நீட் தேர்வின் சமூக விளைவுகளை பேசும் படம்!

-சாவித்திரி கண்ணன்

சமகாலச் சமூகப் பிரச்சினையை சமூக அக்கறையுடன் கலைப் படைப்பாக்குவதில் சிறப்பான வெற்றி பெற்றுள்ளது இந்தப் படம்! எளிய குடும்பம், கிராமத்துப் பின்னணி, விவசாயமும், கூத்து கலையும் பின்னிப் பிணைந்த கதாநாயன், தன் மகனை மருத்துவராக படிக்க வைப்பதில் சந்திக்கும் சவால்களை உயிர்ப்புடன் பேசுகிறது படம்;

ஒரு அழகான கிராமத்தின் எளிய நடுத்தர குடும்பத்தின் வாழ்க்கையை, அதன் சந்தோசங்களை, துக்கங்களை மிக யதார்த்தமாகச் சொல்லிச் செல்லும் படத்திற்குள் சமூக அக்கறை சார்ந்த கருவை வைத்து, விறுவிறுப்புடன் காட்சிபடுத்தியுள்ளார் இயக்குனர் எஸ்.பி.சுப்புராமன்.

மாவட்டத்திலேயே முதல் மாணவனாய் வரும் மாணவனுக்கு மருத்துவராகும் கனவு! மாநில வழிக் கல்வியில் படிக்கும் மாணவனுக்கு மத்திய வழி கல்வி முறையில் நடத்தப்படும் தனிப்பட்ட நீட் தேர்வை எதிர் கொள்ள கண்டிப்பாக கோச்சிங் சென்டர் சென்று கற்க வேண்டிய நிர்பந்தம்! அதற்கு தேவைப்படும் ரூபாய் இரண்டு லட்சத்திற்கு அந்த எளிய பூ விவசாயி முதல் கட்டமாக தனக்கு சோறு போடும் நிலத்தை அடமானம் வைத்தும் போதாமல் அடுத்த கட்டமாக பசு மாட்டை விற்பது, நகையை அடமானம் வைப்பது என ஒவ்வொன்றாய் இழக்கிறான்!..இது தான் இன்றைக்கு இந்த நாட்டில் பல லட்சம் ஏழை, எளிய குடும்பங்கள் நீட் தேர்வால் சந்திக்க நேர்ந்துள்ள துயரங்களாகும்.

ஆக, இன்றைக்கு நன்றாகக் படிக்கும் ஏழை, எளிய குடும்பத்து மாணவனுக்கு மருத்துவப் படிப்பு எப்படி எட்டா கனியாக உள்ளது என்பதை இந்தக் காட்சிகள் முகத்தில் அறைந்தாற் போல உணர்த்துகின்றன.

அப்படியே எல்லா சவால்களையும் எதிர்கொண்டு தேர்வு எழுத வந்தால் தேர்வு மையங்களை 3,000 கீ.மீ கடந்து சென்றடைந்து எழுதும்படி நிர்பந்திக்கும் நிர்வாக அணுகுமுறைகள், நீட் தேர்வு மையங்களில் சோதனை என்ற பெயரில் மாணவ, மாணவிகள் சந்திக்க நேரும் அவமானங்கள், அவஸ்த்தைகள்… என நிகழ்கால நிகழ்வுகளை கலை நேர்த்தியுடன் ஆவணப்படுத்தியுள்ளது படம்.

இத்தகு பிரச்சினைகளை நீதிமன்றத்தின் கவனத்திற்கு கொண்டு சென்று தீர்வை தேடும் முயற்சியில் இந்த நீட் தேர்வின் பின்னணியில் உள்ள சூழ்ச்சிகள், கல்வி வணிகச் சூதாட்டமாக்கப்பட்டுள்ள அவலம், இதற்கு துணை போன அதிகார வர்க்கம், ஆட்சியாளர்கள்.. என அனைத்தையும் அம்பலப்படுத்தி பெரும் விழிப்புணர்வைத் தருகிறது படம். இந்தப் படத்தை தயாரித்தவரே ஒரு நல்ல மருத்துவரான திருநாவுக்கரசு என்பது தான் ஆகச் சிறந்த விஷயமாகும். தன் துறையின் சமூக அவலத்தை சொல்வதற்கென்றே துணிந்து பணம் செலவழித்து மக்களுக்கான ஒரு கலைப் படைப்பை தந்துள்ளார் மருத்துவர் திருநாவுக்கரசு MD.

