தமிழ்நாட்டில் பாஜக காலூன்றி வரும் வரலாறு!

-சாவித்திரி கண்ணன்

பாஜகவின் வளர்ச்சி சமீப காலமாக வேகமெடுத்துள்ளது தமிழ் நாட்டில்! ஒன்பது தொகுதிகளில் அதிமுகவை முந்தி, இரண்டாம் இடம் பெற்றுள்ளது. நோட்டாவுக்கும் கீழே ஓட்டுகள் பெற்ற பாஜக தற்போது லட்சங்களில் ஒட்டு பெறும் நிலைக்கு உயர்ந்துள்ளதன் பின்னணியை ஆதியோடந்தமாக ஆய்வு செய்கிறது இந்தக் கட்டுரை;

தமிழகத்தில் பாஜகவின் வாக்கு வங்கி 11.24% ஆகியுள்ளதெனினும், சில கூட்டாளிகளின் வாக்குகளை கழித்துப் பார்த்தால், 9 % மாகிறது என்பதே உண்மை. பாமகவைத் தவிர்த்து பார்த்தால், மிக பலவீனமானதே பாஜக. பாமகவும் சமீப காலமாக மிகவும் பலவீனப்பட்டே உள்ளது. இந்த நிலையில் சுமார் 18 சதவித வாக்குகளை பாஜக கூட்டணி பெற்றுள்ளது. அண்ணாமலை போட்டியிட்ட கோவையில் 4.50 லட்சம் வாக்குகள் பெற்றதும் இரண்டு தொகுதியில் மூன்று லட்சத்து சொச்சம் பெற்றதும், ஒன்பது தொகுதிகளில் இரண்டு லட்சம் முதல் 2,90,000 வரை பெற்று இருப்பதும் மற்ற சில தொகுதிகளில் ஒரு லட்சத்துக்கும் அதிகமாக வாங்கி இருப்பதும் புதிய வளர்ச்சிப் போக்காகும்.

வான் புகழ் போற்றும் வள்ளுவனும், ஜீவ காருண்யத்தை கற்பித்த வள்ளல் பெருமானும் அவதரித்த தமிழ் மண்ணில் வன்முறைக் கட்சியான பாஜக எப்படி காலூன்றி வருகிறது..?

தமிழ்த் தேசிய இயக்கங்களும், திராவிட இயக்கங்களும், சோசலிச இயக்கங்களும், காந்திய இயக்கங்களும் காலூன்றிய தமிழகத்தில் 1977 வரை ஜனசங்கமாகத் தான் அறியப்பட்டு இருந்தது, இன்றைய பாஜக!

1967 ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் தான் ஜனசங்கத்தினர் தமிழகத்தில் களம் கண்டனர். நான்கு தொகுதிகளில் நின்று, அவர்கள் பெற்ற மொத்த வாக்குகள் வெறும் 0.2% மட்டுமே! அதாவது, அரை சதவிகித வாக்குகள் கூட பெறுவதற்கு அருகதையற்ற நிலையில் தான் காமராஜர், அண்ணா காலத்தில் ஜனசங்கம் இருந்தது! இந்த படுதோல்விக்கு பிறகு 1971 தேர்தலில் ஒற்றைத் தொகுதியில் மட்டும் ஒப்புக்கு நின்று தோல்வி கண்டது.

1977 ஆம் ஆண்டு காந்தியவாதியான ஜெயப்பிரகாஷ் நாராயணன் அவர்கள் எமர்ஜென்ஸி கால நெருக்கடிகளை எதிர் கொள்ள ஜனதா கட்சியை உருவாக்கிய போது, அதற்குள் ஐக்கியமானது ஜனசங்கம். ஆர்.எஸ்.எஸ் உறுப்பினர்கள் ஜனதா கட்சிக்குள் வரக் கூடாது. ஆகவே, ஜனசங்கத்தினர் ஆர்.எஸ்.எஸ் உறுப்பினர் பதவியை ராஜுனாமா செய்ய வேண்டும் என்ற நிலையில் இவர்கள் ஜனதா ஆட்சியையே கவிழ்த்துவிட்டனர்.

