மோடியின் கரிஸ்மா கரைந்து விட்டது. பாஜக ஆட்சி அமைக்கலாம் என்றாலும், அது மோடியின் தலைமையில் அல்ல! முடிவுக்கு வந்து விட்டது, மோடியின் காலம்! கட்சியின் இரண்டாம் கட்டத் தலைவர்கள் இன்று மோடியை முன்மொழியத் தயாரில்லை. அடுத்த பிரதமர் யார் என்பதில் கட்சிக்குள்ளேயே ஒரு நிசப்தம் நிலவுகிறது…?
பொதுத் தேர்தல் முடிவுகள் மக்கள் தான் ஜனநாயகத்தின் மையப் புள்ளி என்பதை மீண்டும் மோடிக்கு உணர்த்தி உள்ளது! ஒற்றைத் தலைமையும், அதிகார குவிப்பும் அவலத்தில் முடிந்துள்ளது. கபட தியானத்திலும், கற்பனைக் கனவுகளிலும் மிதந்து “ உங்கள் அனைவரையும் முறியடிக்க நான் ஒருவன் மட்டுமே போதும் (ஏக் அகீலா சாப் பார் பாரி) “ என கொக்கரித்த மோடியின் முகத்தில் கரியைப் பூசியுள்ளது இத்தேர்தல் முடிவுகள்.
கடந்த தேர்தலில் பெற்ற 303 இடங்களில் இருந்து 63 இடங்கள் குறைவாக பெற்றுள்ள மோடிக்கு பெரும்பான்மை (simple majority) இடங்கள் கூட கிட்டவில்லை ! இது மோடி தலைமையிலான பாஜக வின் தோல்வி என்பதே மக்கள் உணர்த்தும் செய்தியாகும் !
இந்த தோல்வியை மறைத்து, மூன்றாவது முறையும் மோடி ஆட்சியில் அமருவாரா என்பது கேள்விக் குறியாகி உள்ளது. இன்னும் மோடி ஆட்சி தொடரும் என்பதெல்லாம் இரண்டு கைத் தடிகள் இல்லாமல், மோடியால் நடக்க கூட முடியாது என்ற உண்மையை மூடி மறைக்கும் செயலாகும்.
மனசாட்சியுள்ள ஒரு தலைவர், அரசியல் நாகரீகமும் , மாண்பும் உள்ள ஒரு அரசியல்வாதி, ஜனநாயகத்தில் பற்று கொண்ட, ஆட்சியிலிருக்கும் கட்சித் தலைவர் மக்கள் தனக்கும் தனது கட்சிக்கும் பெரும்பான்மை இடங்களை கொடுக்காத நிலையில் தோல்வியை ஒப்புக் கொள்வது தான் நேர்மையானதும் சரியானதுமாகும்.
ஆனால், இந்த மாண்புகள் எதுவுமற்ற மோடி இதைச் செய்வார் என்று எதிர்பார்ப்பது பைத்தியக்காரத் தனமாகும்.
பத்து ஆண்டுகள் படு பாதகமான ஆட்சி நடத்தி, இந்திய ஜனநாயகத்தையும், இந்திய பொருளாதாரத்தையும் உருத்தெரியாமல் சிதைத்த மோடி, அதிகாரங்கள் அனைத்தையும் தன்னகத்தே குவித்து, மாநிலங்களை அடக்கி ஒடுக்கிய மோடி, இப்பொழுது அதிகாரப் பரவலுக்கு, உடன்படுவாரா? எனக் கேள்வி எழுந்துள்ளது .
இது வரை, ‘எடுத்தேன் கவிழ்த்தேன்’ என்று தான் தோன்றித் தனமாக கொள்கை முடிவுகளை எடுத்து ஆட்சி புரிந்த மோடி, அதையே இன்று பிற தலைவர்களிடம் கலந்து பேசி அனைவருக்கும் உகந்த முடிவுகளை எடுக்க சம்மதிப்பாரா?, தனது அதிகார எல்லைகளை தளர்த்தி குறைத்துக் கொள்வாரா? என்ற கேள்விகளை அந்தக் கட்சியில் உள்ளவர்களே எழுப்புகின்றனர். மேலும் மோடியின் மோசமான நாலாந்தரப் பிரச்சாரமே தோல்விக்கு வித்திட்டது என்றும் கருதுகிறார்கள்!
