ஆயிரம் பலன்கள் தரும் அத்திப் பழம்!

- அண்ணாமலை சுகுமாரன்

அத்தி மரம் ஆன்மீகச் சிறப்பு பெற்றது. அத்தி மரத்தின் காய்,பழம், பட்டை போன்ற அனைத்தும் அற்புத மருத்துவ குணங்கள் நிறைந்தவை. அத்தி மரத்தின் பெருமைகளை பறவைகள் கூட நன்கு அறிந்திருக்கின்றன. ஆரோக்கிய வாழ்க்கைக்கு ஆர்வமுள்ளவர்கள் தவிர்க்க இயலாத ஒன்று அத்திப் பழமாகும்!

நான் சிறுவனாக இருந்த போது  எனக்கு பிடித்த  கதைப் புத்தகங்களில் அரபு கதைகள் எனப்படும் ‘1001 இரவுகள்’ என்னும் கதைகள் ஹாதிம் தாய் முதலியவன முக்கியமானதாகும். அவற்றில் வரும் கதை மாந்தர்கள் அத்திப் பழத்தை மிகவும் ருசித்து  சாப்பிடுவதாக  கதைகளில் வரும். அத்தி பழம் ஒன்றே  மிகச் சுவையுடையது போல் அதில் பேசப்படும்.

அப்போதெல்லாம், ( 1960 ) ‘நம் நாட்டில் இப்படி யாரும் சாப்பிடுவதில்லையே..’ என நினைப்பேன். ஆனால், இப்போது கொஞ்சம் பேருக்கு அதன் அருமை புரிகிறது .

அத்திப் பழத்தைச் சாறு பிழிந்து அதனுடன் தேன் கலந்து பருகினால் மலச் சிக்கல், மூலநோய் குணமாகும். உடல் சூட்டைக் குறைப்பதால் மல வாயிலின் இருக்கம் குறைந்து நெகிழ்வு தன்மை ஏற்பட்டு மலம் வெளியேறும். மேலும், அத்திப் பழங்கள் கல்லீரல் – மண்ணீரல் அடைப்புகள், வீக்கங்களை குணப்படுத்தவும் பயன்படுகிறது.

கண்களின் பார்வையைக் கூட்டும் வைட்டமின் ஏ, நிக்கோடினிக் அமிலம், அஸ்கார்பிக் அமிலம் போன்றவை அத்திப் பழத்தில் பெருமளவில் அடங்கியிருக்கின்றன.

அத்திப் பழத்தை தினமும் 5 முதல் 10 வரை காலை, மாலை என இரு வேளை சாப்பிட்டு,  அத்துடன் பால் சாபிட்டால்  தாது விருத்தியாகும். ஆண் மலடு நீங்கும். உலர்ந்த அத்திப் பழங்களை தேனில் ஊற வைத்து சாப்பிட்டால், அளவற்ற போஷாக்கை பெறலாம். உலர்த்திப் பொடி செய்து ஒரு ஸ்பூன் வீதம் பாலில் போட்டும்  சாப்பிடலாம்.

 

அத்தியானது அராபிய, ஐரோப்பிய பகுதிகளில் பண்டைய காலத்தில் இருந்தே ஒரு விரும்பப்பட்ட கனியாக  இருந்து வந்திருக்கிறது. அத்தியைப் பற்றி பைபிளில்,  குரானில், நமது தமிழ் இலக்கியங்களில், புராணங்களில் எல்லாம் குறிப்புகள் இருக்கின்றன. அத்தி மரம் அனைத்து மதத்தினருக்கும் தெய்வீக மரமாக உள்ளது!

திருக்குரானில் அல்லா அத்தி மரத்தின் மீது சத்தியம் செய்து சொல்வதாக அன்பர்களிடம் உரையாடுகிறார். நமது மெய்யியல்  வரலாற்றில் அத்தி கலந்துள்ளது. அத்தி மரத்தை தல விருட்சமாகக் கொண்ட திருக் கோவில்கள் உண்டு. திருவொற்றியூர், திருக்கானாட்டு முள்ளூர் ஆகிய திருக்கோயில்களில் 2வது தலவிருட்சமாக அத்திமரம் வணங்கப்படுகிறது.

