மோடிக்கு ஆர்.எஸ்.எஸ் வைத்துள்ள ‘செக்’

-ச.அருணாசலம்

ஆர்.எஸ்.எஸுக்கும், மோடிக்கும் இடையே என்ன பிரச்சினை? ஆர்.எஸ்.எஸ் தலைவர்கள் மோடி அன் கோவின் மீது தங்கள் அதிருப்திகளை அடுத்தடுத்து வெளிப்படுத்தும் பின்னணி என்ன? ஆர்.எஸ்.எஸ் vs மோடி விவகாரத்தில் நாம் தெரிந்து கொள்ள வேண்டிய அத்தியாவசிய செய்தி என்ன..?

பாஜக வின் ஆதார சுருதியான  ஆர்எஸ்எஸ்ஸின் தலைவர் மோகன் பகவத் ‘ஆட்சியாளர்களின் அகங்காரம் பற்றியும், அவர்களுக்கு இருக்க வேண்டிய கண்ணியம், கட்டுப்பாடு பற்றியும் பேசியுள்ளது இப்பொழுது நாடெங்கும் பேசு பொருளாக மாறியுள்ளது.

ஆர்.எஸ்.எஸுக்கும் மோடிக்கும் இடையே நடக்கும் பனிப்போர் மோடியை உள்ளூர அச்சப்படுத்தி உள்ளது. ஆனால், அதை வெளிக் காட்டாமல் அதிரடி அரசியல் செய்கிறார்.

ஒருவரை பிரதமராக தேர்ந்தெடுக்க முதலில் அவரது சொந்தக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் கூட்டத்தை கூட்டி அதன் தலைவராக தன்னை உறுதிபடுத்திக் கொள்ள வேண்டும். அதன் பிறகே தேசீய ஜனநாயக கூட்டணிக் கட்சிகளின் ஆதரவை கேட்டு இருக்க வேண்டும். ஆனால், மோடியோ முதலில் வெளி சக்திகளின் ஆதரவை பெற்றுக் கொண்டு, அதையே ஒரு பலமாக வைத்துக் கொண்டு, ”பார்த்தீர்களா? எனக்கு மற்ற கட்சிகள் ஆதரவு தந்துவிட்டன. ஆகவே நீங்களும் ஆதரிப்பதைத் தவிர வேறு வழியில்லை” என தன் சொந்த கட்சி எம்.பிக்களிடம் வந்து நின்றார். இப்படியாக கட்சிக்குள் தன் மீது ஏற்பட்டுள்ள அதிருப்திகள் வெளிப்பட்டு விடாமலும், தன்னைத் தவிர வேறெவரும் பிரதமர் பதவிக்கு முன் நிறுத்தப்படுவதை தவிர்ப்பதற்கும் தந்திரமாக செயல்பட வேண்டியவரானார் மோடி!

ஒன்றுமே நடக்காதது போல் – கீழே விழுந்தாலும் மீசையில் மண் ஒட்டவில்லை என்ற பாணியில் – மோடி தேசீய ஜனநாயக கூட்டணி அரசின் தலைவராக பதவியேற்றுக் கொண்டார்!

மோகன் பாகவத் ஏதோ ஒரு காந்தியவாதியைப் போல திருவாய் மலர்ந்துள்ளார்;

சாதனைகளை சுய தம்பட்டம் அடித்துக் கொள்வது அகங்காரமாகுமாம்! அகங்காரம் சிறிதுமின்றி, சேவை செயபவரே உண்மையான மக்கள் சேவகராம்!

ஆர்.எஸ்.எஸ் எதிர்கட்சிகளை விரோதியாகக் கருதவில்லையாம்! மாறாக எதிராளியாகவே  கருதுகிறதாம்!

ஆனால், பாஜக வின் தேர்தல் பரப்புரைகள் கண்ணியமற்று இருந்ததாம்! மணிப்பூர் கலவரத்தைமுடிவுக்கு கொண்டு வராதது மோடி அரசின் தோல்வியாம்!

