அதிகாரப் பகிர்வா? அஸ்திரமா? ராஜதந்திர நாயுடு!

- சாவித்திரி கண்ணன்

தெலுங்கு தேசத்திற்கு அதிக எம்.எல்.ஏக்கள் இருந்த போதிலும், கூட்டணிக் கட்சியான பவன் கல்யாணுக்கு துணை முதல்வர் பதவியும், மூன்று அமைச்சர்களும் சந்திரபாபு நாயுடு தந்தது ஏன்? தன் கட்சிக்கும், மகனுக்கும் போட்டியாக பவன் கல்யாண்  வளர வாய்ப்புள்ளதை நாயுடு உணரவில்லையா..? போன்ற கேள்விகளுக்கு விடை தருகிறது இந்த கட்டுரை;

ஆந்திர அரசியலில் மிக மூத்த அரசியல்வாதியும் 50 ஆண்டுகளுக்கு மேற்பட்ட அரசியல் அனுபவமும் கொண்டவர் சந்திரபாபு நாயுடு. காங்கிரஸ் கட்சியில் அரசியல் வாழ்க்கையை தொடங்கியவர். என்.டி.ஆர் முதல்வரான பிறகே தெலுங்கு தேசத்தில் நாயுடு சேர்ந்தார். நாயுடுவின் அரசியல் சாதுரியங்களும், துணிச்சலும் தெலுங்கு தேசத்தின் வளர்ச்சிக்கு பெரிதும் உதவின.

நாயுடுவின் அரை நூற்றாண்டு அரசியல் அனுபவத்தை ஒப்பிடுகையில் பவன் கல்யாண் கட்சியே ஒரு பத்து வயது குழந்தை தான்! தெலுங்கு தேசத்துடன் ஒப்பிடுகையில் மிகச் சிறிய கட்சி தான்! இவரது தயவில்லாமலே நாயுடு சிறப்பாக ஐந்தாண்டு கால ஆட்சியை நடத்த முடியும். அப்படி இருக்கையில் பவன் கல்யாணுக்கு ஆட்சி அதிகாரத்தில் முக்கியத்துவம் கொடுத்தது ஏன் என்ற கேள்வி பலருக்கும் எழுகிறது.

ஆந்திர சட்டசபையில் மொத்தம் 175 இடங்கள்! அதில் சந்திரபாபு நாயுடுவின் தெலுங்கு தேசம் 135 இடங்கள் வென்றுள்ளது. 88 இடங்கள் கிடைத்தாலே அறுதி பெரும்பான்மை தான். இந்த நிலையில் 21 இடங்கள் கொண்ட பவன் கல்யாணின் ஜனசேனா கட்சிக்கு ஆட்சியில் நாயுடு இடம் தந்து அதிகார பகிர்வு கண்டுள்ளார்.

ஆந்திர துணை முதல்வராக ஜன சேனா கட்சித் தலைவரும், நடிகருமான பவண் கல்யாண் நியமிக்கப்பட்டதும், ஜனசேனாவில் மேலும் மூவருக்கு அமைச்சர் பதவிகள் தரப்பட்டுள்ளதும் ஆந்திர மக்களின் புருவங்களை உயர வைத்துள்ளது. பவன் கல்யாணுக்கு  சந்திரபாபு நாயுடு தலைமையிலான அரசில் பஞ்சாயத்து ராஜ் மற்றும் ஊரக வளர்ச்சி, சுற்றுச்சூழல், வனத்துறை, அறிவியல் மற்றும் தொழில் நுட்ப இலாகாக்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. இதே போல பவன் கல்யாணின் சகாக்களுக்கும் நல்ல துறைகள் தரப்பட்டுள்ளன. தெலுங்கு தேசக் கட்சியிலேயே பலர் வாய்ப்புக்காக தவம் கிடக்கும் போது, பவன் கல்யாண் கட்சிக்கு வாய்ப்பு தருவது அவர்களை வளர்த்து விட்டுவிடுமே! நாளை அவர்களின் வளர்ச்சியே தெலுங்கு தேசம் கட்சிக்கு சவாலாக மாறக் கூடுமே. நாயுடுவின் மகனும் கூட அரசியலில் அடி எடுத்து வைத்து, அமைச்சராகி உள்ள நிலையில், பவன் கல்யாணுக்கு பெரு முக்கியத்துவம் தந்து துணை முதல்வர் ஆக்கியுள்ளது ஒரு வகையில் ஆபத்தை விலை கொடுத்து பெறுவதாகாதா? எனச் சிலர் கேட்கிறார்கள்!

இல்லை என்பது தான் நமது பதில்!

2009 ஆம் ஆண்டு ஆந்திர சட்டமன்றத் தேர்தலில் அப்போது புதிய கட்சியை துவக்கி இருந்த ஆந்திர சூப்பர் ஸ்டார் சிரஞ்சீவியின் பிரஜா ராஜ்ஜியம் கட்சியானது 16 சதவிகித வாக்குகளை பெற்று, 18 எம்.எல்.ஏக்களை பெற்றது. மும்முனை போட்டியில் அன்றைய ஆந்திராவின் 294 தொகுதியில் தெலுங்கு தேசம் 28 சதவிகித ஓட்டு வாங்கி, 92 இடங்களை பெற்று ஆட்சி அமைக்கும் வாய்ப்பை இழந்தது. அப்போது, ”சிரஞ்சீவி ஓட்டை பிரித்ததால் தான் தெலுங்கு தேசம் தோற்றது” என்றார் சந்திரபாபு நாயுடு.