இதையடுத்து வாஜ்பாய், அத்வானி ஆகியோர் 1980 ஆம் ஆண்டு பாஜகவை உருவாக்கிய காலத்தில் அந்தக் கட்சி தென் தமிழகத்தின் கடைக் கோடி மாவட்டமான நாகர் கோவிலில் மட்டுமே அறியப்பட்ட கட்சியாகத் தான் இருந்தது. அந்த வகையில் அவர்கள் 1984 ஆம் ஆண்டு நாகர்கோவில் நாடாளுமன்றத் தேர்தலில் மட்டும் போட்டியிட்டு 07% வாக்குகளை பெற்றனர்! இதற்கு பிறகு அயோத்தி ராமர் கோவில் விவகாரத்தை பேசிய வகையிலும், பாபர் மசூதியை இடித்த வகையிலும் இந்தக் கட்சி தமிழக மக்களால் அறியப்பட்டது. இதையடுத்து 1991 நாடாளுமன்றத் தேர்தலில் 15 இடங்களில் போட்டியிட்டு 1.65% வாக்குகளை பெற்றது பாஜக.

இந்த காலகட்டத்தில் மத்தியில் நரசிம்மராவ் ஆட்சி காங்கிரஸ் கட்சியை பலமிழக்க வைத்தது. போதாக்குறைக்கு இங்கு ஊழலில் திளைத்த ஜெயலலிதாவோடு கூட்டு சேர்ந்தது காங்கிரசை மேலும் பலவீனப்படுத்தியது. இந்தச் சூழலைப் பயன்படுத்திக் கொண்ட பாஜக, 1996 தேர்தலில் முதன்முதலாக 37 தொகுதிகளில் களம் கண்டு 3 சதவிகித வாக்கு வங்கியை பெற்றது. இதே தேர்தலில் தமிழகத்தில் காங்கிரசின் வாக்கு வங்கி, ஜெயலலிதாவோடு கைகோர்த்துமே கூட 5.5% சதவிகிதத்தை பெற்று சரிந்தது.

அடுத்த இரண்டே ஆண்டுகளில் திராவிட கட்சிக்கு தலைவியான ஜெயலலிதா முதன்முதலாக அதிமுக கூட்டணியில் பாஜகவுக்கு ஐந்து தொகுதிகளை ஒதுக்கி, அதன் வாக்கு வங்கியை ஆறாக உயர்த்தி, ஒரு எம்.பியையும் பெற்றுத் தந்தார். ஆனால், 13 மாதத்தில் பாஜகவுடனான உறவை முறித்துக் கொண்ட ஜெயலலிதா, ”தவறு செய்து விட்டேன். இனி எக்காலத்திலும் அக் கட்சியோடு கூட்டு சேரமாட்டேன்” எனச் சொன்னார்.

ஆனால், அதிமுக கழட்டிவிட்ட பாஜகவோடு திமுக கை கோர்த்து, அதிமுக பாஜகவிற்கு ஒதுக்கிய தொகுதிகளை விட கூடுதலாக ஒன்றைச் சேர்த்து, 1999 ஆம் ஆண்டு ஆறு தொகுதிகளை ஒதுக்கி தந்து, அதன் வாக்கு வங்கியை ஏழாக உயர்த்தியதோடு, நான்கு எம்.பிக்களையும் பெற்றுத் தந்தது. ஆக, தமிழகத்தில் முதன் முதலாக பலசாலியாக வளர்த்தது திமுக தான்!

பிறகு, மீண்டும் 2004 ஆம் ஆண்டு அதிமுகவும், பாஜகவும் பழைய விரோதத்தை மறந்து மீண்டும் கூட்டணி கண்டன. ஆனால், ஐந்து தொகுதிகளில் போட்டியிட்டு அனைத்தையும் இழந்த பாஜக ஐந்து சதவித வாக்கு வங்கியைத் தக்க வைத்துக் கொண்டது.

இதற்கிடையில் அதிமுகவின் முக்கிய தலைவர்களில் ஒருவரான திருநாவுக்கரசு பாஜகவில் சேர்ந்து அதன் பலத்தை அதிகரிக்க முயன்று பார்த்து முடியாமல், அந்தக் கட்சியில் இருந்தே விலகி காங்கிரசில் சேர்ந்தார்.

