ஆர்.எஸ்.எஸ் – மோடி வலுக்கும் மோதல்!

-சாவித்திரி கண்ணன்

நாயைக் குளிப்பாட்டி, அலங்கரித்து நடு வீட்டில் வைத்தாலும் அது தன் புத்தியைத் தான் காட்டுமே அல்லாது வேறெதையும் அதனிடம் எதிர்பார்க்க முடியாது. நாமே நம் கொள்கையை மீறியதால் தான் இன்றைக்கு தேவையில்லாத அவமானங்களை சுமக்கிறோம் என ஆர்.எஸ்.எஸ் வட்டாரத்தில் அலுத்துக் கொள்கிறார்கள்!

”சமூகத்தில் அனைவருக்கும் மேலானவன் பிராமணன், நாட்டை ஆள்வதற்கும், காப்பதற்கும் தகுதியானவன் ஷத்திரியன், வியாபாரத்தில் யாரையும் விஞ்சியவன் வைசியன், உழைப்பைக் கொண்டு உற்பத்தி பொருட்களை உருவாக்கித் தந்து சமூகத்தை உய்விப்பவன் சூத்திரன். இது ஆயிரம் காலத்து சூத்திரம். அந்தந்த சமூகத்தின் இயல்புபடி தான் அந்தந்த சமூகத்தில் பிறக்கும் மனிதனின் சுபாவங்களும் இருக்கும். அதை மாற்ற முடியாது. அதை மாற்றிப் பார்க்க முயன்றோம். அதனால், இன்று ஏமாற்றப்பட்டு நிற்கிறோம்..” என்றார் ஒரு ஆர்.எஸ்.எஸ் பிரமுகர்.

விசயம் இது தான்; குஜராத்தில் கேசுபாய் பட்டேல் அவர்களின் மீது ஏற்பட்ட ஒரு சலிப்பின் காரணமாக இஸ்லாமியர்களை அடக்கி ஒடுக்கத் தகுதியான தைரியசாலியாக மோடியை அடையாளம் கண்டது ஆர்.எஸ்.எஸ் தலைமை! அதற்காக குடும்பத்தை துறக்கவும் சித்தமாக இருந்தார் மோடி. ஏனென்றால், சில ஆபத்தான அஜந்தாக்களை நிறைவேற்றுபவனுக்கு குடும்பம் கூடாது. அவன் குடும்ப பற்றுள்ளவனாக இருக்கக் கூடாது என்பது ஆர்.எஸ்.எஸ் வகுத்துள்ள வரையரையாகும். அந்த வரையரைக்கு முற்றிலும் பொருந்தி போகக் கூடியவராக மோடி இருக்கிறார் என தேர்ந்து தான் முடிவுக்கு வந்தனர். மோடியும் ஆரம்ப காலங்களில் ஆர்.எஸ்.எஸ் எதிர்பார்ப்புகள் அனைத்துக்கும் தன்னை முழுமையாக ஒப்பு கொடுத்தார் என்பதும் மறுக்க முடியாத உண்மை! ஆனால், பிரதமர் ஆன பிறகு அவரது நடவடிக்கைகள் படிப்படியாக மாறியது.

இந்திய அரசியல் வெற்றிக்கு தலைவர்களுக்கான தனி நபர் கவர்ச்சி என்பது மிக முக்கியம் என்பதால், மோடியின் இமேஜை ‘பில்டப்’ செய்து ‘பூஸ்ட்’ பண்ணியது ஆர்.எஸ்.எஸ். அதற்காகவே ‘பொலிடிகல் லாபியிஸ்ட்’டான பிரசாந்த் கிஷோருக்கு பல நூறு கோடி பணம் தந்து, மோடியைப் பற்றி இல்லாத பிரமிப்புகளை உருவாக்கினார்கள்! ஊடகங்களுக்கு கணக்கு வழக்கில்லாமல் வாரி இறைத்து ”ஆகா, ஒகோ” வென எழுதவும், பேசவும் வைத்தனர். இவை யாவிற்கும் பின்னணியில் பல்லாயிரக்கணக்கான ஆர்.எஸ்.எஸ் காரியார்த்திகளின் அர்ப்பணிப்பு உள்ளது! இது மோடிக்கும் தெரியும்.

