தகுதியற்றவர்கள் நடத்தும் ‘தகுதி தேர்வே’ நீட்!

-சாவித்திரி கண்ணன்

ஆண்டுக்காண்டு அதிகரித்துச் செல்லும் குளறுபடிகள்! கோச்சிங் சென்டர்களின் ‘பவர் லாபி’ தில்லு முல்லுகள்! கல்வி வணிகத்தில் கடலளவு லாபம் பார்க்கத் துணிந்த கயவர்கள்! வருடங்களைத் தொலைத்து படித்த பிறமும், வாழ்க்கையை தொலைக்கும் மாணவர்கள்.. நீட் தேர்வு குளறுபடிகளின் பின்னணி என்ன?

ஒவ்வொரு ஆண்டும் நீட் தேர்வு நடவடிக்கைகளில் குளறுபடிகள் தொடர்ந்து கொண்டே இருக்கின்றன. இதில் இந்த ஆண்டு சற்று உச்சகட்டமாகவே குளறுபடிகள் அரங்கேறி உள்ளன. பீகாரிலும் இன்னும் சில இடங்களிலும் வினாத்தாள்கள் கசிந்துள்ளன. ராஜஸ்தான், டெல்லி, குஜராத், ஜார்கண்ட், தமிழ்நாடு ஆகிய இடங்களில் வினாத்தாள் குளறுபடிகள் நடந்துள்ளன. ‘நாடு முழுவதும் ஒரே தேர்வு, ஒரே வினாத்தாள்’ என்றவர்கள், தூத்துக்குடியில் இரண்டு சென்டர்களில் இருவேறு வினாத்தாள்களை ஏன் தந்தனர்? ஒன்று சற்று சுலபமாகவும், மற்றொன்று சற்று கடினமாகவும் இருந்துள்ளதாக மாணவர்கள் தரப்பில் சொல்கிறார்கள்!

நீட் தேர்வு அறிமுகப்படுத்தப்பட்ட போது மருத்துவக் கல்வியின் தரத்தை உயர்த்துவதும், அதில் சேரும் மாணவர்களின் தகுதியை சரியாக மதிப்பிடுவதும், மருத்துவக் கல்வியை வணிகமயமாக்குவதை தடுப்பதுமே நோக்கம் என்றனர்.

நீட் தேர்வுக்காகவே ஓராண்டு தங்கி படிக்கும் வசதியான கோச்சிங் சென்டர்!

இதில் மருத்துவக் கல்வியின் தரம் உயர்ந்துள்ளதா? எனப் பார்ப்போம்.

இந்த நீட் தேர்வில் மூன்றே பாடங்களில் இருந்து மட்டுமே கேள்விகள் கேட்கப்படுகின்றன. அவை; பிசிக்ஸ், கெமிஸ்டிரி, பயாலஜி! இதில் 180 கேள்விகள் கேட்கப்படுகின்றன.! ஒவ்வொரு கேள்விக்கும் நான்கு பதிகள் தரப்பட்டு அதில் ஒன்றை டிக் செய்வதே தேர்வாம். டிக் ஒவ்வொன்றுக்கும் நான்கு மார்க் தருகிறார்கள்! ஆக மொத்தம் 720 மதிப்பெண் தரப்படுகின்றன. இதில் என்ன தகுதியை, திறமையை நீங்கள் முடிவு செய்ய முடியும்..? ஒரு சப்ஜெக்டில் விரிவான, ஆழமான அறிவு ஒரு மாணவனுக்கு இருக்கிறதா…? என்பதை அறிவதற்கான மதிப்பீட்டு அணுகுமுறை இதுவல்ல.

இந்த தேர்வை யார் நடத்துகிறார்கள்? நாடறிந்த கல்வியாளர்களைக் கொண்டு நமது அரசாங்கம் நடத்துவதாக நினைத்தால் ஏமாற்றமே மிஞ்சும். என்.டி.ஏ எனப்படும் தனியார் ஏஜென்ஸி தான் இதை நடத்துகிறது. பல லட்சம் மாணவர்களின் எதிர்காலத்தை மட்டுமல்ல, நாளை அவர்களிடம் சிகிச்சை பெறப்போகும் கோடானுகோடி மக்களின் உயிரையும் அல்லவா ஒரு தனியார் ஏஜென்ஸியிடம் தந்துள்ளார்கள், இந்த ஆட்சியாளர்கள்!