2009 ஆம் ஆண்டு பாஜகவானது அதிமுக அல்லது தேமுதிகவுடன் கூட்டணி காண பெருமுயற்சி செய்தது! ஜெயலலிதாவும், விஜயகாந்தும் திட்டவட்டமாக மறுத்து விட்டனர். ஆனால், சரத்குமாரின் சமத்துவ மக்கள் கட்சியும், நடிகர் கார்த்திக்கின் நாடாளும் மக்கள் கட்சியும் கூட்டு கண்டன. அப்போது பாஜக பெற முடிந்த வாக்கு சதவிகிதம் 2.3 சதவிகிதம் மட்டுமே!

2014 ஆம் ஆண்டு, ”இரு திராவிட கட்சிகளையும் ஒழித்தே தீருவேன்” என சபதம் எடுத்த தமிழருவி மணியன், பாஜக தலைமையில் ஒரு மெகா அணியை உருவாக்கினார். அந்த மெகா அணியில் பாமக, தேமுதிக, மதிமுக, ஆகிய கட்சிகள் சேர்ந்து களம் கண்டு 18.5% வாக்குகளை பெற்றன. பாஜக பெற்றதோ 5.5% வாக்குகள்!

ஜெயலலிதா மறைவுக்கு பிறகு அதிமுகவுக்கு அழுத்தம் தந்த போதிலும், 2019 நாடாளுமன்றத் தேர்தலில் எடப்பாடி பழனிச்சாமி ஐந்து தொகுதிகளை மட்டுமே ஒதுக்கினார். அப்போது பெற முடிந்த வாக்குகளோ 3.7 % தான். இதே போல 2021 தேர்தலில் சட்டமன்ற தேர்தலுக்கு எடப்பாடி பழனிச்சாமியின் அதிமுகவானது பாஜகவிற்கு வெறும் 20 தொகுதிகள் மட்டுமே ஒதுக்கியது. அப்போது பெற முடிந்த வாக்குகள் 2.6 % தான்! அதிமுக பாஜகவுடன் உறவு கொண்டிருந்த போதிலும், அதற்கு குறைவான தொகுதிகளை மட்டுமே ஒதுக்கி அதன் வளர்ச்சியை மட்டுப்படுத்தி வைத்திருந்தது. இது தான் அண்ணாமலைக்கு அதிமுக மீது கோபம் உருவானதற்கு காரணமாகும். அதிமுக என்ற ஆழமரத்தின் நிழலில் தமிழக பாஜக வளர முடியாது என்பதை உணர்ந்து தனிப் பாதை கண்டார்.

இதன் பிறகு திமுக ஆட்சிக்கு வந்த பிறகு தான் தமிழகத்தில் பாஜக அரசு வேகத்தில் வளரத் தொடங்கியது. இதற்கு பிரதான காரணம், திமுக அரசின் ஊழல்களை உக்கிரமாகத் தட்டிக் கேட்பதற்கு இங்கு அதிமுக காட்டிய சுணக்கம் ஒரு காரணமாகும். அதிமுகவின் அடிப்படை கட்டமைப்பான திமுக எதிர்ப்பு நீர்த்துப் போன நிலையில், அதற்கான தேவையை பாஜக பூர்த்தி செய்ய ஆரம்பித்தது.

மேலும், திமுகவின் ஊழல் முறைகேடுகள், மக்கள் விரோத செயல்பாடுகள், குடும்ப அரசியல் ஆகியவற்றை அதன் கூட்டணி கட்சிகளான இரு கம்யூனிஸ்ட் கட்சிகளும், காங்கிரசும் தட்டிக் கேட்காமல் மெளனப் பார்வையாளர்களாகக் கடந்து போன ஒரு துரதிர்ஷ்டமான சூழலில், இந்த அரசியல் தேவையை நிறைவேற்றும் வகையில் பாஜகவின் அண்ணாமலை துணிந்து கேட்டது, அக் கட்சியின் மீது ஒரு பெரிய ஈர்ப்பை உருவாக்கி தந்து விட்டது.