ஆனால், இவ்வளவும் நன்கு தெரிந்திருந்தும், தன் தகுதிக்கு முற்றிலும் சம்பந்தமில்லாத உயரத்தில் தான் வைக்கப்பட்டிருப்பதை வசதியாக மறந்துவிட்டார் மோடி. ‘தனக்காகத் தான் அத்தனை மக்களும் பாஜகவிற்கு ஓட்டு போடுகிறார்கள். தன்னை மையப்படுத்தியே இந்திய அரசியல் உள்ளது. ஆகவே, தான் சொல்வதை அனைவரும் வேத வாக்காக கருத வேண்டும்’ என்ற அளவுக்கு சென்றுவிட்டார் மோடி.

அவருடைய இந்த தைரியத்திற்கு காரணம், கடந்த பத்தாண்டுகளில் அவரால் பெரிதும் போஷிக்கப்பட்ட பனியா சமூகம் தான். இந்திய அரசாங்கத்தின் ஒட்டுமொத்த செல்வத்தைக் காட்டிலும், அதிக செல்வம் படைத்ததாக இன்றைக்கு பனியா சமூகம் எழுந்து நிற்கிறது. உலகப் பணக்காரர்கள் வரிசையில், முன்னணியில் அணி வகுத்து நிற்கும் அளவுக்கு இந்திய பனியாக்களை உயர்த்தி உள்ளார் மோடி.

அதற்காகவே பொதுத் துறை நிறுவனங்களை பொசுக்கியும்,

தனியாருக்கு தாரை வார்த்தும் அழித்தார்.

அதில் பணியாற்றிய பல இலட்சம் தொழிலாளர்கள் குடும்பத்தின் கதறலையும், அலறலையும் மிக இயல்பாக கடந்து சென்றார் மோடி, ‘ஒரு வியாபாரிக்கு இரக்கம் என்பதே கிஞ்சித்தும் இருக்கக் கூடாது. லாபம் ஒன்றே குறிக்கோள். அதை எட்டுவதற்கு எதையும் செய்யலாம்’ என்ற லாப வெறி மோடியின் பனியா ரத்தத்திலேயே கலந்து இருக்கிறது. இன்னும் சொல்லப் போனால் ஆர்.எஸ்.எஸ்.சித்தாந்தப்படி, ‘இது தான் சரி’ என மோடியும் இளமை முதலே வார்த்தெடுக்கப்பட்டார். ஆனால், இதில் அரச நீதியை அழித்து விட்டார்.

அரசாங்கத்தின் அதிகாரத்தை அளவுக்கு மீறி, எல்லைகளைக் கடந்து பனியாக்கள் வளர்ச்சிக்கு அவர் பயன்படுத்தினார். சுமார் 25 லட்சம் கோடிகளை வாராக் கடனாக பனியாக்களுக்கு தள்ளுபடி செய்தார்! உலக நாடுகளில் சுற்றுப் பயணம் செய்யும் போதெல்லாம் அங்கு அதானி, அம்பானிகள் மூதலீடு செய்ய ‘லாபி’ செய்தார். சில நாடுகளுக்கு அவர்களை கூடவே அழைத்துச் சென்றார். ரபேல் விமான ஊழல் தொடங்கி, இந்திய கணக்கு தணிக்கை ஆணையம் சுட்டிக் காட்டியபடி பல்வேறு ஒப்பந்தங்களில் ஏழரை லட்சம் கோடிகள் பனியாக்கள் கூடுதலாக ‘எஸ்டிமேட்’ போட்டு சுருட்டிக் கொள்ள துணை புரிந்தார். இந்த நன்றிக் கடனுக்காக மோடி மீண்டும் பிரதமராக அவர்களும் பல்லாயிரம் கோடிகளை அள்ளி இறைத்தனர்.

‘ஏன் இவ்வாறு பனியாக்களுக்கு துணை போனார்?’ என்ற கேள்விக்கு, ‘அவரும் ஒரு பனியா சாதி தான்’ என்கிறார்கள். காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி தனது பாரத் ஜோடோ யாத்திரையின் போது இந்த உண்மையை அம்பலப்படுத்தினார். ”மோடி ஒ.பி.சி வகுப்பை சேர்ந்தவரல்ல, அப்படி சொல்வது பித்தலாட்டமாகும். உண்மையில் அவர் டெலி (Teli) என்ற சமூகத்தை சேர்ந்தவர்” என்றார். இதைத் தொடர்ந்து மோடியின் சாதி குறித்து பல ஆங்கில ஊடகங்கள் தோண்டி துருவி ஆராய்ச்சி செய்து எழுதினர். அதன்படி, ‘ராகுல்காந்தி கூறியது உண்மை தான். மோடி ஒ.பி.சி இல்லை. ‘டெலி’ என்ற சாதியின் உட்பிரிவான மோத் கான்சி (modh ghanchi) பிரிவைச் சேர்ந்தவர். இவர்கள் காலம்காலமாக எண்ணெய் வணிகம் செய்பவர்கள். இட ஒதுக்கீட்டில் பலன் பெறுவதற்காக 1994 இவர்கள் தங்களை ஒ.பிசியாக அரசு கெஜட்டில் மாற்றிக் கொண்டனர்’ எனக் கண்டறியப்பட்டுள்ளது.

