தேர்தல் முடிவுகள் சொல்லும் படிப்பினைகள்!

-சாவித்திரி கண்ணன்

பத்தாண்டுகள் மக்கள் விரோத, படுபாதக ஆட்சி நடத்தியும், மீண்டும் ஆட்சிக் கட்டிலில் அமரும் வாய்ப்பை பாஜக பெற்றுள்ளது! எதிர்கட்சிகள் மீது மக்கள் முழு நம்பிக்கை கொள்ள முடியாமல் இருக்கும் காரணங்கள் என்ன..? தனிப்பட்ட முறையில் ஒரு மக்கள் தலைவருக்கான எதிர்பார்ப்புகளை ராகுல் உணர்ந்துள்ளாரா..?

தற்போதுள்ள ஒரே ஆறுதல் தனிப் பெரும் மெஜாரிட்டி பாஜகவிற்கு கிடைக்கவில்லை! கடந்த இரு நாடாளுமன்றத் தேர்தல்களைக் காட்டிலும், காங்கிரஸ் கொஞ்சம் முன்னேறி இருக்கிறது என்றாலும், பாஜக வென்ற தொகுதிகளில் பாதி அளவைக் கூட காங்கிரஸ் எட்ட முடியவில்லை. இந்தியாவிலேயே பாஜகவை ஒரு தொகுதிக்கும் வாய்ப்பில்லாமல் படு தோல்விக்கு தள்ளிய ஒரே மாநிலம் தமிழகம் என நாம் பெருமைப்பட முடிந்தாலும், குறிப்பிட்ட சில தொகுதிகளில் அதிமுகவை பின்னுக்குத் தள்ளி, பாஜக இரண்டாம் இடம் வந்திருக்கிறது என்பது இந்த தேர்தல் தந்திருக்கும் அபாய மணி எச்சரிக்கையாகும். குறிப்பாக சென்னையிலும், கோவையிலும் பாஜகவிற்கு கிடைத்துள்ள வாக்குகள் ஆளும் திமுக ஆட்சியாளர்களின் முறைகேடுகளால் ஏற்பட்ட விளைவுகளாகும்.

மோடியின் அராஜக பேச்சுக்கள் வெற்றி வாய்ப்பை கூட்டியதா..? குறைத்ததா?

காங்கிரஸ் மக்கள் நம்பிக்கையை பெரிய அளவில் வென்றெடுக்க முடியாமல் இருப்பதற்கான காரணங்களை அலசிப் பார்த்தால், அது அந்தந்த மாநிலங்களில் சரியான மாநிலத் தலைமையை தேர்வு செய்வதில்லை. காமராஜருக்கு பிறகு மக்கள் செல்வாக்கான தலைவர் ஒருவரை தமிழக காங்கிரஸ் கண்டடையவில்லை. ஆந்திராவில் பல்லாண்டுகள் பட்டொளி வீசிப் பறந்த காங்கிரஸின் கொடி ஏறத்தாழ இன்று காணாமல் போய்விட்டது. ஒரிசாவில் கிட்டதட்ட ஒரம் கட்டி வைத்துள்ளனர். கர்நாடக மாநிலத்தை ஆளும் வாய்ப்பை பெற்றும் நாடாளுமன்றத் தேர்தலில் பெரிய வெற்றியை அங்கு ஈட்ட முடியவில்லை. பிரஜ்வால் ரேவண்ணா போன்ற இளம் பெண்களை சூறையாடிய கயவர்களைக் கூட தோற்கடிக்க முடியாத நிலையில் காங்கிரஸ் இருப்பது பேரவலம்.

கேரளாவிலும், தெலுங்கானாவிலும், ரஜஸ்தானிலும் காங்கிரஸ் காப்பாற்றப்பட்டு வருவதும் கூட இன்னும் எத்தனை காலம் நீடிக்கும் எனத் தெரியவில்லை.

உத்திரபிரதேசத்தில் பாஜகவிற்கு ஏற்பட்டுள்ள பின்னடைவு கூட காங்கிரசுக்கு பெரிதாக உதவவில்லை. காங்கிரஸ் அங்கு 17 தொகுதிகளில் நின்றாலும், ரேபரலி, அமேதி போன்ற ஒரு சில தொகுதிகளைத் தவிர, மற்ற தொகுதிகளில் பிரச்சாரம் செய்வதில் அக்கறையே காட்டவில்லை. அதனால், சமாஜ்வாதிக்கு கிடைத்தது போன்ற வெற்றி உ.பியில் காங்கிரஸுக்கு சாத்தியப்படவில்லை.

எல்லாவற்றுக்கும் மேலாக மக்களிடையே அதிக அறிமுகம் இல்லாத மல்லிகார்ஜுன கார்கேவை அகில இந்திய தலைவராக்கியது காங்கிரசின் வெற்றி வாய்ப்பை கணிசமாக குறைத்துள்ளது. சொந்த மாநிலத்திலேயே அவருக்கு செல்வாக்கு பெரிதாக இல்லை.

