ஆடா தொடை இருந்தால் அண்டாது நோய்கள்!

-அண்ணாமலை சுகுமாரன்

நோய்கள் தாக்க முடியாத கவசமே ஆடா தொடை! பொக்கிஷமான இந்த மூலிகை வீதி ஓரங்களில் தானாக முளைத்துக் கிடக்கிறது. இது இருதயம், இரைப்பை, நுரையீரல் ஆகியவற்றில் சளியாலும், வாய்வினாலும், பித்தத்தினாலும் ஏற்படும் கோளாறுகளைக் குணப்படுத்தும் மூலிகையாகும். இதன் பயன்களை பார்ப்போமா?

“பிணிக்கேது கரமென்ப பேசுதல்வே றில்லை
தணிக்காத கோபதர்ற் றாகந் – தணிக்காமை
யாலுண்டி யாற் புணர்ச்சி யாலீரத்தாற் சுமையால்
மேலும் பிணிகளுறுமே”

தேரையர்

நோய்கள் உடலில் உண்டாவதற்கான  காரணங்களை தேரையர் இந்தப் பாடல் விவரிக்கிறார்.
அதிக கோபம் மிக்க தாகம் மாறுபட்ட உணவு அதிக புணர்ச்சி, அதிகசுமை இவைகளே நோய்களுக்கு காரணம் என்கிறார். அவைகள்; வாதம் பித்தம் கபம் என முன்று  வெளிப்படுகிறது.

மூலம் உடையவற்றை மூலி என தமிழில் கூறப்படுகிறது. சொல்லப் போனால் உலகில் உள்ள சுமார் 2,50,000  வகை தாவரங்களும் ,மூலிகைகளும் மருத்துவ குணமுடயவையே! அனைத்து செடி கொடி மரங்களும் ஒரு பயன் உள்ளவையே. மனிதனுக்கு உபயோக முள்ளவையே.
ஆனால், சுமார்  50,000  வகைகளுக்கே இது வரை பயன் கண்டறியப்பட்டுள்ளது.

இது வரை நாம் பார்த்ததில் பெரும்பாலவை மனிதன்  விளைவிப்பது.
ஆனால், பெரும் பகுதி மூலிகைகள் மனிதனின் முயற்சி இன்றி, மண்ணின் வளம் இருக்கும் இடத்தில் தானே வளர்வதே! அத்தகையத்தில் ஆடா தொடை ஒவ்வொரு கிராமத்தின் வெற்றிடகளிலும் தானாக முளைக்கும் ஒரு அரிய  மூலிகை செடி.

ஆனால், இவைகள்  இப்போது விளைவதற்கு வெற்றிடம் தான் மூலிகைகளுக்கு கிடைப்பதில்லை.எங்கும் ஜனக் கூட்டம்,சிமெண்ட் கட்டுமானம். ஒவ்வொரு மூலிகைகளின் பஞ்ச உறுப்புகளும் வேர், தண்டு, இலை, பூ, கனி அனைத்தும் மருத்துவ குணம் வாய்ந்தது.  இதுவும் அப்படியே . இந்த இலைகளை ஆடுகள் சாப்பிடாது. ஆடு தொடாத இலை என்பதால் தான், ஆடு தொடா  இலை  என்று பெயர் வந்திருக்கலாம் என்கிறார்கள் வைத்தியர்கள்!

ஆடா தொடை மூன்று  தோஷங்களில் முக்கியமான கபத்தை நீக்கவல்லது. கபம் இருந்தால் மூச்சு சீராக இராது.
மூச்சு சரி இல்லையெனில், செய்யும் காரியங்கள் சீராக இராது.
மூச்சு சரியில்லை என்றால், மனதும் சரியாக இராது.
மண் மனம் எங்குண்டோ, வாய்வும் அங்குண்டு என்கிறார்கள் சித்தர்கள்
வாய்வை சரி செய்ய ஆடா தொடை இலை முக்கிய பங்கு ஆற்றுகிறது .
ஆடா தொடை இலையும், ஐந்து குறுமிளகும்  சேர்த்து  சாப்பிட்டால் ஆடாத உடலும் டான்ஸ் ஆடும், பாடாத குரலும் பாடும் என்ற ஒரு பழமொழியுண்டு.

இதன் செய்கைகள்;
கோழையகற்றி
நுண்புழுக்கொல்லி
சிறுநீர் பெருக்கி
வலிநீக்கி

இதில் இருக்கும் முக்கிய வேதிப்  பொருள்கள்;
ஆடா தொடையில் இலைகளில் டானின், அல்கலாய்டுகள். சப்பொனின், பீனாலிக்சு, பிளாவநாய்டுகள், வாசிசின், வசாக்கின், வாசினால், வாசினோன், ஆடாதோடின், வைட்டமின் சி, கேலக்டோஸ் முதலியன காணப்படுகின்றன.

