காத்திருக்கும் சவால்கள்! சமாளிப்பாரா மோடி…?

-சாவித்திரி கண்ணன்

மூன்றாவது பிரதமர் பதவி என்பது கயிற்றின் மீது நடக்கும் வித்தை போல இருக்கப் போகிறது மோடிக்கு! பல விட்டுக் கொடுப்புகள், சமாதானங்கள், அதிக பொறுமை தேவைப்படுகிறது. சர்வாதிகாரி மோடியை தேர்தல் தீர்ப்பு சமாதானவாதி ஆக்கியுள்ளது. என்னென்ன சவால்களை மோடி எதிர்கொள்ள வேண்டும்..?

மூன்றாவது முறையாக பாஜக ஆட்சிக்கு வந்துவிட்டது. முதல்கட்டமாக 72 அமைச்சர்கள் கொண்ட மோடி அமைச்சரவை பதவி ஏற்றுள்ளது. பாஜக அமைச்சர்கள் 61 பேரும், கூட்டணிக் கட்சிகளில் இருந்து 11 பேரும் அமைச்சர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர். பிரதான கட்சிகளான தெலுகு தேசத்திற்கு இன்னும் இரண்டு அல்லது மூன்று அமைச்சர்கள் கிடைக்க வாய்ப்புள்ளது. அதே போல நிதீஸ்குமாரின் கட்சிக்கும் இன்னும் ஒன்றோ, இரண்டோ கூடுதலாக அமைச்சரவையில் இடம் கிடைக்கலாம்!

சமூகத் தளத்தில் பிற்படுத்தப்பட்டோருக்கு 27 அமைச்சர்களும், பொதுப் பிரிவினர் என்போருக்கு 25 அமைச்சர்களும் (இதில் பிராமணர்-8) தலித்களுக்கு 10 அமைச்சர்களும், பழங்குடிகளுக்கு 5 அமைச்சர்களும் முஸ்லீம்கள் அல்லாத சிறுபான்மையினருக்கு ஐந்து அமைச்சர்களும் தரப்பட்டுள்ளன.சென்ற முறை தலித்களுக்கு 12 அமைச்சர்களும், பழங்குடிகளுக்கு 8 அமைச்சர்களும் தரப்பட்டன. முஸ்லீம் ஒருவருக்கும் அமைச்சர் வாய்ப்பு கிடைத்தது. இந்த முறை இல்லை. காரணம், பாஜக சார்பில் ஒரே ஒரு முஸ்லீம் தான் களத்தில் நிற்க வைக்கப்பட்டார். கேரளாவின் மல்லபுரம் தொகுதியில்! அவரும் தோற்றுவிட்டார். பாஜகவின் கூட்டணிக் கட்சிகளிலும் ஒரு முஸ்லீம் எம்.பி கூட கிடையாது. நாட்டில் 14 சதவிகித மக்கள் முற்றிலுமாக அமைச்சரவையில் புறக்கணிக்கப்பட்டுள்ளனர்.

மாநில வாரியாகப் பார்த்தால், உத்தரப் பிரதேசம் 11, பிகார் 8, மகாராஷ்டிரா 6, குஜராத் 6, கர்நாடகா 5, மத்தியப் பிரதேசம் 5, ராஜஸ்தான் 4, ஹரியானா 3, ஒடிசா 3, ஆந்திரப் பிரதேசம் 3, மேற்குவங்கம் 2, ஜார்க்கண்ட் 2, அசாம் 2, தெலங்கானா 2, கேரளா 2 என அமைச்சர்கள் இடம் பெற்றுள்ளனர். இது தவிர பஞ்சாப், தமிழ்நாடு, கோவா, அருணாச்சலப் பிரதேசம், ஜம்மு காஷ்மீர், உத்தரகாண்ட், டெல்லி, சட்டீஸ்கர் ஆகிய மாநிலங்களுக்கு தலா ஒரு அமைச்சர் பதவி ஒதுக்கப்பட்டுள்ளது.