இஸ்லாமியர்களும் இந்தியர்கள் தானாம்!  இந்தியாவின் வளரச்சி என்றால் அது இஸ்லாமியர்களின் வளரச்சியையும் உள்ளடக்கியது தானாம்! ( ஆர்.எஸ்.எஸ் தோன்றி நூற்றாண்டுகள் ஆன நிலையில் பெற்ற ஞானோதயமோ)

இத்தகைய பேச்சுக்கள் “காலங்கடந்து” வந்தாலும் இவை யாவும் மோடியின் மீதான, மோடி பாணியின் மீதான தாக்குதலே என்பதை அனைவரும் அறிவர்.

இதனைத் தொடர்ந்து ஆர்.எஸ்.எஸ்.ஸின் மற்றொரு செயலர் இந்திரேஷ் குமார் , ராம பக்தர்கள் என கூறிக் கொண்டு மண்டைக்கனம் பிடித்து அலைந்தவர்களுக்கு பெரும்பான்மை கிடைக்காதபடி கடவுள் ராமர் செய்து விட்டார் , தக்க பாடம் புகட்டிவிட்டார் என்று கூறியுள்ளார்.

மற்றொரு தலைவரான ரத்தன் ஷர்தா, தேர்தல் முடிவுகள் பாஜ கவினருக்கு உண்மை கள நிலவரத்தை உணர்த்தியுள்ளது. சுயம் சேவக்கின் துணை வேண்டாம் என்றவர்களுக்கு, சுயம் சேவக் அமைப்பை கலந்து கொள்ளாமல் தேர்தலை சந்தித்தவர்களுக்கு இந்த தேர்தல் முடிவுகள் ஆர். எஸ். எஸ் என்பது பா ஜ கவின் கைப்பாவை அல்ல என்று உணர்த்தியுள்ளது என “ ஆர்கனைசர்” என்ற ஆர்.எஸ்.எஸின் அதிகாரபூர்வ இதழில் எழுதியுள்ளார்.

பா ஜ கவின் முன்னாள் செயலரும் ஓரங்கட்டப்பட்ட ஆர். எஸ். எஸ் பிரமுகருமான ராம் மாதவ் , தேர்தல் முடிவுகள் மீண்டும் கூட்டணி அரசியலில் இந்தியாவை தள்ளி உள்ளது , இதை சமாளிக்க அடக்கமுள்ள , நிதானமான , பண்பான அரசியல் தலைமை தேவை எனக் கூறியுள்ளார்.

முன்னாள் துணை குடியரசு தலைவரும், பாஜகட்சியின் முன்னாள் தலைவருமான வெங்கையா நாயுடுவும் பாஜக வின் தோல்விக்கு காரணம் ‘ பணத்தால் எதையும் சாதிக்க முடியும்’ என்று கட்சித் தலைமை செயல்பட்டது தான் எனச் சாடியுள்ளார்.

இவர்கள் அனைவரும்நேற்று வரை மோடியின் அராஜக , மதவெறி அரசியலுக்கு துணை போனவர்களே!

சங்கப் பரிவாரங்களின் கைங்கரியத்தால் மணிப்பூர் கடந்த ஒரு வருடத்திற்கும் மேலாக பற்றி எரியும் பொழுது, வாய்மூடி வேடிக்கை பார்த்தவர்கள்…!

பற்றி எரிந்த மணிப்பூர் மாநிலம்!

பசு பாதுகாப்பு என்ற போர்வையிலும், லவ் ஜிகாத் என்ற மட்டமான பொய்யுரைகள் மூலமாகவும், மத மாற்ற தடை சட்டங்கள் மூலமாகவும் இஸ்லாமிய மக்களை நாடு முழுவதும் – குறிப்பாக டபுள் என்ஜின் என கூறிக் கொள்ளும் பாஜக ஆளும் மாநிலங்கள் அனைத்திலும்- சிறு பான்மையினரை இரண்டாந்தர குடிமக்களாக்கி, அமைதியை குலைத்த கொடுமையை ரசித்து வேடிக்கை பார்த்தவர்கள்..!

கட்டி முடிக்கப்படாத ராமர் கோவிலை மோடி புகழ் பாடும் அரசியல் லாபத்திற்காக திறந்து வைத்ததை அனுமதித்தவர்கள்…! அன்றைய தினம் மோடியை தபஸ்வி என்றார், மோகன் பாகவத்!

புதிய பாராளுமன்ற கட்டிடத்தில் ‘செங்கோலை’ ஏந்தியபடி தன்னை இந்தியாவின் முடி சூடா மன்னனாக பாவித்த மோடியின் அபத்த செயலை எதிர்க்காதவர்கள்…!