ஆடாதோடைப் பன்ன மையறுக்கும் வாதமுதற்
கோடாகோ டிச்சுரத்தின் கோதொழிக்கும்- நாடின
மிகுத்தெ ழுந்தசன்னி பதின்மூன்றும் விலக்கும்
அகத்துநோய் போக்கு மறி.”
–  அகத்தியர் குணவாகடம்

நீண்ட முழுமையான ஈட்டி வடிவ இலைகளையும் வெள்ளை நிறப் பூக்களையும் உடைய குறுஞ்செடி. வேலியில் வைத்து வளர்க்கப்படுகிறது. தமிழ்நாட்டில் எல்லா மாவட்டங்களிலும் வளர்கிறது. இது கசப்புச் சுவை, வெப்பத்தன்மை, காரப்பிரிவில் சேரும்.


இலை, பூ, பட்டை, வேர் ஆகியவ மருத்துவப் பயனுடையவை.
ஈளை இருமல், சுரம், காமாலை, இரத்தக் கொதிப்பு இவைகளை குணமாக்கும்.
கபத்தை அகற்றும், சிறு நீரைப் பெருக்கும் தன்மையுடையது.

ஆடாதோடை இலைகளைச் சுரசம் செய்து (அதாவது அரைத்துப் பிழிந்து வடிகட்டிய சாற்றை, இரும்புக் கரண்டியைச் சூடாக்கி அதில் தோய்த்து, தோய்த்து சூடாக்குவது, இதை தான் சுரசம் என்பார்கள் ) இதை கால் முதல் அரை தேக்கரண்டி தேன் கூட்டி தினமும் இரண்டு மூன்று வேளை கொடுக்க கப சம்பந்தமான நோயைக் குணப்படுத்தும்…இந்த சுரசத்தையே அதிக அளவில் கொடுத்தால் வாய் குமட்டி வாந்தியாகி கபம் முழுதும் வெளிப்படும்.

குழந்தைகட்கு வயதுக்குத் தக்கவாறு, ஆடாதோடை சுரசத்தை பத்து முதல் இருபது துளிகள் தேனுடன் கலந்து கொடுக்கலாம்.
இந்த மூலிகை பித்த சீதளத்தை மிக விரைவில் குணப்படுத்தும் தன்மையுள்ளதாகையால்  குழந்தைகளின் சுரநோய்கட்கும் சிறப்பாக ஆடாதோடை கியாழம் செய்து பயன்படுத்துவர்.
இந்தச் செடியின் வேர்களிலிருந்து ஆடாதோடைச் சூரணம் செய்தும், வேறு சில நோய்களைக் குணப்படுத்துவர்.
இது ஒரு சிறந்த முறை. எனது அம்மா இதை செய்வார்கள் . இப்போது மார்டன் அம்மாக்களுக்கு சுரசம்  என்பது தெரியாது. இப்போது இலைகளும் அத்தனை சுத்தமாக கிடைப்பதில்லை. எனவே, எச்சரிக்கை தேவை.

ஆடாதொடை மணப்பாகு;

 

ஆடாதொடை மணப்பாகு கடைகளில் கிடைக்கிறது. நாமே கூட தயார் செய்யலாம். இலையை பறித்து காம்பு நீக்கிவிட்டு, சுத்தமாகக் கழுவி சுமார் 50 அல்லது 60 கிராம் இலையை 500 மில்லி தண்ணீரில் கொதிக்கவிட்டு, அது நன்றாக சுருங்கி 100 மில்லிக்கும் குறைவாக வந்தவுடன் அதை வடிகட்டி கையளவு கருப்பட்டி சேர்த்து மீண்டும் காய்ச்சி பாகு பதத்திற்கு வந்தவுடன் அதில் பச்சை கற்பூரப் பொடியை சற்று தூவி இறக்கி விட்டு மீண்டும் வடிகட்டி எடுத்தால் மணப்பாகு ரெடியாகிவிடும்.

ஆடாதொடை இலையுடன் சமபங்கு வெற்றிலை, ஐந்தாறு தூதுவளை, 1/2 டீஸ்பூன் திப்பிலி, ஒரு  டீ ஸ்பூன் அதிமதுரம், கொஞ்சம் கருப்பட்டி சேர்த்து நன்றாக கொதிக்கவிட்டு மூன்றில் ஒரு பங்கு தண்ணீர் வற்றும் வரை காய்ச்சிவிட்டு வடிகட்டினால் கசாயமும் ரெடி!

இந்த இலையை உலர்த்திச் சுருட்டாகச் சுருட்டி புகை பிடித்து வர இரைப்பு நோய் நீங்கும். ஆடாதோடையின் பூவை வதக்கி, இரு மூடிய கண்களின் மீது வைத்துக் கட்ட கண்களில் உண்டாகும் நோய் தீரும். ஆடாதொடையின் ரசத்தை  20 துளி எடுத்து தேனுடன் கலந்து கொடுக்க வளி வாதம் சம்பந்தப்பட்ட அனைத்து குற்றங்களும் நீங்கும்.

