பறிக்கப்படும் வாழ்விடம்! வெளியேறும் விவசாயிகள்!

நிலத்தை பறித்து, நிர்கதியாக்கி சொந்த மண்ணின் மக்களை அகதிகளாக்கவா நமக்கு சுதந்திரம் கிடைத்தது?  அதானிக்காக 5,746 ஏக்கர் நிலங்களை அபகரிப்பதா? 700 நாட்களாக  எளிய மக்கள் நடத்திய அகிம்சை போராட்டத்தை யாரும் பொருட்படுத்தவில்லையே..?  மனிதாபிமானம் தொலைத்தோமோ..? என்ன தான் தீர்வு..?

தமிழக மண்ணில் வாழும் மனசாட்சியுள்ள ஒவ்வொருவர் மனதையும் பதைபதைக்க வைக்கிறது இந்த அறிவிப்பு!

பரந்தூர் புதிய விமான நிலைய திட்டத்தை எதிர்த்து 700 நாட்களாக தொடர்ந்து  போராடி வருகின்றோம். விவசாயத்தையும், நீர்நிலைகளையும்  காக்க  போராடி வரும் விவசாய மக்களின் உணர்வுகளை மதிக்காமல்  நில அபகரிப்பான  அறிவிப்புக்களை வெளியிட்டு வரும் தமிழ்நாடு அரசை கண்டித்து, விவசாயிகள் வாழ தகுதி இல்லாத தமிழ் நாட்டை விட்டு வெளியேறுதை பெருமையாக  கருதுகிறோம்.

எனவே, சொந்த மண்ணில், மானம் இழந்து அகதியாக வாழ்வதை  விட, மொழி தெரியாத அன்னிய ஆந்திர மாநிலத்தில் அடிமையாக வாழ்வது என்று  ஒட்டு மொத்த பொது மக்களும் முடிவு செய்து உள்ளோம். எனவே, வாழ்விடம் கேட்டு  ஆந்திர மாநிலத்திடம் தஞ்சம் அடைய  எங்களுடைய போராட்ட குழுவினர் மரியாதைக்குரிய சித்தூர் மாவட்ட ஆட்சியர்  தலைவர் அவர்களை சந்திக்க செல்கின்றனர்.

ஆந்திர மாநிலத்தை நோக்கி  கண்ணீர் பயணம் மேற் கொள்ளும்  எங்களுடைய போராட்ட குழுவினரை வழி அனுப்ப ஏகனாபுரம் உள்ளிட்ட 13 கிராம பொதுமக்கள் அனைவரும் வருகின்ற திங்கட்கிழமை 24.06.24 அன்று காலை 9.30 மணியளவில்  ஏகனாபுரம்   டாக்டர் அம்பேத்கர் சிலை அருகே திரளாக கலந்து கொள்ள வேண்டுமென அன்புடன் கேட்டுக் கொள்கிறோம். என்பதாக பரந்தூர் விமான நிலைய எதிர்ப்பு கூட்டு இயக்கம் மற்றும் ஏகனாபுரம் கிராம குடியிருப்போர் விவசாய நல கூட்டமைப்பின் தலைவர் ரவிச்சந்திரன், செயலாளர் ஜி.சுப்பிரமணியன் ஆகியோர் அறிக்கை நெஞ்சை உலுக்கிறது.

இந்த அறிப்பு வெளியாகி இரண்டு நாட்கள் ஆகியும் முதலமைச்சர் தரப்பில் எந்த மூச்சுப் பேச்சும் இல்லை. எதிர்கட்சி தலைவர்கள், ஆளும் கூட்டணிக் கட்சித் தலைவர்கள் யாரும் இதை பொருட்படுத்தியதாகத் தெரியவில்லை. இந்த அறிக்கை வெளியாகி தமிழக மக்கள் உறிந்து பொன நேரத்தில் கோவையில் கோலாகலமாக பிரம்மாண்ட வெற்றி திருவிழா அரங்கேறியதில் கூட்டணிக் கட்சித் தலைவர்கள் முதலமைச்சர் ஸ்டாலினை புகழ்ந்த வண்ணம் இருந்தனர்.