ராகுல் காந்தியே காங்கிரஸ் தலைமை பொறுப்பை ஏற்று இருந்தால், தற்போது கிடைத்துள்ள தொகுதிகளைக் காட்டிலும் இன்னும் 50 இடங்களில் அதிகமாக காங்கிரஸ் வெற்றி அடைந்திருக்க வாய்ப்புள்ளது. அந்த நம்பிக்கையை மக்களுக்கு தருவதில் அவருக்கு என்ன தயக்கம் எனத் தெரியவில்லை. காங்கிரஸ் கட்சியில் உள்ள திறமையாளர்களை, நல்லவர்களை அடையாளம் காண்பதிலும், தீயவர்களைக் களை எடுப்பதிலும் அவருக்கு போதுமான தீவிரத் தன்மையோ, முதிர்ச்சியோ இல்லை என்றே தோன்றுகிறது.

இந்தியா கூட்டணிக்கே வித்திட்டவரான நிதிஸ்குமாரை தக்க வைத்துக் கொள்ளத் தவறியதால் பீகாரில் காங்கிரஸ் ஒரு பின்னடவைக் கண்டுள்ளது. மாத்திரமல்ல, இன்று பாஜக ஆட்சி மத்தியில் அமைப்பதையே தடுத்திருக்கலாம் நிதீஸ்குமாரை இழக்காமல் இருந்திருந்தால்! இந்தியா கூட்டணியை சிந்தாமால், சிதறாமல் கட்டிக் காத்திருந்தால் மேற்கு வங்கத்தில் இன்னும் சில தொகுதிகளில் பாஜக தோல்வியை கண்டிருக்கும். காங்கிரசுக்கும், டி,எம்.சிக்கும் கூடுதல் எண்ணிக்கை கிடைத்திருக்கும். மம்தாவின் மமதையும் இதற்கு ஒரு காரணமாகும்.

பஞ்சாப்பில் ஆம் ஆத்மியும், காங்கிரசும் கைக் கோர்த்து இருந்தால் பாஜகவின் வெற்றி வாய்ப்பை குறைத்து இன்னும் சில தொகுதிகளில் வென்று இருக்கலாம்.

மத்திய பிரதேசத்தில் அனைத்து தொகுதிகளையுமே பாஜகவிடம் தாரை வார்த்துள்ளன எதிர்கட்சிகள்! ஜோதிராதித்திய சிந்தியா என்ற துடிப்பான இளம் தலைவரை விரக்திக்கு ஆளாக்கி, பாஜகவிடம் தள்ளிய கமல்நாத் காங்கிரசை இன்று படுகுழியில் தள்ளியுள்ளார்.

மகாராஷ்டிராவில் காங்கிரஸ், சிவசேனா, தேசியவாத காங்கிரஸ் கூட்டணிக்கு கிடைத்த தொகுதிகள் போதுமானதல்ல. சிவசேனாவையும், தேசியவாத காங்கிரசையும் பிளந்து துரோகம் செய்தவர்களை மக்கள் பெரிய அளவில் தண்டிக்கவில்லை.

டெல்லியில் ஆம் ஆத்மி அரசாங்கத்திற்கு கடுமையான நெருக்கடியை பாஜக தந்தது. அரவிந்த் கேஜ்ரிவால், மணீஸ் சிசோடியா பொன்ற முன்னணி தலைவர்களை சிறையில் அடைத்தது. இந்தச் சூழலில் ஆம் ஆத்மி மீது மக்களுக்கு அனுதாபம் ஏற்பட்டிருக்க வேண்டுமே… என்னானது? இத்தனைக்கும் காங்கிரஸும், ஆம் ஆத்மியும் கைகோர்த்தும் ஏழு தொகுதிகளையும் பாஜகவிடம் இழந்துள்ளார்களே.. ஏன்? ஆம் ஆத்மி கட்சியின் பெண் எம்.பி ஸ்வாதிவால்மாலி முதல்வர் கெஜ்ரிவால் வீட்டிலேயே வைத்து முதல்வரின் உதவியாளர் பிபவ்குமாரால் தாக்கப்பட்ட விவகாரத்தில் கெஜ்ரிவால் காட்டிய அலட்சியம் மன்னிக்க முடியாதது. அந்த சம்பவத்தின் அதிர்வும் கூட, இந்த தோல்விக்கு வித்திட்டிருக்க வாய்ப்புள்ளது.

ராஜஸ்தானில் பெருந்தலைவர் அசோக்கெலாட்டும், இளம் தலைவர் சச்சின் பைலட்டும் ஒன்று சேர்ந்து உழைத்தது வீண்போகவில்லை. காங்கிரஸ் அங்கு காப்பாற்றப்பட்டுள்ளது. மணிப்பூர் மக்கள் தேர்தலில் பாஜகவிற்கு சரியான தண்டனையை தந்துள்ளனர்.