முன்பெல்லாம் விளையாடப் போகும் இடமெல்லாம் ஆடா தொடையையும், ஊமத்தையையும் எங்கும் பார்க்கலாம். இப்போது விளையாட போக இடமும் இல்லை,  பிள்ளைகளுக்கு  இப்போது விளையாடப் போக  நேரமும் இல்லை.

இந்த ஆடாதோடை வளரும்போதே, சுற்று சூழலுக்கு நன்மை தருபவை. எங்கு இந்த செடி வளர்கிறதோ, அங்கே கார்பன் டை ஆக்சைடை உள் வாங்கிக் கொண்டு, ஆக்சிஜனை அதிகளவில் வெளியிட்டு, மனித குலத்துக்கே நன்மையை தருகிறது. அதனால் தான், இதற்கு “ஆயுள் மூலிகை” என்று சிறப்பு பெயரே உண்டு. காச நோய் எனப்படும் டி.பி நோயாளர்களின் நுரையீரலை தூய்மைபடுத்தும் ஆற்றல் இதற்கு உள்ளது.


வயிற்றில் உள்ள புழுக்களை நீக்கி, வயிற்றை சுத்தப் படுத்துகிறது, இந்த ஆடாதோடை! இந்த ஆடாதோடை இலைகளை பொடியாக்கி, நீரில் கலந்து குடித்து வந்தால், தசை வலிகள் நீங்கி விடும். எதிர்பாராத விதமாக மார்பில் அடிபட்டுவிட்டால், இந்த ஆடாதோடை இலையுடன், 2 இரண்டு வெற்றிலைகளை மென்று சாப்பிட்டால், உடனே வலி குறையுமாம். அந்த நேரத்தில் கை கொடுத்து உதவக் கூடிய முதலுதவி இதுவாகும்.

இத்தகைய தானே விளையும் தாவரங்களும் இப்போது அதிகம் கிடைப்பது இல்லை. இப்போது அதிகம் விற்கும் மருந்துகளில் கபத்திற்கான மருந்துகள் தான் முக்கியமானது. அவைகள் பல நூறு கோடி வணிக சந்தை மதிப்பு கொண்டவை.

இவைகளில்  இருக்கும் வாசிசின் (Vasicine), வாசிசினால் (Vasicinol), டானின்ஸ் (Tannins), சப்போனின்ஸ் (Saponins) போன்றவை ஆடாதோடையில்  அதிகம் இருக்கும் வேதிப்பொருட்கள் தான்! நவீன மருத்துவத்தில் சளி, இருமலைக் கட்டுப்படுத்த வழங்கப்படும் சிரப்களில் உள்ள மூலப்பொருள் ‘புரோம்ஹெக்சின்’ (Bromhexine). கோழையகற்றி செய்கையுடைய இது,  ஆடாதோடை இலைகளில் அதிகம் இருக்கும்  ‘வாசிசின்’ எனும் வேதிப் பொருளிலிருந்து தான் பிரிதெடுக்கப்படுகிறது காசநோய் சார்ந்த மருத்துவ ஆய்வில், ஆடாதோடையிலிருந்து பிரித்தெடுக்கப்பட்ட வேதிப் பொருட்கள் சிறப்பாக வேலை செய்வதாகத் தெரியவந்துள்ளது.
ஆனால், நாம் தான் நமது செடிகளை மதிக்காது இருக்கிறோம்.

நம்மிடை இருக்கும் இயற்க்கை தந்த  இத்தகைய மூலிகைகளை , அவைகளை சொல்லி வந்த நமது முன்னோர்களை நாம் உதாசீனம் செய்ததால்,மக்கள் சிறுகச் சிறுக ஏதாவது ஒரு வழியில் நிரந்தர நோயாளியாக மாறி வருகின்றனர்.

ஆனால், இத்தகைய மூலிகைகள் வரும் முன் காக்கும் கவசம் போன்றவை.
இவைகளைப் பற்றி அறிந்து கொள்வது முதல் கடமை. உங்கள் ஆதரவு இத்தகைய தேடலுக்கு அதிகமானால் மகிழ்ச்சி.

கட்டுரையாளர்; அண்ணாமலை சுகுமாரன்

‘நம்ம ஊரு மூலிகைகள்’ உள்ளிட்ட நூல்களின் ஆசிரியர்.

Support Aram

நேர்மையான, வெளிப்படையான,

சுதந்திரமான இதழியலுக்கு தோள்

கொடுங்கள்.

UPI QR CODE

Razorpay Payment Gateway

Personal Info

Donation Total: ₹1,000.00 One Time