ஆக, மோடியின் பனியா பாசத்தின் பின்னணி இது தான். இந்துத்துவ சித்தாந்தத்தைக் காட்டிலும் பனியாக்களின் கொள்ளைகளுக்கு அதிகமாக துணை போய்விட்டார் என ஆர்.எஸ்.எஸ் கருதுகிறது. ஆனால், மோடியோ, ‘அரசியலுக்கு பணமே பிரதானம். நான் பிரதமராகும் பொருட்டே இவ்வளவு பெரும் பணத்தை  பனியாக்கள் செலவழிக்கிறார்கள்! என்னை மையப்படுத்தியே எல்லாம் நடக்கிறது. எனவே, இனி எனக்கு ஆர்.எஸ்.எஸ் தயவு தேவையில்லை. அவர்கள் ஒதுங்கி நிற்கலாம். தேவைப்படுவதை கேட்டு பெற்றுக் கொண்டு, தேவைப்படும் காரியங்களை செய்து தந்தால் போதுமானது’ என மோடி அவர்களை நடத்தத் தொடங்கினார். அதன் விளைவாகத் தான் ”பாஜக வேறு, ஆர்.எஸ்.எஸ் வேறு. பாஜகவிற்கு ஆர்.எஸ்.எஸின் தயவு அவசியமில்லை. தானே அது இயங்கவல்லது” என ஜே.பி.நட்டா ஊடகங்களுக்கு தந்த பேட்டியாகும்.

இந்த பேட்டியானது தேர்தல் காலத்தில் வெளியானவுடனேயே ஆர்.எஸ்.எஸ் சுதாரித்துக் கொண்டது. நாக்பூரில் அதன் அகில இந்திய நிர்வாகிகள் கூடிப் பேசினார். அதில், ஏற்கனவே ஆர்.எஸ்.எஸ் பரிந்துரைத்தவர்களுக்கு நாடாளுமன்ற தேர்தலில் வாய்ப்பு மறுக்கப்பட்டது, தேர்தல் பிரச்சாரங்களிலும், செயல்பாடுகளிலும் ஆர்.எஸ்.எஸை ஓரம்கட்டி வைத்திருப்பது ஆகியவை விவாதிக்கப்பட்டன. மோடியின் செயல்பாடுகளை தொடர்ந்து அவதானித்து வரும் வகையில், அவரது மாறிய மனோபாவத்தை ஆர்.எஸ்.எஸ் ஏற்கனவே அறிந்தும் வெளியில் காட்டிக் கொள்ளாமல் விவேகத்துடன் அவரை அணுகி வந்தது.

ஆனால், இந்த முறை மோடி ஆட்சிக்கு வந்தால், ஆர்.எஸ்.எஸே இக்கட்டை சந்திக்க நேரலாம். பனியாக்களின் பாதம் பணிவதை ஆர்.எஸ்.எஸ் ஒரு போதும் செய்யாது. ராஜ நீதியை நாம் மாற்றி, ஒரு பனியாவை ஆட்சிக் கட்டிலில் ஏற்றியதால் தான் நாம் இந்த விளைவைச் சந்திக்கிறோம். பனியாக்களின் பேராசைக்கு ஒரு அளவே இல்லாமல் போகிறது. ஆர்.எஸ்.எஸால் உருவாக்கப்பட்ட மோடி, எளிமையை மறந்து, எல்லை மீறிய ஆடம்பரத்தில் திளைக்கும் போதே நாம் சுதாரிக்கத் தவறிவிட்டோம். ஆகவே,  நமது தவறை நாமே உடனே திருத்திக் கொண்டு, மோடியை இறக்கி, ஒரு ஷத்திரியனை ஆட்சி அதிகாரத்தில் அமர்த்த வேண்டும்.