அதை மனதில் வைத்தே, ‘ஆட்சிக்கு எதிரான ஓட்டுகள் பிரியக் கூடாது’ என நாயுடு முடிவு செய்தார். சிரஞ்சீவியின் தம்பியான பவன் கல்யாணும் அதே எண்ணத்தை வெளிப்படுத்தினார். இந்த தேர்தலில் பவன் கல்யாணுடன் கூட்டு காணாமல் இருந்திருந்தால், நாயுடுவின் வெற்றி வாய்ப்பு கேள்விக் குறியாகி இருக்கும். காரணம், தெலுங்கு தேசம் பெற்ற வாக்குகள் 45.6 சதவிகிதம்! ஜெகன்மோகன் கட்சி பெற்ற வாக்குகள் 39.4%. இரு கட்சிக்கும் இடையிலான வாக்குகள் வித்தியாசம் வெறும் 6 சதவிகிதம் தான். பவன் கல்யாண் கட்சிக்கு கிடைத்த வாக்குகள் 8.5 சதவிகிதம் தான்! இவர்கள் இருவரும் கை கோர்க்காவிட்டால் ஜெகன் மோகனை வீழ்த்துவது அரிதாகி இருக்கும்.

தற்போது வெறும் 8.5 சதவிகித வாக்குகள் மட்டுமே பெற்ற பவன் கல்யாண் தனித்து நின்று இருந்தால், ஒரு தொகுதியில் கூட வெற்றி பெற்று இருக்க வாய்ப்பில்லை. நாம் தமிழர் கட்சிக்கு தமிழ்நாட்டில் ஏற்பட்ட நிலையைப் போலவே இவரது நிலையும் இருந்திருக்கும். ஆனால், தெலுங்கு தேசத்துடன் சேர்ந்த காரணத்தால் 21 இடங்கள் கிடைத்துள்ளது. ஆனால், 39.3 சதவிகித வாக்குகள் பெற்றும் ஜெகன்மோகன் கட்சிக்கு 11 இடங்களே கிடைத்துள்ளது.

ஆக, சந்திரபாபு நாயுடு, பவன் கல்யாண் ஆகிய இருவருமே ஒன்றுப்பட்டதின் பலனை பெற்று உள்ளனர். கூட்டணியின் பலமே இது தான்! ”தேர்தலுக்கு மட்டுமே கூட்டணி. ஆட்சிக்கு அல்ல” என நாயுடு கூறி இருக்க முடியும். ஏனென்றால், கூட்டணி ஆட்சிக்கு எந்த உத்திரவாதமும் அவர் தரவில்லை. எனினும், அதிகார பகிர்வை தந்துள்ளதன் மூலம் ஒரு பாதுகாப்பை நாயுடு உத்திரவாதப்படுத்திக் கொண்டார். அதிகாரம் என்ற அஸ்த்திரத்தால் பவன் கல்யாணின் போராட்ட குணத்தை மட்டுப்படுத்தி, கூடவே வைத்துக் கொண்டார்!

மக்கள் பிரச்சினைகளுக்காக போராட்டக் களம் காண்பவர் பவன் கல்யாண்!

பவன் கல்யாணை தற்போது எதிர்கட்சித் தலைவராக அனுமதித்தால், இயல்பிலேயே போராடும் குணமுள்ள பவன் கல்யாண், முதலமைச்சர் நாயுடுவுக்கு தலைவலியாக மாறி இருப்பார்! ஏனெனில், முந்தைய ஆட்சியில் ஜெகன் மோகனை நிம்மதி இழக்க வைக்கும் அளவுக்கு மக்கள் பிரச்சினைகளுக்கு களம் கண்டவர் தான் பவன் கல்யாண். அதே போல தற்போதும் தொடர்ந்தால் பவன் கல்யாணுக்கு மக்கள் செல்வாக்கு கூடி இருக்கும்.

ஆனால், தற்போது அவரால் அப்படி எதுவும் குற்றம் சொல்லவோ, போராடவோ முடியாது. ஏனெனில், அவரும் ஆட்சியில் ஒர் அங்கம். ஜெகன்மோகன் தான் வலுவான எதிர்கட்சித் தலைவராக இருப்பார். ‘ஒரு எதிரியை சமாளித்து விடலாம். இன்னொரு எதிரி உருவாகாமல் கூடவே வைத்து அமைதியாக்கி விடலாம்’ என்பதே நாயுடுவின் திட்டமாகும்.

எதிரியை அரவணைத்து அடக்கமாக வைத்துக் கொள்ளும் நாயுடு!

