஒளிச்சுடர் என்றும், ஞானப் பிறவி என்றும் ஞாலத்தின் குரு என்றும் கொண்டாடப்பட்ட விவேகானந்தர் அமர்ந்து தியானம் செய்த புகழ்பெற்ற கன்னியாகுமரி பாறையில், குஜராத் கலவரத்தில் ஈராயிரம் மனித உயிர்கள் காவு கொள்ள காரணமான ஒருவர் வந்து அமர்கிறார்..!
ஒரு மதத்தை மற்ற மதங்களுக்கு எதிராகவோ அல்லது போட்டியாகவோ வைக்கும் சகிப்புத் தன்மையற்ற மனப்பான்மைக்குப் பதிலாக, அனைத்து மனிதர்களுக்கும், பிற உயிர்களுக்கும் சேவை செய்வதே அனைத்து மதங்களின் அடிப்படை என வலியுறுத்தியவர் விவேகானந்தர்!
சுவாமி விவேகானந்தர் தனது புகழ்பெற்ற சிகாகோ உரையை நிறைவு செய்த போது, “நல்லிணக்கமும், அமைதியும் மட்டுமே தேவைப்படுகிறது, வேற்றுமை அல்ல” என்று ஒவ்வொரு மதத்தின் பதாகையிலும் எழுதப்பட வேண்டும்’’ என்றவர்.
நீதியின் அடிப்படையிலான முன்னேற்றத்திற்கு வழி வகுக்கும் என்பதால், சுவாமி விவேகானந்தர் அனைத்து மதங்களின் ஒற்றுமைக்காகவும் நல்லிணக்கத்திற்காகவும் உறுதியுடன் நின்றார். சுவாமி விவேகானந்தரின் கருத்துக்கள் எப்போதுமே நமக்கு முக்கியமானவை என்றாலும், ஒற்றுமையையும், மத நல்லிணக்கத்தையும் சீர்குலைப்பதற்கு வலதுசாரி சக்திகள் முயற்சித்து வரும் இந்தக் கால கட்டத்தில் அவை இன்னும் பொருத்தமானவையாக மாறியுள்ளன.
ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி 12 அன்று, சுவாமி விவேகானந்தரின் பிறந்த நாளை தேசிய இளைஞர் தினமாகக் கொண்டாடும் வேளையில், 1893ஆம் ஆண்டில் சிகாகோவில் நடந்த உலக மதங்களின் பாராளுமன்றத்தில் அவர் ஆற்றிய புகழ் பெற்ற உரையை நினைவு கூர்வது அவசியம்.

“உலகில் அனைத்து மதங்களாலும் அனைத்து நாடுகளாலும் துன்புறுத்தப்பட்டவர்களுக்கும், அகதிகளுக்கும் அடைக்கலம் கொடுத்த ஒரு தேசத்தைச் சேர்ந்தவன் என்பதில் நான் பெருமைப்படுகிறேன்,”என்று அப்போது அவர் கூறினார்.
அவர் மேலும் கூறுகையில், “பிரிவினைவாதம், மதவெறி, அதன் கொடூரமான வழித்தோன்றலான தீவிரத்தன்மை கொண்ட நம்பிக்கைகள் ஆகியவை இந்த அழகான பூமியை நீண்ட காலமாக ஆக்கிரமித்து வந்துள்ளன. இத்தகைய சிந்தனை உடையவர்கள் பூமியை வன்முறையால் நிரப்பி, மனித இரத்தத்தால் பூமியை அடிக்கடி நனைத்து, நாகரிகத்தை அழித்து, தேசம் முழுவதையும் நம்பிக்கையற்ற நிலைக்குத் தள்ளியிருக்கின்றனர். இந்தக் கொடிய அரக்கர்கள் இல்லையென்றால் மனித சமுதாயம் இன்றிருப்பதை விட எவ்வளவோ முன்னேறியிருக்கும்” என்று விவேகானந்தர் அப்போது குறிப்பிட்டார்.
“சகிப்புத்தன்மை, உலகளாவிய ஏற்பு ஆகிய இரண்டையும் உலகிற்குக் கற்பித்த ஒரு மதத்தைச் சேர்ந்தவன் என்பதில் நான் பெருமைப்படுகிறேன். உலகளாவிய சகிப்புத் தன்மையின் மீது நம்பிக்கை வைப்பதோடு மட்டுமல்லாமல், எல்லா மதங்களையும் உண்மை என்று நாங்கள் ஏற்றுக்கொள்கிறோம்,” என்று சொல்லி, ஒன்றையொன்று ஏற்றுக்கொள்ளும் சகிப்புத்தன்மை கொண்ட மதங்கள் என்ற மாற்றுப் பார்வையை, மதவாதப் போக்குகளுக்கு எதிர்வினையாக சுவாமி விவேகானந்தர் மகிழ்ச்சியுடன் முன்வைத்தார்.