மேலும், பாஜகவின் அண்ணாமலை தற்குறித்தனமாகவும், தான்தோன்றித்தனமாகவும் திமுகவை கடுமையாக வசைபாடிய போதிலெல்லாம், திமுக தரப்பில் சரியான எதிர்வினை ஆற்றாமல் மெளனமாக கடந்து சென்றனர்! பாஜகவின் அண்ணாமலைக்கு செமத்தியாக பதிலடி தருவதற்கானவர்கள் திமுகவில் நிறைந்திருந்த போதிலும், திமுக தலைமை அவர்களை அடக்கி வைத்து விட்டது.

இது மட்டுமீறிய ஊழலில் திளைத்த திமுகவின் கோழைத்தனமாக பார்க்கப்பட்டதோடு, அண்ணாமலைக்கு சில இளைஞர்களிடையே ஹீரோ அந்தஸ்த்தையும் உருவாக்கித் தந்தது.

இவையெல்லாவற்றையும் விட, பாஜகவின் மக்கள் விரோத தொழிலாளர் கொள்கை, விவசாயிகளிடம் இருந்து நிலம் பிடுங்கும் அடாவடித்தனங்கள், அதானிக்கு தமிழகத்தில் பெரு முக்கியத்துவம் தருவது, தேசிய கல்வி திட்ட அமலாக்கம்.. என அனைத்தையும் அமல்படுத்தி பாஜகவுக்கு அனுசரணையாக நடந்து கொண்டது திமுக. அத்துடன் பிரதமர் மோடியை பல நிகழ்ச்சிகளுக்கு அழைத்து விழாக்கள் நடத்தி முதல்வர் ஸ்டாலினும், உதயநிதி ஸ்டாலினும் நெருக்கம் பாராட்டியது பாஜகவின் செல்வாக்கை அதிகரிக்கச் செய்தது.

தமிழக இந்து அறநிலையத் துறையானது முழுக்க, முழுக்க பாஜகவின் இந்துத்துவா கொள்கையை அமல்படுத்தி வருகிறது. அதாவது, திமுகவின் பகுத்தறிவு கொள்கைகள், பெரியாரிய சித்தாந்தங்கள், திராவிட இயக்க லட்சியங்கள் இவை அனைத்தையும் பேச்சளவில் மட்டுமே வைத்துக் கொண்டு நடைமுறையில் திமுகவானது, கொள்கை இல்லாத கொள்ளைக் கூட்டமாக  நீர்த்துப் போனதே பாஜக வளர்ச்சிக்கு சாதகமான சமூக சூழலை உருவாக்கித் தந்தது.

ஆக, திமுக, அதிமுக இரண்டும் தங்கள் சித்தாந்த தடத்தில் இருந்து வெகு தூரம் விலகிச் சென்றதும், ஊழல், முறைகேடுகளில் ஊறித் திளைத்ததும், ஒருவரை ஒருவர் அனுசரித்து மறைமுக தொழில் கூட்டாளிகளாக அரசியல் செய்வதும், எல்லாவற்றுக்கும் மேலாக வீரியம் இழந்த வீணர்களாகிப் போனதுமான சூழலில், இந்த வெற்றிடத்தை அதிகார பலம் தரும் அசாத்திய திமிரில் பாஜக நிரப்பி வருகிறது.

சாதி அமைப்புகளை வளைத்து போட்டு இருப்பது, சிறிய கோவில்கள் முதல் பெரிய கோவில்கள் வரை தலையை நுழைத்து அரசியல் செய்வது, பார்ப்பன மற்றும் பணத்திற்கு விலை போகும் ஊடகங்களின் ஆதரவு ஆகியவற்றின் பின்னணியில் பாஜக பலம் பெற்று வருவது கண்கூடாகத் தெரிகிறது.

இந்தச் சூழலில் திராவிட இயக்கங்கள், முற்போக்கு இயக்கங்கள் தங்களை சுய பரிசீலனைக்கு உட்படுத்திக் கொண்டு, தங்கள் தவறுகளைக் களைந்து, மக்கள் நலன் சார்ந்த உண்மையான அரசியலை முன்னெடுத்தால் மட்டுமே தீர்வாகும்.

சாவித்திரி கண்ணன்

அறம் இணைய இதழ்

Support Aram

நேர்மையான, வெளிப்படையான,

சுதந்திரமான இதழியலுக்கு தோள்

கொடுங்கள்.

UPI QR CODE

Razorpay Payment Gateway

Personal Info

Donation Total: ₹1,000.00 One Time