பவன் கல்யாணை ஒரு புயல் போன்றவர் என மோடியே பாராட்டி உள்ளார். நாயுடுவின் ராஜ தந்திரத்தை மீறி, பவன் கல்யாண் ‘பவர்புல்’ தலைவராக வளர்வாரா? அல்லது அடைந்த வெற்றியே போதும் என அதிகாரத்தை சுவைத்து அமைதி அடைவாரா? என்பது போகப் போகத் தான் தெரியும்.

இதே போலத் தான் வெறும் எட்டே தொகுதிகள் வென்றுள்ள பாஜகவிற்கு ஒரு அமைச்சர் பதவி தந்துள்ளது என்பது அவர்களின் வாயை அடக்கத் தான். இல்லையெனில், இதோ இங்கு பார்க்கிறோமே அண்ணாமலை.. இது போல ஏச்சும்,பேச்சுமாக பாஜகவை பேசவிடாமல் தடுப்பதற்கான சிறிய ரொட்டித் துண்டு தான் ஒரு அமைச்சர் பதவி.

ஆனால், எப்படிப் பார்த்தாலும் சந்திரபாபு நாயுடுவின் அதிகார பகிர்வு அணுகுமுறை ஜனநாயகத்திற்கு வலு சேர்க்க கூடியதே! தமிழகத்தில் 2006 ல் மைனாரிட்டி அரசாக இருந்த திமுகவுக்கு தமிழக காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் வெளியில் இருந்து ஆதரித்து ஆட்சி நடத்த உதவினர். அதிகார பகிர்வுக்கு கருணாநிதி உடன்படவில்லை. அதே போல 2011 தேர்தலில் தமிழகத்தில் விஜயகாந்தின் தேமுதிக  கூட்டணி மூலம் வெற்றி பெற்ற ஜெயலலிதா தேமுதிகவிற்கு அதிகார பகிர்வைத் தரவில்லை. மாறாக, தேமுதிகவில் இருந்து எம்.எல்.ஏக்களை தூக்கினார். இவை, எல்லாம் அதிகார வெறி அரசியலுக்கு எடுத்துக்காட்டாகும்.

இனி தமிழகத்திலுமே கூட, கூட்டணி ஆட்சி அமைவது, தனி ஒரு கட்சி ஆட்சியின் ஏதேச்சதிகார செயல்பாட்டிற்கு முற்று புள்ளி வைப்பதாக அமையும்.

பில்கேட்ஸை ஆந்திராவுக்கு அழைத்து வந்த சந்திரபாபு நாயுடு.

தற்போது சந்திரபாபு நாயுடுவுடன் சேர்த்து பதவியேற்ற 24 அமைச்சர்களில் 17 பேர் முதல் முறை அமைச்சர்களாகி உள்ளனர். 3  பெண்களும், 8  பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்தவர்களும், ஒரு முஸ்லிமும், 2  தாழ்த்தப்பட்டோரும், ஒரு பழங்குடியினரும் அமைச்சராக்கப்பட்டுள்ளனர் என்பதும் கவனிக்கதக்கது. இதன் மூலம், புதிய தலைமுறையினருக்கு வாய்ப்பு, பழைய பெருந் தலைகளுக்கு ஓய்வு, சமூக நீதி அடிப்படையில் அதிகார பகிர்வு ஆகியவற்றை நாயுடு சாத்தியப்படுத்தி உள்ளார்.

நாயுடு ஆரம்பம் முதலே வலதுசாரி பொருளாதார தத்துவத்தில் தீவிர ஆர்வம் உள்ளவர். ராஜாஜியின் சுதந்திரா கட்சித் தலைவர்களில் ஒருவரான என்.ஜி.ரங்காவை தனது அரசியல் குருவாகக் கொண்டவர். அந்த வகையில் தாரளமயம், உலகமயம், கார்ப்பரேட்களுக்கு ஆதரவு.. ஆகியவற்றில் ஆர்வம் உள்ளவர். பில்கேட்சை சந்தித்து அவரது மைக்ரோ சாப்ட் நிறுவனம் ஹைதராபாத்தில் கிளை துவங்க காரணமானவர். ஹைதராபாத்தை சர்வதேச தரத்திற்கு வளர்த்தவர் ஆகிய பெருமைகள் அவருக்கு உண்டு. அதே சமயம் விவசாயம், சிறு தொழில்கள் ஆகியவற்றில் அக்கறை இல்லாதவர் ஹைடெக் அரசியல்வாதி என்ற கெட்ட பெயரும் உள்ளது. கூட்டணி ஆட்சி இதை சமப்படுத்த உதவலாம். பவன் கல்யாண் அடித்தள மக்கள் மீது சற்று அக்கறை உள்ளவர் என்பது நாயுடுவின் ‘ஹைடெக்’ அரசியலுக்கு சிறு கடிவாளமாகட்டுமே!

சாவித்திரி கண்ணன்

அறம் இணைய இதழ்

Support Aram

நேர்மையான, வெளிப்படையான,

சுதந்திரமான இதழியலுக்கு தோள்

கொடுங்கள்.

UPI QR CODE

Razorpay Payment Gateway

Personal Info

Donation Total: ₹1,000.00 One Time