தமிழக அரசியல் இவ்வளவுக்கு மனிதாபிமானமற்றுப் போய்விட்டதா? அடித்தள மக்கள் வாழ்வுக்காக குரல் கொடுக்கும் இடதுசாரி கட்சிகள் கூட இதயமற்றுப் போய்விட்டனரா? பரந்தூர் பசுமை விமான நிலைய திட்டத்தை எதிர்த்து ஏகனாபுரம் மற்றும் சுற்று வட்டார மக்கள் தொடர்ச்சியாக போராடி வருகின்றனர்.

700 நாட்களாக இந்த எளிய மக்கள் தங்கள் பாரம்பரிய இருப்பிரங்களை, நிலபுலன்களை காப்பாற்றுவதற்கு ஆர்ப்பாட்டம், சாலை மறியல், கருப்பு கொடி ஏற்றம், பட்டினி போராட்டம், மாணவர்கள் பள்ளி புறக்கணிப்பு, கோட்டை நோக்கி நடைப்பயணம், வயலில் இறங்கி தர்ணா, தேர்தல் புறக்கணிப்பு..என ஒன்றெடுத்து ஒன்றென பல சாத்வீக போராட்டங்களை நடத்தியுள்ளனர். எதற்குமே பயனில்லையா?

என்ன நடக்கிறது தமிழ் நாட்டில்?

சென்னைக்கு மேலும் ஒரு விமான நிலையம் அவசியம் தான் என்றால், அதை தேர்வு செய்ய வேண்டியது மாநில அரசா? அல்லது அதானியா?

பரந்தூர் புதிய விமான நிலைய திட்டத்திற்கு முதலில் 12  கிராமங்களை உள்ளடக்கிய  சுமார் 4 650 ஏக்கர் நிலம் கையகப்படுத்தப்படுவதாக தான் அறிவித்தார்கள்! திட்ட மதிப்பீடு சுமார் இருபதாயிரம் கோடி என்றும் கூறப்பட்டது .

பின்னர்- இத்  திட்டத்திற்கு இன்னும் கூடுதலாக 8 கிராமங்கள் தேவைப்படுவதாகவும், மொத்தம் 5,750 ஏக்கர் நிலம் கையகப்படுத்தப்பட இருப்பதாகவும் தமிழக அரசு அறிவித்தது.

இத்திட்டத்திற்காக மேலும் ஏன் எட்டு கிராமங்கள் சேர்க்கப்பட்டன? கூடுதலாக  1,250 ஏக்கர் கையகபடுத்தப்படுவதன் அவசியம் என்ன என்பதற்கு வெளிப்படையான தகவல் எதுவும் தெரிவிக்கவில்லை.

இதற்காக திட்ட மதிப்பீட்டை  30,000 கோடிகளுக்கு உயர்த்தியது தொடர்பாக தமிழக அரசு எந்த விளக்கமும் அளிக்கவில்லை. இது ஏதோ மன்னராட்சி காலத்தில் வாழும் உணர்வைத் தான் தருகிறது.

ஒரு விமான நிலையத்தை கட்டமைக்க நியாயமாக 1,000 போதுமானது. மிக அதிகபட்சம் என்றாலுமே 1,500 ஏக்கர் தாரளமாகும்.

சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்தை விரிவுபடுத்த திட்டம் தீட்டிய போது கையகப்படுத்தப் போவதாக அறிவிக்கப்பட்டது 852 ஏக்கர் தான் என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.

தெருவெங்கும் நெல் உலர்த்தி விவசாய பெருங்குடிகள் வாழும் ஒரு தெரு!

