நல வாரியங்களா? நழுவும் வாரியங்களா..?

-பீட்டர் துரைராஜ்

உழைப்பையே மூலதனமாக்கி வாழ்நாளெல்லாம் உழைத்த  உதிரித் தொழிலாளர்களின் வயதான வாழ்க்கைக்கு ஆதாரமாகத் திகழ்வது தான் நலவாரியங்கள்! இதில் சேர்வதே கஷ்டமா?, அரசின் நலத் திட்டங்களை பெறுவதற்கான தரவுகள் அழிந்து விட்டனவாம்! திகைத்து நிற்கும் தொழிலாளர்களை அலைக் கழிப்பது முறையா?

மூட்டை தூக்குவோர், கட்டட வேலை செய்வோர், தையல்காரர், ஆட்டோ ஓட்டுநர், வீட்டு வேலை செய்வோர், மண் பாண்டத் தொழிலாளர், செருப்பு தைப்போர், முடி திருத்துவோர், மீனவர், பனையேறுவோர், விவசாயக் கூலிகள், ஓவியர்கள், நெசவாளர்கள்.. என பல்வேறு முறைசாரா தொழில்களில் ஈடுபட்டிருப்பவர்களுக்கு என தனித்தனி தொழிலாளர் நல வாரியங்கள் உள்ளன.

இவர்களின் டேட்டாக்களை பராமரிக்கும் பொறுப்பை ஒரு தனியார் நிறுவனத்திடம் அரசு தந்திருந்தது. சமீபத்தில்  இணையதளத்தில் ஏற்பட்ட தொழில் நுட்ப கோளாறு காரணமாக அனைத்து தரவுகளும் அழிந்து விட்டதாக அந்த நிறுவனம் கை விரித்துவிட்டது. இதனால், ஓய்வூதியம், இயற்கை மரண நிதி, திருமண நிதி, கல்வி நிதி போன்றவை கிடைப்பதில் தொழிலாளர்களுக்கு தடங்கல் ஏற்பட்டுள்ளது. என்ன நடந்தது  ?

கட்டட வாரியம், ஆட்டோ வாரியம், தையல் வாரியம் என 28 நல வாரியங்கள் தமிழ்நாட்டில் செயல்பட்டு வருகின்றன. எம்.ஜி.ஆர் அரசு 1982 ஆம் ஆண்டு கொண்டு வந்த ‘தமிழ்நாடு உடலுழைப்பு தொழிலாளர்கள் (வேலை மற்றும் பணி நிலமைகள்) சட்டத்தின்’  கீழ் இந்த வாரியங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த வாரியங்களில் தொழிலாளர்கள் பதிவு செய்யும் போது தங்களுடைய ரேஷன் அட்டை, ஆதார் அட்டை, போட்டோ, வங்கிப் புத்தகம் போன்றவைகளை பதிவேற்றம் செய்ய வேண்டும். பதிவு செய்த தொழிலாளர்களுக்கு பண உதவி அவர்களின் வங்கிக் கணக்கிற்கு சென்று விடும். இதனால் இடைத்தரகர்களின் தலையீடு இருக்காது. மற்ற மாநிலங்களை விட, தமிழக அரசு இத்தகைய பணிகளை சிறப்பாகச் செய்து வந்த நிலையில் தான் நலவாரியங்கள் தொடர்பான டேட்டாக்களை நிர்வகிக்கும் தனியார் நிறுவனம் அனைத்து தரவுகளும் அழிந்துவிட்டன..என கைவிரித்து ஒதுங்கிக் கொண்டது.

இதனைத் தொடர்ந்து மீண்டும் தங்கள் தரவுகளை பதிவேற்றம் செய்து புதுபிக்க வேண்டிய சுமை இந்த எளிய தொழிலார்களுக்கு ஏற்பட்டுள்ளது. படிப்பறிவில்லா தொழிலாளர்களுக்கு இது எளிதான காரியம் இல்லை. இதனால் ஏராளமான தொழிலாளர்கள் தங்களுக்கான உதவித் தொகைகளை பெற முடியாத நிலை ஏற்பட்டு உள்ளது.

‘ஆன்லைன் மூலம் பதிவு செய்யப்படட 74 லட்சம் தொழிலாளர்களின் தரவுகள் அழிந்துள்ளதால் நலவாரிய பயன்களை பெற முடியாமல் அவதிப்படும் தொழிலாளர்களின் பிரச்சனைகளுக்கு தீர்வு காண வலியுறுத்தி’ மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயலாளர் கே. பாலகிருஷ்ணன் சென்ற ஆண்டே (மே-5,2023 )  முதலமைச்சருக்கு கடிதம் எழுதியும் இன்னும் தீர்வு கிடைக்கவில்லை.