இந்த முறை பிரதமர் மாற்றத்தில் நிதின்கட்கரி தனக்கு வாய்ப்பு கிடைக்கும் என்ற நம்பிக்கையில் இருந்தார். எதிர்பார்ப்பு தந்த ஏமாற்றத்தை அவர் எப்படி வெளிப்படுத்துவார் என பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

நிர்மலா சீதாராமனும், ஜெய்சங்கரும் ‘தேர்தலில் போட்டியிட மாட்டோம். வாக்காளர்களை சந்தித்து வாக்கு கேட்பதெல்லாம் எங்களால் முடியாது’ என இந்த முறையும் கொள்ளைப் புற வழியாக சொகுசாக பதவிக்கு வந்துள்ளனர். ‘நாங்கள் பிராமணர்கள், எங்களுக்கு இந்த நியதியெல்லாம் பொருந்தாது.. ‘என அவர்கள் நம்புகிறார்கள் போலும்!

ஆர்.எஸ்.எஸ் சற்று விலகி நிற்கிறது. ஆகவே, மோடிக்கு கூடுதல் சுமையும், பொறுப்புகளும் உள்ளன. இன்னும் இலாக்காகள் முழுமையாக ஒதுக்கப்படவில்லை. அப்போது அதிருப்திகள் வெளிப்படையாகத் தெரிய வரும். எந்த நேரத்திலும் கட்சிக்குள்ளும், வெளியிலும் அதிருப்தியாளர்கள் அணி சேரலாம். குழி பறிக்கலாம். முன்பு போல பாராளுமன்றக் கூட்டத் தொடர் நடக்கும் காலங்களில் முதல் மற்றும் கடைசி நாள் மட்டும் வருகை தருவது என்பதெல்லாம் இனி நடக்காது.

கேரளாவில் நடிகர் சுரேஷ் கோபிக்கு கேபினெட் அமைச்சர் பதவி கிடைக்காமல் இணை அமைச்சர் பதவி ஒதுக்கப்பட்டதில் அவருக்கு வருத்தம் இருப்பதாகத் தெரிகிறது. சென்ற அமைச்சரவை 73 உறுப்பினர்களை கொண்டதாக இருந்தது. இந்த முறை அதிகபட்ச அளவான 81 வரை அமைச்சர்கள் நியமனம் இருக்கலாம் என நம்பப்படுகிறது. இதற்கு மேல் அமைச்சர்கள் நியமிக்க அனுமதியில்லை. இருந்தால் துறை வாரியாக 116 அமைச்சர்களைக் கூட நியமித்துவிடுவார்கள். கூட்டணிக் கட்சிகளை தாஜா செய்யாவிட்டால், மோடி ராஜாவாக வளம் வர முடியாது.

சந்திரபாபு நாயுடுவைப் பொறுத்த வரை அவர் மோடியைக் காட்டிலும் பெரிய அனுபவஸ்தர். வாஜ்பாய் அமைச்சரவையிலும் தெலுகு தேசம் பங்கெடுத்துள்ளது மட்டுமின்றி சபாநாயகர் பொறுப்பையும் ஏற்றுள்ளனர். சந்திரபாபு நாயுடுவின் அரசியல் என்பது காங்கிரஸ் கட்சியில் இருந்து தான் ஆரம்பித்தது. தன் மாமனார் என்.டி.ராமாராவ் தனிக்கட்சி ஆரம்பித்த போது கூட உடனே அதில் அவர் சேரவில்லை. இரண்டாண்டுகள் பொறுத்தே இணைந்தார். ஆகப் பெரிய தலைவரான என்.டி.ஆரையே எதிர்த்து தெலுகு தேசக் கட்சியை தன்வயப்படுத்தினார்.