பற்பல கட்டுரைகள், ஆயிரம் மேடைகள் போட்டுச் சொன்னாலும் கூட உணர்த்த முடியாத நீட் தேர்வு தொடர்பான சமூக அவலங்களை இந்த இரண்டரை மணி நேரக் கலைப் படைப்பு மிக ஆழமாக உணர்த்தி, சமூக விழிப்புணர்வு தருகிறது.

நீட் தேர்வால் தமிழகத்தில் சுமார் 18 மாணவ மணிகள் உயிர் இழந்துள்ளதன் பின்னணியில் தன் மகனும் அவ்வாறு தற்கொலை முடிவு எடுத்துவிடுவானோ என எண்ணியெண்னி கலங்கி சீலிங் வேனைக் கழட்டுவது, கிணற்றுக்கு இரும்பு மூடி போடுவது, அவ்வப்போது கனவு கண்டு அதிர்ந்து எழுவது.. என நீட் தேர்வை எழுதும் மாணவச் செல்வங்களின் பெற்றோர் சந்திக்கும் மன உளைச்சல் வெகு யதார்த்தமாகச் சொல்லப்பட்டுள்ளது.

தேர்வு எழுதுவதற்காக மதுரையில் இருந்து ஜெய்ப்பூர் செல்லும் பயண அனுபவத்தை மிக நேர்த்தியாகவும், உயிர்ப்புடனும் படமாக்கியுள்ளனர். கிராமத்து தெருக்கூத்து, பூ விவசாயம், எளிய குடும்பத்தின் குழந்தை வளர்ப்பு, நேசம், பாசம்..என ஒவ்வொன்றிலும் யதார்த்தம் இழையோடுகிறது.

குடும்பத் தலைவனாக நடிக்கும் விதார்த் மிக அற்புதமான நடிப்பை வழங்கி அசத்துகிறார். இரு குழந்தைகளின் தாயாக வரும் வாணி போஜன் வாழ்ந்து காட்டியுள்ளார். லட்சிய மாணவன் அருந்தவமாக நடித்துள்ள கிரிதிக் மோகன் இயல்பான நடிப்பை தந்துள்ளான்.

மனிதாபிமானம் மிக்க காவல்துறை அதிகாரியாகவும், சமூக அக்கறையுள்ள வழக்கறிஞராகவும் நடித்துள்ள ரகுமான் தன் முதிர்ச்சியான தேர்ந்த கதாபாத்திரத்திற்கு உயிர் கொடுத்துள்ளார். நீதிபதி கதாபாத்திரத்திற்கு பாலச்சந்திரன் ஐஏஎஸ் ஒரு சிறந்த தேர்வு. இன்னும் பல படங்களில் இவர் நீதிபதியாக வளம் வரக் கூடும்.

படத்தின் உணர்வோடும், கதையோடும், காட்சிகளின் முக்கியத்துவத்துடனும் ஒன்றிப் போவதற்கான பின்னணி இசையை கலாசரண் வழங்கியுள்ளார்!  மீடியா லிங் கான்செப்ட்ஸ் வழங்கியுள்ள துல்லியமான ஒலி, ஒளிக் கட்டமைப்பு, ஒளிப்பதிவாளர் கார்த்திக்கின் கேமிரா கை வண்ணம், ராம் சுதர்சனனின் தொய்வில்லாத எடிட்டிங், ஜி.சி.ஆனந்தின் கலை இயக்கம் ஆகிய தொழில் நுட்ப அம்சங்கள் படத்திற்கு கூடுதல் பலம் சேர்க்கிறது.