அத்தி, நவக்கிரகங்களில் வெள்ளிக் கிரகத்திற்காக வணங்கப்படும் மரமாகும். அத்தியைப் பற்றி சில சொலவடையும் உண்டு. ‘அத்தி பூத்தாற் போல’, ‘அத்தி பழத்தை பிட்டுப் பார்த்த்தார் போல’ முதலியவை வழக்கில் இருக்கிறது.  ‘’அத்திப் பழ கன்னத்திலே முத்தம் தரவா…?’’ என காதலியிடம் காதலன் கேட்பதாக கவிஞர் கண்ணதாசன் ஒரு திரைப்பாடலில் எழுதியிருப்பார்! மற்ற எல்லா மரங்களை விடவும் பறவைகளை ஈர்க்கும் சக்தி அத்தி மரத்திற்கு உள்ளது.

நல்ல மணத்துடன் இருந்தாலும், பழத்தை அறுத்தால் அதற்குள் மெல்லிய பூச்சிகள், புழுக்கள் போல் சில  இருக்கும். பொதுவாக பதப்படுத்தாமல் உண்ண முடியாது.

அத்தி மரம் பல வகைப் பட்டது.. நாட்டு அத்தி, வெள்ளை அத்தி, நல்ல அத்தி வகைகளும், ஆங்கிலத்தில் (GULAR FIG. COUNTRY FIG. FICUS GLOMERATA, CLUSTER FIG) ஆகிய வகைகளும் இருக்கிறது.

அத்தி நடுத்தர மரமாகும். இது சுமார் 10 மீட்டர் வரை உயரமாக வளரும். மரப்பட்டை சாம்பல் மற்றும் சிவப்பு நிறத்தில் இருக்கும். இலைகளில் மூன்று நரம்புகள் இருக்கும். முட்டை வடிவில் சற்று நீளமாக இருக்கும். காய்கள் தண்டிலும், கிளைகளிலும். அடிமரத்திலும் கொத்துக் கொத்தாகத் தோன்றும்.

குளோப் ஜாமூன் அளவில் உருண்டையாக லேசான பச்சை நிறம் கொண்டதாக இருக்கும். காய் பழுத்த பின் சிறிய கொய்யாப் பழம் போல் லேசான மஞ்சள்.சிவப்பு நிறத்தில் மாறிவிடும். பழுத்ததும் கீழே உதிர்ந்து விழுந்து விடும்.

இச்சிறுமரம், பூத்துக் காய்க்குமாயினும் மலர்கள் வெளிப்படையாகத் தெரியாது. ‘அத்தி பூத்தாற்போல’ என்னும் பழமொழியினாலேயே அத்தி பூக்கும் என்பதாயிற்று.

இருப்பினும், பிற்கால இலக்கியங்கள் கூறும் “பூவாதே காய்க்கும் மரங்களும் உளவே’ என்பதற்கு எடுத்துக்காட்டு “அத்தி, ஆல்” முதலிய மரங்கள் ஆகும் என்பர்.

உணவாகக் கொள்ளப்படும் அத்திக்காயின் பிஞ்சு, முட்டை வடிவானது. இதற்குள்ளே அத்திப்பூக்கள் நிறைந்திருக்கும். இப் பூக்களைத் தன்னகத்தே கொண்டிருந்தலின் அத்திப் பிஞ்சு – கோளி எனப்படும்.

அத்திக்காயில் 4 வகையான பூக்கள் உள்ளன. ஆண் பூ, பெண் பூ, மலட்டுப் பூ என்பன. மலட்டுப் பூக்களில் ஆண் மலட்டுப் பூவும், பெண் மலட்டுப் பூவும் ‘ஃபைகஸ் காரிக்கா’ எனும் சிற்றினத்தில் காணப்படுகிறது.

அத்தி மரம் FICUS CARCA, FIG TREE, SEEMAI ATHI, ANJEER என்று அழைக்கப்படுகிறது. அத்தி மரத்தின் இலை, பால், பழம், அனைத்தும் மருந்தாகப் பயனளிக்கின்றன.

இலைகளை உலர வைத்து பவுடராக்கிக் கொண்டு . இதனைத் தேனில் கலந்து சாப்பிட்டால், பித்தம், பித்தத்தால் வரும் நோய்கள் குணம் பெறுகின்றன.

உடலின் எந்தத் துவாரத்தில் இருந்தும் இரத்தம் வெளியேறினால் இது கட்டுப்படுத்தும். வாய்ப்புண், ஈறுகள், சீழ்பிடித்தல் போன்ற நோய்களைக் குணமாக்க இலைகளைத் தண்ணீரில் கொதிக்க வைத்து வாய் கொப்பளிக்கலாம்.

