தமிழக பாஜகவின் துணிச்சல் காங்கிரசுக்கு இல்லையா?

-சாவித்திரி கண்ணன்

தமிழகத்தில் பாஜகவின் வளர்ச்சி வேகம் எடுத்துள்ள நிலையில் காங்கிரஸ் செய்யப் போவது என்ன? தனித்து களம் கண்டு பாஜகவின் வாக்கு வங்கியை உயர்த்திக் கட்டும் துணிச்சல் அண்ணாமலைக்கு இருக்கும் போது, செல்வ பெருந்தகைக்கு இருக்க கூடாதா? காங்கிரசின் கடந்த காலம் சொல்லும் செய்தி என்ன? நிகழ்காலப் பயணம் என்ன..?

காங்கிரஸ் கட்சியை வளர்ப்பது பற்றி அதன் தமிழகத் தலைவர் செல்வப் பெருந்தகை பேசினால், ‘அது திமுகவுக்கு எதிரான பேச்சோ..’ என்ற பதற்றம் ஏற்பட்டு விடுகிறது. அண்ணாமலைக்கு கிடைத்த அதிகாரமும், சுதந்திரமும் பாஜகவின் வளர்ச்சியை சாத்தியப்படுத்தி வருகிறது! ஆனால், தமிழக காங்கிரஸ் தலைமையின் நிலை என்ன?

”நாம் எத்தனை காலம் பிற கட்சியை சார்ந்து இருக்கப் போகிறோம்..? காமராஜர் ஆட்சி என்ற இலக்கை பிற கட்சியை சார்ந்து இருக்கும் வரை நாம் எட்ட முடியாது. தமிழக காங்கிரஸுக்கு என்று தனி பாரம்பரியம் இருக்கிறது. தமிழகத்தில் எத்தனை நாள் நாம் பிறரை சார்ந்து இருக்க போகிறோம்? சுயமாக வளர வேண்டாமா? நான் சுற்றுப் பயணம் செய்யும் இடங்களில் எல்லாம் காங்கிரஸ் தொண்டர்கள் ”நாம் சுயமாக செயல்பட வேண்டும்” என்ற விருப்பத்தை தெரிவிக்கிறார்கள். காங்கிரசை நாம் அடிமட்டத்தில் இருந்து கட்டி எழுப்ப வேண்டும். செயல்படாத அமைப்புகளை செயல்படுத்த வேண்டும். ராகுல்காந்தி போன்ற நல்ல தலைவர் நமக்கு கிடைத்துள்ளார். இந்த வாய்ப்பை பயன்படுத்தி கட்சியை மக்களிடம் வலுப்படுத்த வேண்டும்” எனப் காங்கிரஸ் பொதுக் குழுவில் பேசியுள்ளார்.

தன் கட்சியை வளர்க்க விரும்பும் யாருமே இப்படித்தான் பேசுவார்கள். ‘இந்தப் பேச்சு திமுகவுக்கு எதிராக புரிந்து கொள்ளப்பட்டுவிடுமோ..’ எனச் சிலர் அந்த கட்சிக்குள்ளே பயந்து அதே மேடையில் விலாவாரியாக பதில் தந்துள்ளனர்.

தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, ”பாஜகவானது அதிமுகவை சார்ந்து செயல்படாது” என உறுதிபடப் பேசியதோடு, அந்தப்படியே செயல்பட்டும் வருகிறார்! அதனால் தான் அந்தக் கட்சி நோட்டாவை விட குறைவாக வாக்குகள் பெற்ற நிலை மாறி, இன்று லட்சக்கணக்கில் ஓட்டுகள் பெறுகிறது. தமிழகத்தில்  தனி வழி எடுத்துப் பயணித்து அண்ணாமலை கடுகு போல சிறுத்து தெரிந்த பாஜகவை கைப்பந்து அளவுக்கு காட்சிக்கு தெரியும்படி வளர்த்து சுமார் எட்டு சதவிகித வாக்கு வங்கியை எட்டிவிட்டார். அந்தக் கட்சியில் மிகப் பெரும்பாலோனோர் அதிமுக கூட்டணியை விரும்பிய போதிலும், அண்ணாமலைக்கு எதிராகப் பேசவில்லை. அப்படி பேசிய ஒரே தலைவர் தமிழிசை தான். அதனால் தான் அவர் அமித்ஷாவால் கடுமையாக எச்சரிக்கப்பட்டார்.

