பீகார் தேர்தல் தரும் அதிர்ச்சிகரமான படிப்பினைகள்!

சாவித்திரி கண்ணன்

பீகார் தேர்தல் பல படிப்பினைகளை தந்துள்ளன! இந்த படிப்பினைகளை தமிழக அரசியலுக்கும் பொருத்தி பார்க்கமுடியும்! ஆர்.ஜே.டியும், காங்கிரஸும் தாங்களே அதிக தொகுதிகளின் நின்றது, சிறிய கட்சிகளை அரவணைக்க தவறியது மட்டுமின்றி அவர்களை எதிர்முகாமுக்கு தள்ளியது, அடையாள அரசியல் குறித்த பாஜக ஏற்படுத்தியுள்ள பிம்பத்திற்கு பயந்தது…ஒவைசியை மதிப்பிடத் தவறியது…இப்படி பலவற்றை அலசலாம்…! அதே சமயம் இடதுசாரிகளின் எழுச்சியானது ஒரு முக்கியமான செய்தியை சொல்கிறது.

அதில் முக்கியமானது கூட்டாளிகளை சரியாக அடையாளம் காணத் தவறுவது!

சென்ற முறை ராஷ்டிரிய ஜனதா தளம் காங்கிரஸ், ஐக்கிய ஜனதா தளம் ஆகியவற்றுடன் கூட்டணி கண்டது! இருவருமே ஆளுக்கு 101 சீட்டுகளை பிரித்துக் கொண்டனர். குறைந்த இடங்களில் நின்ற போதும் ராஷ்டிரிய ஜனதா தளம் 80 இடங்களை அள்ளியது! ஐக்கிய ஜனதா தளமும் 71 இடங்களை வென்றது. இந்த கூட்டணியில் காங்கிரசுக்கு வெறும் 41 இடங்களே தரப்பட்டது! ஆயினும் காங்கிரஸ் 27 இடங்களில் வென்றது.

இந்த முறை ராஷ்டிரிய ஜனதா தளம் தனக்கு 144 இடங்களை எடுத்துக் கொண்டது. காங்கிரசுக்கும் அளவுக்கு மீறி 70 இடங்களை தந்தது! சென்ற தேர்தலைக் காட்டிலும் அதிக இடங்களில் நின்ற போதும் இருவருமே சென்ற தேர்தலைக் காட்டிலும் குறைவான இடங்களைத் தான் பெற முடிந்தது. தங்கள் கூட்டணிக்குள் வர வேண்டும் என்று தவித்த மூன்று கட்சிகளுக்கு அனுசரித்து இடம் பகிர்ந்து கொடுக்காமல், வெளியேற்றியதே மகாபந்தன் கூட்டணியின் தோல்விக்கு காரணமாயிற்று.!

கூட்டணியில் செய்த பிழை

அந்த மூவர் இந்துஸ்தானி அவாமி மோர்சா, விகாஸ்ஷில் இன்ஸன் கட்சி, ஓவைசியின் மஜ்லீஸ் ஆகியவை! இதில் முதல் இரு கட்சிகள் வேறு வழியில்லாமல் தங்கள் அரசியல் எதிர்காலத்திற்காக பாஜக கூட்டணியில் சேர்ந்தன. இதன் மூலம் ஆளுக்கு தலா 4 இடங்களில் வென்றன. மூன்றாவது கட்சியான ஓவைசியின் மஜ்லீஸ் தனித்து களம் கண்டு 5 இடங்களில் வென்றது.

இந்த மூன்று கட்சிகளையும் தங்கள் கூட்டணிக்குள் அரவணைத்துக் கொண்டு தங்களுக்கான இடங்களை சென்ற தேர்தலில் நின்றதைப் போல நிர்ணயித்துக் கொண்டிருந்தால், இன்று மகாபந்தன் கூட்டணி தான் ஆட்சிக்கு வந்திருக்கும்! பாஜக கூட்டணியால் ஆட்சியை நினைத்தே பார்த்திருக்க முடியாது! சிறிய கட்சிகளின் இருப்பையே இல்லாதொழிக்க நினைத்தால்,அதற்கு மிகப் பெரிய விலையை பெரிய கட்சிகள் கொடுக்க நேரிடும் என்பதற்கு பீகார் தேர்தல் முடிவுகளே சாட்சி!

