அமெரிக்க ஜனநாயகத்தின் கோரமுகத்தை தோலுரிக்கும் படம்!

பீட்டர் துரைராஜ்

அமெரிக்க அதிபர் தேர்தலுக்கான பிரச்சாரம் தூள் பரப்பிக் கொண்டிருந்த நேரத்தில் The trail of Chicago 7 (சிகாகோ விசாரணை) என்ற ஆங்கிலப் படம் வெளிவந்ததானது, ஒரு வகையில் வெள்ளை நிறவெறி ஆதரவாளர்களின் முகத்திரையை கிழிக்க உதவியதன் மூலம் ஜோபிடன் வெற்றிக்கு ஒரளவு உதவியது என்றும் சொல்லாம்!

1968 ஆம் ஆண்டு  சிகாகோ நகரில் நடத்த கலவரத்தைத் தொடர்ந்து  நடந்த நீதிமன்ற விசாரணைதான், இந்தப் படம். ஆரோன் சொர்கின்(Aron Sorkin) என்பவர் திரைக்கதை எழுதி, இயக்கி இருக்கிறார். இந்தியாவில் அக்டோபர் மாதம் வெளிவந்துள்ளது.நெட் பிளிக்சில் இந்தப்  படத்தைக் காணலாம். அமெரிக்க ஜனநாயகத்தின் கோரமுகத்தை இது காட்டுகிறது. நடந்த சம்பவங்களின் அடிப்படையில் இது எடுக்கப்பட்டுள்ளது.

THE TRIAL OF THE CHICAGO 7 (L-R) CAITLIN FITZGERALD

சிகாகோ விசாரணையை உலகமே அறியும். தமிழ்நாட்டில் பத்திரிகையாளர் ஞாநி இதே போன்ற ஒரு சம்பவம் தமிழ்நாட்டில் நடந்தால் எப்படி இருக்கும் என்று கற்பனை செய்து, அதன் தழுவலாக ‘பலூன்’ என்ற நாடகத்தை எழுதினார். அது ‘பரீஷா’ நாடகக்  குழுவினரால் நடத்தப்பட்டது. அந்த நாடகம் வெளிவந்து 25 ஆண்டுகளுக்குப்  பிறகு அந்தக் கதாப்பாத்திரங்கள் என்ன ஆனார்கள் என்ற இணைப்பையும் சேர்த்து அதே பலூன் நாடகத்தை மீண்டும் (அவர் இறப்பதற்கு சில வருடங்கள் முன்பு) நடத்தினார். அந்த பலூன் நாடகத்தின் முன்னுரையை வெளியிட்டால், அதுதான் இந்த திரைப்பட விமர்சனம்.

“வியத்நாம்”  என்ற சின்னஞ்சிறு ஆசியநாட்டின் மீது அமெரிக்கா போர் நடத்தியது. இதில் 58,000 அமெரிக்க வீரர்கள்  இறந்தனர்.தங்கள் பிள்ளைகள் எங்கோ ஒரு தேசத்தில் இறப்பதை அமெரிக்கர்கள் விரும்பவில்லை.சமாதனத்திற்காக குரல் கொடுத்த மார்ட்டின் லூதர் கிங் இறந்து போன வருடம் அது. பொதுமக்கள் மனநிலை போருக்கு எதிராக இருந்தது. வியத்நாம் போரை எதிர்த்து  பேரணி நடத்த அனுமதி கேட்கிறார்கள்.அரசு தடை விதிக்கிறது.

தடையை மீறி பேரணி நடக்கிறது. அமெரிக்காவின் பல்வேறு கலாச்சாரம், எண்ணவோட்டம், பின்னணி கொண்ட பல இயக்கங்கள் பேரணியில் ஒன்று கூடுகின்றன.1968 ம் ஆண்டு நடைபெற உள்ள அமெரிக்கத் தலைவர் தேர்தலில், வேட்பாளரை தேர்ந்தெடுக்க  ஜனநாயக கட்சியினரின் மூன்று நாள் மாநாட்டை  நடத்துகின்றனர். யுத்தத்திற்கு எதிரான தங்கள் நிலைப்பாட்டை  வலியுறுத்தி, சிகாகோவில் அந்த மாநாடு நடக்கும்போது  பேரணி நடத்த வேண்டும் என்பது ஆர்ப்பாட்டக்காரர்களின் திட்டம்.