தமிழக பாஜகவில் அண்ணாமலைக்கு தந்துள்ள சுதந்திரம், அதிகாரம் போல தமிழக காங்கிரஸ் தலைவருக்கும் தர வேண்டும். தமிழ் மண்ணுக்கும், மக்களுக்கும் ஏற்ப மாநிலத் தலைவர் சுயாதீனமாக செயல்பட அகில இந்திய தலைமை அனுமதிக்க வேண்டும்.  தலைவர் என்பவர் கட்சியை வலுப்படுத்த ஒரு கருத்தை முன் வைக்கும் போது, உடனே மாற்றுக் கட்சிக்கு ஆதரவாக அதே மேடையில் சிலர் பேசுவது, ‘கட்சிக்குள் ஒருமித்த செயல்பாடு இல்லையோ..’ என்ற தோற்றத்தை தான் பொதுவெளியில் ஏற்படுத்தும். தனிப்பட்ட முறையில் செல்வப் பெருந்தகையிடம் எடுத்துச் சொல்லி இருக்கலாம். எப்படியோ நிர்பந்தங்கள் தரப்பட்டு, அவரும், ‘திமுகவிற்கு எதிராக பேசவில்லை’ என பிற்பாடு ஒரு அறிக்கை வெளியிட வேண்டியதாகிவிட்டது.

தமிழ்நாட்டில் காமராஜர் இருக்கும் வரை காங்கிரஸ் கட்சி தான் பலமான கட்சியாகும். பெருந் தலைவர் இருக்கும் போது நடந்த 1971 தேர்தலில் காங்கிரஸ் கட்சியின் வாக்கு சதவிகிதம் திமுகவைக் காட்டிலும் அரை சதவிகிதம் அதிகமாகவே இருந்தது! ஆனால், இந்திரா காங்கிரஸ் கூட்டணியால் குறைந்த வாக்கு வித்தியாசத்தில் ஆட்சியைக் கைப்பற்றியது திமுக.

1957 தேர்தலிலும், 1962 தேர்தலிலும் தலா 151 இடங்களையும், 139 இடங்களையும் கைப்பற்றிய கட்சி தான் காங்கிரஸ்! 1977, 1980, 1989 தேர்தல்களில் முறையே 27, 31, 26  இடங்கள் தனித்தே வென்ற கட்சி தான் காங்கிரஸ். கடைசியாக தனித்து நின்ற போது, 20 சதவிகித வாக்கு வங்கியை பெற்று இருந்தது காங்கிரஸ்!

1996 தேர்தலில் நரசிம்மராவ் அவர்கள் அன்றைக்கு ஊழலில் திளைத்து பேர் கெட்டுப் போயிருந்த அதிமுகவுடன் கூட்டணி கண்ட போது அனைத்து தொகுதிகளிலும் தோற்றுப் போனதோடு, காங்கிரஸின் வாக்கு வங்கி 5.5 சதவிகிதமாக சரிந்தது. காங்கிரசில் இருந்து பிரிந்து சென்று தமிழ் மாநில காங்கிரஸ் என கட்சி துவங்கி மிகப் பெரிய வரவேற்பை பெற்ற மூப்பனார் ஐந்தே வருடத்தில் எந்த அதிமுகவை எதிர்த்து தனியே களம் கண்டாரோ, அந்த அதிமுகவுடன் கூட்டணி கண்டு தான் உருவாக்கிய கட்சியை தானே கரைத்து விட்டார்.

ஆனால், அதற்கு பிறகு காங்கிரஸ் வாக்கு வங்கி ஏறவே இல்லை.1996, 1998, 2014 ஆகிய ஆண்டுகளில் காங்கிரஸ் கட்சிக்கு தமிழகத்தில் இருந்து ஒரு நாடாளுமன்ற இடம் கூட கிடைக்கவில்லை. 1984, 1991 தேர்தல்களில் அதிமுகவோடு கூட்டணி கண்டு முறையே 61, 60 தொகுதிகளை பெற்ற சரித்திரமும் காங்கிரசுக்கு உண்டு. 2011 சட்டமன்றத் தேர்தலில் வெறும் ஐந்து இடங்கள் பெற்ற வரலாறும் உண்டு. கூட்டணியில் திமுக, அதிமுக என மாறி, மாறி சவாரி செய்து வரும் இந்த காலகட்டங்களில் காங்கிரஸ் வாக்கு வங்கி கடுகளவும் உயரவில்லை. வெற்றி பெற்ற தொகுதிகளின் எண்ணிக்கை  கூடலாம், குறையலாம், ஆனால் வாக்கு வங்கி ஏறத்தாழ 5 சதவிகிதம் அளவே உள்ளது. நூற்றாண்டு கட்சிக்கு இது ஒரு தேக்க நிலை தான்!