பாஜக கூட்டணி பல இடங்களில் மிகக் குறைந்த வாக்கு வித்தியாசத்தில் தான் வென்றுள்ளது. இந்த மூன்று கட்சிகளும் கூட்டணிக்குள் இருந்திருந்தால், சென்ற தேர்தலைக் காட்டிலும் அதிக இடங்களில் ஆர்.ஜே.டியும்,காங்கிரஸும் வெற்றி பெற்றிருக்கும்!

வாக்குவங்கியை பறி கொடுத்த பாஜக!

உண்மையை சொல்வதென்றால்,சென்ற தேர்தலைக் காட்டிலும் வாக்கு வங்கியை பாஜக கொஞ்சம் இழந்திருக்கிறது! சென்ற தேர்தலில் அதன் வாக்குகள் 24.4% மாக இருந்தது. ஆனால், இந்த தேர்தலில் அதன் வாக்கு வங்கி 19.46% சதவிகிதமாக குறைந்துள்ளது. ஆயினும் அது சென்ற தேர்தலைக் காட்டிலும் 21 இடங்கள் கூடுதலாகப் பெற்று 74 என்ற உயரத்தை தொட்டுவிட்டது. காரணம், கூட்டணியில் சிறிய கட்சிகளை உள்ளுக்கிழுத்து அரவணைத்துக் கொண்டதேயாகும்!

ஆர்.ஜே.டியை பொறுத்த வரை அது வாக்கு வங்கியில் 23.1% பெற்று பீகாரிலேயே முதல் கட்சியாக இருந்தும் முதல்வர் வாய்ப்பை தவறவிட்டுவிட்டது. சென்ற தேர்தலில் இருப்பதிலேயே அதிக இடங்களை பெற்ற (80) கட்சியாக இருந்த போதும் அதற்கு வாய்ப்பு இல்லாமல் போனது! தற்போதும் அதே போல இருப்பதிலேயே அதிக இடங்களை(75) பெற்றும் வாய்ப்பில்லாமல் போய்விட்டது! ஒரே காரணம் சிறிய கட்சிகளை அரவணைக்கத் தவறியது.

சிராஜ் பாஸ்வானின் லோக்ஜன்சக்தி கட்சி 6.8% வாக்கு வங்கியைக் கொண்டிருந்தும் அது ஒரே ஒரு இடத்தில் மட்டுமே வென்றுள்ளது. அது தேசிய ஜனநாயக கூட்டணியில் இடம் பெற்றிருந்தால் 10 இடங்களுக்கு குறையாமல் வந்திருக்கும்! ஆனால், அது தன் வெற்றி மற்றும் எதிர்காலத்தை விடவும் நிதிஸை அழிப்பதிலேயே குறிக்கோளாக இருந்தது!

அடையாள அரசியல் பயம்!

ஒவைசியை கணக்கில் கொண்டால் அது வெற்றி பெற்ற இடங்களை அலசி ஆராய்ந்தால் மாகாபந்தன் கட்சியின் வெற்றி வாய்ப்பை அது அதிகம் பாதிக்கவில்லை என்ற போதிலும் அந்த கட்சி மாபந்தனுக்குள் வந்திருந்தால் மிகக் குறைந்த ஓட்டு வித்தியாசத்தில் வெற்றிவாய்ப்பை சில தொகுதிகளில் பறிகொடுத்த துரதிர்டம் மகாபந்தனுக்கு தவிர்க்கப்பட்டிருக்கும்! ’’பாஜகவிடம் நாங்கள் போகமுடியாது. அதேசமயம் எங்களை காங்கிரசும்,ஆர்.ஜே.டியும் இஸ்லாமிய அடையாளம் கருதி தீண்டத்தகாத கட்சியாக பார்த்தன..’’ என்ற ஒவைசியின் கூற்று கவனிக்கதக்கது. அதாவது ஒரு முஸ்லீம் கட்சியை உள்ளுக்கிழுத்தால் இந்துக்களின் ஓட்டுகள் போய்விடும் என்று மகாபந்தன் கருதியதா என்று தெரியவில்லை! அப்படி நினைத்திருந்தால் தங்களது மதச்சார்பற்ற நிலைபாட்டின் மீதான உறுதிபாட்டில் தங்களுக்கே நம்பிக்கை இல்லாதவர்களாக – அடையாள அரசியல் பயத்தில்-  வெற்றியை கோட்டைவிட்டனர் என்று தான் சொல்ல வேண்டும்!