“2021 மற்றும் 2022 ஆண்டுகளில் நல்ல முறையில் செயல்பட்ட சர்வர், 2023 ஆம் ஆண்டு 40 நாட்கள் முடக்கப்பட்டதுடன் அவ்வப்போது நின்று போய் விடுகிறது. ஏற்கனவே, பதிவு செய்திருந்த ஏராளமான தரவுகள் சர்வரில் அழிந்து போனது என்று வாரியமே அறிவித்தது. அழிந்து போன தரவுகள் மீட்கப்பட்டு விட்டதா?,  சம்பந்தப்பட்ட தொழிலாளர்களுக்கு தங்கள் தரவுகள் அழிந்து போனது தெரியுமா? என்பது கூட தெரியாமல் வாரியம் செயலற்று இருப்பது என்பது சரியல்ல”  என்று நலவாரிய உறுப்பினரும், ஏஐடியூசி தொழிற்சங்கத்தைச் சார்ந்தவருமான கே. இரவி, கட்டுமான தொழிலாளர் நல வாரியத்திற்கு கடிதம் எழுதியுள்ளார்.

இணைய தள தரவுகள் இல்லாமல் போனது குறித்து சமீபத்தில் அமைச்சர் கூட்டிய கூட்டம்!

இந்த நிலையில் தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை அமைச்சர் சிவெ.கணேசன் அமைப்பு சாரா தொழிலாளர்கள் நல வாரிய இணையதள செயல்பாடுகள் குறித்த ஆய்வுக் கூட்டத்தை ஜுந்7, 2024 அன்று நடத்தியுள்ளார். அதில், தொழிற்சங்கங்க பிரதிநிதிகளும் கலந்து கொண்டனர். அதனைத் தொடர்ந்து ‘இணையதள மென்பொருள் செயல்பாட்டிற்காக, ஐந்து சர்வர்கள் தமிழ்நாடு மின்னாளுமை முகமை (TNeGA) வாயிலாக பெறப்பட்டு, பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. கடந்த டிசம்பர் மாதம் வாரிய இணையதள சர்வர் தொழில் நுட்ப காரணத்தினால் இயங்காமல் இருந்து, பின்னர் பழுது சரிபார்க்கப்பட்ட டிசம்பர் 26, 2023 முதல் இயங்கி வருகிறது.

சர்வர் பழுதின் காரணமாக இழப்பு ஏற்பட்ட ஆவணங்களை மறுபதிவேற்றம் செய்து பதிவு, புதுப்பித்தல் மற்றும் கேட்பு மனுக்களின் மீது ஒப்பளிப்பு செய்தல் போன்ற முறையான பணிகள் தொய்வின்றி நடைபெறும். இ- சேவை மையங்களிலும் கட்டணமின்றி தொழிலாளர்களின் ஆவணங்களை வாரிய இணையதளத்தில் பதிவேற்றம் செய்யலாம். 15 நாட்களுக்குள் நிலுவையிலுள்ள  நலத்திட்ட  உதவித் தொகை பயனாளிகளுக்கு வழங்கப்படும்’ என்று தமிழக அரசு அறிக்கை வெளியிட்டுள்ளது.

கட்டடத் தொழிலாளர்களை 27 ஆண்டுகளாக அணி திரட்டி வரும் சேலத்தைச் சார்ந்த எம். முனுசாமி பேசும்போது “தமிழக அரசு சட்டம் வந்து 14 ஆண்டுகளுக்குப் பிறகு தான், இதே போல 1996ல் ஒன்றிய அரசு கட்டட தொழிலாளர்களுக்கு சட்டம் கொண்டு வந்தது. மாதம் ரூ.6,000 ஓய்வூதியம் தர வேண்டும் என நாங்கள் கோரி வருகிறோம். தில்லியில் ஆம் ஆத்மியின் கேஜ்ரிவால் அரசு மாதம் ரூ.3,000 ஓய்வூதியம் தருகிறது. ஆனால், தமிழ்நாட்டில் இப்போது ரூ.1,200 தான் ஓய்வூதியம் கிடைக்கிறது.  இதனை ரூ.2,000 ஆக உயர்த்த வேண்டும் என வாரியம் முடிவு செய்தது. ஆனாலும், இதற்கு அனுமதி தர தமிழக அரசு மறுக்கிறது. கட்டட வாரியத்தில் போதுமான நிதி உள்ளது.  இதனால், அரசுக்கு இழப்பு இல்லை.  60 வது வயதில் தான் ஒருவருக்கு ஓய்வூதியம் கிடைக்கிறது. சட்டம் வந்து 42 ஆண்டுகள் ஆனாலும், அமைப்புச்சாரா தொழிலாளர்களுக்கு இன்னமும் வருங்கால வைப்பு நிதி, இஎஸ்ஐ கிடைக்கவில்லை.