இது வரை நடந்த அனைத்து தேர்வுகளிலும் இவர்கள் தொடர்ந்து பல பித்தலாட்டங்களை செய்த போதும், இவர்கள் தண்டிக்கப்பட முடியாதவர்களாகவே தொடர்ந்து இயங்கி வருகின்றனர்.

அடுத்ததாக, ’12 ஆண்டுகள் படித்த படிப்பும், 12 ஆம் வகுப்பு தேர்வு மதிப்பெண்ணும் ஒரு பொருட்டே அல்ல’ என்பது எப்படி சரியாகும். ப்ளஸ் டூவில் தோல்வி அடைந்த சிலர், நீட் தேர்வில் 97, 98 சதவிகிதம் பெறுவதை எப்படி புரிந்து கொள்வது? பிசிக்ஸ், கெமிஸ்டிரி, பயாலஜி என்பதில் ஒரு சப்ஜெக்டையே முற்றிலும் தவிர்த்து, எழுதுபவர்களும் கூட வெற்றி பெற்று வாய்ப்பு பெறுவதும் நடக்கிறது. 600 மதிப்பெண் வாங்கிய மாணவருக்கு வாய்ப்பு மறுக்கப்படுவதும் 200 க்கும் குறைவான மதிப்பெண் பெற்றவருக்கு ‘மானேஜ்மெண்ட் கோட்டா’வில் பணம் பெற்றுக் கொண்டு ‘சல்யூட்’ அடித்து வாய்ப்பு தருவதும், சர்வசாதரண நிகழ்வாக இருக்கும் போது, வாய் கூசாமல், ”மருத்துவ கல்வி வணிகமாக்கபடுவதற்கு முற்றுபுள்ளி வைக்கவே இந்த நீட் தேர்வு” என நீட்டி முழக்குவது எப்படி சரியாகும்…?

அந்தந்த மாநில அரசுகளே மருத்துவ தேர்வை நடத்திய காலங்களில் இவ்வளவு மன அழுத்தங்கள் மாணவர்களுக்கு இல்லை. இதை தேசம் தழுவிய அளவில் எடுத்து வந்து சர்ச்சைக்குரிய முறையில் நடத்தத் தொடங்கியது முதல் தான் இதற்கு மிகப் பெரிய ‘நெகடிவ் விளம்பரம்’ கிடைத்து பலரும் இந்த தேர்வு எழுதுவதையே ஒரு கெளரமாக கருதத் தொடங்கி தங்கள் பிள்ளைகளை கோச்சிங் சென்டர்களில் சேர்த்து நிர்பந்தித்தனர்.

நீட் தேர்வு அறிமுகமான ஆரம்ப காலத்தில் 450 அல்லது 500 மதிப்பெண்கள் ‘கட் ஆப்’ ஆக இருந்தது. அது தற்போது 650 ஆக உயர்ந்துள்ளது. 2017 ல் நீட் தேர்வில் பங்கெடுத்தவர்கள் 12 லட்சமாக இருந்தனர். தற்போது, அது 24 லட்சமாகி விட்டது. ‘சரியோ, தவறோ பிரபலப்படுத்தப்படும் ஒன்று வேகமாக விலை போகின்றது’ என்பதற்கு இதுவே சாட்சியமாகும். ஆக, நிட் தேர்வு என்பது 24 லட்சம் மாணவர்களிடம் லட்சக்கணக்கில் பணம் கறந்து பல்லாயிரக்கணக்கான கோடிகளில் பணம் பார்க்கும் வணிகமாகிவிட்டது.