காஷ்மீருக்கு பாஜக அரசு செய்த தீமைகள் கொஞ்ச நஞ்சமல்ல, ஆயினும் அங்கு மூன்று தொகுதிகள் அங்கு வெற்றி பெற்றுள்ளது. மூன்று தொகுதிகளில் நிற்காமலே தவிர்த்துள்ளது. ஆயினும், காங்கிரஸ் காஷ்மீரில் ஒரு தொகுதியில் கூட வெற்றியைப் பெற முடியவில்லை.

இடதுசாரிகள் நிலைமை பெரிதும் கவலையளிக்கிறது. அடித்தள மக்கள் பிரச்சினைக்கு குரல் தரக்கூடிய அந்தக் கட்சி மேற்கு வங்கத்திலும், திரிபுராவிலுமே கூட முற்றிலுமாக துடைத்து எறியப்பட்டிருப்பது குறித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சுய பரிசோதனை செய்து கொள்ள வேண்டும். கேரளாவிலோ தேய்ந்து கொண்டுள்ளது. தமிழ்நாட்டில் கடந்த மூன்றாண்டுகளாக மக்கள் விரோத அட்சி செய்யும் திமுகவை விமர்சிக்காமல் காட்டிய பொறுமையும், அடிப்படையில் தமிழக மக்களுக்கு பாஜகவின் மீதுள்ள கோபமும், திமுகவின் அபரிதமான பணபலமும் தான் இங்கு இரு கம்யூனிஸ்ட் கட்சிகளும் தலா இரு தொதிகளில் வெற்றி பெறும் வாய்ப்பை தந்துள்ளது!

பாஜகவிற்கு அனுசரணை காட்டிய பாரபட்ச தேர்தல் ஆணையர்கள்!

திமுகவிற்கு கிடைத்த வெற்றிக்கு அந்தக் கட்சி பாஜகவிக்கு தான் பெரிதும் கடமைப்பட்டுள்ளது. மூன்றாண்டுகால திமுக ஆட்சியின் முறைகேடுகளை, அதிருப்திகளைக் கடந்து பாஜக என்ற ஆபத்தை தடுக்க தமிழக மக்கள் முன்னுரிமை தந்துள்ளனர். அந்த வகையில் தான் திமுக வெற்றி பெற்றது.

மற்றொருபுறம் அதிமுகவானது தமிழகத்தில் திமுக ஆட்சியின் தவறுகளை சுட்டிக்காட்டி போராடும் திரானியை சுத்தமாக இழந்து நிற்கிறது. அந்த அளவுக்கு சென்ற ஆட்சியில் அதிமுகவினர் செய்த ஊழல்கள் அவர்களின் தலைக்கு மேல் கத்தியாகத் தொங்கிக் கொண்டுள்ளது!

இந்தச் சூழலை நன்கு பயன்படுத்திக் கொண்டு திமுக எதிர்ப்பு அரசியலை வெற்றிகரமாக செய்வதன் காரணமாகத் தான் அண்ணாமலைக்கு மவுசு கூடியுள்ளது. பாஜகவும் தன் வாக்கு வங்கியை இரு மடங்காக்கியுள்ளது. தமிழகத்தில் நாற்பது தொகுதிகளையும் திமுக கூட்டணி கைப்பற்றியதானது அதன் பாஜக எதிர்ப்பின் வீரியத்திற்கு கிடைத்த வெற்றியே தானன்றி, திமுக ஆட்சிக்கு மக்கள் தந்த நற்சான்றிதழ் அல்ல.

கடைசியாக ஒன்று. தேர்தல் ஆணையர்கள் மிகவும் பாரபட்சமாக நடந்து கொண்டனர். பிரதமர் மோடியின் வரம்பு மீறிய, வன்முறையத் தூண்டும் பேச்சுக்களை அவர்கள் கண்டுகொள்ளாமல் அனுமதித்தனர்! பாஜகவின் பணபலமும், அதிகார பலமும் கூட தேர்தல் வெற்றிக்கு பெரிதும் உதவியது. காங்கிரசின் வங்கி கணக்கு முடக்கப்பட்டது அவர்களுக்கு பெரும் பின்னடைவை உருவாக்கியது என்பது எல்லாம் மறுக்க முடியாத உண்மைகளே!

இது தேர்தலில் மக்கள் தீர்ப்பு குறித்த முதல் விமர்சனம் தான். அடுத்து விரிவாகப் பார்ப்போம்.

சாவித்திரி கண்ணன்

Support Aram

நேர்மையான, வெளிப்படையான,

சுதந்திரமான இதழியலுக்கு தோள்

கொடுங்கள்.

UPI QR CODE

Razorpay Payment Gateway

Personal Info

Donation Total: ₹1,000.00 One Time