என்னாகும், அதிமுகவின் எதிர்காலம் ?

-சாவித்திரி கண்ணன்

நாடாளுமன்ற தேர்தல் அதிமுகவிற்கு அதிக பாதிப்புகளையும், பாடங்களையும் தந்துள்ளது. ஒரு அரசியல் கட்சிக்கு வெற்றி, தோல்விகள் சகஜம் என்றாலும், பாஜகவிடம் இருந்து விலகி தனித்துவம் கண்டது சிறப்பானதே என்றாலும், இந்த தோல்வி என்பது அதிமுகவின் தவறுகளால் ஏற்பட்டதே! இதற்கு ஒற்றுமைத் தீர்வாகுமா?

மக்களவை தேர்தலில் தமிழகத்தில் 35 தொகுதிகளில் போட்டியிட்ட அதிமுக 14 இடங்களில் மட்டுமே இரண்டாம் இடத்திற்கு வந்துள்ளது. இதில் இரண்டு தொகுதிகளில் 4 லட்சத்து சொச்சம் வாக்குகளும், ஐந்து தொகுதிகளில் 3 லட்சத்து சொச்சம் வாக்குகளும் பெற்று நல்ல போட்டியைத் தந்துள்ளது.

மற்றபடி 9 தொகுதிகளில் 3 ஆவது இடத்திலும், 3 தொகுதிகளில் 4ஆவது இடத்தையும் பிடித்ததுள்ளது. மேலும், 7 தொகுதிகளில் டெபாசிட்டை இழந்தது. இதைவிட அவலமானது, கன்னியாகுமரியில் பதிவான வாக்குகளில் வெறும் ஐந்து சதவிகிதமும், புதுச்சேரியில் பதிவான வாக்குகளில் வெறும் நான்கு சதவிகிதமுமே பெற்றுள்ளது. தோற்க நேர்ந்தாலுமே கூட, இது வரை சுமார் 28 சதவிகித வாக்குகளை தக்கவைக்க முடிந்த அதிமுக இந்த முறை, சுமார் 20 சதவிகித வாக்குகள் மட்டுமே பெற்றுள்ளது ஏன் என அந்தக் கட்சி சுய பரிசீலனையில் இறங்குமா? எனத் தெரியவில்லை.

முதலாவதாக வேட்பாளர் தேர்விலேயே பழனிச்சாமி பயங்கரமாக சொதப்பிவிட்டார். அறிமுகம் இல்லாத வேட்பாளர்கள், கட்சி மாறி வந்தவர்களாகப் பார்த்து வாய்ப்பு தந்தார்.

தமிழகத்தில் பெரும் அலையாய் எழுந்த பாசிச பாஜக எதிர்ப்பை இந்தக் கட்சி கண்டும் காணாமல் அமைதி காத்தது. பாஜகவிடம் இருந்து பக்குவமாக வெளியேறினாலும், அதன் மக்கள் விரோத கொள்கைகள், நடவடிக்கைகளை நெஞ்சுரத்துடன் விமர்சிப்பதற்கு அருகதையற்றதாக அதிமுக இருந்தது அதன் பெரும் வீழ்ச்சிக்கு வித்திட்டுவிட்டது.

இது மட்டுமின்றி, தமிழகத்தில் எல்லா துறைகளிலும் வரம்பு மீறி கொள்ளையடித்து, சுரண்டிக் கொழுக்கும் திமுக அரசை விமர்சிக்கவோ, அதை எதிர்த்து இடையறாது போராட்டங்கள் நடத்தவோ கூட தயாரற்றதாக அதிமுக ஆகிவிட்டது. மக்களை பாதிக்கும் பல பிரச்சினைகளில் அதிமுக தலைவர்கள் அசாதாரண அமைதியை பேணினார்கள்! இந்த அளவுக்கு அச்சமும், பேடிமையும், அடிமைச் சிறுமதியும் உச்சத்தில் கொண்ட ஒரு கட்சி மீது மக்களுக்கு எப்படி நம்பிக்கை பிறக்கும்…?

அதுவும் அடாவடி அரசியல் செய்யும் அண்ணாமலையையும்,

மோசடி அரசியல் நடத்தும் மோடியையும் ஆக்ரோசமாக எதிர்க்காமல்,

அதிமுகவிற்கு எதிர்காலம் என்பதே இல்லை. இல்லவே இல்லை!

அதிமுகவின் அடித்தளமே திமுக எதிர்ப்பில் கட்டி எழுப்பட்டதாகும். சென்ற ஆட்சியில் தாங்கள் செய்த ஊழல்களை துருப்பு சீட்டாக வைத்து ஸ்டாலின் அரசு செய்த மிரட்டல்களுக்கு அடி பணிந்து மக்கள் பிரச்சினைகளுக்கு கூட வாய் திறக்காமல் மெளனித்தனர் அதிமுகவினர். திமுகவின் கொள்ளை அரசியலையும், குடும்ப அரசியலையும் எதிர்க்கும் தார்மீக துணிச்சல் அதிமுவிடம் இல்லாதது தான் அதன் தோல்விகளுக்கு மிக முக்கிய காரணமாகும்.