தேர்தல் நன்கொடை பத்திர ஊழல், ரஃபேல் பேர ஊழல், பி.எம்.கேர் மோசடி போன்றவற்றால் மோடி கும்பல் கொள்ளையடித்து உலகிலேயே மிகப்பெரிய ‘ஊழல் கட்சி’ யாக மாறிய பொழுது அதனால், பயனும், சுகமும் அடைந்தவர்கள்..!

இன்று மோடி கும்பலை தள்ளி வைக்க முனைவது போல பாசாங்கு செய்கிறார்கள்!

இந்திய மக்களும், ஜனநாயக ஆர்வலர்களும் மோடியை எதிர்க்கிறார்கள் என்றால், மோடி என்ற தனி மனிதனை அல்ல. அவரது இந்துத்துவ வெறி சித்தாந்தத்தையே! மோடியைச் சுற்றி ஒரு பிம்பத்தை, மாயையை உருவாக்கி, தனி நபர் வழிபாட்டை (personality cult) முன்னிறுத்தியதே ஆர்.எஸ்.எஸ் தானே! மோடி இன்று முள் மரமாய் வளர்ந்து, வளர்த்தவர்களையே பதம் பார்க்கிறார் என்றால், இதை வேடிக்கை பார்ப்பதன்றி வேறொன்றுமில்லை நமக்கு!

இந்தியச் சமூகத்தில் இன்றுள்ள ஏற்றத் தாழ்வுகளுக்கும் அடக்குமுறைகளுக்கும், ஆதிக்கச் சுரண்டலுக்கும் அடிப்படைக் காரணம் அதிகாரமும், வளங்களும், செல்வங்களும் ஒரு சிலரின் கைகளில் குவிந்திருப்பதே ஆகும் .

இத்தகைய அதிகார மற்றும் செல்வக் குவியலை போற்றி பாதுகாக்கவே இந்துத்துவா சித்தாந்தம் முனைகிறது.

இதை எதிர்த்து எல்லோரும் ஓர் நிறை எல்லோரும் ஓர் விலை எல்லோரும் இந்நாட்டு மன்னர் என்ற நிலையை ஏற்படுத்த , புதிய இந்தியாவை படைக்க இந்திய அரசமைப்பு சட்டம் இயற்றப்பட்டது.

இந்துத்துவா வழியில் இந்து ராஷ்டிரத்தை நிறுவவே ஆர் எஸ் எஸ் என்ற அமைப்பு கடந்த நூறு ஆண்டுகளாக உழைத்து வருகிறது. அத்தகைய அமைப்பின் அரசியல் முகமே பாரதீய ஜனதா கட்சியாகும் . இதற்கு கலாச்சார முகங்களாக ,கலவர முகங்களாக , மாணவராதிக்க முகங்களாக விஸ்வ இந்து பரிஷத், பஜ்ரங் தள், அகில இந்திய வித்யார்த்தி பரிஷத் (ABVP, VHP, BAJRANG DHAL etc) வனவாசி கல்யாண் போன்ற பல்வேறு அமைப்புகள் உள்ளன.

பழம் பெருமை பேசி, மேல்சாதி ஆதிக்கத்தையும், சமூக ஏற்றத் தாழ்வுகளை பிறப்பால் வந்தவை என நியாயப்படுத்துவதுமே இந்துத்துவா மற்றும் கலாச்சார தேசியத்தின் கொள்கையாகும் . இந்த நாட்டில் இந்துக்களின் ஆதிக்கத்தை நிலைநாட்டுவதே இவர்களின் கோஷங்களாகும் . இவர்களுக்கென்று தனித்த பொருளாதாரக் கொள்கை ஏதும் இல்லாததால் தமக்கு தலையாட்டும் அதானி, அம்பானி போன்ற ஏகபோக முதலாளிகளுக்கு சலுகைகள் கொடுத்து தங்களை வளர்த்துக் கொள்கின்றனர்.

இன்று மோடியை குறை கூறுபவர்கள் தான் 2002 குஜராத் கலவர நாயகனான மோடியை 2013ல் பிரதமர் வேட்பாளராக முன்னிறுத்தியவர்கள்!