கட்டிட தொழிலாளர் சங்கத்தின் எம்.முனுசாமி

1982 ஆம் சட்டத்தைப் பார்த்து தான் மற்ற மாநிலங்கள் சட்டம் கொண்டு வந்தன. இப்போது ஒன்றிய அரசு கொண்டு வந்துள்ள புதிய சட்டம் அமலானால், தமிழக வாரியங்களில் சேர்ந்துள்ள நிதி ஒன்றிய அரசின் வசம் போய் விடும். இதனால் தமிழ்நாட்டு தொழிலாளர்கள் பெற்று வருகிற நிதிப் பலன்கள் குறையும். ஜிஎஸ்டி வரியை ஒன்றிய அரசு எடுத்துக் கொண்டு, தமிழகத்தை வஞ்சிப்பது போல நிலைமை மாறிவிடும்” என்றார்.

சிஐடியுவைச் சார்ந்த எஸ்.கண்ணன் அமைப்புச் சாரா தொழிலாளர்கள் இந்த நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு (ஜிடிபி) முக்கியப் பங்காற்றுகிறார்கள். பல்லாண்டு கால உழைப்பிற்கு பிறகு கிடைப்பது தான் ஓய்வூதியம். அதனையும் முதியோர் ஓய்வூதியம் கிடைக்கிறது, மகளிர் உரிமைத் தொகை கிடைக்கிறது என்று கூறி மறுக்கிறார்கள். ஒரு சிலருக்கு எட்டு மாதம், பத்து மாதத்தோடு ஓய்வூதியம் நின்று விடுகிறது. சம்மந்தப்பட்டவர்கள் மீண்டும் முறையிட்டால் தான் கிடைக்கிறது. இத்தகைய குளறுபடிகளை தவிர்க்க வேண்டும்” என்றார்.

எஸ்.கண்ணன் – சி.ஐ.டி.யூ

“வாரியங்களில் 44,09,439 பேர் பதிவு செய்துள்ளதாக தமிழக அரசின் அறிக்கை கூறுகிறது. இந்த எண்ணிக்கை மிகவும் குறைவு. எனவே, வாரியங்களில் தொழிலாளர்களை அதிக அளவில் பதிவு செய்ய அரசு முயற்சி செய்ய வேண்டும். இந்த வாரியங்களுக்கான நிதி ஆதாரம் தொழிலாளி,அரசு, வேலை அளிப்பவர் என மூன்று தரப்பும் தர வேண்டும். தொழிலாளர் பங்களிப்பு தொகை செலுத்த வேண்டாம் என்று அரசு கூறிவிட்டது. ஆட்டோ வாங்கும் போது நலநிதி அரசு வசூலிக்கிறது. கட்டடம் கட்டும் போது அரசு நலநிதி வசூலிக்கிறது. எனவே, இந்த வாரியங்களின் நிதி ஆதாரம் நன்கு உள்ளது.

ம.இராதாகிருஷ்ணன் – ஏ.ஐ.டி.யூ.சி

ஆனால், மற்ற வாரியங்களில் போதுமான நிதி இல்லை. எனவே, நிதி ஆதாரத்தை உயர்த்த அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.  மற்ற தொழில்களில் ஈடுபட்டுள்ளோரிடமிருந்து நலநிதியை வசூலிக்க அரசு திட்டமிட வேண்டும். நமது நாட்டில் அறுதிப் பெரும்பான்மையானவர்கள் அமைப்பு சாரா தொழிலாளர்கள் தான். அரைக் கல்வி பெற்றவர்கள்; வறிய நிலையில் உள்ளவர்கள். அவர்களின் சங்கங்களும் பலவீனமானவை. எனவே, கூடுதல் கவனம் செலுத்த வேண்டிய பொறுப்பு அரசுக்கு உள்ளது. 1982 ஆம் சட்டம் வெறும் பணப் பலன்களை மட்டும் சொல்லவில்லை. அமைப்புச்சாரா தொழிலாளர்களின் பணி நிலைமைகளை மேம்படுத்துவதும் அதில் உள்ளது. அரசியல் உறுதியோடு முனைப்பான நடவடிக்கைகள் எடுக்க வேண்டும்” என்றார் தமிழ்நாடு ஏஐடியுசியைச் சார்ந்த ம.இராதாகிருஷ்ணன்.

அமைப்புச் சாரா தொழிலாளர்களுக்கு தொடர்ச்சியான வேலை கிடைப்பதில்லை. முறைப்படுத்தப்பட்ட சம்பளம் இல்லை. வேலை செய்யும் இடம்  என்பது நிரந்தரமானது இல்லை. எனவே, இவர்களின் மேம்பாடு குறித்து அக்கறை கொள்ள வேண்டிய பொறுப்பு சிவில் சமூகங்களுக்கு உள்ளது.

கட்டுரையாளர்; பீட்டர் துரைராஜ்

 

 

Support Aram

நேர்மையான, வெளிப்படையான,

சுதந்திரமான இதழியலுக்கு தோள்

கொடுங்கள்.

UPI QR CODE

Razorpay Payment Gateway

Personal Info

Donation Total: ₹1,000.00 One Time