இது வரை அதிகார உச்சத்தில் இருந்து அகங்காரத்துடன் வலம் வந்த மோடி, ஆட்சியில் இல்லாமல் இருக்கும் நிலையை எண்ணிப் பார்க்கவே அஞ்சி நடுங்குகிறார். அதிகாரம் பறி போனால் , தனது ஆட்சியின் தவறுகளும், அவலங்களும் , படு பாதகங்களும் அம்பலத்துக்கு வந்து விடுமே என அஞ்சி தான் முன்பு அவமதித்த நிதிஷ் குமார் மற்றும் சந்திர பாபு நாயுடு ஆகியோரிடம் கைகோர்க்க முன்வந்துள்ளார்.
ஆட்சி அதிகாரத்தை தக்க வைக்க எந்த நிலைக்கும் செல்லத் தயாராயுள்ளார் மோடி! கைவிலங்கை தவிர்க்க, கையை ஊன்றிக் கரணம் அடித்தால் கூட தப்பில்லை என்பதே மோடியின் இன்றைய நிலைப்பாடு!
இதுவரை ஆர் எஸ் எஸ் தலைமைக்கும், மோடிக்கும் அரசல் புரசலாக இருந்து வந்த மோதல் இன்று காற்றிழந்த பலூனாக உள்ள மோடியை எவ்வாறு எதிர் கொள்ளும் என்பது புதிராக உள்ளது. மோடியை அதிகாரமற்றவராக்கி, புதிய தலைமையைக் கொண்டு கட்சிக்கும், ஆட்சிக்கும் புணருத்தானம் செய்ய நினைக்கிறது ஆர்.எஸ்.எஸ்
உத்தர பிரதேசத்திலும், மகாராஷ்டிரத்திலும் பலத்த அடி வாங்கியுள்ள பாஜகவும், அதன் தலைவர்களும் இனி மேல் மோடி ஷாவின்- அதிகாரத்திற்கு அடி பணிவார்களா..? என்பது சந்தேகமே.
யோகி ஆதித்யநாத், நிதின் கட்கரி, சிவராஜ் சிங் சௌகான், வசுந்தரா சிந்தியா போன்ற தலைவர்கள் இனிமேலும் தங்களது நலனை விட்டுக் கொடுப்பார்களா..? என்பதும் கேள்விக் குறி தான்.
கைது, வங்கிக் கணக்கு முடக்கம் போன்ற மோடி அரசின் அடக்கு முறைகளை எதிர்த்து அதிகார பலத்தையும், பண பலத்தையும், கோடி மீடியாவின் தாக்குதலையும் எதிர்த்து களங்கண்ட இந்தியா கூட்டணி இன்று ஏறத்தாழ 240 இடங்களை கைப்பற்றி உள்ளது.
மோடி அரசின் அதிகாரக் குவியல், அதிகார அத்துமீறல், ஜனநாயகப் படுகொலை ஆகியவற்றை கடந்து, மோடி அரசு கடை பிடித்த பொருளாதாரக் கொள்கைகளை எதிர்த்துமே மக்கள் இந்த மகத்தான தீர்ப்பை வழங்கி உள்ளனர். மோடியின் பனியா பாசமே பாஜகவின் வெற்றியை பதம் பார்த்துவிட்டது என்ற முணுமுணுப்பு கட்சிக்குள் வெளிப்பட்ட வண்ணமுள்ளது.
காங்கிரஸ் கட்சி முன் வைத்த நியாயங்கள், உரிமைகள், சமூக நீதி மற்றும் சம நீதி ஒருங்கிணைந்த முன்னேற்றம் என்ற கோரிக்கைகளை மக்கள் தங்களது கோரிக்கைகளாக எண்ணியே இத்தனை இடங்களை வழங்கியுள்ளனர்.
சாதி வாரி கணக்கெடுப்பு , தரவுகள் அடிப்படையில் பங்கீடு போன்றவற்றை முன் மொழிந்தவர்களில் ஒருவரான நிதீஷ் குமார் இன்று அணி மாறி இருந்தாலும், கோரிக்கைகளை விட்டு விட்டார் என்று கொள்ள முடியாது.
அதைப் போன்றே 2002 குஜராத் கலவரத்தின் போது மோடியை பதவி விலகச் சொன்னவர், 2019ல் மோடியை அகற்றுவது ஒன்றே இந்திய அரசியலுக்கு நல்லது என்று கூறியவர், பாஜக வுடன் தான் வைத்த கூட்டணி அரசியல் நிர்ப்பந்தமே அன்றி கொள்கை வழிப்பட்டது அல்ல என்று 2014 லும், இப்போதும் கூறுபவருமான சந்திரபாபு நாயுடு இன்று யாரை ஆதரிக்கப் போகிறார் என்ற கேள்வி எழுந்துள்ளது.