மரத்தின் பட்டையை இரவில் உலர வைத்து, காலையில் குடிநீராகக் குடித்தால் வாத நோய், மூட்டு வலிகள் குணப்படும். அழுகிய புண்களைக் கழுவ வெளி மருந்தாக  பயன்படுத்தலாம்.
மரப்பட்டையை இடித்து, பசுவின் மோரில் உலர வைத்து, அதைக் குடித்தால், பெண்களுக்கு அடிக்கடி உண்டாகும் பெரும்பாடு, மாத விலக்கு கட்டுப்படும்.

அத்திப்பழம், அத்திப் பிஞ்சு, அத்திக்காய் மூன்றையும் சமைத்துச் சாப்பிடலாம். இது மூலம், இரத்த மூலம், வயிற்றுக் கடுப்பு, சீதபேதி, வெள்ளைப் பாடு, வாத நோய்கள், மூட்டு வலி, சர்க்கரை நோய் தொண்டைப் புண், வாய்ப் புண்ணுக்கு நல்ல மருந்தாகும்.

இது தசைகளை இறுக்கும் குணம் படைத்தவை. பழங்களை இடித்து, அதன் சாற்றைச் சாப்பிடுவதால் சிறுநீரக நோய்களைக் குணப்படுத்த உதவுகின்றன.

அத்திக்கள் அத்திமர வேரில் இருந்து எடுக்கப்படுகிறது. இது சர்க்கரை நோய், மூலநோயைக் குணப்படுத்தும் என்று கூறப்படுகின்றது.

கிருத்திகை நட்சத்திரத்தின் கெட்ட கதிர்வீச்சுகள் மனித உடலில் படும்போது பலவகையான உடல் மாற்றம், மன மாற்றம், நோய்கள் உண்டாகின்றன. இதற்கு கிருத்திகை நட்சத்திர தோஷம் என்பார்கள். இந்த தோஷத்தையும், நோய்களையும் நீக்க இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் அத்தி மரத்தை 30 நிமிடம் கட்டிப் பிடிக்கலாம். அல்லது அதன் நிழலில் உட்காரலாம். இவ்வாறு மூலிகை வைத்தியர் அப்துல் கௌஸர் கூறுகிறார்.

தினசரி 2 பழங்களைச் சாப்பிட்டால் உடலில் இரத்த உற்பத்தி அதிகரிக்கும். உடலும் வளர்ச்சி அடைந்து பருமனடையும்.  நாள் பட்ட மலச்சிக்கலைக் குணமாக்க 5 பழங்களை இரவில் சாப்பிட வேண்டும்.  கல்லீரல் வீக்கத்தைக் குணமாக்க அத்திப் பழங்களைக் காடியில் (வினிகர்) ஒருவாரம் வரை ஊற வைத்து அதனைத் தினமும் இரண்டு பழங்கள் வீதம் ஒரு வேளை சாப்பிடலாம்.

அத்தி மரத்தை கட்டிப் பிடித்து ஆரோக்கியம் சேர்க்கும் இளைஞர்கள்!

இலைகளை உலர வைத்துப் பவுடராக்கிக் கொள்ளுங்கள். இதைத் தேனில் கலந்து சாப்பிட்டால், பித்தம், பித்தத்தால் வரும் நோய்கள் குணம் பெறுகின்றன.

சிறுநீர்ப்பைப் புண், சிறுநீர்ப் பையில் கல் தோன்றுதல், ஆஸ்துமா, வலிப்பு நோய், உடல் உளைச்சல், சோர்வு, அசதி, இளைப்பு போன்றவற்றை நீக்கவும் அத்திப் பழம் மிகச் சிறந்த பலன் தருகிறது.

மற்ற பழங்ளைக் காட்டிலும் அத்திப் பழத்தில் 2 முதல் 4 மடங்கு அதிகமாக தாது உப்புகளும், சத்துப் பொருட்களும் அடங்கியிருக்கின்றன. இரும்புச் சத்து அத்திப் பழத்தில் அதிகமாக இருப்பதால், இதைத் தொடர்ந்து சாப்பிட்டு வருபவர்களுக்கு இரத்தச் சோகை நோய் வராது.
இரத்த உற்பத்தி அதிகரித்து, நோய் எதிர்ப்பாற்றலும் உடலில் அதிகரிக்கும்.

விலை சற்று கூடுதலாக இருந்தாலும் பதப்படுத்தப்பட்ட  உலர் அத்திப்பழங்கள்  பல்வேறு நன்மைகளைத் தருகிறது. நாள் கணக்கில் கெடாமல் இருக்கும் இவைகள்  நாட்டு மருந்துக் கடைகளிலும் தற்போது டிபார்ட்மெண்ட் ஸ்டோர்களிலும்  இப்போது கிடைக்கிறது. முன்பு போல மரத்தைத் தேடி  அலையவேண்டாம்.