அதே உரையில், சுவாமி விவேகானந்தர் குழந்தைப் பருவத்திலிருந்து தான் திரும்பத் திரும்பச் சொல்லி வந்த ஒரு பாடலை நினைவு கூர்ந்தார், “வெவ்வேறு நீரோடைகளின் மூலங்கள் வெவ்வேறு பாதைகளில் இருப்பதை ஏற்றுக்கொள்ளும் மனிதர்கள் மேற்கொள்ளும் வெவ்வேறு போக்குகள் கோணலானதாகவோ அல்லது நேரானதாகவோ தோன்றினாலும், அவை அனைத்தும் கடவுளை நோக்கியே இட்டுச் செல்கின்றன.”
தாங்கள் சார்ந்திருக்கும் மதத்தைப் பற்றிய தனிவிதமான, பிரத்தியேகவாத பார்வையைக் கொண்டவர்களை ஏளனம் செய்த விவேகானந்தர், “தான் சார்ந்திருக்கும் மதம் ஒன்று மட்டும் தான் நிலைத்திருக்க வேண்டும், மற்ற மதங்கள் அழிந்துவிடவேண்டும் என்று எவராவது கனவு கண்டால், அவருக்காக நான் என் இதயத்தின் அடியாழத்திலிருந்து பரிதாபப்படுகிறேன்” என்று கூறினார். உலகத்தின் அனைத்து விதமான மதவெறிக்கும் சாவு மணி வாளினாலோ அல்லது பேனாவாலோ உருவாவது என்பது உலகத்திற்குத் தேவையாக இருக்கிறது” என்று கூறினார்.
2024 மக்களவைத் தேர்தல் இறுதி பரப்புரை முடிந்து, மே 30ஆம் தேதி கன்னியாகுமரிக்கு வருகை புரிந்து, அங்குள்ள விவேகானந்தர் மண்டபத்தில் மூன்று நாள்கள் தியானம் செய்வதென நரேந்திர மோடி திட்டமிட்டிருக்கிறார். இறுதி கட்ட தேர்தல் நடைபெற இருக்கிற 57 மக்களவைத் தொகுதிகளில் அரசியல் ஆதாயம் தேடுவதற்காக விவேகானந்தர் பாறையில் தியானம் செய்ய பிரதமர் மோடி தேர்வு செய்திருப்பதை விட, ஒரு அரசியல் மோசடி வேறு எதுவும் இருக்க முடியாது. பதவிக்காக நரேந்திர மோடி எவ்வளவு தரம் தாழ்ந்த நிலைக்கும் செல்வார் என்பதற்கு இந்தத் ‘தியான நாடகம்’ ஒரு உதாரணமாகும்.
சுவாமி விவேகானந்தர் தம் வாழ்நாள் முழுவதும் மத நல்லிணக்கத்தைக் கடை பிடித்து உண்மையான ஆன்மீகத்தை உலகம் முழுவதும் பரப்பியவர். அனைத்து மதத்தினராலும் அன்போடு நேசிக்கப்பட்டவர். அவர் ஒரு சாந்த சொரூபி. அதே நேரத்தில், தமது நாவண்மையால் உலகத்தின் கவனத்தை ஈர்த்தவர். அவரது ஆன்மீகப் பயணத்தில் 1893ஆம் ஆண்டில் செப்டம்பர் 11 அன்று அமெரிக்காவில், சிகாகோ நகரில் நடைபெற்ற சமய மாநாட்டில் ஆற்றிய உரை வரலாற்றுச் சிறப்புமிக்கதாகும்.
குஜராத் மாநில முதலமைச்சராக நரேந்திரமோடி இருந்த போது ஆயிரக்கணக்கான இஸ்லாமியர்கள் பகிரங்கமாகப் படுகொலை செய்யப்பட்ட போது, நீரோ மன்னன் பிடில் வாசித்ததைப் போல கண்டும் காணாமல் இருந்தவர் தான் இன்றைய பிரதமர் நரேந்திர மோடி. அவரது அரசு நிர்வாகம் கொலைகார குற்றவாளிகளுக்கு ஒத்துழைப்பு நல்கியது. இளமை காலத்திலேயே ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தில் சேர்ந்து, மக்களை மதரீதியாகப் பிளவுபடுத்தும் கோல்வால்க்கரின் சிந்தனைத் தொகுப்புகளைப் படித்து வளர்ந்த நரேந்திர மோடி அவர்கள், சுவாமி விவேகானந்தரின் உரைகளைப் படித்திருக்க வாய்ப்பில்லை. அப்படியே படித்திருந்தாலும், அதை ஏற்றுக் கொள்கிற மனநிலை மத வெறியை மனம் நிறைய கொண்ட அவருக்கு எப்படி இருக்க முடியும்…?