சற்று பிறழ்ந்தாலுமே கூட, இது ஒரு பிரச்சாரப் படமாக மாறக் கூடிய விபத்தை மிக அழகான, தெளிவான இயக்கத்தின் மூலம் தவிர்த்துள்ளார் புதிய இயக்குனர் எஸ்.பி.சுப்புராமன். பல காட்சிகளில் இருக்கையின் நுனிக்கு சென்று பதைபதைப்புடன் பார்ப்போரை பயணிக்க வைப்பத்தில் உண்மையிலேயே பெரு வெற்றி பெற்றுள்ளார் இயக்குனர். தமிழ் திரை ரசிகர்கள் இது போன்ற படைப்புகளை இவரிடம் மேன்மேலும் எதிர்பார்ப்பார்கள்!

சிற்சில சிறு குறைகளை தவிர்த்திருக்கலாம். தமிழ் மண்ணின் கிராமத்து கதாநாயன் பெயர் சர்க்கார் என்பது பொருத்தமாக இல்லை. நீட் தகுதி தேர்வு மத்திய அரசின் குற்றமே அன்றி மாநில அமைச்சரை அதில் குற்றவாளியாக சித்தரிப்பது பொருத்தமற்றது, நீதிமன்றக் காட்சிகள் சற்று நீளமாகச் செல்கிறது. ஆனால், சுலபத்தில் யாரும் திரைப்படமாக்கத் துணியாத கருப் பொருளோடு எடுக்கப்பட்ட படம் என்ற அம்சம் இந்த குறைகளை விஞ்சி மனதில் இடம் பிடித்து விடுகிறது.

படம் சொல்ல வந்த மையக் கருத்து இது தான்!

# மாநில பட்டியலில் இருக்க வேண்டிய கல்வி மத்திய பட்டியலுக்கு மாற்றப்பட்டு, குறிப்பிட்ட ஒரு சாரார் மட்டும் பயனடைய செய்யப்பட்ட சூழ்ச்சி!

# தகுதி தேர்வு என்ற பெயரில் கல்வித் தகுதியை புறக்கணித்து செல்வத் தகுதி உள்ளோருக்கே கல்வி எனக் கல்வியை வணிக பொருளாக்கி இருப்பது.

# இத்தனையையும் சமாளித்து ஏழை, எளியோர் வரும் போது ஒவ்வொரு நகர்விலும் அவர்களுக்கு வைக்கப்படும் செக்!

# அதிகார வர்க்கத்தின் அடாவடித்தனங்களால் மக்கள் சந்திக்கும் பிரச்சினைகளை நீதிமன்றத்திற்கு எடுத்துச் செல்வதன் மூலம் அதை பேசுபடு பொருளக்கத் தான் முடியுமே அன்றி, அங்கு முழுமையான தீர்வு கிடைக்காது! ஆயினும் போராடாவிட்டால் இந்தக் கவன ஈர்ப்புக்கும் சாத்தியமில்லை.

நீட் எதிர்ப்பை கொள்கையாக கொண்ட தமிழ்நாடு அரசு, இந்தப் படத்திற்கு வரிவிலக்கு தர வேண்டும். பல இந்திய மொழிகளில் இந்தப் படம் மொழி மாற்றம் செய்யப்பட்டு திரையிடப்பட வேண்டும். குறிப்பாக தமிழக மாணவ சமுதாயம் இந்தப் படத்தை கண்டிப்பாக பார்க்க வேண்டும்.

திரை விமர்சனம்; சாவித்திரி கண்ணன்

Support Aram

நேர்மையான, வெளிப்படையான,

சுதந்திரமான இதழியலுக்கு தோள்

கொடுங்கள்.

UPI QR CODE

Razorpay Payment Gateway

Personal Info

Donation Total: ₹1,000.00 One Time