ஹீமோகுளோபின் குறைபாடு உள்ளவர்கள் தினமும் 3  வேளையும் வேளைக்கு ஒன்றாக உலர் அத்திப் பழம் ஒன்றைச் சாப்பிட்டு வந்தால், இரும்புச்சத்து  நிறைந்த அத்திப்பழத்தால்  ஒரே மாதத்தில் ஹீமோகுளோபின் அளவு 1 கிராம் வரை உயரும் என்று கூறபடுகிறது

சீமை அத்திப்பழம் வெண் குஷ்டத்தை குணமாக்குகிறது. அரை கிராம் காட்டு அத்திப் பழத்தை தினசரி ஒரு வேளை சாப்பிட்டு வந்தால் வெண்புள்ளிகள், வெண் குஷ்டம், தோலின் நிறமாற்றம் ஆகியவை குணமாகும்.

இந்து மதத்தில் கடவுளர் ரூபங்கள் செய்து வழிபட அத்தி மரம் பெரிதும் பயன்படுகிறது. உடுப்பியில் கூட கிருஷ்ணன் சிலை அத்தி மரத்தில் செய்யப்பட்டதாக கூறப்படுகிறது.

புதுவைக்கு அடுத்த  வீராம் பட்டினம் என்ற ஊரில் மீனவ  கிராமத்தில் கடலில் மிதந்து வந்த அத்தி மரம் செங்கேணி அம்மன் சிலையாக செய்யப்பட்டு வழிபடப் படுகிறது. இதன் வருடாந்திர திருவிழா பெரும் கூட்டத்தை ஈர்ப்பவை.

கோவில் நகரமான காஞ்சியின் வரதராஜப் பெருமாள் கோவிலில் உள்ள தீர்த்தத்தில் முழ்கி இருக்கும் அத்தி மரத்தாலான வரதாராஜப் பெருமாளை அத்தி வரதர் என்றே வழங்குவர்.

அத்தி பூத்தாற் போல் அவரும் 48 வருஷங்களுக்கு ஒரு முறை 48 நாள்கள் மட்டும் குளத்தில் இருந்து வெளியே வந்து பக்தர்களுக்கு சேவை சாதிக்கிறார். அப்போது காஞ்சியே மக்கள் வெள்ளத்தில் எம்பெருமானைக் காணத் திமிலோகப்படும்.

அத்திப் பழத்திற்கு ரத்த அழுத்தத்தை கட்டுப் படுத்தும் சக்தி உண்டு. நன்கு பதப்படுத்தப் பட்ட அத்திப்பழம், வெளி நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது.

உணவை விரைவில் ஜீரணிக்கச் செய்து, சுறுசுறுப்பைத் தந்து, கரும் பித்தத்தை வியர்வை மூலம் வெளியாக்கி, ஈரல், நுரை யீரலிலுள்ள தடுப்புகளையும் அத்திப்பழம் நீக்குகிறது.

அத்திப் பழத்தைத் தின்பதால் வெட்டையின் ஆணிவேர் அற்றுப் போகிறது. கால் விரல்களில் உண்டாகும் ஒருவித நோயையும் வராமல் தடுக்கிறது. அத்திப்பழம் தின்பதால் வாய் நாற்றம் நீங்குவதுடன் தலைமுடியும் நீளமாக வளர்கிறது.

அத்தியில் ஆக்ஸலேட் உப்பு உள்ளதால் சிறு நீரக கல் உள்ளவர்கள் அத்தி பழத்தை தவிர்த்தல் நலம். அத்தி பழம் ஒரு டானிக் மாதிரி ,உடல்  தேற, இரத்தம் ஊற  உடனடி சக்திகள் அதில் ஏராளம் ! ஆனால், அத்தி பூத்தமாதிரி  எப்போதாவது சாபிடாமல் எப்போதும் சாப்பிடுங்க !

கட்டுரையாளர்; அண்ணாமலை சுகுமாரன்

‘நம்ம ஊரு மூலிகைகள்’ உள்ளிட்ட நூல்களின் ஆசிரியர்

 

Support Aram

நேர்மையான, வெளிப்படையான,

சுதந்திரமான இதழியலுக்கு தோள்

கொடுங்கள்.

UPI QR CODE

Razorpay Payment Gateway

Personal Info

Donation Total: ₹1,000.00 One Time