மோடி இஸ்லாமியர்கள் மீது தாக்குதல் தொடுத்ததையும், அரசியல் பிரிவு 370 ஐ ரத்து செய்து, காஷ்மீரை உடைத்து, கபளீகரம் செய்ததையும் கைதட்டி வரவேற்றவர்கள்! மோடியின் ஆட்சியில் உச்சபட்ச பாதுகாப்போடு வளம் வந்தவர்கள்!

 

இஸ்லாமியருக்கு எதிரான குடியுரிமை திருத்த சட்டம் , முத்தலாக் ஒழிப்பு சட்டத்தை நிறைவேற்றி இஸ்லாமியரை கருவறுத்த மோடியை மகிழ்வுடன் வரவேற்றவர்கள்!

இந்த நாட்டின் பல்கலைக்கழகங்களிலும், சுயாதீன அமைப்புகளிலும் கவர்னர் பொறுப்புகளிலும், காவலர் அமைப்புகளிலும் காவிச் சட்டைகளை மோடி இட்டு நிரப்பியதை வரவேற்றவர்கள்

இந்திய ஜனநாயகத்தையும், அதன் அங்கங்களான நாடாளுமன்ற மேலாண்மை, நீதிமன்ற நடுநிலை, ஊடகச் சுதந்திரம் ஆகியவற்றை மோடி பந்தாடியதை எதிர்க்காதவர்கள்,

இந்திய நாட்டின் சொத்துக்களை, வளங்களை அதானி, அம்பானிகளுக்கு மோடி அரசு தாரை வார்த்ததை எதிர்க்காதவர்கள்,

இந்திய வேளாண் சட்டங்களை மோடி கொண்டுவந்ததை எதிர்க்காதவர்கள்! விவசாயிகளை ராணுவத்தைக் கொண்டு மோடி மிரட்டிய போது பதறாதவர்கள்!

போராடும் விவசாயிகள் மீது ராணுவத்தை ஏவிய மோடி!

இத்தனை நாளாக இப்படியாக இருந்தவர்கள் எதன் பொருட்டு இன்று தங்களை ‘ உத்தமர்களாக’ புனிதர்களாக பாவித்து , மோடியை இடித்துரைக்கின்றனர்?

மோடியின் காட்டாட்சியை இந்திய மக்களும், இந்திய கூட்டணி கட்சிகளும் எதிர்ப்பதும் ஆர் எஸ் எஸ் ஸின் எதிர்ப்பும் ஒன்றாகி விடுமா?

தங்களது தீய திட்டங்கள் ( பாபர் மசூதியை இடித்து ராமர் கோவில் கட்டுதல், இஸ்லாமியர் பெரும்பான்மையாக உள்ள காஷ்மீருக்கு தனி அந்தஸதை ரத்து செய்தல், யூசிசி யை அமல் செய்தல்) மோடி அரசால் நடைமுறைக்கு வந்ததை விரும்பியவர்கள், அதனால் அங்கீகாரமும், ஆதாயமும் அடைந்த ஆர்எஸ் எஸ் இயக்கம் இன்று மோடியை விலக்கி வைக்க எத்தனிப்பது மோடியுடன் சேர்ந்து நாமும் மண்ணைக் கவ்வக் கூடாது என்ற நப்பாசையால் தான்!

ஆம், ‘தலைவனை பலி கொடுத்தேனும், தத்துவத்தை காப்பாற்றி முன்னேறிச் செல்வோம்’ என்பதே ஆர்.எஸ்.எஸுன் ராஜ தந்திரமாகும். உத்தர பிரதேசத்திலும் பிற இந்தி மாநிலங்களான இராஜஸ்தான், ஹரியானா, ஜார்க்கண்ட் மாநிலங்களிலும், ஆர்எஸ்எஸ்ஸின் பிறப்பிடமான மராட்டியத்திலும் விழுந்த உண்மையான அடிகளே இன்று சங்கப் பரிவாரத்தை கதி கலங்கச் செய்திருக்கிறது.