தமிழக மக்களுக்கு தற்போதைய பிரதான பிரச்சினையாக உள்ள ஊழலில் திளைக்கும் திமுக அரசை எதிர்க்க துணிவில்லை யாதலால் எதிர்கட்சி அந்தஸ்த்தை உங்களுக்கு தந்ததே தப்பு மக்கள் என யோசிக்க ஆரம்பித்து விட்டனர். ஒரு பக்கம் பாஜகவின் அண்ணாமலையும், மறுபக்கம் நாம் தமிழர் சீமானும் திமுகவை கடுமையாக விமர்சித்ததின் விளைவே, இன்று அவர்களின் வாக்கு வங்கி பலப்பட்டதற்கு காரணமாகும். ஆக, அதிமுகவின் வாக்கு வங்கி தான் அங்குமிங்கும் சிதறி, பாஜக பக்கம் கொஞ்சமும், நாம் தமிழர் பக்கம் கொஞ்சமும் நகர்ந்துள்ளது.

இந் நிலையில் முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், அதிமுக தோல்வியைக் காரணம் காட்டி எம்.ஜி.ஆர்., ஜெயலலிதாவால் கட்டிக் காக்கப்பட்ட அதிமுகவை ஒற்றுமையால் மீட்டெடுக்க வேண்டும் என அழைப்பு விடுத்துள்ளதை அலட்சியம் செய்து கடந்து செல்வது அதிமுகவின் எதிர்காலத்திற்கு வலு சேர்க்கும். தப்பித் தவறி ஒ.பன்னீர் செல்வத்தையும், டி.டி.வி தினகரனையும், சசிகலாவையும் அதிமுக உள்ளுக்குள் இழுத்தால், அவர்கள் அதிமுகவை பாஜகவிடம் இழுத்துச் சென்று விற்றுவிடுவார்கள்! அதன் பிறகு தற்போது அவர்களுக்கு ஏற்பட்டுள்ள சோக நிலையைத் தான் அதிமுகவிற்கும் ஏற்படுத்துவார்கள்! இந்த மூவரும் அதிமுகவை கட்டிக் காப்பதைவிட பாஜகவின் பாதம் பணிவதிலேயே அதிக ஆர்வம் காட்டுபவர்கள் என்பதால், பழனிச்சாமி முன்பு எடுத்த முடிவிலேயே மூர்க்கமாக நின்று, இந்த மும்மூர்த்திகளிடம் இருந்து விலகி நிற்பது எதிர்காலத்திற்கு நல்லது.

பாஜகவுடன் கூட்டணி வைத்திருந்தால் அதிமுக பல இடங்களில் வெற்றி பெற்று இருக்கலாம் எனச் சிலர் வைக்கும் விமர்சனம் பாஜகவின் நலன் சார்ந்ததே அன்றி அதிமுகவின் நலன் சார்ந்ததல்ல. பாஜகவுடன் கூட்டணி காண்பது அதிமுகவை மேன்மேலும் பலவீனப்படுத்திவிடும். சிவசேனாவிற்கு நடந்த அவலமே அதிமுகவிற்கும் ஏற்பட்டு இருக்கும். அதிமுகவிற்குள் ஏக் நாத் ஷிண்டேக்களை உருவாக்கவே வழிவகுத்திருக்கும். எப்போது வேண்டுமானாலும் ஏக்நாத் ஷிண்டேவாக மாற எஸ்.பி.வேலுமணி உள்ளிட்ட பலர் அந்த கட்சிக்குள் காணப்படுகின்றனர்.

நல்லவேளையாக அதிமுகவும், அதன் கூட்டணிக் கட்சிகளும் தோற்றது. வெற்றி கிடைத்திருந்தால் அந்தப் பலன் பாஜகவிற்கு தான் சென்று இருக்கும். அது அதிமுகவை இன்னும் பலவீனப்படுத்தி இருக்கும். இனிமேலாவது ஒரு மக்கள் நலன் சார்ந்த எதிர்கட்சியாக அதிமுக தன்னை தகவமைத்துக் கொள்ளாவிட்டால், அந்தக் கட்சியையே மக்கள் தகனம் செய்து விடுவார்கள்!

சாவித்திரி கண்ணன்

அறம் இணைய இதழ்

 

Support Aram

நேர்மையான, வெளிப்படையான,

சுதந்திரமான இதழியலுக்கு தோள்

கொடுங்கள்.

UPI QR CODE

Razorpay Payment Gateway

Personal Info

Donation Total: ₹1,000.00 One Time