மோடிக்கும், நாயுடுவுக்கும் எப்போதுமே நல்லுறவு இருந்ததில்லை. குஜராத் கலவரத்தின் போது மோடி பதவி விலக வேண்டும் என நாட்டில் ஓங்கி ஒலித்த குரல் சந்திரபாபு நாயுடுவோடது தான். 2014 ஆம் ஆண்டு அமைந்த மோடியின் முதல் அமைச்சரவையில் தெலுகு தேசம் சேர்ந்ததும், பின்பு பின்வாங்கியதும் வரலாறு. அப்போது 29 முறை டெல்லிக்கு ஆந்திராவுக்கு சிறப்பு அந்தஸ்து கோரி காவடி எடுத்தும் கூட மோடி கருணை காட்டவில்லை என காட்டமாகப் பேசியவர் தான் நாயுடு. அவ்வளவு ஏன்? சமீபத்தில் ஜெகன்மோகன் ரெட்டி நாயுடுவை சிறையில் தள்ளிய போது மோடியை உதவி கேட்ட போது நோடி காட்டிய அலட்சியம் மறந்துவிடக் கூடியதல்ல. வேறு வழியின்றி ஜெகன் மோகனை அடக்கவே அவர் வெளியில் வந்ததும் பாஜகவுடன் கைகோர்த்தார். அப்போதும் நீண்ட நெடிய தயக்கத்தின் பின்பு தான் மோடி கைகுலுக்கினார். இந்த அளவுக்கு தான் இருவருக்கும் பரஸ்பர நட்பு உள்ளது.

நாயுடு எப்போதும் எடுத்தேன் கவிழ்த்தேன் என செயல்படமாட்டார். மிக ஆழமானவர். சமயம் வரும் போது தான் தன்னை வெளிப்படுத்துவார்.

நிதிஸ்குமார் பற்றி சொல்லவே வேண்டாம். மோடி முதன் முதல் பிரதமராக்கப்பட்ட போது, ”போயும், போயும் இந்த ஆளையா இந்த நாட்டின் பிரதமராக்குவீர்கள்…?” என கொந்தளித்து பாஜக கூட்டணியில் இருந்து விலகியவர். சில காலம் மோடி எதிர்ப்பை கடுமையாக வெளிப்படுத்தி வந்த நிதிஸ்குமார் சந்தர்ப்ப நிர்பந்தத்தால் தான் மீண்டும் மோடி ஆதரவு நிலைக்கு சென்றார். எதிர்கட்சிகளின் இந்தியா கூட்டணிக்கு வித்திட்டவரே நிதிஸ்குமார் தான். காங்கிரஸ் கூட்டணியில் தனக்கு உரிய முக்கியத்துவம் கிடைக்காததால் தான் தேசிய ஜனநாயக கூட்டணிக்கு மீண்டும் திரும்பினார். கடந்த காலங்களில் நிதிஸ்குமாரின் மிக நெருங்கிய கூட்டாளிகள் இருவரை பாஜக வளைத்து போட்டு அவருடன் இருந்து பிரித்து எதிரியாக்கி உள்ளது.

இந்த இருவருக்குமே பாஜகவிடம் மிகப் பெரிய கசப்பு அனுபவங்கள் கடந்த காலங்களிலேயே உண்டென்றாலும், தற்போது போதிய பலமும், ஒற்றுமையுணர்வும் இல்லாத காங்கிரஸ் கூட்டணிக்கு செல்வது தற்கொலைக்கு சமம் என அனுமானித்து தான் பாஜகவுடன் அனுசரித்து போவதே தற்போதைக்கு நல்லது என முடிவுக்கு வந்துள்ளனர்.

ஆக, மோடி உண்மையாக நடந்து கொள்ளும் வரை மட்டுமே பதவியில் நீடிப்பார்! பித்தலாட்ட வழி முறைகளை கையாள நினைத்தால்.., நினைத்து, நினைத்து வருந்தும்படியான சோகச் சூழலுக்கு தள்ளப்படுவார்.

சாவித்திரி கண்ணன்

Support Aram

நேர்மையான, வெளிப்படையான,

சுதந்திரமான இதழியலுக்கு தோள்

கொடுங்கள்.

UPI QR CODE

Razorpay Payment Gateway

Personal Info

Donation Total: ₹1,000.00 One Time