இதனால் கோச்சிங் சென்டர்களின் ‘பவர் லாபி’, ‘மணி லாபி’ இரண்டும் சேர்ந்து, நீட் தேர்வில் தில்லு முல்லுகளை தவறாமல் அரங்கேற்றிவிடுகின்றன. வரலாறு காணத வகையில் இந்த ஆண்டு 67 மாணவர்கள் 720 மதிப்பெண்கள் முழுமையாக பெற்றுள்ளனர். ஹரியாணாவின் ஒரே தேர்வு மையத்தில் அடுத்தடுத்த நம்பர்களில் வரும் ஆறு மாணவர்கள் இந்த 720 மதிப்பெண் பெற்றவர்களில் அடங்குவர்.. என்றால், இந்த தில்லுமுல்லு எப்படி நடந்திருக்கும் என நாம் ஒருவாறு யூகிக்க முடியும். தேர்வு முறையில், வினாத்தாளில் தவறு நடந்தால் அதற்கு கருணை மதிப்பெண் என்றால், அந்த தவறு செய்தவர்களுக்கு என்ன தண்டனை..? வருடா வருடம் 1500, 2000 மாணவர்களுக்கு கருணை மதிப்பெண் வழங்குவது தீர்வாகுமா? இது தவறான முன் உதாரணமாகிவிடுமே!

இதே போல ஜே.இ.இ போன்ற உயர்தொழில் நுட்ப கல்விக்கான தேர்வும் அதிக மன அழுத்தங்களை தந்து கொண்டிருப்பதன் விளைவாக இந்தியாவில் ஒவ்வொரு நாளும் சராசரியாக 35 மாணவர்கள் தற்கொலை செய்து கொள்கின்றனர்.

தேசிய குற்ற ஆவணக் காப்பகம் தரும் தகவல்கள்படி 2021 ஆம் ஆண்டு மட்டுமே 13,000 மாணவர்கள் இறந்துள்ளனர். இதில் முதல் ஐந்து இடங்களில் உள்ள மாநிலங்களில் தமிழ்நாடு மூன்றாவது இடத்தில் உள்ளது. மகாராஷ்டிரா- 1,834,மத்திய பிரதேஷ் – 1,308, தமிழ்நாடு – 1,246, கர்நாடகம் – 855, ஒடிசா  – 834.. என்ற இந்தப் பட்டியல் நமக்கு உணர்த்தும் செய்தியை அலட்சியப்படுத்தி விட்டு தற்போது கலைக் கல்லூரிகளுக்குமே ‘கியூட்’ தேர்வை அறிமுகப்படுத்த தயாராகின்றனர் மத்திய ஆட்சியாளர்கள்!

தமிழக அரசு சுமார் பத்து முறைக்கும் மேலாக நீட் தேர்வில் இருந்து தமிழகத்திற்கு நீட் விலக்கு கேட்டு மத்திய அரசுக்கு கோரிக்கை வைத்து விட்டது. சட்டமன்றத்தில் ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றியும் வைத்தோம்.சுமார் ஏழு முறை அவர்கள் கேட்ட சந்தேகங்களுக்கு தமிழக கல்வியாளர்கள் குழு தெளிவான விளக்கத்தையும் தந்துவிட்டது. இத்தனைக்கு பிறகும் இதற்கு மத்திய ஆட்சியாளர்கள் செவி சாய்க்கவில்லை எனில், நாம் வாழ்வது ஜனநாயக நாடு தானா? என்ற கேள்வி நம் மனங்களில் எழுகிறது. நம்மைப் போன்றே தற்போது நீட் தேர்வை மகாராஷ்டிரா மாநிலமும் எதிர்ப்பது நம் கோரிக்கைக்கு மேலும் வலு சேர்த்துள்ளது.

தனியார் மருத்துவ கல்வி நிறுவனங்கள் தங்கு தடையின்றி பணம் பெற்று கொழுப்பதற்கும், ‘கோச்சிங் சென்டர்கள்’ என்ற பெயரில் நிறைய கல்வி வணிகர்கள் கல்லா கட்டவும், மருத்துவ கல்வியில் மனிதாபிமானமற்ற லாப நோக்கை வலுப்படுத்தவுமே நீட் தேர்வு உதவி வருகிறது.

நீட் தேர்வை ஒழித்துக் கட்டாத வரை நேர்மையான மருத்துவ கல்விக்கும், சேவைக்கும் வாய்ப்பில்லை!

சாவித்திரி கண்ணன்

 

 

Support Aram

நேர்மையான, வெளிப்படையான,

சுதந்திரமான இதழியலுக்கு தோள்

கொடுங்கள்.

UPI QR CODE

Razorpay Payment Gateway

Personal Info

Donation Total: ₹1,000.00 One Time