ஆனால் அரசு சிறப்பு கலவரச் சட்டத்தை பயன்படுத்துகிறது. மாநில எல்லையைக் கடப்பது  குற்றம் என்று  நிலையெடுக்கிறது.கடிதம் அனுப்புவதும் குற்றம். பேரணியில் கலவரத்தை  ஏற்படுகிறது. பலரைக் கைது செய்கிறது. கூட்டாட்சி அரசு( அமெரிக்காவின் மத்திய அரசு – Federal Government) எட்டுபேர் மீது  வழக்கு தொடுக்கிறது.நீதிமன்ற விசாரணை புதிய அமெரிக்க தலைவர் பதவிக்கு வந்தபிறகு   நடைபெறுகிறது. இந்த விசாரணைதான் இரண்டு மணி நேர திரைப்படம்.

நீதிபதி இவர்களைத் தண்டித்தே ஆக வேண்டும் என்ற நிலையெடுத்து விசாரிக்கிறார். அதில் ஒரு கறுப்பினத்தவரை அவருக்கான வழக்கறிஞர் இல்லாமலே வழக்கை நடத்துகிறார். குற்றவாளி சாட்சிகளை குறுக்கு விசாரணை பண்ணவும் அனுமதிக்கவில்லை. எதிர்த்து கேள்வி குரல் எழுப்பியவரின் வாயை அடைத்து, கை,கால்களில் சங்கிலியைக் கட்டி விசாரணையை தொடர்ந்து நடத்துகிறார். அரசு வழக்கறிஞருக்கே நடப்பது பிடிக்கவில்லை.விசாரணை ஊடகங்களில் வருகிறது. பொதுக் கருத்து குறித்து நீதிபதியோ, காவல்துறையோ கவலைப்படவில்லை. ஆனாலும் இந்த விசாரணையினூடே போராளிகள் யுத்த எதிர்ப்பு பிரச்சாரம், அரசினுடைய சதி, காவல்துறையின் சதி, அத்துமீறல் போன்றவைகளை வெளிக் கொண்டு வருகிறார்கள். இந்த விசாரணையின் போது, குற்றம் சாட்டப்பட்டவர்கள் கோமாளித்தனமான சேட்டைகளை செய்கிறார்கள்.

குற்றவாளிகளுக்கு ஆதரவாக வழக்காடிய இரு வழக்கறிஞர்களுக்கு நீதிமன்ற அவமதிப்புத் தண்டனைக்கு  உட்படுகிறார்கள்.காவல்துறை கொடுத்த, மிரட்டும்  மொட்டைக் கடுதாசியைக் காட்டி ஒரு ஜீரியை விசாரணையில் கலந்து கொள்ள வேண்டாம் என்று தடுக்கிறார்.(அவர் குற்றவாளிகளுக்கு ஆதரவாக இருக்கக்கூடும் ! பொறுக்கியெடுத்த  பொதுமக்கள்தான் (12 பேர்) நடுவர்களாக இருந்து, விசாரணையை கவனித்துவந்து இறுதியில்  குற்றவாளியா? இல்லையா என்று அமெரிக்காவில்  சொல்லுவார்கள்- ஜூரி (Jury) முறை). இவையனைத்தும் இந்த திரைப்படத்தில் சித்தரிக்கப்பட்டுள்ளன. இந்த வழக்கை நடத்த அனுமதி கொடுத்த, ஓய்வுபெற்ற அரசு வழக்கறிஞரை விசாரிப்பதை ஜீரிகள் பார்க்கக் கூடாது என்று நீதிபதி சொல்லுகிறார். அவர் சொன்னதையும் ஜூரிகளுக்கு தெரியப்படுத்தமாட்டேன் என்று சொல்லுகிறார்.

இறுதியில் அந்த ஏழு பேருக்கும் தீர்ப்பு வருகிறது(எட்டு பேரில் ஒருவராக இருந்த கறுப்பினத்தவரை, இந்த வழக்கிலிருந்து தனியாக பிரித்து நடத்துகிறார்கள்.அதனால் தான் இது சிகாகோ 7).விசாரணை முடிந்து ஐம்பது வருடங்கள் ஆகியிருக்கலாம். ஆனாலும் நாம் பார்க்கலாம்; (ஜார்ஜ் பிளாயிட் என்ற கறுப்பினத்தவரை, கீழே தள்ளி, அவர் கழுத்தில் தனது காலால் எட்டு நிமிடம் அழுத்திக் கொன்ற வெள்ளைநிற காவல்காரன் அமெரிக்காதானே ? இந்தச் சம்பவம் 2020 ல்தானே  நடந்தது). இந்தப்படம் இப்போதும் பொருத்தமுடையது. எல்லா நாட்டிற்கும் பொருத்தமுடையது. இயக்குநரை மனதார பாராட்டுகிறேன்.

 

 

Support Aram

நேர்மையான, வெளிப்படையான,

சுதந்திரமான இதழியலுக்கு தோள்

கொடுங்கள்.

UPI QR CODE

Razorpay Payment Gateway

Personal Info

Donation Total: ₹1,000.00 One Time