இதற்கு காரணம் தேர்தல் கூட்டணியை அத்துடன் முறித்துக் கொண்டு ஒரு சிறந்த எதிர்கட்சியாக காங்கிரஸ் செயல்படவில்லை. ஆட்சியில் இருக்கும் கட்சி கொண்டு வரும் மக்களுக்கு எதிரான சட்ட, திட்டங்களை, மக்கள் விரோத செயல்பாடுகளை எதிர்ப்பதில்லை.மக்கள் பிரச்சினைகளுக்கு குரல் கொடுப்பது, போராட்டக் களம் காண்பது என்பது மிக அரிதாகவே செய்கிறார்கள்.

அதுவும் திமுக அரசு தற்போது மிக அதிகமாகவே மக்கள் விரோத செயல்பாடுகளை செய்கிறது. முக்கியமாக தமிழ் நாட்டின் இயற்கை வளங்களை சூறையாடுகிறது. தமிழ் நாட்டை அதானி போன்ற கார்ப்பரேட்களுக்கு பிளாட் போட்டுத் தருகிறது. ஊழலில் ஊறித் திளைக்கிறது. திமுகவுடன் 2026 சட்டமன்றத் தேர்தலிலும் காங்கிரஸ் கூட்டு தொடருமானால் காங்கிரஸ் மக்கள் அதிருப்திக்கு ஆளாகி படுதோல்வியை சந்திக்கும். அதுமட்டுமின்றி திமுகவிற்கு எதிரான மக்களின் தார்மீக கோபத்தை பாஜக, நாம் தமிழர் போன்ற கட்சிகள் அறுவடை செய்து தங்கள் கட்சியை சிறப்பாக வளர்த்து விடும்.

தனித்து ஒரு முறை களம் காணும் போது ஒரு தொகுதி கூட கிடைக்காத நிலை ஏற்படலாம். இது ஏற்கனவே பெற்ற அனுபவம் தானே! ஆனால், அடுத்த தேர்தலுக்குள் கட்சிக்கு பலமான அடித்தளம் போட்டுவிடலாம். அதற்கு அடுத்த தேர்தலில் ஆட்சியில் அமரலாம். ஒரு பத்தாண்டு காலம் வேள்வி போல வேலை செய்தால் விளைச்சலை அறுவடை செய்யலாம்.

எனவே, கட்சியை அடித்தளத்தில் இருந்து கட்டி எழுப்புவதற்கு தேவை பரிபூரண சுதந்திரம். நாளும், பொழுதும் கட்சித் தலைவர்கள் மக்களிடையே கலந்து உறவாட வேண்டும். செல்வப் பெருந்தகை யாத்திரை செல்வதாக கூறியுள்ளார். நல்ல முயற்சியே! ஓயாத உழைப்பிற்கு என்றும் பலனுண்டு.

இதைப் பேசினால் திமுக கோபித்துக் கொள்ளும். அதை பேசினால் அதிமுக கோபித்துக் கொள்ளும் எனப் பயந்து, பயந்து கட்சி நடத்தினால் இன்று இருக்கும் காங்கிரசும் நாளை இல்லாமல் போவதோடு. அந்த வெற்றிடத்தை பாஜக என்ற தேசிய கட்சியைக் கொண்டு தமிழக மக்கள் நிரப்பிக் கொள்வார்கள்! காங்கிரஸ் பலப்பட வேண்டியது காலத்தின் கட்டாயம்.

சாவித்திரி கண்ணன்

அறம் இணை இதழ்

Support Aram

நேர்மையான, வெளிப்படையான,

சுதந்திரமான இதழியலுக்கு தோள்

கொடுங்கள்.

UPI QR CODE

Razorpay Payment Gateway

Personal Info

Donation Total: ₹1,000.00 One Time