பாஜக அறுதி பெரும்பான்மை பெற்றால், அந்த வெற்றிக்கு தானே காரணம் என மோடி உரிமை கொண்டாடுவார். ஆகவே, ‘பாஜக அதிக தொகுதிகளில் வெற்றி பெறக் கூடாது. ஆட்சி அமைக்க சிரமப்படும் எண்ணிக்கையில் வெற்றி பெற்றால் போதுமானது. அப்போது தான் நாம் மோடிக்கு செல்வாக்கு குறைந்து விட்டது. ஆளை மாற்றாவிட்டால், மக்கள் அதிருப்திக்கு உள்ளாக நேரிடும் எனக் கூறி அதிகாரத்தை மாற்றித் தர முடியும்’ எனப் பேசி முடிவு செய்தனர்.

இதைத் தொடர்ந்து சாதி அமைப்புகளோடு பின்னிப் பிணைந்த உறவைக் கொண்டுள்ள ஆர்.எஸ்.எஸ், ஷத்திரிய சாதி அமைப்புகள் அனைத்துக்கும் சிக்னல் கொடுக்கப்பட்டது. ”பாஜக குறைந்த எண்ணிக்கையில் வெற்றி பெறக் கூடிய இடங்களில் எதிர் கட்சிகளுக்கு வேலை பாருங்கள்” என கட்டளை இட்டது. அதன்படி கள நிலவரமும் மாறியது. ”பாஜகவிற்கு செல்வாக்கு குறைகிறது. இந்தியா கூட்டணி முன்னேறுகிறது” என்ற பேச்சுக்களையும், தோற்றத்தையும் தொடங்கி வைத்தது ஆர்.எஸ்.எஸ் தான்!

உத்திரபிரதேசத்தில் ஷத்திரிய சமூகமான தாக்குர் சமூகத்திற்கு கணிசமான வாக்கு வங்கி உண்டு. யோகியும் அந்த சமூகத்தை சேர்ந்தவரே! யோகியின் மிக நெருங்கிய நண்பரான அந்த சமூகத்தில் மிக செல்வாக்கான நபரான ராஜாபையாவிற்கு தகவல் தரப்பட்டது. அந்த நிமிடத்தில் இருந்து அவரும் எதிர்கட்சிகளுக்கு தேர்தல் வேலை செய்ய தன் சமூகத்தாருக்கு ‘சிக்னல்’ தரவே, களேபரமான அமித்ஷா, ராஜா பையாவை தொடர்பெடுத்து பேசிய முயற்சிகள் அனைத்தும் வீணாயின! சமரசத்திற்கு அவர் சம்மதிக்கவில்லை. அமித்ஷாவை ராஜாபையா புறக்கணித்த செய்தி உத்திரபிரதேச அரசியலை உலுக்கி வருகிறது. இதையடுத்தே எதிர்கட்சிகள் உற்சாகம் அடைந்து பாஜகவின் வெற்றியை கேள்விக்கு உள்ளாக்கி கிண்டல் அடித்தன.

இன்றைய நிலவரப்படி ஆர்.எஸ்.எஸுக்கு யோகி ஆதித்தியநாத் தான் அடுத்த சாய்ஸ்! அவர் ஆடம்பர மனநிலைக்கு ஆட்படாமல் ராஜதர்மத்தை பரிபாலிக்கிறார். ஒரு ஷத்திரியனாக உத்திரபிரதேசத்தையே ஆட்டுவித்த ரவுடிக் கூட்டத்தையும், கொள்ளையர்களையும் நூற்றுக்கு மேற்பட்ட ‘என்கெளண்டர்’ செய்து முற்றிலும் ஒடுக்கிவிட்டார். இஸ்லாமியர்களை அச்சத்தில் வைத்துள்ளார். ஆர்.எஸ்.எஸ் சித்தாந்தத்தில் ஆழ்ந்த பிடிப்புள்ளவராக உள்ளார். எனவே, மோடிக்கு அவர் தான் மாற்று. இதை தேர்தல் முடிவுக்கு பிறகு அமைதியாக அமல்படுத்த வேண்டும்’ என்பதே ஆர்.எஸ்.எஸ்சின் அஜந்தாவாகும்.

‘தலைவர்கள் நிரந்தரமல்ல, கொள்கைகளே சாஸ்வதமானவை! மோடியை கீழே இறக்குவது காலத்தின் கட்டாயம்’ என்ற முடிவில் உள்ளது ஆர்.எஸ்.எஸ்!

சாவித்திரி கண்ணன்

Support Aram

நேர்மையான, வெளிப்படையான,

சுதந்திரமான இதழியலுக்கு தோள்

கொடுங்கள்.

UPI QR CODE

Razorpay Payment Gateway

Personal Info

Donation Total: ₹1,000.00 One Time