உ. பி. யில் மோடி – ஆதித்யநாத் ஆளுகையில் இந்துத்துவ கொள்கைக்கு குறிப்பாக அயோத்தியிலும் , வாரணாசியிலும் கிடைத்த அடி இவர்களது கணக்குகளை புரட்டி போட்டுள்ளது. தேர்தல் முடிவுகளுக்கு அப்பாலும் இவர்களின் வெறுப்பு அரசியலுக்கெதிரான மக்களின் கோபத்தை உணர்ந்ததால் ஆர் எஸ் எஸ் சும், மோகன் பகவத்தும் இப்படி மோடியை தனிமைப்படுத்தி தங்களை (இந்துத்துவ கொள்கைகளை) காப்பாற்ற முயலுகின்றனர்.

தனிமனித வழிபாட்டு வக்கிரங்களே மோடியின் தோல்விக்கு காரணம் என்று நினைக்கும் ஆர் எஸ் எஸ் கும்பல் , 2004 ல் அடைந்த தோல்விக்கு வாஜ்பாயை குறை கூறியது. இந்துத்துவ கொள்கைகளை சரியாக முன்னெடுக்கவில்லை என்று அவரை கைவிட்டது. சிறிது காலம் அத்வானியை தூக்கிப் பிடித்த ஆர் எஸ் எஸ், அவரையும் கைகழுவி மோடியை 2013 ல் முன்னிறுத்தியது.

மோடி இந்துத்துவாவை முன்னெடுக்காமல் ஊழல் ஒழிப்பு, வளர்ச்சி அனைவருக்கும் நல்ல காலம் என்ற கோஷங்களை வைத்து ஆட்சியலமர்ந்தார் .

ஆர் எஸ் எஸ் சித்தாந்த நடைமுறையில் ஊறித் தன்னையும் வளர்த்துக் கொண்ட மோடி, தான் என்ற அகந்தையை என்றைக்குமே யாரிடமும் மறைத்தது கிடையாது. தனது கடாட்சத்தில் தன்னை சார்ந்தவர்களுக்கு சகல வளங்களையும் வாரி வழங்கியும் உள்ளார் , மமதை தலைக்கேறிய நிலையில் நிதானம் இழந்து தன்னை பரமாத்மாவின் வடிவமாக எண்ணத் துணிந்தவர் இன்று சரிவை சந்தித்த வேளையில், தனது அதிகாரத்தை காப்பாற்றிக் கொள்ள – தனக்கு கைவிலங்கு போடுவதை தவிர்க்க- மற்ற கட்சிகளுடன் சமரசம் செய்து கொண்டு ஆட்சியில் தொடருகிறார் .

சரிவை நோக்கி பயணிக்கும் மோடியை கழற்றி விட்டு இந்துத்துவ ஆதிக்கத்தை தக்க வைத்துக் கொள்ள ஆர் எஸ் எஸ் துடிக்கிறது.

இந்திய மக்களாகிய நமக்கு விடுதலை என்பது சம நீதி, சமூக நீதி மற்றும் சமத்துவம் நோக்கி பயணிப்பது தான்! அதற்கு ஆதார ஆயுதமான இந்திய அரசமைப்பு சட்டமும், அது வழங்கும் உரிமைகளும் காப்பாற்றப்பட வேண்டும் .

இந்திய அரசியல் சட்டத்தை ஏற்காதவர்கள், இந்திய கூட்டாட்சியை மதியாதவர்கள் ஒற்றைக் கலாச்சாரத்தையும் ஒற்றை இன ஆதிக்கத்தையும் நிலை நாட்டவிரும்புபவர்களான ஆர்எஸ் எஸ் கும்பலை, மோடியுடன் சேர்த்து வேரோடும் வேரடி மண்ணோடும் வீழ்த்துவதன் மூலமே அது சாத்தியப்படும் என்ற தெளிவு நமக்கு வேண்டும் .

வரவிருக்கும் மராட்டிய மற்றும் ஹரியானா மாநிலத் தேர்தல்களில் இந்துத்துவ சக்திகளை முறியடிப்பதன் மூலமே மோடியையும், இந்துத்துவ சித்தாந்த ஆதிக்கத்தையும் வீழ்த்த முடியும்.

இந்தியா கூட்டணியும் இந்த எண்ணத்திலேயே பயணிக்க வேண்டும்!

கட்டுரையாளர்; ச.அருணாசலம்

 

Support Aram

நேர்மையான, வெளிப்படையான,

சுதந்திரமான இதழியலுக்கு தோள்

கொடுங்கள்.

UPI QR CODE

Razorpay Payment Gateway

Personal Info

Donation Total: ₹1,000.00 One Time