இவர்கள் இருவரும் – நிதீஷ் குமார் மற்றும் சந்திரபாபு நாயுடு – தேசீய ஜனநாயக கூட்டணி பக்கம் நிற்கப் போகிறார்களா? அல்லது இந்தியா கூட்டணி பக்கம் நிற்கப் போகிறார்களா? என்பது வரும் நாட்களில் தெரியும்.
மோடி மீண்டும் பிரதமராக நீடிக்கப் போகிறாரா?, அதிகாரங்களை பரவலாக்க சம்மதிக்கிறாரா? என்று இனிமேல் தெரியவரும்.
இத்தனை புதிர்களை, கேள்விகளை எடுத்து வீசியுள்ள இந்த தேர்தல் முடிவுகள் சில விஷயங்களை முடிவுக்கு கொண்டு வந்துள்ளது எனலாம்.
அவற்றுள் முதலாவதாக ‘இந்துத்துவா’ கோஷம் இனி மேலும் எடுபடாது, ராமர் கோவில் கட்டியதாலேயே மக்கள் வாக்களித்து விடுவர் என்ற பாஜகவின் எண்ணம் பொய்த்துவிட்டது. அயோத்தி ராமர் கோவில் எழுந்த தொகுதியிலேயே சமாஜ்வாடியிடம் தோற்றுப் போனது பாஜக.
அல்லலில் அவதியுறும் மக்களுக்கு ரேஷன் வழங்குதை தனது பரிசாக தம்பட்டம் அடிக்கும் மோடியின் நாடகத்திற்கும் முற்றுப் புள்ளி வைத்துள்ளது.
தங்களது உரிமைகள் பற்றியும் தங்களது வாழ்வு வளம் பெற வேண்டிய திட்டங்கள் பற்றியும் அதை முன்னெடுப்பவர் யார் என்பது பற்றியும் மக்கள் தெளிவடைந்ததின் விளைவே இத் தேர்தல் முடிவுகள்.
இந்திய ஒன்றியம் என்பது அடிப்படையில் மாநிலங்களை உள்ளடக்கியது . மாநிலங்களையும், அவற்றின் உரிமைகளையும் சிதைத்து ஒன்றிய மேலாதிக்கத்தை நிலை நாட்டிய மோடியை எதிர்த்தே மக்கள் இத் தீர்ப்பை வழங்கியுள்ளனர் .
பாஜக அரசின் தவறான பொருளாதார முன்னெடுப்பையும், அதிகாரக் குவியலையும் மக்கள் நிராகரித்துள்ளனர்.
இந்த தீர்ப்பில் போராடும் விவசாயிகளின் பங்கை, தொழிலாளர்களின் பங்கை, சிறு குறு தொழில் முனைவோரின் பங்கை அமைப்பு சாரா தொழிலாளர்களின் பங்கை குறைத்து மதிப்பிட முடியாது.
இத்தகைய தீர்ப்பின் விளைவாக ஆட்சி முறையிலும், திட்ட முன்னெடுப்பிலும், இலக்குகளை தீர்மானிப்பதிலும் மக்களை முதன்மை படுத்தல் வேண்டும் என்பதையாரும் மறந்து விட முடியாது.
5 ட்ரில்லியன் எகனாமி, 2047-ல் விக்சித் பாரத் என்று கூறி, அதானி அம்பானிகளை கொழுக்க வைக்கும் மோடி அரசின் திட்ட முன்னெடுப்புகளை மக்கள் நிராகரித்துள்ளனர்.
Also read
அரசின் வெளிப்படையான செயல்பாடுகளும், ஜனநாயக அமைப்புகளின் சுதந்திரமும் அவசியம் என மக்கள் புரிந்து கொண்டதால் மோடிக்கு பெரும்பான்மை கொடுக்கவில்லைஎன்பதை யாரும் மறந்துவிட முடியாது.
இதை பாஜக புரிந்து கொண்டிருக்கிறதா..? என்று நமக்கு தெரியாது!
தேசீய ஜனநாய கூட்டணி அரசோ அல்லது இந்திய கூட்டணி அரசோ எது அமைந்தாலும் இந்த உண்மைகளை மறந்து ஆட்சி நடத்துவது எளிதல்ல!
கட்டுரையாளர்; ச.அருணாசலம்
Leave a Reply