இதை ஏன் இங்கு எழுதுகிறேன் என்றால், தமிழகத்தில் ஒரளவு வாக்குவங்கியைக் கொண்ட இஸ்லாமிய இயக்கங்களை அடையாள அரசியல் பயத்தில் அரவணைக்கத் தயங்கினால், திமுகவும்,காங்கிரசும் அதற்கான விலையை தரவேண்டியது வரலாம்!

இடதுசாரிகளின் எழுச்சி!

இடதுசாரி கட்சிகள் மகாபந்தன் கூட்டணியில் 29 இடங்களை பெற்று 19 இடங்களை வென்றுள்ளன! சி.பி.ஐ-6, சி.பி.எம்-4, சி.பி.எம்(எம்.எல்)- 12 என்ற எண்ணிக்கையில் வென்றுள்ளனர். மக்கள் மத்தியில் வெள்ளப் பெருக்கின் போதும் ஊரடங்கின் போதும் தேடிச் சென்று வேலை பார்த்தனால் பெற்ற வெற்றி தான் இது! தொண்டர்கள் பலம் இடதுசாரிகளுக்கு மற்றொரு சாதகமான அம்சமாகும்! மோடி எதிர்ப்பு, பாஜகவின் ஆபத்து ஆகியவை குறித்த பிரச்சாரத்தை இடதுசாரிகள் வலுவாகச் செய்தனர்! சி.பி.எம்(எம்.எல்) கட்சியின் தலைவர் தீபகன்கர் பட்டாச்சாரியா அங்கே ஒரு நம்பிக்கை நாயகனாக மக்களிடையே உருவாகி வருகிறார். இத்தனைக்குக்ம் அஸ்ஸாமில் பிறந்து, மேற்கு வங்கத்தில் படித்து வளர்ந்த கம்யூனிஸ்டான தோழர் தீபகன்கர் பீகார் மக்களிடை ஒரு செல்வாக்கு பெற்ற தலைவராக திகழ்வது சாதாரண விஷயமில்லை! எங்கே வலதுசாரிகள் பலம் பெறுகிறார்களோ, அங்கே  இடதுசாரிகளின் தேவையும் தவிர்க்க முடியாததாகி விடுகிறது. நிதீஸ் ஆட்சி மேல்மட்ட, நடுத்தர மக்களை மட்டும் தான் பிரதி நிதித்துவப்படுத்தியது .அடித்தள மக்களிடம் அது காட்டிய அலட்சியமே இடதுசாரிகள் எழுச்சிக்கு முக்கிய காரணமாயிற்று.பீகாரில் கம்யூனிஸ்டுகளுக்கு கிடைத்த ஒரு அங்கீகாரம் மேற்கு வங்கத்தில் அடுத்த தேர்தலில் கணிசமான தாக்கத்தை உருவாக்கும் என்பது நிச்சயம்!

’அறம்’ சாவித்திரி கண்ணன்

பீகார் தேர்தல் – தந்திரத்தால் பெற்ற வெற்றி

Support Aram

நேர்மையான,வெளிப்படையான,சுதந்திரமான இதழியலுக்கு தோள் கொடுங்கள்.

Personal Info

Donation Total: ₹1,000.00 One Time