தற்போது 5,750 ஏக்கர் நிலத்தை எளிய விவசாய மக்களிடம் இருந்து அடித்துப் பறிப்பது விமான நிலையத்திற்கு மட்டுமல்ல, அதை சுற்றிலும் ஆடம்பர ஸ்டார் ஹோட்டல்கள், ரிசார்டுகள், கேளிக்கை விடுதிகள்..ஆகியவற்றை நிர்மாணித்து கோடீஸ்வர முதலாளிகளை கொழுக்க வைப்பதே! இதில் ஆளும் கட்சியின் முக்கியஸ்தர்கள் மட்டுமின்றி அனைத்து கட்சி முக்கியஸ்தர்கள் பலரும் ஆதாயம் அடையக் காத்திருக்கிறார்கள் என்பது தான் அதிர்ச்சியான உண்மை!

வயிற்றுக்கு சோறிடும் விவசாயப் பெருங்குடிகள் காலங்காலமாக வாழும் இடத்தில் இருந்து வேரோடு பிடுங்கி எடுத்து அப்புறப்படுத்தப்படுவார்களாம்! அந்த இடத்தில் வட மாநில வந்தேறிகள் ஆக்கிரமித்து சொகுசு வாழ்க்கை வாழ்வார்களாம் என்றால், பாலஸ்தீனத்தை யூதர்கள் ஆக்கிரமித்தது தான் நம் நினைவுக்கு வருகிறது. இதில் மிகப் பெரிய வித்தியாசம் அதை அங்குள்ள அரசு எதிர்த்தது. ஆனால், இங்குள்ள மாநில அரசோ மக்களிடம் பிடுங்கி கார்ப்பரேட்களிடம் மண்டியிட்டு நிலத்தை தாரை வார்க்கிறது..!

தன் பொறுப்பில் இருந்த விமான நிலையங்களை எல்லாம் தனியாரான அதானிக்கு தாரை வார்த்த இந்திய அரசு பரந்தூரில் மட்டும் விமான நிலையத்தை நிர்மானிப்பது ஏன்..? ஏனென்றால், அதானி என்ற தனிமனிதரால் நேரடியாக மக்களை அப்புறப்படுத்தி நிலத்தை அபகரிக்க முடியாது. அரசாங்கமே விமான நிலையத்தை அமைக்க உள்ளது என்றால் தானே மக்களிடம் அதிகாரத்தை பிரயோகித்து ஆட்சியர், துணை ஆட்சியர், தாசில்தார், காவல்துறை அதிகாரிகள் என படை சூழ பவர் காட்ட முடியும்.

இந்தியாவின் மும்பை, டெல்லி, லக்னோ, அகமதாபாத், மங்களூரு, ஜெய்ப்பூர், குவாஹாத்தி, திருவனந்தபுரம் ஆகிய ஏழு நகரங்களில் உள்ள விமான நிலையங்களை அரசிடம் இருந்து கைமாற்றி தன் வசம் வைத்துள்ள அதானி குழுமத்திற்கு மேலும் ஒன்றை தாரை வார்த்து தங்கள் எஜமான விசுவாசத்தைக் காட்டவே மத்திய மா நில அரசுகள் மக்களை விரட்டி அடித்து நிலைத்தை பறிக்கின்றன.

ஒரு ஜனநாயக நாட்டில் என்ன நடந்திருக்க வேண்டும்? திட்டத்தால் பாதிப்புக்குள்ளாகும் மக்களை கலந்து ஆலோசித்து, அவர்கள் எதிர்க்கும் பட்சத்தில் திட்டத்தைக் கைவிட்டு மக்களை பாதிக்காத வேறொர்  இடத்தை தேர்வு செய்திருக்கலாம். இதற்கான மாற்றுத் திட்டத்தையும் சமூக ஆர்வலர்கள் அரசுக்கு அளித்துள்ளனர்.