கடந்த 2019 மக்களவை தேர்தல் இறுதி பரப்புரை மே 17 ஆம் தேதி முடிந்த நிலையில் உத்தரகாண்ட் மாநிலம், கேதார்நாத்திற்கு சென்று சாம்பல் நிற அங்கி, இடுப்பில் காவி துணி, தலையில் பாரம்பரிய உத்தரகாண்ட் தொப்பி அணிந்து ஹெலிகாப்டரில் வந்து இறங்கிய இடத்தில் இருந்து ஒரு கி.மீ. தூரம் நடந்து கேதார்நாத் கோயிலுக்கு சென்று சிறப்பு வழிபாடு செய்தார். பிறகு, கேதார்நாத்தில் உள்ள குகையில் தொடர்ந்து 17 மணி நேரம் தியானத்தில் ஈடுபட்டார். இதன் மூலம் தேர்தல் பரப்புரை நேரம் முடிந்த பிறகு குகைக்குள் மவுனமாக இருந்து தொலைக்காட்சிகள் வாயிலாக நூதன பிரச்சாரத்தின் மூலம் மக்களிடம் ஆதரவு கோரி நவீன நாடகத்தை அரங்கேற்றியவர் தான் நரேந்திர மோடி.
அதிகார வெறி, பகைமை, வெறுப்பு, பொய்மை, மனிதகுலத்தைப் பிளவுபடுத்தும் வஞ்சகப்புத்தி கொண்ட ஒருவருக்கு மனம் ஒன்றிய தியானம் என்றுமே கிட்டாது. ஆன்மீக மாண்புகளை மீறி, மதவெறியால் ஆட்கொள்ளப்பட்டு, ஆரோக்கியமற்ற விரக்தியான மனநிலைக்குச் சென்றுவிட்ட நரேந்திர மோடி, ஆன்மீக ஞானக்கடல் விவேகானந்தர் பாறையில் தியானம் செய்வது என்பது ஏமாற்று நாடகம்.
Also read
சுவாமி விவேகானந்தரின் போதனைகளை ஏற்று அவரைப் போற்றுபவர்கள் எவரும் நரேந்திர மோடியின் தியான நாடகத்தை ஏற்றுக் கொள்ள மாட்டார்கள். சுவாமி விவேகானந்தரை இழிவுபடுத்துகிற முயற்சியில் ஈடுபட்டு, அதன்மூலம் இந்துமதத்திற்கே களங்கம் கற்பிப்பவராக நரேந்திர மோடியின் தியான நாடகம் அமைந்திருக்கிறது.
மே 30 அன்று, கன்னியாகுமரியில் விவேகானந்தர் பாறையில் நரேந்திர மோடி மேற்கொள்ளும் தியான நாடகம், தமிழ்நாட்டிற்கு மட்டும் அவமானமல்ல, இந்தியாவிற்கே அவமானமாகும்.
கட்டுரையாளர்; ஆ.கோபண்ணா
ஆசிரியர், தேசிய முரசு
இந்தியாவில் வாழும் அனைத்து மக்களும் இந்துக்களே – அவர். கிறித்து வர் இஸ்லாமியர் சீக்கியர், புத்தர் எவரே ஆயினும் அவர் இந்துவே இவற்றை, இவர்களை வேறுபடுத்தி, கூறுபடுத்தி பிரிந்தாளுபவர் இந்து என்கிற ஐந்துக்கள் என்றார் விவேகானந்தர். அத்தகை ஒரு ஐந்துதான் மோடி. அது ஆன்மிக பெரியார் விவேகானந்தர் பாறையில் தியானத்தில் ஈடுபடுவது கேலிக்கூத்தே .
தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் துணைத் தலைவர். நீண்ட காலமாக செய்தி தொடர்பாளராக பணியாற்றிய பெருமைக்குரியவர் அண்ணன் ஆ.கோபண்ணா. ஒரு நிருபராக என்னுடைய நெருங்கிய நண்பர்.
நரேந்திர மோடியின் இன்னொரு முகத்தை தோலுரித்து காட்டியிருக்கிறார். எனக்கு 100 மாணவர்களை தாருங்கள் இந்த சமுதாயத்தை மாற்றி காட்டுகிறேன் என்று முழக்கமிட்டவர் சுவாமி விவேகானந்தர். அவர் ஒரு ஆன்மீகவாதி உலகம் முழுக்க இந்து மதத்தின் பெருமையை நிலைநாட்டியவர். எந்த இடத்திலும் எந்த நேரத்திலும் மற்ற மதங்களுக்கு எதிராக பேசாதவர். ஆனால் கன்னியாகுமரியில் அவரது பெயரில் போற்றப்படும் பாறையில் அமர்ந்து தியானம் செய்ய போகிறார் நரேந்திர மோடி. அவரது பல்வேறு நாடகங்களில் இதுவும் ஒன்று. எல்லாவற்றையும் மக்கள் கவனித்துக் கொண்டுதான் இருக்கிறார்கள். மதத்தால் இந்தியாவை கூறு போட நினைக்கும் நரேந்திர மோடியின் எண்ணம் எந்த காலத்திலும் வெற்றி பெறாது என்பது நிச்சயம்.
மோடி எதை செய்தாலும் அதில் குற்றம் காண்பதே சிலரின் வேலை.அதில் நீங்களும் ஒருவர்.உங்களால் நாட்டுக்கு ஒரு பயனும் இல்லை.உலகமே மதிக்கும் ஒரு பெரும் தலைவரை நீங்கள் நீந்திக்கிறீர்கள் கருத்து சுதந்திரம் என்ற பெயரில்.
Your life in the earth is waste, because you are anti Indian…