ஏறத்தாழ இரண்டு வருட மக்கள் போராட்டம் ஆட்சியாளர்கள் உள்ளத்தை அசைக்கவில்லை. ஏனெனில், ஏற்கனவே அங்கே அதானி சிம்மாசனம் போட்டு உட்கார்ந்திருக்கிறார்! மக்களை பிரதிநிதித்துவப் படுத்த வேண்டிய எதிர்கட்சிகளின் தலைவர்களும் கூட, இங்கே எட்டிப் பார்க்கத் துணியவில்லை. அந்த அளவுக்கு பாஜகவின் அழுத்தம் அதிமுகவை கட்டிப் போட்டு வைத்துள்ளது. திமுக ஆட்சியாளர்களோ மோடி கட்டளையை தாரக மந்திரமாக கொண்டு செயல்பட்டவாறே பாஜவை எதிர்ப்பது போல பாசாங்கு காட்டி இது போன்ற மக்கள் விரோத திட்டங்களை அரங்கேற்றி வருகின்றனர். பாஜக எதிர்ப்பு பேச்சுகளின் அரசியல் ஆதாயத்தில் நாற்பது நாடாளுமன்றத் தொகுதிகளையும் வென்றெடுத்துள்ளனர். பாஜக விசுவாசம் என்பது அமலாக்கத் துறை, வருமானவரி ரெய்டுகள்,கைதுகளை தவிர்ப்பதற்குமாகும்!

இந்த போராட்டங்கள், எதிர்ப்புகள் அதிமுக ஆட்சியிலேயே இருந்தது. திமுக ஆட்சி அமைந்த பிறகு 2022 அக்டோபர் -2  காந்தி பிறந்த நாளன்று  புதிய விமான நிலைய திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து  ஏகனாபுரம் மக்கள் கிராம சபைக் கூட்டத்தில் ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றினர். அதிகாரிகள் தடுத்துப் பார்த்தனர், மிரட்டிப் பார்த்தனர்.மக்கள் உறுதி குலையவில்லை. அரசியல் சாசன சிற்பி அம்பேத்கர் சிலையிடம் கோரிக்கை மனு அளிப்பதாக அறிவித்து ஒரு நூதன போராட்டம் செய்ததை அகிலமே கண்டது.

அன்று தொடங்கி நாளும், பொழுதும் நடத்திய போராட்டம் 600 வது நாளை நெருங்குகையில் மக்கள் அனைவரும் வயலில் இறங்கி பறிபோகவுள்ள நிலத்தில் புரண்டு கதறி அழுததும், உருண்டதும், புரண்டதும் காண்போர் நெஞ்சை கலங்கடித்தது.

சுமார் 3000 பேர் வசிக்கின்றனர். இதில் பெரும்பாலோர் வாக்காளர் அட்டை வைத்துள்ளார்கள். ஏகனாபுரத்தின் வீடுகள்  பசுமையான -நன்செய்- புன்செய் நிலங்கள் மற்றும் தண்ணீர் தளும்பும் நீர்நிலைகளையும் சேர்த்து ஊரின் மொத்த பரப்பளவு   910 ஏக்கராகும்.

இந்த பரந்தூர் விமான நிலையத்திற்கான நிலப்பரப்பை  ஒரு அரசு கையகப்படுத்துவதற்கு மாநில சட்டமன்றத்தில் ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டதா? இல்லையே!

இந்தத் திட்டத்தினால் ஏற்படும், சமூக தாக்க மதிப்பீடு (Social Impact Assessment) மற்றும் சுற்றுச் சூழல் தாக்க மதிப்பீடு  (Environment Impact Assessment) ஆகிய ஆய்வுகள் செய்யப்பட்டனவா? அதன் உண்மைத் தன்மை என்ன?

சாவித்திரி கண்ணன்

அறம் இணைய இதழ்

 

 

Support Aram

நேர்மையான, வெளிப்படையான,

சுதந்திரமான இதழியலுக்கு தோள்

கொடுங்கள்.

UPI QR CODE

Razorpay Payment Gateway

Personal Info

Donation Total: ₹1,000.00 One Time